இயேசு உங்களுக்கு யார்?

இதை நான் ஊருக்கு வெளியில் இருந்து எழுதுகிறேன். எப்படியும் இந்த மாதத்திற்குரிய சிந்தனைக் குறிப்பை தவற விட்டுவிடக் கூடாது என கடமையுணர்வும் அடிக்கடி நினைவுக்கு வராமலில்லை. சென்ற வாரம் ஐந்து நாட்களாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் போதிக்கின்ற அருமையான சத்தியங்களை இறையியல் படிக்கக் கூடியிருந்தவர்களுக்கு விளக்கிப் போதிக்கும் ஆசீர்வாதம் கிடைத்தது. கிறிஸ்து இயேசுவின் ஆள் தத்துவத்தையும், அவருடைய கன்னிப்பிறப்பையும் அதோடு தொடர்புடைய அவர் ஏற்றிருந்த மானுடத் தன்மையையும், பாவிகளின் இரட்சிப்பிற்காக சிலுவையில் அவர் நிறைவேற்றிய பரிகாரப்பலியையும் பற்றி ஆழமாக சிந்தித்து ஆராய நேர்ந்தது.

கிறிஸ்துவைப் பற்றிய இந்த சத்தியங்களையெல்லாம் சிந்திக்க சிந்திக்க உடம்பெல்லாம் புல்லரித்துப் போவது போன்ற உணர்வு ஏற்படாமலில்லை. அந்தளவுக்கு மாபெரும் தியாகத்தை பாவிகளின் விடுதலைக்காக மானுடத்தைத் தன்னில் ஏற்று இயேசு தன்னையே பலியாகக் கொடுத்து செய்திருக்கிறார்.

மனிதனைப் பிடித்திருக்கும் பாவம் எத்தனைக் கோரமானது என்பதையும், அதிலிருந்து மனிதனுக்கு விடுதலை கொடுக்க எந்தளவுக்கு ஆண்டவராகிய இயேசு தன்னைத் தாழ்த்திக் கொண்டார் என்பதையும் சிந்தித்துப் பார்க்கிற போது நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பு எத்தனை சிறப்பானது, பெரியது என்பதை உணர்ந்து கர்த்தரைக் கைகூப்பி வணங்க வைக்கிறது. புழுவை விடக் கீழான நிலையில் பாவத்தில் இருந்த நம்மை மீட்டிருக்கும் ஆண்டவரின் அன்புதான் எத்தனை பெரியது!

சுவிசேஷம் சொல்லுவது என்பது “இயேசு உன்னை நேசிக்கிறார்”, “இயேசுவை விசுவாசி” என்று சொல்லுவதோடு இன்று நின்று விடுகிறது. சுவிசேஷம் சொல்லுகிற அநேகருக்கு பாவிகள் இயேசுவை விசுவாசிக்க வேண்டிய அளவுக்கு அவர்களுடைய பாவம் எத்தனை மோசமானது என்றும், அதைப் போக்குவதற்கு இயேசு எத்தனை பெரிய தியாகங்களை, மனித சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட எத்தனை பெரிய மகத்தான செயல்களைச் செய்திருக்கிறார் என்றும் உண்மையில் தெரிவதில்லை. அதையும்விட சுவிசேஷப் பிரசங்கம் செய்யும்போது “இயேசு பாவிகளுக்காக மரித்திருக்கிறார்” என்பதற்கு மேற் வேறெதுவும் சொல்லத் தேவையில்லை என்ற எண்ணமும் அநேகரிடம் மேலோங்கி நிற்கிறது. இதெல்லாம் சுவிசேஷம் பிரசங்கத்தை உப்புச் சப்பில்லாததாகவும் ஆவிக்குரிய வல்லமையில்லாததாகவும் வைத்திருப்பதோடு, ஆத்துமாக்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றித் தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள வழியில்லாமலும் செய்திருக்கின்றன. தெளிவாகவும் அருமையாகவும் இயேசு வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றபோது அவரைப் பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்தாத சுவிசேஷத்தாலும் போதனையாலும் பயனில்லை.

படைத்தவராகிய கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தில் எதையும் இழக்காமல், அதோடு பாவம் மட்டும் இல்லாததிருந்த முழுமையான மானுடத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டு தேவ மனிதராக இந்த உலகத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தப் பிறந்தார். அவரில் தெய்வீகமும் மானுடமும் பிரிக்க முடியாதபடி இணைந்து, ஒன்றோடொன்று கலக்காமலும், ஒன்று மற்றதை எந்தவிதத்திலும் பாதிக்காமலும், தனித்தன்மையை எந்தவிதத்திலும் இழந்து விடாமலும் இரண்டு தன்மைகளும் ஒரே ஆள் தத்துவத்தில் (நபரில்) காணப்பட்ட பேருண்மை எத்தனை மகத்தானது. கிறிஸ்து இந்தவிதத்தில் பிறந்து, வாழ்ந்து, மரித்து, உயிர்த்தெழுந்து பிதா அவருக்களித்திருந்த மகத்தான மத்தியஸ்தப் பணியை நிறைவேற்ற அவசியமாக இருந்தது. பாவிகளுக்கான மீட்பை நிறைவேற்ற இந்த இரண்டுத் தன்மைகளும் பூரணமாக கிறிஸ்துவில் காணப்பட்டது. தேவனாகிய கிறிஸ்து தன்னை இந்தளவுக்கு மானுடத்தில் தாழ்த்திக் கொண்ட அற்புதம் நாம் செய்த பாவங்களில் இருந்து நம்மை விடுவிப்பதற்காக என்பதை எண்ணிப் பார்க்கும்போது கர்த்தரின் மகத்தான கிருபையை எண்ணி மனம் நெகிழாமலிக்க முடியாது. எந்தத் தகுதியுமில்லாத நமக்காக இயேசு கிறிஸ்து இந்தவிதமாக வாழ்ந்து மரித்திருக்கிறார்.

ஆழமாக சத்தியங்களை அறிந்துகொள்வது அவசியமில்லை என்ற எண்ணம் அநேகருக்கு இன்றிருக்கிறது. கிறிஸ்துவைப் பற்றிய வேத சத்தியங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்காவிட்டால் தவறான போதனைகள் நம்மைத் தலை சாய்த்து விடும். திருச்சபை உருவாகி முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே கிறிஸ்துவைப் பற்யி போலிப் போதனைகள் சபையை பலமாகத் தாக்க ஆரம்பித்ததை அப்போலினரியனிசம் (Apollinarianism), நெஸ்டோரியனிசம் (Nestorianism), ஏரியனிசம் (Arianism) போன்ற போலிப் போதனைகளை சபை அடையாளம் கண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்களைத் தெளிவாக விளக்கி எழுதி சபையாருக்குப் போதித்து அவர்களை வளர்க்க வேண்டியிருந்தது. மூன்றாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட “அத்தனேஷியஸ் கிரீட்” (Athanasius Creed) இதற்கு ஓர் உதாரணம். அதேபோல பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1689 விசுவாச அறிக்கையில் கிறிஸ்துவைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அதன் 8 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இதெல்லாம் எந்தளவுக்கு கிறிஸ்துவைப் பற்றிய வேத அறிவிலும் உறவிலும் நாம் வளர அவசியம் என்பதை உணர்த்துகின்றன. இதுவரை சபை சந்தித்துள்ள கிறிஸ்துவைப் பற்றிய போலிப் போதனைகள் இன்றைக்கும் சபையைத் தாக்காமலில்லை. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் கிறிஸ்துவைப் பற்றிய தெளிவான போதனைகளில் நாம் கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் விசுவாசிக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எந்தளவுக்கு நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக