திருச்சபை வரலாறு

திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு
தெரிய வேண்டும்

நம்மினத்து கிறிஸ்தவர்களுக்கு திருச்சபை வரலாறு பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறது. திருச்சபைகள் கூட அதில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. சமீபத்தில் என் சபையில் பிரசங்கம் செய்யும்போது திருச்சபை வரலாற்றை ஆத்துமாக்கள் அறிந்திருப்பதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன். என் பிரசங்கங்களில் கூட அவ்வப்போது சபை வரலாற்றில் இருந்து  உதாரணங்களைக் கொடுத்து விளக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நாமெல்லாரும் பள்ளியில் வரலாற்றை ஒரு பாடமாக கற்றிருக்கிறோம். ஆனால், எல்லோருக்குமே வரலாற்றுப் பாடத்தில் ஆர்வம் இருக்காது. நம் நாட்டு வரலாறுகூட அதிகம் தெரியாமல் இருப்பவர்கள் அநேகர். அன்றாட வாழ்க்கைக்கும் செய்யும் தொழிலுக்கும் அது அவசியமில்லாமல் இருப்பதால் அதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் நமக்கு பொது அறிவும் குறைவாக இருக்கிறது. திருச்சபை வரலாற்றின் அவசியத்தைப் பற்றி நான் திருமறைத்தீபம் ஆரம்பித்தபொழுதே எழுதியிருக்கிறேன். திருச்சபை வரலாற்றை படிப்படியாக அதில் விளக்கி எழுதவும் ஆரம்பித்தேன். அது ஏன் என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.

1. திருச்சபை வரலாறு நம்முடைய சொந்த வரலாறு போன்றது – கிறிஸ்தவர்கள் அக்கறைகாட்டி அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு பாடம் திருச்சபை வரலாறு. நம்முடைய சொந்த வரலாறு நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். அது தெரியாமல் இருப்பவர்கள் வெகு குறைவு. நம் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது நம் வரலாறும், நம்மைச் சார்ந்தவர்களின் வரலாறும். அதேபோல் கிறிஸ்தவர்கள் திருச்சபை வரலாற்றை அறிந்திருப்பது அவசியம். திருச்சபை வரலாறு கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் அதன் வளர்ச்சியையும் விளக்குகிறது. அதை எப்படி நாம் அறிந்து வைத்திருக்காமல் இருக்க முடியும்? நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியினுடைய வரலாற்றில் நாம் அக்கறை காட்டுவதற்குக் காரணம் அவை நம்மைப் பற்றியதாகவும் நம்முடைய ஆரம்பத்தைப் பற்றியதாகவும் இருப்பதால்தான். அதேபோல்தான் திருச்சபை வரலாறும். நம் விசுவாசத்தைப் பற்றிய வரலாற்றை நாம் அலட்சியப்படுத்துவது நம்முடைய சொந்த வரலாற்றை அலட்சியப்படுத்துவதுபோல்தான்.

2. திருச்சபை வரலாறு, கடவுளின் திருச்செயல்களின் வரலாறு – கடவுளை வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது. வரலாறே கடவுளின் செயல்களின் மொத்தத் தொகுப்புதான். பழைய, புதிய ஏற்பாடுகள் இந்த உலகத்தைப் படைத்து அதில் கர்த்தர் என்னென்ன காரியங்களை செய்தார் என்பதையும் தம்முடைய திருச்சபையை எவ்வாறு நிலைநாட்டி நடத்திக் கொண்டு வந்தார் என்பதையும் விளக்குகின்றன. கடவுளின் செயல்களில் இருந்து வரலாற்றை எப்படிப் பிரிக்க முடியும்? வரலாறு தெரியாமல் கர்த்தரின் செயல்களை நாம் எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? கிறிஸ்துவே வரலாற்று நாயகன் அல்லவா? கடவுளின் வேதத்தில் காணப்படும் எந்தப் பகுதியையும் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்? முதலில், அந்தப் பகுதி எத்தகைய காலப்பகுதியில், எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது என்று கேட்க ஆரம்பித்து அதற்கு பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஏன் தெரியுமா? அந்தப் பகுதியை தெளிவாக விளங்கி கடவுளின் செயல்களை அறிந்துகொள்ள அந்தக் கேள்விக்கான பதில் அவசியமாயிருக்கிறது. அந்தப் பகுதி எழுதப்பட்ட காலசூழ்நிலையை அறிந்துகொள்ளாமல் அந்தப் பகுதி விளக்கும் சத்தியத்தை மெய்யாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே, ஒரு வேதப்பகுதியை சரியாக விளங்கிக் கொள்ள அந்தப் பகுதி பற்றிய வரலாறு அவசியமாயிருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா? கடவுளோடும், அவருடைய சத்தியத்தோடும் பிரிக்க முடியாமல் இணைந்திருக்கும் வரலாறை எப்படி அலட்சியப்படுத்திக் கொண்டு நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தொடர்ந்து வாழ முடியும்? அதுவும் வரலாற்றை அலட்சியப்படுத்துகிற ஊழியக்காரர்கள் எப்படி விசுவாசமாக ஊழியம் செய்ய முடியும்?

3. திருச்சபை வரலாறு நாம் அங்கம் வகிக்கும் திருச்சபையின் வரலாறு – அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சபையின் அங்கமாக இருக்கிறோம். அந்தச் சபையை கிறிஸ்து இந்த உலகில் நிலைநாட்டியிருக்கிறார். நாம் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை அறிந்துகொண்ட போதும் நாம் தனித்தவர்களல்ல; விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் கிறிஸ்துவின் சபையின் அங்கத்தவர்களாக இருக்கிறோம். அந்தத் திருச்சபை இந்த உலகத்தில் கர்த்தரால் கட்டப்பட்டுக் கொண்டு வருகிறது. திருச்சபை வரலாறு தெரியாவிட்டால் நாம் அங்கம் வகிக்கும் உலகளாவிய சபையைப் பற்றி நமக்குத் தெரியாது என்றுதான் அர்த்தமாகிவிடும். அதை அறிந்துவைத்திருப்பது நம்முடைய சிறப்புரிமையாக மட்டுமல்லாமல் கடமையாகவும் இருக்கிறது.

4. திருச்சபை வரலாற்றை சத்தியத்தின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாது – கிறிஸ்தவ சத்தியங்கள் திருச்சபை வரலாற்றோடு தொடர்புடையவையாக இருக்கின்றன என்பது திருச்சபை வரலாற்றை நாமறிந்திருக்க வேண்டியதன் இன்னுமொரு காரணமாக இருக்கிறது. கிறிஸ்து தன்னுடைய ஆவியின் மூலமாக சத்தியத்தை திருச்சபைக்கு அளித்தார். திருச்சபை வரலாற்றை அறிந்துகொள்ளும்போது சத்தியத்தின் வரலாற்றை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, பவுல் கலாத்தியர் நிருபத்தில் பலி, சடங்குகளை வற்புறுத்தும் யூதர்களை சாடி கிரியைகளினால் விசுவாசம் கிடைப்பதில்லை என்று விளக்குகிறார். ‘கிருபையின் மூலம் விசுவாசம்’ என்ற போதனையை விளக்க வேண்டுமானால் கலாத்திய சபை வரலாறு தெரியாமல் அதை எப்படி முழுமையாக விளக்க முடியும்? சத்தியத்தோடு சம்பந்தமுடையவையாக வரலாற்றில் நடந்திருக்கின்ற சம்பவங்களை மனதில் வைத்து சத்தியங்களைப் படிக்கும்போது நாம் சத்தியத்தில் தெளிவை அடைய முடிகிறது. இந்தவகையில் நாம் விசுவாசிக்க வேண்டிய சத்தியங்களின் பின்னணியாக திருச்சபை வரலாறு இருந்து நமக்கு பெருந்துணை செய்கிறது. சமீபத்தில் என்னுடைய சபைக்கு நான் விசுவாச அறிக்கையின் ஓர் அதிகாரத்துக்கு விளக்கமளித்தேன். அதை ஆரம்பித்தபோதே, அதற்கும் வரலாற்றிற்கும் இருக்கும் தொடர்பை நான் விளக்கிச் சொன்னேன். காரணம், திருச்சபை வரலாற்றுக்கும் அந்தப் பகுதி விளக்கும் சத்தியத்துக்கும் தொடர்பு இருப்பதால்தான். அந்த சத்தியத்தின் வரலாற்றின் பின்னணியிலேயே அந்த சத்தியத்தை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் படிக்கும்போதுதான் அந்த சத்தியத்தில் நாம் முழுத்தெளிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.

5. திருச்சபை வரலாறு நாம் எதை விசுவாசிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது – சத்தியப் பஞ்சம் நிலவும் நம்மினத்தில் சத்தியத்தைப் பற்றிய தாகம் இல்லாமலும், சத்தியத்தின் உறுதி இல்லாமலும் ஆத்துமாக்கள் தள்ளாடிக் கொண்டிருப்பதற்குக் காரணம் சத்தியம் தெளிவாக போதிக்கப்படாமலிருப்பதுதான். சிரிப்பூட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஊழியத்தில் இருப்பவர்களுக்கும், ஊழியத்திற்கு வரவிருப்பமுள்ளவர்களுக்கும் நான் இறையியல் போதனையளித்து வருவதைக் கேள்விப்பட்ட திருச்சபையின் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு போதகர், ‘ஐயா, சத்தியத்தில் அக்கறைகாட்டி அதைப் போதித்து நேரத்தை வீணடிக்கிறார். சுவிசேஷம் சொல்லுவதிலும், கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்வதிலும் அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு சத்தியத்தில் அக்கறை காட்டி நேரத்தை வீணாக்கக் கூடாது’ என்று சொன்னார் என்று கேள்விப்பட்டேன். இதிலிருந்து என்ன தெரிகிறது? சத்திய அறிவும், அதில் தெளிவும் இல்லாமல் கிறிஸ்தவராக இருந்தும், கிறிஸ்தவ ஊழியங்களை நடத்திக்கொண்டும் போய்விடலாம் என்று சிலர் நினைத்து வாழ்கிறார்கள் என்பதுதானே? அது எத்தனை தவறு என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்கிறது. அவர்கள் சத்தியத்தில் தெளிவு பெறாமல் தொடர்ந்திருப்பது அவர்களை மட்டும் அல்லாது அவர்களுக்கு கீழ் இருக்கும் ஆத்துமாக்களையும் வளரவிடாமல் வைத்திருக்கும். அப்போஸ்தலன் பவுல் ‘தெளிவாக சத்தியத்தைப் போதி’ என்று எத்தனை தடவை தீமோத்தேயுவுக்கு சொல்லியிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சத்தியத்தில் நாம் தெளிவு அடைய வேண்டுமானால் சத்தியத்தை திருச்சபை வரலாற்றின் பின்னணியில் படிப்பது அவசியமாகிறது. அப்படிப் படிக்கும்போது தவறான போதனைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு வேதபூர்வமான சத்தியங்களை மட்டும் மன உறுதியோடு நாம் விசுவாசித்து பின்பற்ற முடிகிறது. கிறிஸ்துவைப் பற்றி ஆதி சபைக் காலங்களில் தவறான பல போதனைகள் இருந்து வந்துள்ளன; இன்றைக்கும் உலவி வருகின்றன. உதாரணத்திற்கு கொலோசேயர் நிருபத்தில் கிறிஸ்து தேவதூதர்களைவிடத் தன்மையில் குறைந்தவர் என்றும் அவர் சர்வ அதிகாரமுள்ள கடவுள் இல்லை என்றும் போதித்த போலிப்போதனையாளர் சபையைக் குழப்ப முயன்றிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அனைத்திற்கும், அனைவருக்கும் மேலான கடவுள் கிறிஸ்து என்று பவுல் அந்த நிருபத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை அந்த நிருபத்தின் சபை வரலாற்றின் அடிப்படையில் படிக்கும்போது நாம் விசுவாசிக்க வேண்டிய சத்தியத்தில் நமக்கு உறுதி ஏற்படுகிறது. ஆதி சபைக்குப் பிறகும் கிறிஸ்துவைப் பற்றிய பலவிதமான கோளாரான போதனைகள் எழுந்தன. சத்தியத்தின் வரலாற்றைப் படித்து அவற்றை நாம் தெரிந்துகொண்டு வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்கும்போது நாம் விசுவாசிக்க வேண்டியது எது என்பதில் நமக்கு முழுத் தெளிவும் கிடைத்துவிடுகின்றது.

திருச்சபை வரலாறு, வரலாற்றில் உருவாகிய விசுவாச அறிக்கை, வினாவிடைகளை நமக்கு அறிமுகப்படுத்தி சத்தியத்தில் நிலைத்திருக்க திருச்சபையைக் கர்த்தர் எவ்விதங்களில் வழிநடத்தியிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது. நம்முன்னோரின் வழியில் நாமும் செல்ல வரலாறு பேருதவி புரிகின்றது.

6. திருச்சபை வரலாறு தவறான போதனைகளை இனங்கண்டு ஒதுக்கி வைக்க உதவுகிறது – திருச்சபை வரலாறு இன்னொரு விதத்திலும் நமக்கு உதவுகிறது. வரலாற்றில் எழுந்துள்ள தவறான போதனைகளை இனங்கண்டுகொள்ள உதவுகிறது. ஆதி சபைக்குப் பிறகு பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றைக்கு சபை தொடருகிறது. இந்தப் பல நூற்றாண்டுகளில் திருச்சபை எத்தனையோ எதிர்ப்புகளையும், போலிப் போதனைகளையும் சந்தித்திருக்கின்றது. அவை இன்றைக்கும் வேறு பெயர்களில் நடமாடி வருவதை நாம் அறிந்திருக்கிறோம். எந்தவொரு சத்தியத்தை நாம் படிக்கும்போதும் அதற்கு எதிரான போலிப்போதனைகளை நாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் படிக்க முடியாது. பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் ஆரம்பித்தபோது அது பலவிதமான கத்தோலிக்க மதப் போலிப்போதனைகளை எதிர்த்தே ஆரம்பித்த்தது என்பதை மறக்கலாகாது. மனித சித்தத்தைப் பற்றிய தவறான போதனை அவற்றில் முதன்மையானது. அதை லூத்தர் அடியோடு எதிர்த்து வேதசத்தியத்தை நிலைநாட்டப் போராடினார். அதேபோல் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் சபை பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறது. இவற்றை திருச்சபை வரலாறே நமக்கு இனங்காட்டித் தந்து சத்தியத்தில் நிலைத்திருக்க உதவுகிறது.

7. திருச்சபை வரலாறு நாம் யார் என்பதை இனங்கண்டுகொள்ள உதவுகிறது – சுவிசேஷ செய்தியை யார் மூலமாவது கேட்டு நாம் இரட்சிப்பை அடைந்திருக்கிறோம். பலர் சபைக்குப் போயும், பலர் சபையில்லாமலும் வாழ்ந்து வருகிறோம். பெரும்பாலானவர்களுக்கு இயேசுவை தெரிந்திருக்கிறது. அடிப்படை சத்தியம் ஓரளவுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. அதற்கு மேல் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஏதோவொரு பரலோக நிச்சயத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். வேத சத்தியங்கள் நமக்கு ஆழமாகத் தெரிவதில்லை. தவறான போதனைகளை இனங்கண்டு அவற்றைத் தவிர்த்து வாழுமளவுக்கு நம்மில் பலருக்கு சத்திய விவேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் நம்முடைய விசுவாசம் உண்மையிலேயே சரியான விசுவாசம்தானா? நாம் போய்க்கொண்டிருக்கிற பாதை சரியானதுதானா? என்பது பற்றி நமக்கு நிச்சயமாக உறுதியான விசுவாசம் இருக்க முடியாது. நாம் போகிற பாதை பரலோக பாதைதான் என்று அடித்துச் சொல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நம்முடைய இரட்சிப்புகுரிய வாழ்க்கை வேத வரம்புக்குள் இல்லாமல் இருப்பதால்தான். அதாவது, சரியான போதனையளிக்கும் சபைக்குள் இருந்து சத்தியத்தில் உறுதியாக நாம் வளர்ந்துவராததால்தான் இந்த நிலைமை. திருச்சபை வரலாறு நம்மை இனங்கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது. திருச்சபை வளர்ந்த வரலாற்றை அது விவரித்து சபை எதை விசுவாசித்து வந்திருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. திருச்சபை வரலாறு அறியாமல் பல்லாண்டு வாழ்ந்து முதிர் வயதாயிருக்கிற ஒரு நல்ல விசுவாசி திருச்சபை வரலாறை அறிந்துகொள்ள ஆரம்பித்தபோது, ‘இத்தனை நல்ல போதனைகளையெல்லாம் இவ்வளவு காலம் தெரிந்துகொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேனே’ என்று சொல்லி வருத்தப்பட்டார். அவர் நல்ல விசுவாசியாக இருந்ததால் சத்தியத்தை இனங்கண்டு கொண்டார்; தன்னையும் இனங்கண்டு கொண்டார். நான் எப்போதுமே சொல்லிவருகிற ஒரு வார்த்தை என்ன தெரியுமா? ‘நீங்கள் விசுவாசிப்பது என்ன என்று சொல்லுங்கள், நீங்கள் யார் என்பதை நான் சொல்லிவிடுகிறேன்’ என்பதுதான். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? ஒரு மனிதன் விசுவாசிப்பது எது என்பது தெரிந்தால் அவன் இரட்சிக்கப்பட்டவனா? அவனுடைய விசுவாசம் வேத அடிப்படையில் அமைந்ததா என்பதை சொல்லிவிட முடியும் என்பதால்தான். திருச்சபை வரலாறு நமக்கு சத்தியத்தையும், சத்தியத்தை விசவாசிக்கிறவர்களையும் இனங்கண்டுகொள்ள உதவும்; நம்மையும் நாம் இனங்கண்டுகொள்ள உதவும்.

8. திருச்சபை வரலாறு நாம் வாழும் காலப்பகுதியை புரிந்துகொள்ள உதவுகிறது – நமக்கு முன்பிருந்த காலப்பகுதிகளின் சபை நிகழ்வுகளை நாம் அறிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல் அதன் அடிப்படையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைப் புரிந்துகொள்ளவும் சபை வரலாறு உதவுகிறது. ‘காலங்களை உணர வேண்டும்’ என்று வேதம் சொல்லுகிறது. நாம் வாழும் காலப்பகுதியைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நாம் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்துவிட முடியாது; கிறிஸ்தவ ஊழியத்தையும் செய்ய முடியாது. நாம் இப்போது சந்திக்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் புதிதானவையல்ல. நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அவற்றை சந்தித்து வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையும், போராட்டங்களும் நாம் நல்வாழ்வு வாழ நமக்குதவும்; நம் காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவும் நல்லுதவி செய்யும்.

9. திருச்சபை வரலாறு நிகழ்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டுகிறது – நிகழ்காலத்தில் சபை சந்திக்கும் போராட்டங்களைப் பார்க்கிறபோது சிலவேளைகளில் நமக்கே தளர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் போராட்டங்கள் புதிதல்ல. நம்முன்னோர்கள் அவற்றை சந்தித்திருக்கிறார்கள், வெற்றி கண்டிருக்கிறார்கள். கடவுள் திருச்சபையை வெற்றியோடு நடத்தி வந்திருக்கிறார். கடந்தகாலத்தில் கடவுள் திருச்சபையைப் பராமரித்து வழிகாட்டியிருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள் நமக்கு நிச்சயம் நிகழ்காலம் பற்றிய நம்பிக்கை உணர்வுகளை ஊட்டாமலில்லை. மார்டின் லூத்தர், வில்லியம் டின்டேல், ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஸ்பர்ஜன், வில்லியம் கேரி போன்றோர் அவரவர் காலத்தில் அனுபவித்த சவால்களும், கர்த்தரின் ஆசீர்வாதங்களும் நமக்கு புத்துணர்வூட்டி அவர்களுக்கு துணைபுரிந்து பக்கபலமாக இருந்த கடவுள் நமக்கும் இன்று பக்கபலமாக இருந்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றன.

10. திருச்சபை வரலாறு நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய உற்சாகத்தை ஊட்டுகிறது – கடவுளின் வரலாறாக இருக்கும் திருச்சபை வரலாறு அவரின் செயல்களை நமக்கு எடுத்துவிளக்குவதோடு எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நமக்கு உணர்த்தி உற்சாகமூட்டுகிறது. எதிர்காலத்தைப் பற்றி அட்டவனை போட்டு அது பற்றி திருச்சபை வரலாறு நமக்கு விளக்கந் தருவதில்லை. ஆனால், கடவுளின் செயல்கள் பற்றிய கடந்தகால, நிகழ்கால வரலாறு நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டுகின்றது. வரப்போகும் கிறிஸ்து நம் காலத்தில் கட்டி வரும் திருச்சபை கடந்த காலத்தை சந்தித்து வெற்றிகொண்டதுபோல் எதிர்காலத்திலும் ஏறுநடை போட்டு இறுதி வெற்றியை அடையும் என்ற நம்பிக்கையை சபை வரலாறு நமக்குத் தருகிறது.

4 thoughts on “திருச்சபை வரலாறு

மறுமொழி தருக