தோமா கிறிஸ்தவம் – கருத்துரை

– ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்

TC-FC-3dமோட்சப் பிரயாணம் நூலில் சந்தேகக் கோட்டை அரக்கனிடம் போராடி வெற்றி பெற்ற பின்பு பரலோகப் பயணிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு பக்கத்து புல்வெளிப் படிக்கட்டுகள் அருகே விசுவாச வீரர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட “எச்சரிக்கைப் பலகை” போல இந்த 21-ம் நூற்றாண்டில் மெய் கிறிஸ்தவத்திற்கு எதிராக உருவாகி ஆத்துமாக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் போலிப் போதனையான தோமா வழி கிறிஸ்தவத்திற்கு எதிராக உயர்த்தப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பலகையாக இந்த “தோமா கிறிஸ்தவம்” நூலைப் பார்க்கிறேன்.

தோமா கிறிஸ்தவம் நூலின் சாராம்சத்தை நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர்களின் பதில் கீழ் கண்டவாறாக இருந்தது:

ஒருவர் சொன்னார், தான் கேரளாவில் தோமா அமர்ந்து ஜெபித்த மலைக்குகையையும் அதில் இருக்கும் எழுத்துருக்களையும் தன் கண்களால் பார்த்திருப்பதால் தோமா இந்தியாவுக்கு வரவில்லை என்பதைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்றார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, அது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று கூறி, அதற்கானச் சான்றுகளை நூலில் இருந்து எடுத்துச் சொன்னப் பின்னரும் கிளிப்பிள்ளைப் போல மலை, குகை, எழுத்து என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மற்றொருவர் “இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான தோமா நம் இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தார் என்பது இந்திய கிறிஸ்தவத்திற்கே உரிய தனிச்சிறப்பு, அதைப் போய் இல்லை என்று கூறுகிறாயே!” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.

போதகர் பாலாவின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்ட வேறொரு நபரும் “ஐயய்யோ! தோமா இந்தியா வரவே இல்லை என்றா எழுதியுள்ளார்?” என்று சொல்லிவிட்டு மிகவும் குழப்பத்துடன் சென்று விட்டார்.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு தோமாவின் இந்திய வருகையைக் குறித்து வினா எழுப்பி அதை முற்றாக நிராகரிக்கும் ஒரு நூலை நான் வாசிக்க நேர்ந்திருந்தால், அப்போதிருந்த ஆன்மீகக் குருட்டு நிலையில் நிச்சயமாக மேலே குறிப்பிட்ட நபர்களைப்போலவே நானும் ஒரு குழப்பமான எதிர்மறைக் கருத்தைத்தான் தெரிவித்திருப்பேன். ஏனென்றால் நூல் குறிப்பிடும் தோமா கிறிஸ்தவ “மாய மான்” போதனைகள் சிலவற்றில் மேலோட்டமாகச் சிக்கியிருந்த காலம் அது. ஆனால் இடைப்பட்ட இந்தக் காலத்தில் கர்த்தரின் கிருபையால் “தனித்துவமான கிறிஸ்தவ அனுபவத்தை” அடையும் பாக்கியம் பெற்றதோடு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி தீர்மானம் எடுப்பதில் வேதத்தின் ஆளுகை மேம்பட்டுள்ளது. எனவே திருமறைத்தீபத்தின் மூலம் தோமாவின் இந்திய வருகையைக் குறித்த பாரம்பரியப் புரட்டைக் கேள்விப்பட்ட போது அதை நிதானித்து ஏற்றுக் கொள்ள முடிந்தது.

நூலை வாசிப்பதற்கு முன்பு, நூலைக் குறித்த ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன், தோமா இந்தியாவுக்கு வந்திருக்கமுடியாது என்பதற்காக ஆசிரியர் தரும் சான்றுகள் என்னவாக இருக்கும்? தோமா இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதால் எனது ஆத்துமாவுக்கு ஏதாவது நன்மைகள் இருக்கிறதா? என்பது போன்ற எண்ணங்களே மேலோங்கி நின்றது. ஆனால் நூலை வாசித்த பிறகுதான், தோமாவின் இந்திய வருகை குறித்த கட்டுக் கதைக்கும் சாது செல்லப்பா மற்றும் மு.தெய்வ நாயகம் அவர்களின் போதனைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்துகொண்டதோடு, இந்தப் “பார்த்தீனிய விஷ வேரினால்” மெய்ச்சுவிசேஷத்துக்கும், வேதத்தின் அதிகாரத்திற்கும் உண்டாகியிருக்கிற பேராபத்தைக் குறித்தும் அறிந்துகொள்ள முடிந்தது. முழு நூலையும் வாசித்தபோது அதில் பவுல், பேதுரு, யோவான் மற்றும் யூதா ஆகியோரின் நிருபங்களிலும், கிறிஸ்தவ வரலாற்றிலும் வாசித்திருப்பது போன்ற ஒரு தீவிரமான சத்தியப் போராட்டத்தை உணரமுடிந்தது.

முதல் இரண்டு அதிகாரத்தை வாசிக்கும் போதே நூலின் கருப்பொருளை தோராயமாகப் புரிந்து கொள்ள முடிந்ததோடு, நூல் எடுத்துக்காட்டும் தோமா கிறிஸ்தவ போதனைகள் இந்திய கிறிஸ்தவத்தை இத்தனை தூரம் பாதித்திருப்பதற்கான மூலக் காரணம் என்ன? என்றும் கண்டுகொள்ள முடிகிறது. குறிப்பாகத் தற்கால கிறிஸ்தவத்தில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் தாராளவாத மற்றும் சமயசமரசக் கோட்பாடுகளின் தாக்கத்தை இந்நூல் வேர்பிரித்துக் காட்டுகிறது.

சத்தியத்திற்கு விரோதமாக எழும்பும் எந்த ஒரு அசத்தியப் புயலையும் தைரியமாக எதிர்கொண்டு சத்தியத்தை நிலைநாட்டும் வகையில் முதல் அதிகாரத்திலேயே “வேதத்தின் அதிகாரம்” என்ற அசைக்க முடியாத நங்கூரத்தை வாசகர்களின் சிந்தனைகளில் ஆழமாக இறக்கி, அதன்பின்பு அங்கே இங்கே என்று அவர்கள் எண்ணத்தை அலைமோதவிடாதபடி வேதத்தின் ஆளுகைக்குள் முழுமையாகச் சிறைப்படுத்தியிருப்பது மிகவும் அருமை. அதுமட்டுமல்லாமல் நூல் குறிப்பிடும் அனைத்து ஆளுமைகளினுடைய நம்பிக்கை, எண்ணம் மற்றும் அவர்களின் அறிவுத் தேடலின் பயனால் உருவான அனைத்து சித்தாந்தக் கொள்கைகளுக்கும், போதனைகளுக்கும் “சிம்ம சொப்பனமாக” இருந்து அவற்றையெல்லாம் அலறியடித்து ஓட வைப்பதும் ஆசிரியரின் “வேதம் மட்டுமே” என்ற ஒரே வாதம் தான் என்பது நூலை வாசித்திருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.

ஒரு கிறிஸ்தவன் அடிப்படையில் தான் கேட்கும், வாசிக்கும்போதனை சரியானதா? வேதபூர்வமானதா? என்பதை நிதானித்து தீர்க்கமாக முடிவெடுத்துப் பின்பற்ற வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ளான் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கும் உண்மை. ஆனால் இதில் சவாலான விஷயமே அது சரியா? அல்லது தவறா? என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதில்தான் இருக்கிறது. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்கான ஒரு சூத்திரத்தை (formula) நூலின் மூன்றாவது அதிகாரத்தில் அருமையாகக் கற்றுத் தருகிறார் நூலாசிரியர். அதனடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் போது சாது செல்லப்பாவின் போதனைகளில் மலிந்து காணப்படும் சமயசமரச நோக்கம், பொருத்தமற்ற சூழிசைவு முறை மற்றும் தவறான வேத விளக்கமுறை ஆகியவற்றை எளிதாக இனம் கண்டு கொள்ளலாம்.

நான்கு முதல் எட்டு வரையிலான அதிகாரங்களில், மு.தெய்வநாயகம் எழுதிய நூல்களின் அடிப்படையில் தோமாவின் இந்திய வருகை மற்றும் திராவிட சமயங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும், இந்து மத நூல்களிலும் இயேசுவைக் காணும் அவரது கண்டுபிடிப்புகள் சம்மந்தப்பட்ட தனது எதிர் வாதங்களை எடுத்து வைத்து வேதத்தின் அடிப்படையில் மிக சாதுர்யமாக அவற்றையெல்லாம் தவறு என்று நிரூபிக்கிறார் நூலாசிரியர். இவற்றின் மூலமாக சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

  1. தோமா இந்தியா வந்தார் என்ற கருத்துக்கு உறுதியான சான்றுகள் எதுவும் இன்றி பெரும்பாலும் வாய்வழிக் கதைகளாகவும், பலவகையான ஊகத்தின் அடிப்படையிலும் குழப்பத்தையே நமக்குப் பதிலாகத் தருவதால், தோமா குறித்த மு. தெய்வநாயகத்தின் வாதத்தை ஒரு கதைக்குதவாத பேச்சாகவே நம்மை எண்ண வைக்கிறது. அதேவேளை வேதம் இந்தக் கருத்துக்கு முற்றிலுமாக முரண்பட்டு நின்று, அதற்கு எதிராகச் சாட்சி கொடுப்பதால், “தராசுத் தட்டு” இலகுவாக வேதத்தின் பக்கமாகச் சாய்ந்து, தோமா இந்தியா வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்கிறது.
  2. தெய்வநாயகத்தின் தீவிர திராவிட பரப்புக் கொள்கையை நூலில் அம்பலப்படுத்தி இருப்பதன் மூலமாக, அவரது போதனைக்கான ஆதிமூலம் என்ன என்பதை நமக்குத் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
  3. திருக்குறளில் வரும் “ஐந்தவித்தான்” என்ற ஒரே வார்த்தையின் அடிப்படையில், திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும் திருக்குறள் கிறிஸ்தவ இலக்கியம் என்றும் அவர் வாதிடுவதை வாசித்தபோது, இதுதான் “மடுவை மலையாக்குதல்” என்பதோ! என்று எண்ண வைக்கிறது. திரித்துவத்துக்கும், புலால் மறுப்புக்கும், பிறவி சுழற்சிக் கோட்பாடுகளுக்கும், சிவனுக்கும், சிவலிங்கத்துக்கும் அவர் தரும் விளக்கங்கள் சிரிப்பை வர வைப்பதோடு, வேதத்தை விளக்குவதில் அவருக்கு இருக்கும் தீவிரமான குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
  4. வெறும் ஊகத்தின் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கொண்ட இவர்களது கொள்கைகளுக்காக கொடி பிடித்துக் கொண்டு, அதற்காக சர்வதேச மாநாடுகள் நடத்தி அவற்றையெல்லாம் நிரூபிக்க முற்படுவது ஒரு ஆக்கபூர்வமான செயலாகத் தோன்றவில்லை. அத்தோடு அது இந்துத்துவா கொள்கை உடையவர்களின் கோபத்தைத் தூண்டி மெய்கிறிஸ்தவத்துக்கு எதிராக ஆழமான காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தியிருப்பது மெய்யாகவே எரிச்சலூட்டுகிறது.

புத்தகத்தின் இந்தப் பகுதிகள் தோமா கிறிஸ்தவப் போதனைகளில் இருக்கும் இறையியல் சார்ந்த தவறுகளைத் துகிலுரித்துக் காட்டி இது ஒரு தவறான போதனை என்று ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறது. அத்தோடு ஒரு கிறிஸ்தவன் தனது மார்க்கம் சார்ந்த புதிய போதனைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்போது அதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான அடிப்படை வழிமுறையையும் கற்றுத் தருகிறது.

இதை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட எனது தோழியுமாகச் சேர்ந்து சித்தர்களின் பாடல்களிலும், திருவாசகத்திலும் கிறிஸ்துவைத் தேடிய காலங்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்றுபோலத் தேடி வாசிக்கும் அளவிற்கு அன்று இணையவசதிகள் இல்லாதபடியால் சிலைவணக்கத்துக்கு எதிரானது என்று நாங்கள் இருவருமே உறுதியாக நம்பின ஒரு பாடல் “நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே” என்று துவங்கும் சிவவாக்கியரின் பாடல். நூலை வாசிப்பதை இடையில் நிறுத்திவிட்டு சிவவாக்கியரின் இந்த பாடலுக்கான சரியான விளக்கத்தை இணையத்தில் தேடிப் படித்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அது நாங்கள் அன்று நம்பியதற்கு நேர் எதிரான பொருளைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தோமா கிறிஸ்தவத்தின் பாதிப்பு எனக்குள்ளும் நடந்திருக்கிறது என்பது நூலை வாசித்த பின்புதான் புரிந்தது.

“உடையும் இந்தியா” நூலிலிருந்து பல பக்கங்களைப் பதிவிறக்கி வாசித்ததோடு, நூல் குறித்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சிக்கு அரவிந்த் நீலகண்டன் அவர்கள் அளித்துள்ள விளக்கத்தையும் கேட்டேன். “உடையும் இந்தியா” நூல் கிறிஸ்தவத்திற்கு எதிராக வெளிப்படுத்தும் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் மெய்யாகவே மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்குகிறது. இந்திய மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து உழைத்த மிஷனரிகளான சீகன்பால்க், கேரி, கால்டுவெல், ஜி. யு. போப், ஆகியோரின் பணிகளைக் கொச்சைப்படுத்தி அவர்களின் பெயருக்கு ஏற்படுத்தியிருக்கும் களங்கம் ஒவ்வொரு மெய்க் கிறிஸ்தவனின் இதயத்திலும் ரண வேதனையை ஏற்படுத்தும். கிறிஸ்தவத்தின் பெயரில் பிசாசுக்கு ஊழியம் செய்து கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அபகீர்த்தியை உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில கபட வேடதாரிகளின் மீது கண்மூடித்தனமான கோபத்தை வரவைக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதேவேளையில் இந்தியாவை உடைக்க முயலும் சதிகளை அடையாளம் காட்டுகிறோம் என்கிற பெயரில் மறைமுகமாக சாதியம், சதி போன்ற இந்து மத சம்பிரதாயங்களுக்கு அங்கீகாரம் தேடுவதுடன் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும் “உடையும் இந்தியா” நூல் ஆப்பு வைத்திருப்பதையும் நிதர்சனமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்தவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது இன்று நேற்று என்றில்லாமல் வரலாற்றில் தொடர்ச்சியாகவே நடந்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் அன்பும் ஆவியும் உடையவனாக, எதிர்ப்புகளின் நடுவிலும் எவ்வித கலப்பும் இல்லாமல் சுத்தமாக சுவிசேஷத்தை அறிவிப்பதோடு, தனிப்பட்ட வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்தியும் வாழ வேண்டிய பெரும் கடமைப் பொறுப்பு காலத்தின் கட்டாயமாக நம்முன் நிற்பதை “தோமா கிஸ்தவம்” நூலின் உடைகிறதா இந்தியா? என்ற அதிகாரத்தின் கீழ் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

ஜெயமோகனின் “சிலுவையின் பெயரால்” என்ற நூலை வாசித்தது இல்லை. இருப்பினும் அவரது ஆன்மீகத் தேடலை அவரது சிறுகதை தொகுப்புகளில் கண்டிருக்கிறேன். பொதுவாகவே அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மதம் சார்ந்த பெயர்களை சுமந்து வருவதோடு, அதன் அழகாக சூழலை வர்ணித்து யதார்த்தமாக விவரிப்பதாகவும் இருக்கும். நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிரபலம் இல்லாத சில குல தெய்வங்களின் வரலாற்றையும் அவரது சிறுகதைகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். அவரது ஆன்மீகத் தேடல் உள்ளூர் மதங்களில் துவங்கி இரஷ்ய எழுத்தாளர்கள் வரை தொடர்ந்திருக்கிறது என்பது அவரது தேடலின் தீவிரத்தை நமக்குக் காட்டுகிறது. அந்தவகையில் நூலாசிரியர் குறிப்பிடுவது போல பவுலின் வார்த்தைகளில் சொல்வதானால், ஜெயமோகன் அவர்களை “மிகுந்த தேவதாபக்தியுள்ளவராகவே” எண்ண வைக்கிறது. ஆகவே அவரது ஆன்மீகத் தேடல் என்பது வெறும் அறிவு அளவில் நின்றுவிடாமல், இதயத்தின் ஆழத்திலிருந்து பற்றியெரியும் நெருப்பாக வெளிப்பட்டு மெய்யான கிறிஸ்துவை அடையும் வரையில் தொடரும் உயிர்த் தேடலாகத் தொடர பரிசுத்த ஆவியாகிய தேவன் உதவி செய்ய வேண்டும் என்ற ஆத்தும பாரத்தை ஏற்படுத்துகிறது. வேதம் ஏற்படுத்தி இருக்கும் வழியில் நின்று உண்மையாக அவரைத் தேடுபவர்களுக்கு தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்றே வேதமும் சொல்கிறது.

நூலின் முதல் பத்து அதிகாரங்களிலும் பலமுறை, இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைக் காணமுடிகிறது; அதாவது, மெய்யான கிறிஸ்தவத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை!! மெய்யான கிறிஸ்தவ அனுபவத்தை அவர் அடைந்திருக்கவில்லை!! என்பது போன்றவை. எனவே நூலை வாசிக்கும் இரட்சிப்பை அடைந்திராத வாசர்களுக்கு, ஆசிரியர் எதைத்தான் மெய்யான கிறிஸ்தவம் என்று குறிப்பிடுகிறார்? என்ற கேள்வி கட்டாயம் எழும். அதற்கான அற்புதமான பதிலைத்தான் தனது கடைசி அதிகாரமாக எழுதி நூலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் ஆசிரியர். தன்னைக் கிறிஸ்தவராக எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் தனது விசுவாசத்தையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கும் இந்த அதிகாரம் உதவி செய்கிறது.

நூலை வாசிப்பதற்கு ஆரம்பத்தில் கொண்டிருந்த ஆர்வமும் விறுவிறுப்பும் இறுதி வரையில் குறையவே இல்லை. ஓரிரு முறை அருகில் உள்ளவர்கள் என்ன? என்று கேட்கும் அளவிற்கு வாய்விட்டு சிரித்தேன், பலமுறை “சபாஷ்” சரியான நெத்தியடி என்று எண்ணினேன். சிறுவயதில் இருந்தே “ரிக் வேதம்” என்று வாசித்துப் பழகி இருந்ததால் “இருக்கு வேதம்” என்று வாசிக்கும் போது முதலில் சிறிய தடுமாற்றம் உண்டான போதும், எப்போதும் போலவே ஆசிரியரின் எழுத்து நடை நூலை மிகவும் ரசித்து வாசிக்கத் தூண்டுகிறது! நேரம் எடுத்துச் சிந்திக்க வைக்கிறது! கடினமான அவரது உழைப்பு, தைரியம் மற்றும் அவரது கிறிஸ்தவ வைராக்கியம் ஆகியவை மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது!

நூலின் இறுதி ஆக்கத்தை வாசித்து முடித்ததும் பளிச்சென்று நினைவில் ஓடி வந்தது இந்த வேதவசனம்,

“ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப் போனார்கள்”.

ஆம், இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆத்துமாவை இத்தகைய கொள்கையின் விபரீதங்களுக்கு விலக்கிக் காத்துக் கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான வல்லமையை ஒவ்வொருவருக்கும் கர்த்தர் தரவேண்டும் என்பதற்காகவும், அசத்தியப் போதனைகளுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்பி அவற்றை அடியோடு வேரறுக்கத் துடிக்கும் ஆசிரியரின் “சத்தியப் போராட்டம்” தடைகள் இன்றி மேலும் தொடர வேண்டியும் ஜெபிக்கிறேன்.

One thought on “தோமா கிறிஸ்தவம் – கருத்துரை

மறுமொழி தருக