வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். வழமைபோல் இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த இதழில் ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தின் பிரதான கதாபாத்திரமான கிறிஸ்தியான் எந்தக் கட்டத்தில் மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் அடைந்தான்? என்ற கேள்வியை ஆராய்ந்து விளக்கியிருக்கிறேன். இது பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும் கேள்வி. அத்தோடு மோட்சப் பயணம் ஓர் இறையியல் நாவலாக இருப்பதால் அதை வெறும் நாவலாக மட்டும் வாசித்திருப்பவர்களுக்கு இறையியல் போதனைகள் புரியாமல் இருந்திருக்கின்றன. அதுபற்றி இவ்விதழில் வந்திருக்கும் ஆக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும். தொடர்ந்தும் மோட்சப் பயணத்தில் விளக்கப்பட்டிருக்கும் இறையியலை ஆராய்ந்து விளக்கத் தீர்மானித்திருக்கிறேன். கிறிஸ்தவர்கள் அவசியம் வாசித்துப் பயனடைய வேண்டிய கிறிஸ்தவ இலக்கியங்களில் ஒன்று மோட்சப் பயணம். அதுவும் இது சீர்திருத்த, பியூரிட்டன் இலக்கியங்களில் தலைசிறந்தவற்றில் ஒன்றாக இருப்பதையும் வாசகர்கள் உணர்வது நல்லது.

வாசிப்பைப் பற்றியும், வெறும் தகவல் சேகரிப்புக்கும் கற்றறிதலுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு பற்றியும், ஆக்கபூர்வமான எதிர்வினையளிக்க வேண்டிய அவசியத்தையும் ஒரு ஆக்கம் இந்த இதழில் விளக்குகிறது. உங்களுடைய சிந்தனைக்கு அவல் போட்டதுபோல் இந்த ஆக்கம் பலனளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பையும், வாசகர்களிடமிருந்து வந்திருக்கும் கடிதங்களின் குறிப்புகளையும் இவ்விதழில் காணலாம். அத்தோடு, நமது தீவிர திருமறைத்தீப வாசகர்களின் ஒருவரான ஷேபா மிக்கேள் ஜோர்ஜ் “பாவம் பொல்லாதது” நூலுக்கான கருத்துரையையும் அனுப்பிவைத்திருக்கிறார். இதுவரை நூலை நீங்கள் வாசிக்காதிருந்தால் அதை வாங்கி வாசிக்க இக்கருத்துரை உதவ வேண்டுமென்பதே என் ஜெபம்.

இந்த இதழோடு 2023 ஐ நாம் முடிவுக்குக் கொண்டுவருகிறோம். வரப்போகும் வருடம் நமக்கெல்லாம் பலனளிக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்க கர்த்தர் உதவட்டும். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி – ஆசிரியர்.

மறுமொழி தருக