சிறைக்கு வெளியில் சிறைவாசம்

பவுல்: துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா (2 தீமோத்தேயு 4:13).

Prisonersவாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றதோ இல்லையோ நிச்சயம் மனிதனுக்கு அறிவைக்கொடுக்கும்; அனுபத்தை அளிக்கும். அது அவனை சிந்திக்க வைக்கும். ஒரு விஷயத்தை ஆராய வைக்கும்; அதுபற்றி சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துத் தெரிவிக்க வலியுறுத்தும். வாசிக்கின்ற மனிதன் பல விஷயங்களை வாழ்க்கையில் அறிந்துகொள்ளுகிறான். பல விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவனாக இருக்கிறான்.

வாசிக்காதவர்களால் சிந்திக்க வழியில்லை. விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலிருந்தால் அதுபற்றி எப்படி சிந்திப்பது? எப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பது? அந்தக் கருத்தை எப்படி வெளிப்படுத்துவது? வாசிக்கும் வழக்கம் இல்லாவிட்டால் நம்மால் தெளிவான, முதிர்ச்சியான சம்பாஷனை செய்யமுடியாது. முட்டாள்களைப்போலத்தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வாசிக்காதவர்களுக்கு பல விஷயங்களில் அறிவு இருக்க வழியில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாக இருப்பார்கள்; வளருவார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அவர்களால் எந்தப் பயனுமிருக்காது. வாசிக்காதவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிக் காரணகாரியங்களோடு ஆராய்ந்து தெளிவான விளக்கங்கொடுக்க முடியாது. அவர்களுடைய பேச்சு அறிவு சார்ந்ததாக இல்லாமல் அசட்டுத்தனமானதாக இருந்துவிடும். இப்போது தெரிகிறதா எந்தளவுக்கு வாசிப்பு அவசியம் என்று? அதனால்தான் அப்போஸ்தலன் பவுலும் சிறையிலிருக்கும்போது வேதப்புத்தகத்தையும், ஏனைய அவசியமான நூல்களையும் கொண்டுவரும்படித் தன் நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார்.

நான் சிறு வயதிலேயே வாசிப்பில் ஆர்வம் காட்டினேன். அது எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை. பதினொரு அல்லது பண்ணிரெண்டு வயதுப் பருவத்தில் வாசிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அதுவும் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். அந்த வயதில் இலக்கியப் பத்திரிகைகளாகத்தான் தேடி வாசிப்பேன். அந்தக் காலத்துப் பத்திரிகைகள் இன்றிருப்பதுபோல அசிங்கத்தனமான பத்திரிகைகளாக இருக்கவில்லை. அவை இலக்கியத்தரம் வாய்ந்தனவாக, இலக்கியவாதிகளை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்தவை. அந்தக் காலத்தில் புதுமைப்பித்தன், சி. சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, லா. ச. ராமாமிருதம், நா. பா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், மு. வரதராசன் என்பவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டு வாசிக்கும் பழக்கத்தை நான் அதிகரித்துக்கொண்டேன். மு. வரதராசனின் அறிவுசார்ந்த சிந்தனைக் கட்டுரைகள் எனக்கு அக்காலத்தில் மிகவும் பிடித்தமானவை. வாசித்ததையெல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடிந்ததோ இல்லையோ வாசிப்பதில் குறைவைக்கவில்லை. இலக்கியத்தோடு அறிவு சார்ந்த நூல்களையும் நான் வாசித்தேன். இதற்கு வசதியாக என் அப்பா நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று வாங்கிக் குவிப்பார். அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஒரு வாரத்துக்குள் வாசித்து முடித்துவிடுவேன். இன்று பெரியவர்களாக இருப்பவர்களும் வாசித்துவிட்டு விளங்கவில்லை என்று சொல்லுகின்ற எழுத்துக்களை நான் பண்ணிரெண்டு வயதில் புரிந்துகொண்டு மனதுக்குள் மகிழ்ந்திருக்கிறேன்; அந்த எழுத்துக்களைப் பாராட்டியிருக்கிறேன். அப்படியாக நான் வாசித்த, வளர்ந்தவர்களும் புரியவில்லை என்று சொன்ன ஒரு குருநாவல் இப்போதும் என் மனதுக்கு வருகிறது. அதில் போட்டிருந்த படமும் நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஊர் நூலகங்களுக்குப் போய் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் புரட்டிப் புரட்டி வாசித்திருக்கிறேன். நேரம் போவதே தெரியாது. ஒரு நூலகத்தில் அங்கத்தவராக வரவும் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், வயது போதாததால் அதில் இணைவது அன்று சுலபமாக இருக்கவில்லை.

இதையெல்லாம் நான் எதற்காக சொல்லுகிறேன் என்று கேட்கிறீர்களா? இந்த வாசிக்கும் பழக்கம்தான் என்னை சிந்திக்கிறவனாகவும் மாற்றியிருக்கிறது; எழுதுமளவுக்கு கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கும் நான் வாசிக்கிறேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசிக்கிறேன். என் வாசிப்பு கிறிஸ்தவத்தைப் பற்றியதாக மட்டும் இருந்துவிடுவதில்லை. அறிவுசார்ந்த நூல்களையும், பத்திரிக்கைகளையும் நான் வாசிக்கிறேன். இதற்காக நான் கண்டதையும் வாசிப்பதில்லை. தெரிவு செய்த பத்திரிகைகள், நூல்கள், தொகுப்புகள் என்று பல விஷயங்களை நான் வாசிக்கிறேன். பல விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இன்றைக்கும் ஆசைப்படுகிறேன். வாசித்து அறிந்துகொள்ளாதது எவ்வளவோ இருக்கிறதே என்ற ஆதங்கமும் எனக்கு உள்ளுக்குள் இருக்கிறது. வாசிக்கும் பழக்கத்தை எங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நானும் என் மனைவியும் கற்றுத் தந்திருக்கிறோம். வயதுக்கேற்றவிதத்தில் நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவர்களுக்கு ‘போரடிக்கிறது’ (Bored) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அந்தளவுக்கு அவர்கள் நேரத்தை வாசிப்பதில் செலுத்தியிருக்கிறார்கள். குடும்பமாக விடுமுறைக்கு போகும்போதெல்லாம் முதல் நாளிலேயே எந்த ஊரிலிருக்கிறோமோ அந்த ஊர் நூல்நிலையத்துக்கு அவர்களை அழைத்துப் போய் கைநிறைய நூல்களை வாசிப்பதற்கு கொடுத்துவிடுவோம். இன்று அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதற்கு நிச்சயம் சிறுவயதிலிருந்தே கொடுக்கப்பட்ட வாசிப்புப் பயிற்சியும், அதிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவும் அனுபவமும் காரணமாக இருந்திருக்கிறது என்று எங்களால் நிச்சயமாக சொல்ல முடியும்.

வாசிப்பு மனிதனை சிந்தனையாளியாக மாற்றுகிறது. அதுவும் ஒரு மனிதன் கிறிஸ்தவனாக வந்துவிட்டால் அவன் உண்மையிலேயே பெரிய சிந்தனையாளியாக மாறிவிடுகிறான். அதுதான் கிறிஸ்தவத்தில் இருக்கும் சிறப்பான அம்சம். சிந்திக்கத் தெரியாதவனாக இருந்தவனை சிந்திக்க வைப்பதே கிறிஸ்தவம். உண்மை எது, பொய் எது என்று ஒரு கிறிஸ்தவனால் மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் அவன் கிறிஸ்துவால் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதுதான். உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவன் தான் ஆராதிக்கும் கடவுளின் வேதத்தை வாசித்து அவருடைய திட்டங்களையும், கட்டளைகளையும் எண்ணங்களையும் அறிந்து உணர்ந்துகொள்ளுகிறான். அவரோடு உறவாடும் அவனால் அவருடைய இருதயத்தை அறிந்து சிந்திக்க முடிகிறது. உலகத்தை அவனால் அவருடைய பார்வையோடு பார்க்க முடிகிறது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே அவனுக்கு இப்போது புதிராகவும், குழப்பமாகவும் இருப்பதில்லை. படைத்தவரின் பார்வை அவனுக்கு இப்போது கிடைத்துவிட்டதல்லவா? அவருடைய கண்களோடு அவருடைய வார்த்தை மூலம் எல்லாவற்றையும் அவன் இப்போது பார்க்கிறான். அதுதான் கிறிஸ்தவம் மனிதனுக்கு தந்திருக்கின்ற ஆசீர்வாதம்.

கிறிஸ்தவனாக இல்லாத காலத்தில் நான் அதிகம் வாசித்து கற்றுக்கொண்டிருந்தபோதும் கிறிஸ்தவனான பிறகே நான் உண்மையில் பிறந்ததற்கான அர்த்தமுள்ளவனானேன். கிறிஸ்தவம் என்னை மெய்ச் சிந்தனையாளியாக்கியது. இன்றைக்கு என் வாசிப்பும் எழுத்தும் அந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. கிறிஸ்தவம்தானே மார்டின் லூத்தரையும், ஜோன் கல்வினையும், ஜோன் ஓவனையும், ஜோன் பனியனையும், ஸ்பர்ஜனையும் சிந்தனையாளிகளாக்கியது. சிந்திக்க ஆரம்பித்த கிறிஸ்தவன்தானே 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தையும், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் சீர்திருத்தத்தையும், 18ம் நூற்றாண்டு எழுப்புதல்களிலும் பங்கேற்றான். 18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த சிந்தனையாளராக இருந்தவர் கிறிஸ்தவத் தலைவர்களில் சிறப்புமிக்கவராக அமெரிக்காவில் இருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸ்.

‘சிந்திக்காத கிறிஸ்தவன்’ என்ற வார்த்தைப் பதங்கள் கிறிஸ்தவத்திற்கே அவமானத்தைத் தேடித் தரும் வார்த்தைகள். உண்மையில் அப்படியொருவரும் இருக்கக்கூடாது. ஆனால், நம்மினத்தில் அந்தத்தொகைதான் அதிகம். இதற்குக் காரணம் நம்மினத்துக் கிறிஸ்தவம் சிந்தனைபூர்வமான வேதபோதனைகளுக்கு இடங்கொடுக்காமலிருப்பதுதான். ஆராதனையை எடுத்துக்கொள்ளுங்கள்; சிந்திப்பதற்கு இன்றைய கிறிஸ்தவ ஆராதனையில் எங்கே இடமிருக்கிறது? பிரசங்கம் வேதப்பிரசங்கமாக இல்லாமல் வெறும் வார்த்தை ஜாலமாகவும், அள்ளித் தெளிக்கப்படும் வாக்குத்தத்த வசனங்களாக மட்டுமே இருக்கின்றது. தனிமனித அனுபவப் பகிர்வை மட்டுமே அதில் பார்க்கிறோம். இதில் சிந்திப்பதற்கு எங்கே வழியிருக்கிறது. ரோமர் 12:1-2 வசனங்கள் விளக்குகிறபடி புத்திரீதியிலான அறிவுசார்ந்த ஆராதனையாக தமிழ் ஆராதனைகள் இருப்பதில்லை. உணர்ச்சிக்கு உப்பிட்டு வளர்க்கும் வெறும் மாம்ச ஆராதனையாகத்தான் இருக்கின்றது. இந்தவித கிறிஸ்தவம் நம்மவர்களை வேதசிந்தனையாளர்களாக இருக்க முடியாமல் செய்துவிடுகிறது. நம்மவர்களும் வேத சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாமல் நேரத்தைக் கொடுத்து வாசிக்காதவர்களாக இருந்து வருகிறார்கள். வேதத்தை அவர்கள் ஆராய்ந்து வாசிப்பதில்லை. இருக்கும் கொஞ்சநஞ்ச வாசிப்பும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளுகிற விதத்தில் இருப்பதில்லை.

நம்மவர்கள் அதிகம் பாரம்பரியங்களுக்கும், சடங்குகளுக்கும் அடிமையானவர்கள், இன்னும் இவற்றில் இருந்து நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் விடுதலையடையவில்லை. பாரம்பரியமும், சடங்குகளும் சிந்தனைக்கு எதிரி தெரியுமா? சிறுவயதில் நான் என் குடும்பப் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் புரிந்துகொள்ள கேள்விகள் கேட்டிருக்கிறேன். எந்தக் கேள்வி கேட்டாலும், ‘அப்படித்தான் செய்ய வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது’ என்று மிரட்டுவார்கள். சிந்தனைக்கும், கேள்விக்கும் அங்கே இடமிருக்கவில்லை. அதுவே என்னை அதிகம் சிந்திக்கவைத்தது, கேள்வி கேட்க வைத்தது. பாரம்பரியமும், சடங்குகளும் கிறிஸ்தவத்தின் எதிரி. அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் நம்மினத்துக் கிறிஸ்தவம் விடுதலையடையும். சிறைக்கு வெளியில் வந்தும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது நம்மினம். பாரம்பரியத்திலும், சடங்குகளிலும் இருந்து இன்னும் விடுபடாதவர்கள் முடமான கிறிஸ்தவ வாழ்க்கை மட்டுமே வாழ முடியும். உங்களுடைய கிறிஸ்தவம் உங்களை சிந்திக்க வைத்து பாரம்பரியத்திலிருந்தும், சடங்குகளிலிருந்தும் உங்களுக்கு இன்னும் விடுதலை தராமல் இருந்தால் நீங்கள் உண்மையில் கிறிஸ்தவரா என்றுதான் உங்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளாததும் இந்த அவலங்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதற்கு ஒரு பெருங்காரணம். வாசிப்பில்லாமல் சிந்திக்க வழியில்லை. சிந்திக்காமல் ஒரு விஷயத்தை ஆராய வழியில்லை. வேதத்தை வைத்து ஆராய்ந்து பார்க்காமல் எந்த விஷயத்தைப் பற்றியும் உண்மைத் தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியாது. பத்துக் கட்டளைகளை வைத்து ஆராய்ந்து பார்த்தாலே போதும் நம் பாரம்பரியப் போலித்தனங்கள் எந்தளவுக்குப் பொய்யானவை, கிறிஸ்தவத்திற்கு முரணானவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா? வாசிக்க வேண்டும் என்ற உணர்வை உங்களில் ஏற்படுத்துவதற்காகத்தான். முடமாக வாழாமல் நீங்கள் நிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். சத்தியத்தை சத்தியமாக நீங்கள் தெரிந்துகொண்டு அசத்தியத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். வாசிக்க ஆரம்பியுங்கள்; வேதத்தை விடாமல் சிந்தித்து ஆராய்ந்து வாசியுங்கள். நல்ல சத்தான ஆக்கங்களையும், நூல்களையும் வாசிக்க ஆரம்பியுங்கள். வேதத்தை அடித்தளமாக வைத்து நீங்கள் வாசிக்கின்ற அனைத்தும் வேதக் கருத்துக்களுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்று ஆராய்ந்து வாசியுங்கள். வேதபூர்வமான உலகப் பார்வையொன்றை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு வாசிக்க ஆரம்பியுங்கள். உங்கள் வாசிப்பு உங்களை சிந்திக்க வைக்கட்டும். கேள்விகளைக் கேட்க வைக்கட்டும். உங்கள் சிந்தனை விருத்தியாகட்டும். சிறைக்கு வெளியில் வாழும் உங்கள் சிறைவாசத்துக்கு ஒரு முடிவு வரட்டும். இன்றே கருத்தோடு வாசிக்க ஆரம்பிப்பீர்களா?

2 thoughts on “சிறைக்கு வெளியில் சிறைவாசம்

  1. Reading is important. We want to increase our knowledge by means of READ . Thank you. Annadurai, Prithiviraj, Grace Gospel Church, Veeriyapalayam, Karur District.

    Like

  2. Pastor,

    Realy it was very useful for me.because now christians they don’t read the bible daily they watch only T.V messages,so pl write this type of articals.

    Like

மறுமொழி தருக