கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் முழுமையானது, பூரணமானது. அதாவது, சுவிசேஷக் கிறிஸ்தவத்தின் போதனைகளில் எந்தப் பகுதியையும் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. நமது அறியாமையின் காரணமாகவோ அல்லது நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ கிறிஸ்தவப் போதனைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிட்டு நமக்குப் பிடித்ததை மட்டும் கிறிஸ்தவமாக எண்ணி நம்மை சமாதானப்படுத்திக்கொண்டு நாம் வாழ முயற்சிப்பது பெருந்தவறு. கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் கிறிஸ்தவ போதனைகளுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் நம்மில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த எண்ணப்பாட்டால் அவர்கள் சத்தியத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். ஏதோ, இயேசு சத்தியத்துக்கும், போதனைகளுக்கும் மதிப்புக்கொடுக்காமல் பாவமன்னிப்பை மட்டும் வலியுறுத்தியதுபோல் எண்ணி வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவம் இன்றைக்கு குழப்பான நிலையில் நம்மினத்தில் இருந்து வருகின்றது.

கிறிஸ்தவர்களில் சிலர் கிறிஸ்துவின் பத்துக் கட்டளைகள் கிருபைக்கு எதிராக இருப்பதாகத் தவறாக எண்ணி அதை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். வேறுசிலர், கிருபையைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதால் பத்துக் கட்டளைகளை மட்டுமே பெரிதுபடுத்தி போதித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களும் தவறு செய்கிறார்கள். பத்துக் கட்டளையை நாம் பின்பற்ற கிறிஸ்துவின் கிருபை நமக்கு அவசியம். கிருபையைத் தம்மில் கொண்டிருக்காதவர்கள் பத்துக் கட்டளையை வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாது. அதேபோல், பத்துக் கட்டளைகள் கிறிஸ்துவின் கிருபையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. அதுவே பத்துக் கட்டளைகளின் பிரதான கடமை. பத்துக் கட்டளைகளைப் பார்க்கும் அவிசுவாசிக்கு அவற்றைப் பின்பற்றும் அளவிற்கு தன்னில் பரிசுத்தம் இல்லை என்பதை உணருவான். அதையே பவுலும் உணர்ந்து கிறிஸ்துவை பாவ மன்னிப்புக்காகவும், இரட்சிப்புக்காகவும் விசுவாசித்தார். கிறிஸ்துவின் கிருபையை அடைந்தவர்களால் மட்டுமே பத்துக் கட்டளைகளை நிறைவேற்ற முடியும். இப்படியிருக்கும்போது ஒன்றை மட்டும் வலியுறுத்தி மற்றதை எப்படி ஒதுக்கிவைக்க முடியும்? இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவத்தில் நியாயப்பிரமாணமும், கிருபையும் இணைந்தே காணப்படுக்கின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் நாம் பெரிதுபடுத்தக் கூடாது. ஒன்றில்லாமல் மற்றதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை.

வேறு சிலர் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே கிறிஸ்தவர்களின் கடமை என்று எண்ணி வேதத்தில் வேறு எந்தப் போதனைகளுமே முக்கியம் இல்லை என்பதுபோல் நடந்து கொள்வார்கள். பரிசுத்த வாழ்க்கை, சபை வாழ்க்கை, சத்திய வளர்ச்சி, கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கை, கிறிஸ்தவ சமுதாய உறவு, தொழிலொழுக்கம் போன்ற கிறிஸ்தவத்தின் ஏனைய அவசியமான அம்சங்களையெல்லாம் அவர்கள் கவனிப்பதே இல்லை. சுவிசேஷ வைராக்கியம் கொண்டவர்கள்போல் இவர்கள் தங்களை இனங்காட்டிக்கொண்டாலும் தங்களுடைய கிறிஸ்தவ வண்டியின் அச்சாணி ஆடிக்கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. இதேபோல், பரிசுத்த வாழ்க்கை வாழ்வது மட்டுமே கிறிஸ்தவம் என்று நம்பி கிறிஸ்தவ சத்தியங்களைக் கற்றுக்கொள்ளுவதில் எந்த அக்கறையும் காட்டாதவர்களையும், ஜெபமும், உபவாசமும் மட்டுமே கிறிஸ்தவத்தின் உயிர்நாடி என்று நம்பி வேறெதற்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காதவர்களையும், பரிசுத்த ஆவியின் அனுபவம் மட்டுமே கிறிஸ்தவம் என்று எண்ணி வேதத்தின் வேறெந்த அம்சங்களிலும் அக்கறையே காட்டாதவர்களையும் இன்று பரவலாகக் கண்ணெதிரே தமிழினத்தில் நாம் பார்த்து வருகிறோம். கிறிஸ்தவ வேத போதனைகளில் ஒரு சில அம்சங்களிற்கு மட்டுமே இவர்களால் தங்கள் வாழ்க்கையில் இடங்கொடுக்க முடிகிறது. இது முழுமையான கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளமில்லை.

இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தைக் கவனமாக வாசித்துப் பாருங்கள். அந்த அருமையான பிரசங்கத்தில் இயேசு சுவிசேஷக் கிறிஸ்தவ போதனையின் சகல அம்சங்களின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு விஷயத்தை மட்டும் வலியுறுத்தி அது மட்டுமே முக்கியம் என்று அவர் பிரசங்கம் செய்யவில்லை. வேதத்தில் ஒரு சத்தியத்தை இன்னொரு சத்தியத்தோடு ஒப்பிடும்போது ஒன்று மற்றதற்கு அடித்தளமாகவோ அல்லது ஒன்று இன்னொன்றைவிட முக்கியத்துவம் கொண்டதாகவோ காணப்படுவதை மறுக்க முடியாது. ஆனால், அவையெல்லாமே கிறிஸ்தவத்தின் அவசியமான, ஒதுக்கிவைக்க முடியாத சத்தியங்களாக இருக்கும். வேதம் ஜெபிக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனால், உபவாசம் கட்டளையாகக் கொடுக்கப்படவில்லை. அதனால், ஜெபம் மட்டுமே அவசியம், உபவாசம் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஜெபமேயில்லாத உபவாசத்தைத்தான் நாம் கண்டிருக்கிறோமா? இதில் எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டும் அவசியம் என்றுதான் சொல்ல முடியும். இருந்தாலும் ஒன்று இன்னொன்றிற்கு அவசியமானதாகவும், அடித்தளமாகவும் இருப்பதை நாம் நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கும்போது உபவாசமெடுத்து ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, உபவாசமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முடியாது. ஏனெனில், நம்மில் இருக்கும் சில பாவங்கள் உபவாச ஜெபமில்லாமல் போகாது என்று வேதம் சொல்லுகிறதே. அதனால், ஜெபமும் அவசியம், உபவாசமும் அவசியம் என்று அறிந்துகொள்ளுகிறோம் இல்லையா? ஞானஸ்நானத்தினால் ஒருவருக்கு இரட்சிப்பு கிடைக்காது. அதனால் ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா? ஞானஸ்நானம் எடுக்கும்படி விசுவாசிகளுக்கு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரே. சபையில் அங்கத்தவராக இருக்க அது அவசியமாக இருக்கிறதே. இதேபோல்தான் கிறிஸ்தவத்தின் சகல போதனைகளையும் நாம் கவனத்தோடு ஆராய்ந்து படித்து அனைத்து சத்தியங்களையும் கீழ்ப்படிவோடு தகுந்த முறையில் பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவத்தின் ஒரு போதனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதை மட்டுமே கிறிஸ்தவமாகக் கருதி ஏனைய சத்தியங்களை நிராகரித்து நடந்துகொள்ளுவது நம்மைப் பரிசேயர்கள் கூட்டத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். கிறிஸ்து கிருபையாய் நமக்குத் தந்திருக்கும் கிறிஸ்தவத்தை நாம் கொச்சைப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையும் கொஞ்சம் சிந்தித்துத்துத்தான் பாருங்களேன்.

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!

மறுமொழி தருக