சாமானியர்களில் ஒருவர்

என் ஊழியப் பணியும், இலக்கியப்பணியும் பல நாடுகளில் நல்ல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்களைக் கர்த்தர் தந்திருக்கும் ஈவாகவே நினைக்கிறேன். நல்ல நண்பர்கள் நல்ல புத்தகங்களைப்போல. நல்ல நூல்களைத் தொடர்ந்து வாசிக்கலாம். அதுபற்றி சிந்திக்கலாம்; கருத்துக் கூறலாம். நல்ல நூல்கள் நம் நினைவலைகளில் எப்போதும் நிலைநிற்கும். அதுபோலத்தான் நல்ல நண்பர்களும். இருந்தாலும் அவர்கள் மனிதர்கள். அவர்கள் நூல்களைவிட ஒருபடி மேல். நல்ல நண்பர்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமானதல்ல. இதுபற்றி இன்னொரு ஆக்கத்தில் நேரங்கிடைக்கும்போது விளக்கமாகவே எழுதவிருக்கிறேன். நட்பை அடையவும், தக்கவைத்துக்கொள்ளவும், வளர்க்கவும் நாம் செய்யவேண்டியவைகள் அநேகம். ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நட்பு வளராது நிலைக்காது. முதிர்ந்த போதகர் ஒருவர் ஒருமுறை சொன்னார், ‘நட்பை அழிக்கவேண்டுமானால் செய்திப்பறிமாறலை தவிர்த்துக்கொள்’ என்று. எத்தனை உண்மை. நட்பு நண்பனின் உறவைத் தொடர்ந்து நாடும்; அதில் திளைக்கும்.

என் நண்பர் ஒருவரைப்பற்றித்தான் இங்கே எழுதப்போகிறேன். அவரோடு இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது. அதை அவரே சமீபத்தில் எனக்கு நினைவுபடுத்தினார். சமூக, பொருளாதார, கல்வி நிலையில் நாங்கள் இருவரும் எதிரும் புதிருமானவர்கள். இயல்பாகவே நட்பு உருவாக பல அம்சங்களில் இருவருக்கு ஒருமனப்பாடு இருக்கவேண்டுமென்பார்கள். அதிலெல்லாம் ஈடுபாடு காட்டி அறிந்துகொள்ள நான் என்றுமே முயன்றதில்லை. எங்கள் நட்புக்கு ஒரே காரணம் சத்தியத்தில் இருக்கும் ஒருமனப்பாடு மட்டுமே. சத்தியம் எங்களை இணைத்திருக்கிறது என்பதே உண்மை. இருபது வருடங்களாக வருடத்தில் சில தடவைகள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். எங்கள் பேச்சு எப்போதும் சத்தியம் பற்றியதாக மட்டுமே இருந்திருக்கிறது.

என் நண்பரைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. அவர் ஆரம்பப் பள்ளியைக்கூட முடித்தில்லை. சிறு கிராமத்தில் வாழ்வும், வளர்ப்பும், இருப்பும். சாதாரண வேலை; சாதாரண வீடு; அன்றாடம் மூன்று வேலை உணவைத் தரும் ஊதியம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஒரேயொருமுறை அவருடைய ஊருக்குப்போய் வீட்டில் தேநீர் அருந்தியிருக்கிறேன். அதற்கு மேல் அவருடைய பின்புலம் பற்றிச் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருப்பதில் தப்பில்லை. சமூகம் அதற்கு மதிப்புக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் சாமானிய நிலையில் இருப்பவர்களிடந்தான் மனித உறவுகளின் அருமையையும் ஆழத்தையும் உணர முடியும். இன்றைய சமூகத்தின் தீயவிளைவுகளால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். அடுத்தவனை அழித்து தன்னை உயர்த்திக்கொள்ளும் சுயநலமும், அகங்காரமும் சாமானிய நிலையில் இருப்பவர்களிடம் பெரிதும் இருப்பதில்லை. அவர்களுடைய பேச்சும், நடத்தையும் இயல்பானவையாக இருக்கும். வாழ்க்கையில் தேவைகள் குறைவாக இருப்பதால் பணத்திற்கு அவர்கள் அடிமையாகவில்லை. இருப்பது போதும் என்ற மனப்பான்மையோடு அவர்களால் வாழமுடிகிறது.

வெகுகாலத்துக்கு முன்பே கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறார் என் நண்பர். அது எத்தகைய விசுவாசம் என்பதை அவருடைய வாழ்க்கையில் காண்கிறேன். இன்று கிறிஸ்தவ விசுவாசம் தரங்குறைந்து காணப்படுவதை உணர்கிறேன். சத்தியத்தில் உறுதியற்ற ஒருவித விசுவாசத்தையே நான் எங்கும் காணமுடிகிறது. சத்தியத்தில் தெளிவில்லாமல், வேதத்தின் அடிப்படை அம்சங்களில் பரிச்சயமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளுகிற பெருங்கூட்டமே எங்கும் இருக்கிறது. இதில் ஆபத்து என்னவென்றால் இவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும், அதில் தெளிவு பெறுவதிலும் எந்த ஆர்வமோ அக்கறையோ இல்லாதவர்களாக இருப்பதுதான். இயேசுவை விசுவாசிக்கின்ற, நேசிக்கின்ற இருதயம் இயல்பாகவே சத்தியத்தில் நாட்டம் செலுத்தும் என்பதே வேதபோதனை. சத்தியமே ஒருவருடைய விசுவாசத்தை எடைபோட உதவுகின்ற அளவுகோள்; வெறும் உணர்ச்சி வேகமோ அல்லது வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா சொல்லுவதோ அல்ல. இயேசு சொல்லுகிறார், ‘சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.’ சத்தியத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காத ‘விசுவாசம்’ கிறிஸ்தவ விசுவாசமல்ல; அது போலியானதாக மட்டுமே இருக்க முடியும். அது தொடர்வதற்கும், நிலைப்பதற்கும் வழியில்லை.

இங்குதான் என் நண்பரில் நான் பெரும் வேறுபாட்டைக் காண்கிறேன். கல்வி பெரிதாக இல்லாவிட்டாலும் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும் அதில் வளருவதிலும் அவர் காட்டும் ஆர்வம் ஆரம்பமுதலே என்னை ஈர்த்தது. வேதத்தை வாசிப்பதில் மட்டுமல்லாது கிறிஸ்தவ இலக்கியங்களை வாசித்து சிந்தித்து அதுபற்றிப் பேசுவதிலும் அவருக்கு இருந்த அலாதியான ஈடுபாட்டை நான் வேறு எவரிலும் அந்தளவுக்குக் கண்டதில்லை. கிறிஸ்தவ இறையியல் போதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. அதிக நேரத்தை அவர் வாசிப்பில் செலவிடுகிறார் என்பது சொல்லாமலேயே தெரிந்தது. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதற்கு கல்வியோ, பட்டங்களோ தேவையில்லை தெரியுமா? எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தாலே போதும். ஆர்வத்தோடு நேரத்தைக் கொடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அது ஒருவரை எங்கோயோ கொண்டுபோய்விடும். அதைத்தான் என் நண்பரில் நான் காண்கிறேன். அவருடைய வாசிப்புப் பழக்கம் சத்தியத்தை ஆராயவும், அதில் மூழ்கி முத்தெடுக்கவும் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘கிறிஸ்தவ உலகப் பார்வை’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த ஆக்கம் அருமையானது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கியிருக்கும் ஒருவராவது அதுபற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நான் பேசும்வரை காத்திருக்காமல் அவர் தொடர்ந்து அந்த ஆக்கம் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர ஆரம்பித்தார். சமீபத்தில் வந்திருந்த ‘சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்’ ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த, சபை அமைப்பதற்கு அவசியமான ஏழு அம்சங்களைப் பற்றி விவாதித்தார். இதையெல்லாம் அக்கறையோடு வாசித்து சிந்தித்து ஆராய்ந்திருப்பதோடு அவை பற்றிக் கலந்துரையாடுவது அவருக்கு அவசியமாகப்படுகிறது. வாசிப்பவற்றை சிந்தித்துப் பார்த்துப் பிரறோடு பறிமாறிக்கொள்ளுகிறபோதே நம் அறிவு பட்டை தீட்டப்படுகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரோடு நடந்த கலந்துரையாடல் எத்தனை சுகமான அனுபவமாக இருந்தது தெரியுமா? என் நண்பர் சாமானியர்தான்; ஆனால் கிருபையிலும் ஞானத்திலும் வளர வேண்டும் என்ற துடிப்பும், வாசிப்புப் பழக்கமும் அவரை அசாதாரணராக்கியிருக்கிறது. அவருடைய வாசிப்பு வெறும் வாசிப்பல்ல; வாசித்தவற்றைப் பற்றி அவர் மறுபடியும் மறுபடியும் சிந்திக்கிறார், பிறரோடு அது பற்றிப் பேச விரும்புகிறார்.

என்னுடைய ஊழியப்பணியில் எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும் ஒன்று, இன்றைய படித்த வாலிபர்களிடமும், நடுத்தர வயதுள்ளவர்களிடமும் வாசிப்புப் பழக்கம் இல்லாதது. இந்த ஆதங்கமே ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை எழுத வைத்தது. வாசிப்பில்லாமல் சத்தியத்தில் வளர முடியாது; வாசிப்பில்லாமல் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது; வாசிப்பில்லாமல் ஊழியப்பணிகளெதுவும் செய்யமுடியாது. வாசிக்காதவர்களால் தங்களுக்கும் பிறருக்கும் எந்தப் பயனுமில்லை. இது எனக்கு நன்றாகவே தெரியும். இதை அநேகர் உணராதிருக்கிறார்களே என்ற ஆதங்கம் என்னை வாட்டாமலில்லை. அதுவும் போதகப்பணியில் இருப்பவர்களிடம் வாசிப்பு இல்லாதிருக்கும் அவலத்தை நான் எங்குபோய் சொல்லுவது? இந்த ஆதங்கத்தை என் நண்பரிலும் நான் பார்த்தேன். தனக்குத் தெரிந்த போதகர்கள் நூல்கள் வாசிப்பதைத் தவிர்த்துக்கொள்வதாகவும், அது பற்றிப் பேசவே வேண்டாம் என்று சொல்வதாகவும் அவர் குறைபட்டுக்கொண்டார். சிலர் இதெல்லாம் சபை நடத்த உதவாது என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இது எதைக்காட்டுகிறது? நம்மினத்தில் கிறிஸ்தவம் இன்றிருக்கும் அவலநிலையைத்தான். மனதைத் தளரவைக்கும் அனுபவங்களைச் சந்தித்தாலும் என் நண்பர் தன்னுடைய சிறிய வருமானத்தில் ஒரு பகுதியை கிறிஸ்தவ இலக்கியங்களை வாங்குவதில் செலவிட்டு தனக்குத் தெரிந்த போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள் என்று எல்லோருக்கும் தான் வாழும் பகுதியில் விநியோகித்து வருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவரோ இருவரோ ஒவ்வொரு சபையிலும் இருந்தால் எத்தனை நன்மையாக இருக்கும்.

கிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தைப் பற்றி நண்பர் டேவிட் மெரெக் ஜூன் 2016ல் பல செய்திகளை அளித்திருந்தார். அந்த பக்திவைராக்கியத்தை என் நண்பரில் நான் நிதர்சனமாகக் காண்கிறேன். ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதால் பக்தி வைராக்கியம் அவரில் தானே ஏற்பட்டுவிடாது. இருக்கும் கிறிஸ்தவ பக்தியை நடைமுறையில் வைராக்கியத்தோடு வெளிப்படுத்துவதே பக்தி வைராக்கியம். தான் வாழும் சிற்றூரும், குறைந்தளவான வாழ்க்கை வசதிகளும், சத்தியத்தில் நாட்டங்காட்டாத உறவுகளும் ஊர் மக்களும் தன்னைச் சூழ்ந்திருந்தபோதும் இந்த நண்பரில் பக்திவைராக்கியம் கொழுந்துவிட்டெரிகிறது. அதன் தனலை நான் ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்போதும் உணர்கிறேன்.

கிறிஸ்தவர்களில் அநேகருக்கு தங்களுடைய மாம்சத்தின் செய்கைகளைக் கட்டுப்படுத்தி அழிப்பதில் மட்டுமே வாழ்நாளெல்லாம் போய்விடுகிறது. அந்த நடைமுறைக் கடமையில் அவர்கள் சோர்வையும், தளர்வையும் சந்தித்து கொஞ்சம் எழுவதும், பின் விழுவதும், பின் எழுவதுமாகவே ஆவிக்குரிய சந்தோஷம் அதிகமின்றி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களால் பயனுள்ள எதையும் பெரிதாக செய்ய முடிவதில்லை. வயது போய்க்கொண்டிருந்த போதும் கிறிஸ்தவ அனுபவ முதிர்ச்சி அவர்களுக்கு எப்போதும் எட்டாத கொம்புத்தேனாகவே இருந்துவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல. அது ஒருபுறம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டியிருந்த போதும், கிறிஸ்தவ கிருபைகளில் வளர்ந்து, கிறிஸ்துவின் அன்பை ருசித்து வெளிப்படுத்தி, கிறிஸ்து தந்திருக்கும் ஈவுகளையெல்லாம் பயன்படுத்திப் பணிசெய்வதும் கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரண்டும் தொடர்ந்து நம் வாழ்வில் எப்போதும் காணப்படவேண்டும். ஒன்றிருந்து ஒன்றிராமல் இருப்பதற்குப் பெயர் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. மாம்ச இச்சையடக்கத்தில் மட்டும் ஈடுபட்டுத் தளர்ந்து போய்க்கொண்டிருந்தால் அது கிறிஸ்துவை ஒருபோதும் மகிமைப்படுத்தாது; கிறிஸ்தவ பணிகளை மட்டுமே செய்து மாம்ச இச்சையடக்கத்தில் ஈடுபடாமலும், கிருபையில் வளராமலும் இருந்தால் அதுவும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தாது. இந்த இரண்டின் அவசியத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் இவற்றில் ஒன்றை மட்டும் செய்து அரைகுறை வாழ்க்கை வாழ்கிற அநேகரையே நம்மைச் சுற்றி எங்கும் காண்கிறோம்.

என் நண்பருக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் இந்த இருகட்ட ஆவிக்குரிய இரகசியம் தெரிந்திருக்கிறது. வயதின் காரணமான உடல் தளர்ச்சியும், உற்றார் உறவினரின் ஒட்டாத உறவும், சுவிசேஷத்திற்கு தலை சாய்க்க மறுப்பவர்களும், சபை இன்றிருக்கும் நிலையும், மாம்ச இச்சையடக்கக் கடமையும் அவருக்கும் சிலவேளைகளில் சோர்வை உண்டாக்குகிறபோதும், அதையெல்லாம் சட்டை செய்யாமலும், தளர்ந்துபோய் சாட்சியை இழந்துவிடாமலும் கிருபையில் வளர்ந்து கிறிஸ்துவின் அன்பில் இன்பம் கண்டு தன்னால் முடிந்தவரையில் கிறிஸ்துவுக்குப் பணிபுரிந்து வருகிறார். இதுவே அவருடைய பக்தி வைராக்கியத்தின் இரகசியம். ஒரு சாமானியரின் வாழ்க்கையில் ஜோடனைகளில்லாமல் அப்பட்டமாக ஒளி வீசும் அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியம் இது.

2016ன் ஆரம்பத்தில் நாம் வெளியிட்டிருக்கும் திருமறைத்தீபத் தொகுப்புகளில் முதல் பாகத்தை அவர் கடனாக ஒருவரிடம் இருந்து பெற்று ஒரே மாதத்தில் அத்தனை பக்கங்களையும் வாசித்து முடித்தாராம். திருமறைத்தீப இதழில் அவருக்கு என்றுமே அலாதியான பற்று. அதை அவர் வெறும் பத்திரிகையாகக் கருதவில்லை. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்துக்கு தீனிபோட்டு ஊக்குவிக்கும் சத்திய ஊற்றாகக் கருதுகிறார். அதுபற்றிய பேச்சை ஆரம்பித்தாலே அவரால் நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. பத்திரிகை வெளிவந்த ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் அதை வாசித்து வருகிறார். ஒரே இதழைப் பல தடவைகள் வாசித்து அனைத்துப் போதனைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முயல்வார். தன்னுள்ளத்தைத் தொட்டவற்றை மற்றவர்களோடு அவரால் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது. அவருடைய பத்திரிகை வாசிப்பில் அக்கறை, ஆர்வம், சத்தியத்தைக் கற்கும் வைராக்கியம் அனைத்தையும் நான் பார்க்கிறேன். பத்திரிகை எப்போது வரும் என்று அவர் காத்திருந்து பெற்று வாசிப்பார். மற்றவர்களையும் வாசிக்கவைக்க முயல்வார். சாதாரணமாக இதையெல்லாம் நாம் ஒரு சாமானியரிடம் காண்பதில்லை; இருந்தாலும் நம்புவதில்லை. என் நண்பரின் இந்த இலக்கணங்கள் என்னைத் தொடாமலில்லை.

கிறிஸ்தவனின் மெய்யான பக்தி வைராக்கியம் இன்று சபை இருக்கும் நிலையைக் குறித்து அவனைக் கவலை கொள்ளச் செய்யவேண்டும். அத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் ஒருவருக்கு சும்மா வந்துவிடாது. எந்தளவுக்கு ஆவிக்குரியவிதத்தில் ஒருவர் வளர்ந்துவருகிறாரோ அதைப்பொறுத்தே இத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் இருக்கமுடியும். இருபது வருடமாக சபை இருக்கும் நிலை என் நண்பரைக் கவலைகொள்ள வைத்திருப்பதை நான் காண்கிறேன். அவர் வாழும் ஊரில் நல்ல சபையென்று சொல்ல ஒன்றுமில்லை. அதுபற்றி ஒவ்வொரு தடவை நான் சந்திக்கும்போதும் அவர் பேசியிருக்கிறார். போதகர்களின் அக்கறையற்ற போக்கும், பிரசங்கத்தின் தாழ்வான நிலையும், அடிப்படை வேதபோதனைகளைக்கூட சபை அமைப்பிலும், சபை நடத்துவதிலும் பின்பற்றாது உலகின் போக்கில் போகும் தைரியத்தையும், மறுபிறப்பிலும், தொடர்ச்சியான மனந்திரும்புதலிலும் எந்த அக்கறையும் காட்டாத ஆத்துமாக்களின் மனப்போக்கும் அவரை நோவாவைப்போலவும், எரேமியாவைப்போலவும், யோனாவைப்போலவும் கவலைகொள்ள வைத்திருக்கின்றன. இந்த நிலை மாறத் தன்னால் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கண்களால் கண்டு மனதால் உணர்கிற ஆத்மீகக் குறைவற்ற செயல்களை அவருடைய இருதயம் கண்டு ஆதங்கப்படுகிறது. எருசலேமைப் பார்த்தபோது இயேசு கண்ணீர்விட்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சமாரியப் பெண்ணுக்கு சுவிசேஷத்தைச் சொல்ல கால்நடையாகப் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார் (யோவான் 3:4). அறுவடைக்கு நிலம் தயாராக இருந்தபோதும் தகுதியான ஊழியக்காரர்கள் அநேகர் இல்லையே என்று அவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். நம்மினத்தின் ஆத்மீகக் குறைவு நம்மை ஆதங்கத்தோடு கண்ணீர்விட வைக்காவிட்டால் நம்முடைய விசுவாசத்தை சோதித்துப் பார்ப்பது நல்லது. என் நண்பருக்குத் தெரியும், பெரிதாக இதுபற்றித் தன்னால் ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் எதையாவது செய்யாமலிருக்கக்கூடாது என்று.

அவர் அடிக்கடி போதகர்களைச் சந்தித்து நல்ல நூல்களை வாசிக்கும்படி வற்புறுத்தி வருகிறார். பத்துக்கட்டளைகளின் அவசியத்தைப் பற்றி தனக்குத் தெரிந்தவிதத்தில் விளக்கி வருகிறார். பிரசங்கத்தை வேதபூர்வமாக ஆத்தும கரிசனையோடு கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். அவரை சாமானியன் என்பதற்காக பலர் சட்டை செய்வதில்லை. இருந்தும் தளராமல் தன்னால் முடிந்ததை அவர் செய்யாமலிருக்கவில்லை. அவிசுவாசிகளுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் அவர் பல முயற்சிகள் எடுத்துவருகிறார். டீக்கடை முன்பு டேப்ரெக்கோடரை வைத்து அங்கு வருகிறவர்கள் பிரசங்கங்களைக் கேட்க வைப்பதில் இருந்து அவர் எடுத்து வருகின்ற முயற்சிகள் அநேகம். அவரிடம் பெரிதாகப் பேசுகிற அளவுக்குப் பெரும் ஈவுகளோ, ஆற்றலோ, கல்வியோ இல்லை. இருந்தபோதும் மனந்தளராமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தொடர்ந்து சொல்லிவருகிறார். அதற்காக அவர் சொல்லுவதைக் கேட்டு மனந்திரும்பாவிட்டாலும் அவரை மதிக்கின்ற மனிதர்கள் கிராமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருமுறை போதகர்களும் பல சபை மக்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பத்திரிகையைப் பற்றியும், கிறிஸ்தவ இலக்கியம் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டேன். வார்த்தைகளில் குழப்பமில்லாமல், தெளிவாக அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுடைய இருதயத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில் கிறிஸ்தவர்களாகிய அவர்கள் இன்று முகங்கொடுக்க வேண்டிய கடமைகளைப் பற்றி அவர் சுருக்கமாகப் பேசினார். வாசிப்பின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்; வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அவருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அவருடைய இதயத்தில் இருந்து வருவனவையாயிருந்தன. என்னால் உணர முடிந்த அதை அன்று எத்தனைப் பேரால் உணரமுடிந்தது என்பது எனக்குக் தெரியவில்லை.

என் நண்பரில் குறைபாடுகள் இல்லாமலிருக்காது. குறைபாடுகளில்லாத பூரணமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இந்த உலகத்தில் இடமில்லை. குறைபாடுகளுக்கு முகங்கொடுத்து திருந்தி வாழ்கிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை. அவருக்கு அருகில் இருந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கிருந்திருந்தால் அவருடைய நிறைகள் மட்டுமல்ல குறைகளும் என் கண்களுக்குப் பட்டிருக்கும். தன்னைக் குறைபாடுகள் இல்லாத மனிதனாக அவர் ஒருபோதும் காட்டிக்கொள்ளுவதில்லை. தன்னைப் பற்றிக் குறைசொல்லுகிறவர்களையும் அவர் பொறுத்துக்கொள்ளுகிறார். ஒன்று தெரியுமா? அவர் ஒரு தடவையாவது எங்களுடைய சந்திப்பின்போது யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொன்னதோ, அவர்களைப்பற்றிய அவதூறு செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொண்டதோ கிடையாது. ‘உங்களில் ஒருவன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்’ என்ற யாக்கோபுவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன.

போலித்தாழ்மைக்கு இன்னொரு பெயர் ஆணவம். இது தாழ்மைக்கு முற்றிலும் எதிரான சூர்ப்பனகை. இது வெறும் வெளிவேஷம் மட்டுமே. தாழ்மை உள்ளத்தில் காணப்படவேண்டியது. உள்ளத்தில் இல்லாமல் அது எவரிலும் நடத்தையில் இருக்கமுடியாது. தாழ்மையைக் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டுமே மன்னிப்புக் கேட்கும் மனதிருக்கும். எவனுக்கு மன்னிப்புக்கேட்க இருதயமில்லையோ அவனிடம் தாழ்மை இல்லை என்றே பொருள். தாழ்மை இருக்கும் இடத்தில் சுயபரிதாபம் இருக்காது. சுயபரிதாபம் ஆணவத்தின் சகோதரன். தாழ்மையுள்ளவர்கள் தங்களை அறிந்துவைத்திருப்பார்கள். தாழ்மையாகிய நற்பண்பைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அதீத ஆணவம், தாழ்மை இரண்டையும் நாம் நாகமானில் காண்கிறோம். ஆவிக்குரியவனாக அவன் மாறியபோது அதன் முக்கிய அடையாளமாகத் தாழ்மை அவனில் இருந்தது. கிறிஸ்தவ விசுவாசம் நமக்களித்திருப்பது தாழ்மையுள்ள இருதயம். அது கிறிஸ்துவில் இருந்தது. இந்த சாமானியரில் நான் தாழ்மை குடிகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். முதல் தடவை சந்தித்த காலத்தில் இருந்து நான் வெளிதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றோ, போதகர்களுக்கான கூட்டங்களில் பேசுகிறேன் என்றோ என்னை விசேஷமாகப் பார்த்து இந்த சாமானியர் என்னிடம் நடந்துகொண்டது கிடையாது. எவருடனும் பேசுவதுபோலவே என்னிடமும் பேசிப் பழகுகிறார். என்னை வித்தியாசமாக நடத்தவேண்டும் என்ற எண்ணங்கூட அவர் மனதில் ஒருபோதும் எழுந்திருக்காது என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் இயல்பான கிறிஸ்தவ தாழ்மை.

கல்வியறிவுள்ளவர்களையும், பட்டங்கள் பெற்றவர்களையும், ஆற்றல்கள் உள்ளவர்களையும், சாமர்த்தியமாக நடந்துகொள்ளுகிறவர்களையுமே சமுதாயம் பெரும்பாலும் தலையுயர்த்திப் பார்க்கிறது. இத்தனையும் இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் இருந்து என்ன பயன்? சாமானியர்களாக இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து அதிசயிக்கத்தக்க விதத்தில் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து வருகிறவர்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதை நாம் தவிர்த்துவிடுகிறோம். அந்த சமானியர்களும் தங்களை யாரும் கவனிக்க வேண்டுமென்பதற்காக வாழ்வதுமில்லை; எதையும் செய்வதுமில்லை. நம்மினத்தில் இப்படி எத்தனை சமானியர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் தெரியுமா? தன் சகோதரன் பேதுருவுக்கு இயேசுவை அறிமுகப்படுத்திய அந்திரேயா மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தவனல்ல. அவனுடைய பெயர்கூட அடிக்கடி வேதத்தில் வருவதில்லை. பேதுருவின் வாழ்க்கை மாற அவனைக் கர்த்தர் பயன்படுத்தியிருப்பதை மறுக்கமுடியுமா? பவுலுக்கு அறிமுகமாகி பவுல் மூலம் ஆண்டவரை அறிந்துகொண்டவன் சாமானியனான ஒநேசிமு. பிலேமோனுக்கு அடிமையாக இருந்து ஓடிப்போன ஒநேசிமு ஆண்டவரை அறிந்துகொண்டபின் பவுலின் நேசத்துக்கு உரியவனானது மட்டுமல்ல அவரோடு இணைந்து பணி செய்யுமளவுக்கு பவுலின் நம்பிக்கைக்குரியவனானான் (பிலேமோன்). அப்பெல்லோவுக்கு வேத வார்த்தைகளில் சரியான வழிகாட்டிய பிரிஸ்கில்லாவும், ஆக்கில்லாவும் சாமானியர்களே. பவுல் இப்படி எத்தனையோ ஆவிக்குரிய சமானியர்களைப் பெயர் குறிப்பிட்டு தன் நிருபங்களில் வாழ்த்தியிருக்கிறார். அறிவும், ஆற்றலுமுள்ளவர்களால் மட்டுமல்ல, ஆவிக்குரிய சாமானியர்களால் நிறைந்ததே கர்த்தரின் திருச்சபை.

அநாவசியத்துக்கு மனிதர்களைப் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுவதையும், பெரிதுபடுத்துவதையும் வேதம் அனுமதிப்பதில்லை. நாம் மகிமைப்படுத்த வேண்டிய மானுடத்தில் வாழ்ந்த ஒரேயொருவர் இயேசு மட்டுமே. அப்படியானால் இந்த சாமானியரைப்பற்றி நான் ஏன் எழுதுகிறேன். நிச்சயம் அவரைப் பாராட்டிப் பெரிதுபடுத்துவதற்காக அல்ல; அதை அவரும் விரும்பமாட்டார். அவரோடு எனக்கேற்பட்டிருந்த இந்த அனுபவங்களை எழுதக் காரணமில்லாமலில்லை. கிறிஸ்துவால் மறுபிறப்படைந்திருக்கும் இந்த சாமானியரைப் போன்றவர்களில் இன்றும் கொச்சைப்படுத்தப்படாமல் வெளிப்படையாகத் தெரியும் எளிமையும் வலிமையானதுமான விசுவாசம், மாசுபடாத மெய்யான அன்பு, கபடமற்ற நடத்தை, கனிவாக மனதில்பட்டதைச் சொல்லும் வெளிவேஷமில்லாத பேச்சு, பக்தி வைராக்கியம், சுவிசேஷ ஆர்வம், வாசித்து வேத அறிவைப்பெருக்கிக்கொள்ளும் அடங்காத ஆவல் ஆகியவற்றை நான் காண்கிறேன். கிறிஸ்துவை நேசிக்கும் இந்த சாமானியர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளுபவை அநேகம். இவர்களுடைய எளிமையான விசுவாசம் இடர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் அன்பில் இவர்களை முத்துக்குளிக்க வைக்கிறது. இந்த சாமானியர்களில் நான் கிறிஸ்தவ விசுவாசத்தின் வல்லமையைக் காண்கிறேன்; கிறிஸ்து தரும் மறுபிறப்பின் மகத்துவத்தைப் பார்த்து வியக்கிறேன்; ஆவியானவரின் கிரியைகளின் ஆர்ப்பாட்டமில்லாத வெளிப்பாட்டை உணர்கிறேன்.

எத்தனை வல்லமையானது கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பு; மனிதர்களின் தர வேறுபாட்டையெல்லாம் மீறி அது அவர்களைக் கிறிஸ்துவை நேசிக்க வைக்கிறது. ஒருவர் சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அவர் இரட்சிப்பை அடைவதற்கு அந்நிலை எந்தவிதத்திலும் தடையாக இருப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பு நுழைய முடியாத சமுதாயத் தரவேறுபாடு உலகில் இல்லை. பணவசதியுள்ள பிலேமானையும், அடிமையான ஒநேசிமுவையும் இரட்சித்தது அதே அன்புதான். எனக்குத் தெரிந்த நல்ல நண்பர்களான சாமானியர்களையும் கிறிஸ்துவின் இந்த அன்பே தன்னலங்கருதாது அவருக்காக வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக