சில சமயங்களில் சில நூல்கள் – 2

‘என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஊழியப்பணிகளிலும் நான் பெரும் பயனடைவதற்கு வேத வாசிப்புக்கு அடுத்தபடியாக திருச்சபை வரலாற்றைத் தொடர்ந்து வாசித்ததன் மூலம் நான் பெற்றுக்கொண்ட பயன்களைப்போல வேறு எதுவும் எனக்குத் துணைபுரிந்ததில்லை.’ – டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ்.

இந்த வருடத்தின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறோம். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு புதிய வருடம் உதயமாகிவிடும். வரலாற்றில் 365 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு வருடத்தை நோக்கி நடைபோடப் போகிறோம். கடந்துபோனவைகள் வெறும் நாட்களல்ல; நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, அது மட்டுமல்ல நாம் வாழும் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியும், நிகழ்வுகளும்கூட. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவின் சபையின் ஒரு வருட காலப்பகுதியின் நிகழ்வுகள் நிறைவடைந்திருக்கின்றன. கடந்துபோன காலத்தின் நிகழ்வுகளை நாம் மறக்க முடியாது; அவை கற்றுத் தரும் பாடங்களை உதாசீனப்படுத்தக் கூடாது. வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுகிறவைகள் எதுவும் இல்லை என்ற எண்ணப்போக்கு முற்றிலும் தவறானது. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் சிறப்பாக வாழ வேண்டுமானால் கடந்த காலத்தை ஒரு முறை திரும்பிப் பாருங்கள்; அவை கற்றுத்தரும் பாடங்களை நடைமுறையில் நிறைவேற்றுங்கள். உங்கள் வாழ்க்கை சிறக்கும்.

திருச்சபை வரலாறு

திருச்சபை வரலாற்றுக்கு நான் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். வரலாற்றில் கால்பதித்து வளர்ந்து வரும் ஒரு தெய்வீக நிறுவனம் கிறிஸ்துவின் திருச்சபை என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். சமுதாய சீரழிவுகளுக்கு மத்தியில், சாத்தானின் எதிர்ப்புகளுக்கு சதையும், நிணமுமாக முகம் கொடுத்து துன்பத்தின் மத்தியில் பலத்தோடு வளர்ந்து வருவது கிறிஸ்துவின் இணையற்ற சபை என்பதில் எனக்கு எப்போதுமே எந்த சந்தேகமும் இருந்ததில்லை. கிறிஸ்துவின் சபையை அந்தவிதத்தில் பார்க்காதவர்களின் தொகை நம்மத்தியில் அதிகம். கட்டுப்பாடற்று, கட்டுக்கோப்பற்று, தெளிவற்றதாய், சீரோட்டமில்லாமல் கூடிவரும் ஒருவகைக் கூட்டமாகவே இன்று அநேகர் திருச்சபையைப் பற்றிய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இன்றிருந்து நாளை இல்லாமல் போதும் காலனைப் போல அதைக் கருதி வருகிறவர்களை நான் இன்று எங்கும் பார்க்கிறேன். இத்தகைய எண்ணங்களே சபை அவசியமில்லை என்று கூறிவரும் ஹெரல் கேம்ப்பிங் (Herald Camping) போன்றவர்களை உருவாக்கி விட்டிருக்கிறது.

கட்டுப்பாட்டோடும், கட்டுக்கோப்போடும் சபை இருந்தால் ஆவிக்குரிய எழுச்சி இல்லாமல் போய்விடும் என்று நினைக்கின்றவர்கள் இன்று பரவலாக இருக்கிறார்கள். தெளிவும், கட்டுக்கோப்பும் ஆவியானவரோடு சம்பந்தமில்லாதவைகள் என்று இவர்கள் தவறாக எண்ணிவருகிறார்கள். ஆவியின் பிரசன்னத்திற்கும் வழிநடத்தலுக்கும் அடையாளம் நம் உள்ளுணர்வுகள் நம்மை உந்தித்தள்ளுகிற வழியெல்லாம் போய்க்கொண்டிருப்பதுதான் என்று இவர்கள் அறியாமையால் எண்ணி வருகிறார்கள். வேதத்தில் சபை பற்றிய தீர்க்கமான வழிமுறைகளெல்லாம் விளக்கப்படவில்லை என்றே இவர்கள் உண்மையில் நினைத்து வருகிறார்கள். திருச்சபை பற்றிய விஷயங்களில் வேதத்தைப் பின்பற்றுவது ஆவிக்கு எதிரானது என்பது இவர்களுடைய எண்ணம். ஆவியானவர் வேதத்தை மீறி நம்மை வழி நடத்தக்கூடியவர், வழிநடத்துகிறவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. ஆவியின் செயல்களுக்கு இடங்கொடுக்க வேண்டுமானால் திருச்சபை எதற்கும் வளைந்துகொடுக்கின்ற ‘இரப்பர்’ போல, ‘இலாஸ்டிக்கைப் போல’ எந்நேரத்திலும் வளைந்து கொடுக்கும் தன்மையோடு இருந்து வர வேண்டும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களெல்லாம் என்னை உண்மையிலேயே கவலைப்பட வைக்கின்றன. வேதத்தின் தன்மை பற்றியும், திருச்சபை பற்றியும், ஆவியின் செயல்கள் பற்றியும் இருந்து வருகின்ற இந்த அறியாமை நம்மினத்து மக்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றனவே என்று நான் ஆதங்கத்தோடு ஜெபித்து வருகின்றேன்.

கிறிஸ்துவின் திருச்சபை வரலாறு, பாகங்கள் 1ம் 2ம்

இந்த ஆதங்கம்தான் திருச்சபை வரலாறு பற்றிய நூல்களை என்னை எழுத வைத்தது. வரலாற்றில் பிறந்திருப்பது திருச்சபை. அந்த சபை வரலாற்றின் இரண்டு பகுதிகளை ‘கிறிஸ்துவின் திருச்சபை வரலாறு’ பாகம் 1ம், பாகம் 2ம் விளக்குகின்றன. இந்த இரண்டு நூல்கள் இப்போதைக்கு தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. திருமறைத்தீபத்தில் காணப்படும் தமிழக முகவரிகளோடு தொடர்பு கொண்டு வாசகர்கள் இந்நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

church history_3dகிறிஸ்துவின் திருச்சபை வரலாறு முதலாம் பாகம், ஆதிசபையில் இருந்து மத்தியகாலம் வரையுள்ள காலப்பகுதியில் திருச்சபை எந்த முறையில் வளர்ந்து எத்தகைய எதிர்ப்புகளுக்கு முகங்கொடுத்தது என்பதை விளக்குகின்றது. இந்தக் காலப்பகுதியில் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே திருச்சபையைப் போலிப்போதனைகள் எப்படிப் பாதிக்க ஆரம்பித்தன என்பதையும், அந்தப் போலிப்போதனைகளை சபை எப்படி எதிர்நோக்கியது, எப்படிப் போராடி சத்தியத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டது என்பதையும் இந்தப் பாகம் விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் ரோமன் கத்தோலிக்க மதம் எப்படி உருவாகி கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்கப் பாடுபட்டது என்பதையும், ரோமன் கத்தோலிக்க மதம் தன்னுடைய அதிகாரத்தை எவ்வாறு இழக்க ஆரம்பித்தது என்பதையும் இந்நூலில் வாசிக்கலாம். இவையெல்லாம் ஆசிரியரின் கண்டுபிடிப்புகளல்ல; ஆசிரியரின் கருத்துக்களுமல்ல. திருச்சபை வரலாறு பற்றி எழுதப்பட்டிருக்கும் அநேக நூல்களை ஆராய்ந்து தொகுத்து சீராக இந்நூலில் தந்திருக்கிறேன். இவையெல்லாம் மறுதலிக்க முடியாதபடி சபை வரலாறு நமக்குத் தெரிவிக்கும் உண்மை நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள் பற்றி அறியாமல், சபை வரலாறு தெரியாமல் நம்மத்தியில் சபைகள் இருந்து வருவதே நம்மினத்து சபைகளை வரலாற்றுக்கு வெகுதூரத்தில் கொண்டுபோய் மனதில் வந்தபடியெல்லாம் சபை நடத்தும்படி செய்திருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மதம் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்களானால் இந்த முதல் பாகத்தை நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும். இலகுவான தமிழில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சபை நிகழ்வுகள் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடைய விசுவாச வளர்ச்சிக்கும், வேத நம்பிக்கைகளில் நீங்கள் உறுதி பெறவும் இந்நூல் நிச்சயம் உதவும்.

Church History P2 3Dகிறிஸ்துவின் திருச்சபை வரலாற்றின் இரண்டாம் பாகம், மத்திய கால முடிவுக்குப் பிறகு கர்த்தர் எவ்வாறு ரோமன் கத்தோலிக்க மதத்தின் அதிகாரவெறியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து திருச்சபை மறுபடியும் வேத அடிப்படையில் இந்த உலகத்தில் அமையும் வகையில் திருச்சபை சீர்திருத்தம் உருவாக வழி செய்தார் என்பதை விளக்குகிறது. இந்தப் பகுதி நிச்சயம் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்துவின் திருச்சபைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக விளக்கும். வேதத்தை அடியோடு மறைத்து வைத்து போப்புக்களின் அதிகாரத்தின் கீழ் மக்களை வைத்திருந்த, கத்தோலிக்க மதத்திற்கு எதிராக கர்த்தர் எழுப்பிய அதிசயமான அருமைக் கிறிஸ்தவ தலைவர்களை இந்தப் பாகத்தில் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

ஐரோப்பாவில் திருச்சபை சீர்திருத்தம் ஜெர்மனியில் ஆரம்பித்து தேசம் தேசமாக எவ்வாறு அதிரடியாகப் பரவியது என்பதையும், அதற்காக உயிர்ப்பலி கொடுத்து பரலோகம் சென்றோர் தொகை எத்தனைப் பெரியது என்பதையும், வேதத்தை மக்களுடைய மொழியில் கொண்டுவருவதற்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்கள் எத்தனை பேர் என்பதையும் இத்தனைக்கும் மேலாக கர்த்தர் தன்னுடைய ஆவியின் மூலம் திருச்சபை மறுபடியும் இந்த உலகத்தில் நிலைநாட்டப்பட்டு வளர எத்தகைய பெருங்காரியங்களைச் செய்தார் என்பதையும் இந்தப் பாகத்தில் வாசித்து அறிந்துகொள்ளலாம். திருச்சபை சீர்திருத்த வரலாறு பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பேருதவி புரியும்.

திருச்சபை வரலாற்றறிவின் அவசியம்

திருச்சபை வரலாறு பற்றி அறிந்திருப்பது பல்வேறு விதங்களில் நமக்கு ஆவிக்குரிய நன்மையளிக்கும். அது நம்மை இனங்கண்டு கொள்ள உதவும். இன்று பிசாசு கிறிஸ்தவர்களைப் பெரிதும், அதுவும் நம்மினத்தில் குழப்பி வைத்திருக்கிறான். வேத கிறிஸ்தவம் பற்றிய அனைத்திலும் கொஞ்ச நஞ்ச அறிவை மட்டும் வைத்திருந்து அதுவே கிறிஸ்தவம் என்ற போக்கில் எதையும் நம்பி வேத அதிகாரத்துக்கே கட்டுப்படாமல் வாழ்ந்து வருகின்ற பெருங்கூட்டமாக கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருகின்றது. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் வேதபூர்வமான புரொட்டஸ்தாந்து சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கும் வேறுபாடு தெரியாமல் கிறிஸ்துவின் பெயரைச் சொல்லும் சபைகளெல்லாம் கிறிஸ்தவ சபைகள் என்ற எண்ணப்போக்கு நம்மவர்களின் இருதயத்தை ஆண்டு வருகிறது. ‘கிறிஸ்துவின் திருச்சபை வரலாறு’ நூல்கள் இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கும்.

வேதத்தைக் கர்த்தர் எதற்காக தந்திருக்கிறார்? அதன் தன்மை என்ன? பயன் என்ன? அதிகாரம் என்ன? எந்தளவுக்கு அது நம்மையும் திருச்சபையையும் ஆள வேண்டும்? அதன் அதிகாரம் கிறிஸ்தவ சுதந்திரத்தை மட்டுப்படுத்துகிறதா? கர்த்தரின் வேதத்தைப் பயன்படுத்தி ஆவியின் பெயரில் புதிது புதிதாகத் தோன்றுகிற போதனைகளையும், நடவடிக்கைகளையும் எவ்வாறு இனங்கண்டு வேதபூர்வமானதை மட்டும் பின்பற்றுவது? நம் மன சமாதானத்திற்காகவும், ஆவிக்குரிய உற்சாகத்திற்காகவும் மட்டும் வேதத்தை வாசித்து, கிறிஸ்தவம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நம் உள்ளுணர்வு நம்மை வழிநடத்தும் வழிகளில் நாம் போய்க்கொண்டிருக்கலாமா? ஆவியானவரின் வழியில் போவதற்கு வேதம் தடையாயிருக்கிறதா அல்லது ஆவியானவரே தந்திருக்கும் வேதத்திற்கு முரணாக நடக்காமல் வேதவழிகளில் மட்டும் கிறிஸ்தவர்களை அவர் வழிநடத்துகிறாரா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் எவ்வாறு, எங்கிருந்து பதில் காணப்போகிறோம். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நம்மினத்தைப் பொறுத்தவரையில் இன்று மிக முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களே நாம் எத்தகைய கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம் என்று நம்மை இனங்காட்டப் போகின்றன.

இதெல்லாம் அவசியமில்லாத கேள்விகள், பேசாமல் கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபம் பண்ணி சுவிசேஷத்தை மட்டும் சொல்லிப் போய்க்கொண்டேயிருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர்கள்தான் நம்மத்தியில் அதிகம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இடங்கொடுத்தால் பிரிவினைதான் அதிகரிக்கும், பிரிவினை இல்லாமல் கிறிஸ்தவர்களெல்லாம் கூடி ஆராதிப்பதற்கு எதையும் தியாகம் செய்ய வேண்டும், வேதத்தைக் கூட என்றவிதத்தில் நடந்துகொள்ளுகிறவர்களைத்தான் நடைமுறை உலகத்தில் நாம் சந்திக்கிறோம். ஆவிக்குரிய வேத அறிவின்மையும், கிறிஸ்துவின் திருச்சபை வரலாற்று அறிவின்மையும் நம்மவர்களைக் கிறிஸ்துவின் பெயரில் எப்படியெல்லாமோ சிந்திக்க வைத்து ஒவ்வொருவரின் மனப்போக்குப்படிப் போகவும், வாழவும் வைத்துக்கொண்டிருக்கிறது.  கிறிஸ்துவின் திருச்சபை வரலாற்று அறிவிருந்துவிட்டால் மட்டும் இதற்கெல்லாம் விடுதலை வந்துவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. மெய்க் கிறிஸ்தவ வரலாற்று அறிவு நிச்சயம் நம்மை சிந்திக்க வைக்கும்; வேதத்தை மதிக்க வைக்கும்; அதன் அருமையை உணர்த்தும்; அதன் வழியில் சிந்திக்க நிச்சயம் நம்மை வழிநடத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

Martyn-Lloyd-Jonesதிருச்சபை வரலாற்று அறிவின் அவசியத்தைப் பற்றி மறைந்த டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Dr. Martyn Lloyd Jones) அதிகமாகவே சொல்லியிருக்கிறார். அவருடைய பிரசங்கங்களிலும், விரிவுரைகளிலும் சபை வரலாற்று உதாரணங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு சபை வரலாற்றின் அவசியத்தை உணர்ந்து ஆத்துமாக்களுக்கு உணர்த்தியவர் லொயிட் ஜோன்ஸ். இருபதாம் நூற்றாண்டின் அருமையான, பிரசித்தமான சீர்திருத்த பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் சபை வரலாற்று அறிவின் அவசியத்தைப் பற்றி விளக்குவதைக் கவனியுங்கள்.

‘வேதத்தைத் தவிர திருச்சபை வரலாற்றிலும் இதே எச்சரிக்கை காணப்படுகின்றது. இந்த இரண்டையும் (வேதமும், திருச்சபை வரலாறும்) எப்போதும் நான் இணைத்தே பேசியிருப்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். சபை ஒன்றே. சபை கர்த்தருடையது, வரலாறு முழுவதும் அது ஒன்றாகவே இருந்திருக்கிறது. சபை ஓர் அருமையான மக்கள் கூட்டம். வேதத்தில் போதிக்கப்பட்டிருக்கும் போதனைகளெல்லாம் கிறிஸ்துவின் திருச்சபை வரலாற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாம் சாதாரண மனிதர்களாக இருப்பதால் திருச்சபை வரலாறு விளக்கும் மனிதர்களின் உதாரணங்களும் ஏனைய குறிப்புகளும் நமக்குப் பேருதவி புரிகின்றன. அந்தவிதத்தில் திருச்சபை வரலாறு நமக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஊழியப்பணிகளிலும் நான் பெரும் பயனடைவதற்கு வேத வாசிப்புக்கு அடுத்தபடியாக திருச்சபை வரலாற்றைத் தொடர்ந்து வாசித்ததன் மூலம் நான் பெற்றுக்கொண்ட பயன்களைப்போல வேறு எதுவும் எனக்குத் துணைபுரிந்ததில்லை.’ (Dr. Martyn Lloyd Jones, ‘The Sovereign Spirit’, published in the U.K. as Prove All Things)

திருச்சபை வரலாற்றைத் தொடர்ச்சியாகவும், அடிக்கடியும் டாக்டர் லொயிட் ஜோன்ஸ் வாசித்து வந்திருந்ததால் வேதபோதனைகள் அளிக்கும்போது அவரால் சபை வரலாற்றிலிருந்து உதாரணங்களை அளித்து திருச்சபையின் நிகழ்கால ஆவிக்குரிய நிலைக்கு தகுந்த காரணங்களை அளிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் தகுந்த தீர்வுகளையும் வேத அடிப்படையில் கொடுக்க முடிந்தது. இன்று திருச்சபை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இறையியல் மாறுதல்கள் பெருங்காரணமாக இருந்திருக்கின்றன என்று நான் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். அதையே லொயிட் ஜோன்ஸும் பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பதினெட்டாம் நூற்றாண்டோடு தொடர்புபடுத்தி விளக்கியிருக்கிறார்.  இதற்கெல்லாம் தொடர்ச்சியான திருச்சபை வரலாற்று வாசிப்பு அவருக்கு உதவியிருக்கிறது. திருச்சபை வரலாற்றை அறிந்திருப்பதன் அவசியத்தில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே அவரை இலண்டனில் வருடாந்தரம் போதகர்களைக் கூட்டி ‘பியூரிட்டன் கொன்பரன்ஸ்’ நடத்த வைத்தது. டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் மறைந்துவிட்டபோதும் அது இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றது. வேத அடிப்படையில் சபை வரலாறு போதிக்கும் உண்மைகளை இந்த மகாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட போதகர்கள் விரிவுரைகளாக அளிப்பார்கள். அவை பின்னால் தொகுப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. 

கர்த்தரின் கிருபையால் இன்று கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஆதி சபையிலிருந்து 16ம் நூற்றாண்டு வரையுள்ள நிகழ்வுகள் இரண்டு பாகங்களில் நூல் வடிவில் தமிழில் வந்திருக்கின்றன. இந்நூல்களைப் பெற்று வாசியுங்கள்; சிந்தியுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆவிக்குரிய விடுதலையை அளிக்கட்டும்.

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக