பில்லி கிரேகம் (1918 – 2018)

சமீபத்தில் என் நண்பரைப் பார்க்கப் போயிருந்தபோது எங்களுடைய சம்பாஷனை சமீபத்தில் மறைந்த முக்கிய கிறிஸ்தவ தலைவரான பில்லி கிரேகமைப் பற்றியதாக மாறியது. அப்போது அவர், ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் பில்லி கிரேகம் நியூசிலாந்து வரவிருந்தபோது ஆக்லாந்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ போதகர் அவரைப் பற்றிய ஒரு ஆக்கத்தை வெளியிட்டு நாட்டில் இருந்த பல கிறிஸ்தவ தலைவர்களுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது என்றும், அதனாலோ என்னவோ தெரியவில்லை பில்லி கிரேகம் நியூசிலாந்துக்கு வருவது நின்று போயிற்று என்றும் கூறினார். அப்படியா என்று கேட்டுவிட்டு அதில் நான் ஒன்றும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உடனே அவர் புன்சிரிப்போடு அதை எழுதியவர் நீங்கள் தான் என்றார். என்ன! என்று ஆச்சரியமாகக் கேட்டு, அப்படியெல்லாம் நான் எதுவும் எழுதியதாக எனக்கு நினைவில்லையே என்று கூறி அதை மறுத்தேன். அதை என்னால் நிரூபிக்க முடியும் என்று சொன்ன அவர், பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கி4 தாளில் இரண்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஆக்கத்தை (No More a Dilemma) என் கையில் தந்தார். உண்மையில் அப்படியொன்றை எழுதிய நினைவே எனக்கு துப்பரவாக இருக்கவில்லை. அது 1990களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு அது எழுதப்பட்ட சூழ்நிலை பற்றியதாக எங்கள் பேச்சு திசைதிரும்பியது. அநேக கிறிஸ்தவ போதகர்களுக்கும் அது அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் போனது என்றும் அவர் சிரிப்போடு கூறினார். அது ஒன்றும் புதியதில்லையே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

நண்பரோடு சந்திப்பு முடிந்தபிறகு வீட்டிற்கு வந்து கையில் கொண்டுவந்திருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தை நான் மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன்புதான் பில்லி கிரேகம் தன்னுடைய 99ம் வயதில் மறைந்திருந்தார். அவரைப் பற்றிய நினைவுகள் என் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. அதேநேரம் இந்த வருடத்தில் மறைந்துவிட்டிருந்த பில்லி கிரேகமின் சககால கிறிஸ்தவ தலைவர்களாக இருந்த ஆர். சி. ஸ்பிரவுல், கடந்த வருடத்தில் மறைந்த எரல் ஹல்ஸ் ஆகியவர்களையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இறையியல் கோட்பாடுகளைப் பற்றிய விஷயத்தில் பில்லி கிரேகம் முழு ஆர்மீனியன். பிந்தைய இருவரும் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றிய கிறிஸ்தவ தலைவர்கள். இவர்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த எரல் ஹல்ஸ் (Erroll Hulse) பில்லி கிரேகமைப் பற்றி 1969ல் Billy Graham: Pastor’s Dilemma என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். பில்லி கிரேகமின் கூட்டமொன்றில் சுவிசேஷத்தைக் கேட்டு, பின்பு அதே கிரேகம் குருசேட் கூட்டங்களில் பணிபுரிந்திருந்த எரல் ஹல்ஸ் பின்னால் அந்த சுவிசேஷக் கூட்டங்களில் இருந்த வேதத்துக்கு முரண்பட்ட அம்சங்களை இறையியல்பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டிருந்த நூலது. 1980களின் ஆரம்பப் பகுதியில் அந்த நூலை வாசித்து நான் பயனடைந்திருந்தேன். இன்றும் அதன் பிரதியொன்று என் வீட்டுப் படிப்பறையில் இருக்கிறது.

1990களின் ஆரம்பப்பகுதியில் பில்லி கிரேகமைப் பற்றி நான் இந்தக் கைப்பிரதியை எழுதி வெளியிட்டதற்கான காரணங்களை எண்ணி என் மனம் அசைபோட ஆரம்பித்தது. அது நான் நியூசிலாந்தில் கால்பதித்து நானிருக்கும் சபையில் போதக ஊழியத்தை ஆரம்பித்திருந்த ஆரம்ப காலம். அக்காலத்தில் நான் கலந்துகொண்டிருந்த போதகர்களின் கூட்டமொன்றில் நாட்டில் நடக்கப்போகும் பில்லி கிரேகமின் சுவிசேஷ கூட்டத்திற்கு நாம் எப்படித் துணைபோய் பயனடையலாம் என்றவிதத்தில் விவாதம் நடந்தது. சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றும் போதகர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்களே என்று எனக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது. இருந்தபோதும் நான் என்நிலையை அவர்களுக்கு விளக்கி எரல் ஹல்ஸின் புத்தகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். நல்லவேளை கூட்டம் எந்த முடிவையும் எடுக்காமல் முடிந்துபோனது. அதுவே நான் அந்தத் துண்டுப்பிரசுரத்தை எழுதி வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. இருந்தபோதும் இந்த குருசேட் இவேன்ஜலிஸத்தைப் பற்றி பலரையும் சிந்திக்க வைப்பதற்காக நான் எடுத்த முயற்சி அது. அதனால் நான் சிலருடைய மனதில் நல்ல இடத்தைப் பிடிக்காமல் போயிருந்திருக்கலாம். செய்கின்ற காரியம் நியாயமானதாக இருக்கின்றபோது அது எல்லோருக்கும் பிடிக்குமா, பிடிக்காதா என்றெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? என்னைப் பொருத்தவரையில் அதை வெளியிடுவது அன்று கர்த்தர் தொடர்பான அவசியமான காரியமாகப்பட்டது. முக்கியமாக நான் பணிபுரிந்த சபை மக்களுக்கு அதுபற்றிய வேதசிந்தனைகளை உருவாக்குவது எனக்கு அவசியமாக இருந்தது. கடைசியில் ஏதோ சில காரணங்களால் பில்லி கிரேகமும் நியூசிலாந்துக்கு வரமுடியவில்லை.

மார்டின் லொயிட் ஜோன்ஸ்

பில்லி கிரேகமைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளுவதற்கு அவர் கிறிஸ்தவ ஊழியத்தை ஆரம்பித்த காலப்பகுதியைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் நமக்கு அவசியம். அந்தக் காலப்பகுதியிலேயே பில்லி கிரேகமுக்கு எதிர்மறையான இறையியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்த மார்டின் லாயிட் ஜோன்ஸும் (Martyn Lloyd-Jones) இங்கிலாந்தில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். மெயின் லைன் சபைகளை லிபரலிசம் ஆண்டுகொண்டிருந்த காலம் அது. சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் பலரும் ஆர்வம் காட்டாதிருந்த காலம். வேத அதிகாரத்தையும், அதன் போதுமான தன்மையையும் சபைகள் உதறித்தள்ளியிருந்த காலம். இதை உணர்ந்த மார்டின் லாயிட் ஜோன்ஸ் தன் பிரசங்க ஊழியத்தை வேல்ஸில் ஆரம்பித்து அதிரடியாக வேதத்தைப் பிரசங்கித்தார். வேதப் பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்க ஆரம்பித்திருந்தார். அத்தகைய வேதப்பிரசங்கம் பாவிகள் இரட்சிப்படைய எத்தனை அவசியம் என்பதை அறைகூவலிட்டு பலரும் அறியும்படி செய்துகொண்டிருந்தார். ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சீர்திருத்த பிரசங்கங்களை அளித்து மறுபடியும் கிறிஸ்தவத்திற்கு உயிரூட்ட ஆரம்பித்திருந்தார். இந்தக் காலப்பகுதியில் பில்லி கிரேகம் லாயிட் ஜோன்ஸின் இறையியல் நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான ஆர்மீனியன் கோட்பாடுகளில் முழு நம்பிக்கை வைத்து வளர்ந்திருந்தார். அன்று அமெரிக்காவில் பொதுவாக பிரபல இறையியல் கல்லூரிகளும், இன்ஸ்டிடியூட்டுகளும் ஆர்மீனியன் கோட்பாடுகளையும், டிஸ்பென்சேஷனலிச பிரிமில்லேனியல் கோட்பாடுகளையும் பின்பற்றுபவையாகவே வளர்ந்திருந்தன. அமெரிக்க அடிப்படைவாத (Fundamentalism) கிறிஸ்தவப் பின்னணியில் வளர்ந்தவர் பில்லி கிரேகம். அடிப்படைவாத கிறிஸ்தவம் லிபரலிசத்தை மூர்க்கத்தோடு எதிர்த்தது. பில்லி கிரேகமின் இறையியல் சிந்தனைகளில் அன்றைய புளர் இறையியல் கல்லூரியின் (Fuller Theological Seminary, Dallas) தாக்கமும் அதிகமாக இருந்தது. இந்த இறையியல் பின்னணியில் விட்டன் கல்லூரியில் (Wheaton College) இறையியல் கற்று சுயாதீன இவேன்ஜலிஸ்டாக பில்லி கிரேகம் உருவெடுத்தார். 1943ல் விட்டன் கல்லூரியில் தான் சந்தித்த ரூத்தை அவர் திருமணம் செய்து கொண்டார். 1950ல் அவருடைய பில்லி கிரேகம் இவேன்ஜலிஸ்டிக் அசோஷியேஷன் (Billy Graham Evangelistic Association) உருவானது.

பில்லி கிரேகம் கிறிஸ்துவில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்; கிறிஸ்துவை நேசித்தார். வேதம் போதித்த சுவிசேஷம் அவருடைய ஊழியத்தின் உயிர்நாடி. சுவிசேஷத்தைப் பலரும் அறியப் பிரசங்கிக்க வேண்டும், அது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பில்லி கிரேகமின் அடிப்படை நோக்கம். இறையியல் கோட்பாடுகளிலெல்லாம் பில்லி கிரேகம் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பாவிகள் இரட்சிப்படைய கிறிஸ்துவை அவர்களுக்கு பிரசங்கத்தின் மூலம் அளிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் நோக்கமாக இருந்தார். அவருடைய பிரசங்கம் மிகவும் எளிமையாக இருந்தது. பாவத்தில் இருந்து விடுதலை அடைந்து பரலோகம் போக கிறிஸ்து மட்டுமே வழி என்பதை அவர் மக்கள் புரிந்துகொள்ளும்படி அவர்களுடைய பாஷையில் பிரசங்கித்தார். இதெல்லாம் மிகவும் பாராட்டவேண்டிய அவசியமான நல்ல அம்சங்கள். இது எல்லாக் கிறிஸ்தவ பிரசங்கிகளுக்கும் இருக்க வேண்டிய அம்சங்கள்.

பிரசங்க மேடையில் பில்லி கிரேகம்

பில்லி கிரேகம் பயன்படுத்திய ‘வேதம் சொல்லுகிறது’ என்ற பிரபலமான வார்த்தைப் பிரயோகம் அன்று மக்களைக் கவர்ந்தது. வேதத்திற்கு அநேகர் மதிப்புக்கொடுக்காத காலத்தில் வேதத்தைக் கையில் வைத்து பிரசங்கித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பில்லி கிரேகம் சுவிசேஷத்தை அறிவித்தார். இவேன்ஜலிஸ்ட் பில்லி சன்டேக்குப் பிறகு அத்தகைய பெருங்கூட்டங்களை பில்லி கிரேகமின் குருசேட் கூட்டங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. அதுவரை வேறு எவரும் பிரசங்கத்தின் மூலமாகக் கண்டிராத பெருங்கூட்டங்களில் பில்லி கிரேகம் பிரசங்கித்தார். மிக முக்கியமான கிறிஸ்தவ தலைவராகவும் அமெரிக்காவில் நிலை பெற்றார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் பல அதிபர்களோடு அவர்களுக்கு நண்பராக இருந்து ஆலோசனை சொல்லும் நல்ல மனிதராகவும் பில்லி கிரேகம் இருந்தார். ஐசனோவரில் இருந்து ஜோர்ஜ் புஷ் வரை பில்லி கிரேகமின் நண்பர்களாக இருந்து அவருக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள்; ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்கள்; சேர்ந்து ஜெபித்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக இல்லாதிருந்த வேறு மதங்களைச் சேர்ந்த பிரபலங்களும் பில்லி கிரேகமுக்கு நண்பர்களாக இருந்து அவரை மதித்திருக்கிறார்கள். அனைவருமே பில்லி கிரேகமின் நல்ல குணத்தையும், கனிவையும், தாழ்மையையும், நட்போடு பழகும் விதத்தையும் பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் பில்லி கிரேகம் இயேசுவின் அன்பைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவில்லை. இத்தகைய உலகளாவிய மதிப்பை அநேகர் மத்தியில் பெற்றிருந்த எந்தப் பிரசங்கியும் இருந்ததில்லை. பில்லி கிரேகமை ஒரு முறை சந்தித்துப் பழகியவர்கள்கூட சொல்லியிருக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா? அவர் பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிமையானவர் என்பதுதான்.

பில்லி கிரேகம் தன் ஊழிய வாழ்க்கையில் அநேகருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறார். பெனி ஹின் போன்ற இன்றைய டி.வி. இவேன்ஜலிஸ்டுகளைப் போலல்லாமல் அவர் பணத்தைக் குறியாக வைத்தோ, போலி வாக்குத்தத்தங்களைத் தந்தோ சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. பண விஷயத்தில் அவரைப் பற்றிய எந்தக் குறைபாட்டையும் எவரும் ஒருபோதும் முன் வைக்கவில்லை. தன்னுடைய அசோஷியேசனில் சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு கடைசிவரை பணிபுரிந்தார் பில்லி கிரேகம். சுவிசேஷ ஊழியத்தில், பண விஷயத்தில் அவருடைய நேர்மையும், கட்டுப்பாடும் பாராட்ட வேண்டிய பண்பு. அத்தோடு, அவருடைய மனைவியோடு நன்றாக குடும்பத்தை நடத்தி வந்திருந்தார் பில்லி கிரேகம். ஒழுக்கத்தில் அவர் மீது எப்போதும் எந்தக் குறைபாடும் இருந்ததில்லை. அந்தளவுக்கு தன்னுடைய இருதயத்தையும் சரீரத்தையும் காத்து வாழ்ந்திருந்தார் பில்லி கிரேகம். ஊழியப்பணிகள் இல்லாத காலத்தில் அவர் குடும்பத்தோடு இருப்பதையே மிகவும் சந்தோஷமான காரியமாகக் கருதினார். குடும்பத்தைப் பற்றிய அக்கறையையும், அதுபற்றிய வேத உண்மைகளை விசுவாசிப்பதையும் புறந்தள்ளி ஹார்வே வைன்ஸ்டைனின் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய மேற்கத்திய சமுதாயத்தில் பில்லி கிரேகம் குடும்ப வாழ்க்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார்.

இத்தகைய பாராட்டக்கூடிய நல்ல அம்சங்களையெல்லாம் பில்லி கிரேகம் தன்னில் கொண்டிருந்தபோதும், இன்றைய சமுதாயத்தில் எல்லோருக்கும் முன்மாதிரியாக நல்ல தலைவராக அவர் இருந்திருக்கும் போதும், பழமைவாத (conservative) கிறிஸ்தவ தலைவர்களும், சீர்திருத்த கிறிஸ்தவர்களும் அவரோடு இணைந்து ஒத்துழைக்க முடியாமல் போனதற்குக் காரணமென்ன? இந்த விஷயத்தைத்தான் நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் வேதம் தொடர்பான ஒரு விஷயத்தை, அதை இறையியல் தொடர்பான விஷயமாக மட்டும் வேத அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருவது அநேகருக்கு முடியாத காரியமாக இருப்பதை நான் காண்கிறேன். ஒரு விஷயம் பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறபோது அந்த விஷயத்தோடு மட்டும் நின்றுவிடாமல் விவாதம் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிகள் கொப்பளிக்க தனிப்பட்ட விதத்தில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுவதும், கிறிஸ்தவர்கள் என்ற எண்ணம்கூட இல்லாமல் வார்த்தைகளை அநியாயத்திற்கு அள்ளிக்கொட்டி நாவால் பாவம் செய்வதும், தங்களுடைய கருத்துக்களோடு எதிர்த்தரப்பு ஒத்துப்போக மறுக்கிறது என்பதற்காக சகல உறவுகளையும் அவர்களோடு முறித்துக்கொள்ளுவதும், இன்டர்நெட்டிலும், ஈமெயில், முகநூல் என்று சமூக வலைதளங்களில் எல்லாம் எழுதி ஒருவரைத் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுவதும் எல்லா சபைப்பிரிவினர் மத்தியிலும் பொதுவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சபைத்தலைவர்களே இந்த விஷயத்தில் மிகவும் அசிங்கமாக நடந்துகொள்ளுவதை இன்று நாம் காண்கிறோம். இதெல்லாம் மனித பலவீனத்திற்கும், ஆவிக்குரிய வளர்ச்சியின்மைக்கும் முதிர்ச்சியின்மைக்கும் அறிகுறியே தவிர ஆவியின் நிரப்புதலுக்கும், செல்வாக்கிற்கும் அடையாளமல்ல. இந்த இடத்தில் யாக்கோபுவின் வார்த்தைகளை நாம் நினைவுகொள்ள வேண்டும்.

“உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.” (யாக்கோபு 1:26)

யாக்கோபுவின் வார்த்தைகளை மனதில் இறுத்திக்கொண்டே பில்லி கிரேகமைப்பற்றி இதை நான் எழுதுகிறேன். அந்த நல்ல மனிதரின் மரியாதைக்கு பங்கம் வராமலேயே கிறிஸ்தவர்களாக நாம் அவரைப்பற்றிய மதிப்பீட்டை செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு அவருடைய இறையியல் கோட்பாடு மற்றும் அவருடைய குருசேட் சுவிசேஷ ஊழிய நடைமுறை என்பவை பற்றியவையே தவிர தனிப்பட்ட முறையில் அவரைப்பற்றியதல்ல. தனிமனிதரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசாமலும், சக கிறிஸ்தவர்களில் நாம் வைக்க வேண்டிய பொதுவான கிறிஸ்தவ அன்பை மறந்துவிடாமலும் இறையியல் கருத்துவேறுபாடுகளை நாம் முன்வைக்க வேதம் அனுமதியளிக்கிறது. நம்முடைய சரீர பலவீனங்கள் இதில் குறுக்கிட்டு நாம் பாவத்தை செய்துவிடக்கூடாது. பில்லி கிரேகமின் சுவிசேஷ குருசேட் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், அவரோடு ஒத்துழைக்க முடியாமலும் போன பல சீர்திருத்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றனர்.

பில்லி கிரேகம்: மதிப்பீடு

எத்தனையோ விஷயங்களில் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு பில்லி கிரேகமின் போதனைகளோடும் சுவிசேஷ நடைமுறைகளோடும் முரண்பாடுகள் இருந்தபோதும் இரண்டு மிக முக்கியமான அம்சங்களை மட்டுமே இங்கே விளக்க விரும்புகிறேன். இவை இரண்டும் போனால் போகட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல. இவை சுவிசேஷ சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியமான அடிப்படை அம்சங்கள். இந்த விஷயங்களில் பில்லி கிரேகம் சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது வருந்தத்தக்கது. இந்த இரண்டைப் பொருத்தவரையிலும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒத்துழைத்து ஊழியம் செய்வதென்பது வேதத்தையே ஒதுக்கி வைப்பதற்கு சமமாகிவிடும்.

1. ஆர்மீனியனிசம்

பில்லி கிரேகம் ஆர்மீனியனிசக் கோட்பாட்டைப் பின்பற்றியவர். அத்தோடு டிஸ்பென்சேஷனலிசப் பிரிமில்லேனியலிசத்தையும் பின்பற்றியவர். அவருடைய இறையியல் பாதை அந்த வழியிலேயே போயிருந்தது. இதன் காரணமாக மனிதனுடைய இரட்சிப்பில் கர்த்தரோடு அவனுடைய பங்கும் இணைந்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பியவராக பில்லி கிரேகம் இருந்தார். சீர்திருத்தப் போதனை இரட்சிப்பு கர்த்தருடையது என்று போதித்தபோதும், கிறிஸ்துவைத் தன்னுடைய இரட்சிப்பிற்காக பாவி விசுவாசிக்க வேண்டும் என்றும் அது அவனுடைய கடமை என்றும் விளக்குகிறது. இது ஆர்மீனியனிசப் போதனையைவிட மாறுபட்டது. எப்படியெனில் உதாரணத்திற்கு, நாம் ஒருவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்தப் பொறுப்பைக் கொடுத்தபிறகு, யாருக்கு அதைக் கொடுத்தோமோ அவர் அதை செய்யவேண்டிய கடமைப்பாடுடையவராக இருக்கிறார். அதைக் கடமையாகக் கருதி அவர் செய்ய வேண்டியிருந்தபோதும் அந்தப் பொறுப்பை நாம் அவருக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அதை செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருந்திருக்காது. இதே விதத்தில் ஒருவனுக்கு மறுபிறப்பை ஆவியானவர் அளித்தபிறகே அந்த மனிதனால் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க முடிகிறது. மறுபிறப்பு அடையாத எவராலும் மனந்திரும்ப முடியாது. இந்த விசுவாசத்தைக் கொண்டிருப்பதால், ஆவியானவர் சுவிசேஷத்தின் மூலம் பாவிகளின் இருதயத்தில் இடைப்பட்டு கிரியை செய்வார் என்ற நம்பிக்கையில் சீர்திருத்த பிரசங்கிகள் சுவிசேஷ செய்தியில், மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி பாவிகளுக்கு அழைப்பு விடுவதோடு, அப்படி மனந்திரும்பவேண்டியது அவர்களுடைய கடமை என்றும் சொல்லுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தால் அதற்கு முழுக்காரணமும் ஆவியானவர் தந்திருக்கும் மறுபிறப்புதான் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.

பில்லி கிரேகமைப் பொருத்தவரையில் ஆர்மீனியனிசத்தை அவர் தழுவியிருந்ததால், ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமே அவனுக்கு மறுபிறப்பு கிடைப்பதாக அவர் நம்பியிருந்தார். அதுதான் ஆர்மீனியனிசத்தின் போதனை. இதன் காரணமாக பில்லி கிரேகம், மனிதன் செய்யவேண்டிய, விசுவாசிக்க வேண்டிய கிரியையே அவனுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதாக உறுதியாக நம்பி தன்னுடைய கூட்டங்களில் சுவிசேஷத்தைக் கேட்க வருபவர்களைப் பார்த்து அன்றே அப்போதே இயேசுவிடம் சரணடையுங்கள்; அவர் உங்களுக்கு விடுதலை கொடுப்பார் என்று வலியுறுத்தினார். ஆர்மீனியனிசத்தின் முக்கிய போதனை மனிதனுடைய சித்தம் பாவத்தினால் முழுமையாகப் பாதிக்கப்படாமல் இரட்சிப்புக்குரிய ஆத்தும கிரியையை செய்யக்கூடிய சுதந்திரம் கொண்டதாக இருக்கிறது என்பதுதான். இதை பில்லி கிரேகம் நம்பியிருந்தார். இந்த நம்பிக்கை அவருடைய சுவிசேஷம் சொல்லும் முறையிலும் அதைச் சார்ந்த நடைமுறைகளிலும் இருந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். மனிதனுடைய சித்தம் பாவத்தால் பாதிக்கப்பட்டு எந்தவித ஆத்மீகக் கிரியையையும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது (Total Depravity) என்பதே ஆகஸ்தீன், கல்வின், மார்டின் லூத்தர், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட், ஸ்பர்ஜன், மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்ற சீர்திருத்த பிரசங்கிகளின் நம்பிக்கையாக இருந்தது.

சார்ள்ஸ் பினி

பில்லி கிரேகமின் குருசேட் கூட்டங்களில் கிறிஸ்துவிடம் சரணடைய விருப்பமுள்ளவர்களை கூட்டத்தில் பிரசங்க மேடைக்கு முன்னால் வருகின்ற அழைப்பை உருவாக்கியிருந்தார் பில்லி கிரேகம். அப்படி முன்னால் வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் செய்தவர்கள் கூட்டத்திலேயே கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு கிறிஸ்தவ சீஷத்துவத்தை குருசேட் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் அப்போதே கொடுக்கும் வழக்கம் இருந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதாக கூட்டத்தில் கையை உயர்த்தி விருப்பத்தைத் தெரிவிப்பது மறுபிறப்பை அவர்கள் அடைந்ததற்கு அடையாளமாகக் கருதப்பட்டது. அதை எவரும் கேள்விகள் கேட்பதில்லை; ஆராய்ந்து பார்ப்பதில்லை. பில்லி கிரேகமின் கூட்டங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் உணர்ச்சி வசப்பட்டு இப்படியாக கைகளை உயர்த்தி இயேசுவை ஏற்றுக்கொண்டதாக எண்ணிக்கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். கிறிஸ்துவிடம் சரணடையும் இத்தகைய முறைக்கு முதன் முறையாக ஆரம்பத்தில் வித்திட்டவர் சார்ள்ஸ் பினி (Charles Finney, 1792-1875) எனும் அமெரிக்க இவேன்ஜலிஸ்ட். பினி ஆர்மீனியனிசத்தை விசுவாசித்தது மட்டுமல்லாமல், மூல பாவத்தைப் பற்றிய பாரதூரமான எண்ணங்களையும் கொண்டிருந்தார். சார்ள்ஸ் பினி சுவிசேஷத்தை கேட்ட உடனேயே கூட்டத்தில் வீடுபோகுமுன் கிறிஸ்துவுக்காக முடிவெடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதையே பில்லி கிரேகம் தன் காலத்தில் பிரபலமாக்கினார். இத்தகைய முறை கிறிஸ்துவிடமோ, அப்போஸ்தலர்களின் ஊழியத்திலோ, கிறிஸ்தவ வரலாற்றிலோ 19ம் நூற்றாண்டுக்கு முன் ஒருபோதும் காணப்படவில்லை. இந்த முறையினால் கிறிஸ்துவை அடைந்திருக்கிறோம் என்று நம்பி வீணாய்ப்போனவர்களே அநேகம். Youth for Christ, Campus Crusade போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த சபைகளும், நிறுவனங்களும் இந்த முறையையே பின்பற்றி வருகின்றன. இந்த முறையின் ஆபத்தை விளக்கும் நூல்களாக Pastor’s Dilemma (Errol Hulse), Invitation System (Ian Murray) போன்றவை இருந்து வருகின்றன. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்ற நூலை வாங்கி வாசியுங்கள். அதில் கிறிஸ்து தரும் இரட்சிப்பின் ஒழுங்கு, சீர்திருத்தவாத கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அடிப்படையில் வேதப்பூர்வமாக முறையாக விளக்கப்பட்டிருக்கிறது.

   

2. பில்லி கிரேகம் அசோஷியேஷனின் சமய சமரசப் போக்கு

1950களில் பில்லி கிரேகம் இன்னுமொரு காரியத்தை செய்தார். அதாவது, சுவிசேஷத்தை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சொல்ல வேண்டுமானால் தன் நிறுவனத்திற்கு அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளிலும் அனைத்துக் கிறிஸ்தவ சபைகள் மற்றும் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு தேவை என்பது அவருக்குத் தெரிந்தது. அத்தகைய ஒத்துழைப்பில்லாமல் வரலாறு காணாத மாபெரும் கூட்டங்களை நடத்துவது என்பது கடினம் என்பதை அவர் உணர்ந்தார். அத்தோடு இயேசுவின் அன்பை விளக்கி சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே அவசியம் என்பதை அவர் தீர்மானித்திருந்தபடியால் இறையியல் போதனைகளில் கவனம் செலுத்துவது அத்தனை அவசியமில்லை என்பதில் உறுதியாக இருந்தார். அவருடைய சுவிசேஷ செய்திகளும் இறையியல் சாராம்சத்தை ஒதுக்கிவைத்து இயேசுவின் அன்பு, பரலோகத்தின் அவசியம், மனந்திரும்புவதனால் கிடைக்கும் நித்திய ஜீவன் ஆகியவற்றையே வலியுறுத்துவதாக இருந்தன. முக்கியமாக தேவகோபத்தைப் பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலிபற்றியும் பில்லி கிரேகம் தன் செய்திகளில் முக்கியத்துவமளிக்கவில்லை. எல்லா சபைகளுடையதும், நிறுவனங்களினதும் ஆதரவு தமக்குத் தேவை என்பதால் அந்த சபைப்பிரிவுகள், நிறுவனங்கள் நம்பும் எந்த விஷயங்களுக்கும் மாறாக பிரசங்கிப்பதை அவர் ஒதுக்கி வைத்தார்.

சுவிசேஷத்தை எல்லோருக்கும் அறிவிப்பதற்காக பில்லி கிரேகம் வகுத்துக்கொண்ட இத்தகைய கண்ணோட்டம் அவரை சமயசமரசப் பாதையின் (Ecumenism) வழியில் இட்டுச் சென்றது. ஒரு தவறு இன்னொரு தவறுக்குத்தான் வித்திடுமே தவிர சரியான பாதைக்கு ஒருபோதும் வழிகாட்டாது என்ற உண்மையை கிரேகம் மறந்துவிட்டார். சமயசமரசப் பாதை என்பது, வேதக் கிறிஸ்தவம் மற்றும் வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணான வேதபோதனைகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் நிராகரிக்கும் ரோமன் கத்தோலிக்க மதத்தோடும், வேதத்திற்கு இடங்கொடுக்காத லிபரல் பாரம்பரிய திருச்சபைகளுடனும், கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கிவரும் லிபரல் நிறுவனங்களோடும் கிறிஸ்தவ ஒற்றுமை என்ற பெயரில் இணைந்து கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபடுவதாகும். இத்தகைய மனப்போக்கும், நடவடிக்கைகளும் உலகத்து ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவலாமே தவிர சத்தியத்தை நிலைநாட்ட ஒருபோதும் உதவாது என்பது பில்லி கிரேகமுக்கு தெரியாமல் போனது விந்தைதான். பில்லி கிரேகம் இந்த வழியில் போக ஆரம்பித்ததற்கான காரணங்களை இயன் மரே எனும் சீர்திருத்த வரலாற்று எழுத்தாளர், Evangelicalism Divided (Pgs 24-50) என்ற தன் நூலில் வரலாற்று ரீதியில் ஆதாரங்களோடு தெளிவாக எழுதி விளக்கியிருக்கிறார். இதை எழுதுகிறபோது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1990களின் இறுதிப்பகுதியில் இங்கிலாந்தில் ஒரு சபைக்கு நான் கோடை காலங்களில் சில மாதங்களுக்கு பிரசங்கத்தையும், போதக ஊழியத்தையும் செய்து வந்திருந்தேன். அந்த சபை ஆரம்பத்தில் சகோதரத்துவ சபையாக இருந்து பின்னால் சீர்திருத்த பாப்திஸ்து சபையாக மாறியிருந்தது. அது சகோதரத்துவ சபையாக இருந்த காலத்தில் அதில் நான்கு மூப்பர்கள் இருந்திருக்கிறார்கள். பில்லி கிரேகம் இங்கிலாந்துக்கு வந்து சுவிசேஷ குருசேட் நிகழ்த்தியபோது அந்த ஊரில் இருந்த இன்னொரு லிபரல் சபையும் அதில் இணைந்து பணிசெய்தது. அந்த லிபரல் சபையின் போதகப்பணியில் இருந்தது ஒரு பெண். நான் பணிபுரிந்திருந்த சபையின் முன்னாள் மூப்பர்கள் பில்லி கிரேகம் கூட்டங்களில் இணைந்து பயனடைய வேண்டும் என்று விரும்பினர். ஆனால் சபை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரே நாளில் அந்த மூப்பர்கள் நால்வரும் சபையை விட்டு விலகினார்கள். சத்தியத்திற்கும், சத்தியத்தின் அடிப்படையிலான சபை நடைமுறைகள் என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் தராமல், பில்லி கிரேகம் யார் எவர் என்று பார்க்காமல் எல்லோருடனும் இணைந்து சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தியது இவ்வாறு அநேக சபைகள் மத்தியில் குழப்பத்தையும் அன்று இங்கிலாந்தில் உருவாக்கியிருந்தது. பில்லி கிரேகம் குருசேட்டிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து, போதகர்களை அன்று சிந்திக்க வைக்க மார்டின் லொயிட் ஜோன்ஸ் மிகவும் பாடுபாட்டார்.

கத்தோலிக்கர்களோடும், லிபரல்களோடும் இணைந்து சுவிசேஷம் சொல்லும் சமயசமரசப் போக்கு தன் இலக்கில் வெற்றிபெற பில்லி கிரேகமுக்கு உதவியிருந்தபோதும் அநேகருக்கு மெய்யான ஆவிக்குரிய விடுதலையைக் கொடுக்க உதவவில்லை. அமெரிக்காவில் ஜொனத்தன் எட்வர்ட்ஸின் காலத்தில் நிகழ்ந்த மெய்யான எழுப்புதல்களின்போதுகூட வரம்புக்கு மீறிய உணர்ச்சிவசப்படுதல் பலரில் காணப்பட்டபோது எட்வர்ட்ஸ் அதை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளவில்லை. மெய்யான மனந்திரும்புதலுக்கும் போலித்தனமான உணர்ச்சி வசப்படுதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்ட அவர் அப்போது Religious Affections என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். இந்தவிதமான ஆய்வெல்லாம் பில்லி கிரேகமின் கூட்டங்களில் காணப்படவில்லை. எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் கைதூக்கியவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு லிபரல் சபைகளுக்கும்கூட அனுப்பிவைக்கப்பட்டனர்.

பில்லி கிரேகமின் இத்தகைய சுவிசேஷ ஊழியப்போக்கு அவரை சத்தியத்தில் இருந்து வெகுதூரத்துக்குக் கொண்டுபோயிருந்தது. அவருடைய வயதான காலத்தில் ஒருமுறை ரொபட் சுளர் என்ற லிபரல் பிரசங்கிக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்து, முஸ்லீம், புத்த மதத்தைச் சார்ந்தவர்களும் ஏதோவொருவிதத்தில் இறக்கும்போது பரலோகம் போய்விடுவார்கள் என்ற அதிர்ச்சி தரும் விஷயத்தை அறிவித்தார். அதை கிரேகம் முழுமையாக நம்பினார். ஆண்டவருடைய அன்பை வலியுறுத்திய பில்லி கிரேகமுக்கு அந்த அன்பு அனைவரையும் ஏதோவொரு விதத்தில் பரலோகத்துக்கு அனுப்பிவிடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. வேதம் தேவ அன்பைப் பற்றி அந்தவிதத்தில் விளக்கவில்லை.

நல்ல மனிதர் என்றவிதத்திலும், கிறிஸ்துவை நேசித்தவர் என்ற விதத்திலும், வாழ்க்கையில் நன்னடத்தையுள்ளவராயிருந்தார் என்பதிலும் பில்லி கிரேகமை எவரும் எந்தக் குறையும் சொல்லமுடியாது. அவர் யாரும் எட்டமுடியாத பெரும் அமெரிக்க அதிபர்கள், செல்வந்தர்கள், கிறிஸ்தவ தலைவர்கள் என்று அனைவர் மத்தியில் செல்வாக்கு கொண்டிருந்தார். ஆனால், வேத உண்மைகளுக்கு அவர் முக்கியத்துவம் தந்து கிறிஸ்தவ பணிகளை நடத்தாமல் போனது அவரை வேதத்தில் இருந்து வெகுதூரத்துக்கு கொண்டுபோயிருந்ததை மறுக்கமுடியாது. பில்லி கிரேகம் இறையியல் வல்லுனரல்ல; இறையியல் போதனைகளில் அலட்சியம் காட்டினால் அது எங்கு கொண்டுபோய்விடும் என்பதற்கு அவர் உதாரணமாயிருந்தார். ஆற்றலும், திறமையும் கொண்ட தனி மனிதர்கள் உலகத்தில் மிகுந்த பாதிப்புகளை தனியொருவராக ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்களிடமும் காணலாம். டார்வின் தன் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் உலகை வசீகரித்து வேதம் போதிக்கும் படைப்புக்கு எதிரான வழியில் வழிநடத்தியிருந்தார். சிக்மன்ட் பிராயிட் தன் உளவியல் கோட்பாட்டின் மூலம் உலகத்தைக் கவர்ந்து லிபரல் சிந்தனையில் வழிநடத்தியிருக்கிறார். இவர்கள் கிறிஸ்தவர்களல்ல. கிறிஸ்தவர்களான ஜே. என். டார்பியும், ஸ்கோபீல்டும் அமெரிக்க கிறிஸ்தவத்தை டிஸ்பென்சேஷனலிசப் பாதையில் வழிநடத்தினர். சார்ள்ஸ் பினியும், பில்லி கிரேகமும் சுவிசேஷத்தை அறிவிப்பதில் வரலாற்றில் என்றுமிருந்திராத, வேதத்தில் காணமுடியாத கைதூக்கி கிறிஸ்துவிடம் சரணடையும் முறையை உருவாக்கிப் பிரபலப்படுத்தினர். இதெல்லாம் நமக்கு எதைப் போதிக்கிறது? பிரபலங்களான தனிமனிதர்களைப் பின்பற்றுவதையோ, காதில் விழும் போதனைகளை ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சி வசப்பட்டு ஏற்றுக்கொள்ளுவதையோ விட்டு வேதத்தை எப்போதும் ஆராய்ந்து பார்த்து அது போதிக்கும் சத்தியங்களின்படி மட்டுமே நடந்துபோக வேண்டுமென்பதைத்தான். பேரெண்ணிக்கை கொண்ட ஒரு கூட்டமே தவறான பாதையில் போகிறது என்பதற்காக அது போகும் பாதைதான் சரி என்பதல்ல; வேதம் சொல்லும் உண்மைகளைத் தனித்திருந்தும் விசுவாசித்துப் பின்பற்றும் இருதயமும், தைரியமும் நமக்கு இன்று தேவை. பினியைப் போலவும், பில்லி கிரேகமைப் போலவும் இன்னும் அநேகர் வரலாற்றில் உருவாகாமல் இருக்கப்போவதில்லை. அந்தந்தக் காலப்பகுதியில் ஸ்கொட்லாந்தின் ஜோன் கென்னடியைப்போலவும், மார்டின் லொயிட் ஜோன்ஸைப்போலவும் சரியானதை நெஞ்சுயர்த்தி வெளிப்படையாகப் பேசி வாழும் தலைமுறை உருவாக வேண்டும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 31 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக