வாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்

வாசிக்கிறவர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதை நான் வரவேற்கிறேன். ஒருவருடைய அனுபவத்தைப் பேச்சின் மூலம் மட்டுமல்லாமல், எழுத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளுகிறோம். எழுதுகிறபோது சிந்தனைக்கு வேலை கிடைக்கிறது. நம் உள்ளத்தின் எண்ணக் குமுறல்களுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கமுடிகிறது. ‘உன்னுடைய காகிதங்களை உன் இருதயத்து மூச்சுக்களால் நிரப்பு’ என்று சொன்னார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த். மூச்சை எந்த மனிதனாவது நிறுத்த முயற்சிப்பானா? இயல்பாக மூச்சுவிடுவதுபோல் இயல்பாக எண்ணங்களை எழுத்தில் வார்க்கவேண்டும். நம் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் பகிரும்போது வாசிப்பவர்கள் நம்மை அறிந்துகொள்ளுகிறார்கள்; நம் அனுபவங்களை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நேரில் சந்திக்க முடியாதவர்களோடுகூட எழுத்தில் இணைந்து நடக்கமுடிகிறது. அது நல்லதுதானே! கீழ்வரும் வாசக நண்பர்களின் வாசிப்பு அனுபவத்தை சுவைக்கலாம் வாருங்கள். – ஆர். பாலா

குடும்ப ஆராதனை – ஆர். பாலா

மிக்கேல் ஜார்ஜ்

வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராத நான், நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அவர் தன்னுடைய புத்தக அலமாரியைக் காண்பித்து “பிரதர் புத்தகம் வாசியுங்கள், எடுத்துத் தரவா?” என்று எப்போதும் சொல்லுவார். நானும் அப்புறம் வாசிக்கிறேன் பிரதர் என்று கூறிவிடுவேன். இவ்வாறு அவர் ஒருமுறை மறுபடியும் அவர் வீட்டிற்குச் சென்றபோது “சிறிய புத்தகம் படியுங்கள்” எனக் கூறி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்தார். நானும் மறுத்துப்பேச முடியாமல், சரி வாசித்துத்தான் பார்ப்போமே என்று நினைத்து புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தேன். அதில் “குடும்ப ஆராதனை” என்று எழுதப்பட்டிருந்தது.

பாரம்பரியக் கிறிஸ்தனாக (பெயர் கிறிஸ்தவன்) இருந்த எனக்கு அந்த சமயத்தில் ஒன்றும் புரியவில்லை. குடும்ப ஜெபம் என்பது தெரியும், ஆனால் இது என்ன குடும்ப ஆராதனை என்று எண்ணி சிரித்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன். நூல் அறிமுகத்தில் ஆசிரியர் குடும்பத்தலைவனின் தலைமையில் குடும்ப ஆராதனை நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்பித்திருந்தது என்னை அதிரவைத்தது மட்டுமன்றி அந்நூலை அச்சமயத்திலேயே முழுமையாகப் படிக்க உந்தித்தள்ளியது.

“திருமறையில் குடும்ப ஆராதனை” மற்றும் “கிறிஸ்தவ வரலாற்றில் குடும்ப ஆராதனை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதத்திலிருந்து விளக்கயிருப்பவற்றில் இருந்து, நான் கடவுளை குடும்பமாக ஆராதனை செய்யவேண்டுவது மட்டுமல்லாமல், பிள்ளைகளுக்கும் கற்பித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பை கடவுள் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். இதையே வரலாற்றில் கிறிஸ்தவ பெரியோரும் கருத்தாய்க் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.

குடும்ப ஆராதனை ஏன் அவசியம், தேவன் தந்திருக்கும் குடும்பத்தின் உலகப்பிரகாரமான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆத்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கிறேன் என்றும், சுவிசேஷம் அறிவிப்பது ஒவ்வொருவருடைய குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதையும், தனி ஆராதனையே சபை ஆராதனைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது என்பதையும் ஆழமாக நூல் உணரச்செய்தது. இதுவே சபை வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்ற வேதசத்தியத்தையும் உணர முடிந்தது.

“குடும்ப ஆராதனையில் இருக்கவேண்டிய அம்சங்கள்” மற்றும் “குடும்ப ஆராதனையை நடத்தும் முறை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதபூர்வமான குடும்ப ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்றும், எந்த நேரத்தில் அதை எவ்வளவு நேரம் செய்யவேண்டும் எனவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இறுதியாக “குடும்பத்தலைவர்களுக்கான குடும்ப ஆராதனை நடத்தும் வழிமுறைகள்” என்ற தலைப்பில் ஆசிரியர் தந்துள்ள விளக்கம் என்னை அதிகமாகப் பாதித்தது. அவை அனைத்தும் வேதபூர்வமான உண்மைகள் எனவும் புரிந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை எனது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சபை ஆராதனையை கர்த்தர் விசேஷவிதமாக ஆசீர்வதித்து அவரை மகிமைப்படுத்தி வாழும்படியாகக் கிருபை பாராட்டி வருகிறார்.

உண்மையில் சிறிதளவுகூட வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராதிருந்த எனக்கு, வாசிப்பதின் அவசியத்தை உணர்த்தி, இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கச் செய்ததே அச்சமயத்தில் என்னை ஆட்கொண்ட பயமும், கேள்வியுந்தான்; வேதசத்தியங்களை முறையாகப் படித்துப் புரிந்து கைக்கொண்டு நடந்தாலும், என் குடும்பத்தை கர்த்தரின் சித்தப்படி நடத்தத் தவறினால் நான் வேதம் எதிர்பார்க்கிறபடி கிறிஸ்தவனில்லையா? கிறிஸ்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லையா? என்ற பயமும் கேள்வியுமே என்னை அச்சமயத்தில் வாசிக்கத் தூண்டியது.

‘வாசிப்பு சிந்திக்க வைக்கும்’ எனக் கேள்விப்பட்டிருந்தாலும் அதை அனுபவபூர்வமாக புரிந்துகொள்ள வைத்ததுமன்றி என்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் குடும்பத்தலைவனாக பல தீர்மானங்களை எடுக்கவும் உதவியது. எனவே வேதத்தையும் வேதசத்தியங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதனால் நானும் என் குடும்பமும் கிறிஸ்துவுக்குள் அடைந்து வரும் பயன்கள் அநேகம்.

மிக்கேல் ஜார்ஜ்
மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து

கர்த்தரின் வேதம் – ஆர். பாலா, ஜோன் ரூத்தர்

பிரான்ஸிஸ்

சீர்திருத்த புத்தகங்கள் என் கையில் கிடைக்க கர்த்தர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவற்றில் முதலாவதாக நான் வாசித்தது, ‘கர்த்தரின் வேதம்’ என்ற நூல். பத்து வருடங்களுக்கு முன்பாக நான் வாசித்த இந்த புத்தகத்தின் மூலம் நான் பெற்றுக்கொண்ட நன்மைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

ஆரம்ப காலங்களிள் நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ சபையில் இருந்தேன். அங்கிருந்தபோது பரிசுத்த வேதாகமம் பற்றியும், ஆண்டவரைப் பற்றியும் அறியாமல் இருந்தேன். என்னுடைய 25ம் வயது வரையில் வேதத்தின் மகத்துவத்தை நான் அறிந்திருக்கவில்லை.

கர்த்தரின் வேதம் என்ற தலைப்பில் இருக்கும் இந்தப் புத்தகத்தை நான் வாசித்த பிறகுதான், இறையாண்மையுள்ள கர்த்தர் ஒருவர் இருக்கிறார், அவரால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஒன்று இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்.

வேதத்தின் வாசனையே இல்லாமல் இருந்த என்னை வேதத்தின் பக்கம் திரும்பவைத்தது இந்தப் புத்தகம். பாவத்தில் சீரழிந்திருந்த நான் உலக காரியங்களுக்கும் விக்கிர ஆராதனைக்கும் அடிமைப்பட்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகுதான் நான் எப்பேர்பட்ட பாவி என்பதை உணர்ந்தேன்.

எத்தனை பெரிய ஆண்டவர் எனக்காக பூமிக்கு இறங்கி வந்து என்னுடைய பாவங்களுக்காக, எனக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையை அவர் தம்மேல் சுமந்து பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்தேன்.

என் பாவங்களையெல்லாம் அவர் தன் கிருபையாலும், இரக்கத்தாலும் மன்னித்தார். அதன் மூலமாக எனக்கு மறுபிறப்பைக் கொடுத்து, மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் கொடுத்தார்.

பரிசுத்த தேவனுக்கு முன்பாக நான் ஒரு புழு. நான் அருவருக்கத்தக்கவன். அப்படிப்பட்ட எனக்காக அவர் பாவமனிதர்களின் கையில் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து உயிர்த்தார் என்பதை நான் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு பிசாசு பிடித்த மனிதனைப்போல இருந்த என்னை முழுவதுமாக விடுதலையாக்கி சுகம் கொடுத்து தேவனுடைய பிள்ளையாக்கியது வேதமே. மேலும் கர்த்தருடைய சபையில் இணைந்து, சபை ஆராதனையில் வேதத்தை வாசிக்கின்ற ஒரு பணியையும் ஆண்டவர் எனக்கு கிருபையாக அருளியிருக்கிறார்.

ஆத்துமாவுக்கு உதவாத புத்தகங்களை அதிகமாகப் படித்துக்கொண்டிருந்த என்னை சீர்திருத்த புத்தகங்களை வாசிக்கவும், வாசித்தவற்றை பிறருக்கு எடுத்துச் சொல்லவும் கர்த்தரின் வேதம், என்ற இந்தப் புத்தகம் ஒரு தூண்டுகோலாக இருந்தது என்று கூறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் புத்தகத்தில் இரண்டாவது பகுதியாக இருக்கின்ற 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரமாக இருக்கின்ற ‘பரிசுத்த வேதாகமம்’ என்ற பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் தனிப்பட்டவிதத்தில் வேதத்தைப் புரிந்துகொள்ளுவதற்கும், சபை வாழ்க்கை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்து வருகிறது.

குறிப்பாக, இந்தப் பகுதி மூலம், கர்த்தரின் தெய்வீகத் தன்மையையும், வார்த்தையின் வல்லமையையும், வேதத்தைப் புரிந்துகொள்ள அவசியமான விதிகளையும், வேதத்தின் மூலம் மட்டுமே ஆவியானவர் பேசுகிறார் என்பதையும், மனிதனின் இரட்சிப்பிற்கும் விசுவாசத்திற்கும் வேதம் மட்டுமே போதுமானது என்பதையும், வேதம் தவறிழைக்காதது, அதிகாரமுள்ளது, வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது என்பதையும், வேதம் தன்னைத்தானே விளக்குகிறது போன்ற அநேக சத்தியங்களை அறிந்துகொண்டேன்.

இப்படியாக வேதத்தின் மெய்த்தன்மை பற்றிய நுணுக்கங்களைத் தெளிவாக எழுதித் தந்திருக்கும் ஆசிரியர்கள் பாலா மற்றும் ஜோன் ரூத்தருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் நன்றி.

பிரான்ஸிஸ்
பெங்களூர்