ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?

போலிப் பிரசங்கிகளையும், போலிப்போதகர்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேதம் அத்தகையோரைப் பற்றி எச்சரிக்கை செய்து சபைகளுக்குள் அவர்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று தெளிவாகவே விளக்குகிறது. ஆனால், அந்தவிதத்தில் போதிக்கும் விஷயத்தில் முழுப் போலிகளாக இல்லாமல் திருச்சபையை நடத்துகின்ற விதத்தில் போலித்தனத்தைக் கையாளுகிறவர்களைப் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இந்தப் போலித்தனம் காட்டாறாகப் பாய்ந்தோடி எந்த ஆவிக்குரிய கூடுகையும் வேதபூர்வமான திருச்சபையாக இல்லாமல் இருக்கும்படிச் செய்து வருகிறது.

சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். ஒரு சபைப்போதகர் திருச்சபை அங்கத்துவம் என்பது வேதத்தில் இல்லாததொன்று என்று சொல்லியிருக்கிறார். இந்த அறிவாளி அதை எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. இந்த மனிதர் சொல்கிறார் என்பதற்காக வேதத்தில் சபை அங்கத்துவம் இல்லை என்று சொல்லமுடியுமா? நான் எழுதி வெளியிட்டிருக்கும் “அங்கத்துவம் இல்லாத திருச்சபையா?” எனும் நூலை வாங்கி வாசியுங்கள். வேதம் அதுபற்றி எந்தவகையில் விளக்குகின்றது என்பதை முதல் தடவையாகத் தெரிந்துகொள்ளலாம்.

நம்மினத்தில் பெரும்பாலான சபைப் போதகர்கள், பத்துப்பேரைக்கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு, தங்களைத் தாங்களே கேள்வி முறை எதுவும் இல்லாமல் போதகராக நியமித்துக் கொண்டு, எந்தவிதத் தரமான இறையியல் அறிவும் இல்லாமல், போதகப் பிரசங்கப் பயிற்சி பெறாமல், எவருக்கும் கீழிருந்து தாழ்மையோடு கற்று, அனுபவத்தை அடையாமல் ஊழியக்காரர்கள் என்ற பெயரில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பதே இந்த அவல நிலைக்குக் காரணம். ஒரு கிறிஸ்தவனாவது, “ஐயா, நீங்கள் போதகராக யாரால் நியமிக்கப்பட்டீர்கள்? உங்கள் அழைப்பிற்கும், பணிகளுக்குமான தகுதிகள் என்ன?” என்றே கேட்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு அவர்களைப் பின்பற்றி அநேகர் ஏமாந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடையில் பொருள் வாங்கும்போது கூட ஆயிரம் கேள்விகளைக் கேட்கும் நாம், ஆத்துமாவுக்கு பாதுகாப்பளிக்கின்ற தகுதியை ஒருவன் கொண்டிருக்கிறானா? என்று ஒரு கேள்வியைக்கூடக் கேட்காத பலவீனத்தோடு வாழ்ந்து வருகிறோம்.

திருச்சபை என்பது ஆவிக்குரிய ஒரு நிறுவனம். அது ஆவிக்குரியது மட்டுமல்ல, ஆவிக்குரிய நிறுவனம். இந்த இரண்டும் இல்லாததற்குப் பெயர் திருச்சபை அல்ல.

முதலில், ஆவிக்குரியது என்றால், கண்களுக்குச் தெரியாமல் காணப்படுவது என்று அர்த்தமல்ல. அது ஆவியினால் மறுபிறப்பை அடைந்தவர்களை மட்டுமே கொண்டிருக்கும் அமைப்பு என்பதே அதற்குச் சரியான பொருள். பாவியாகிய மனிதனின் பாவத்தைப் போக்கி ஆவியானவர் அவனுக்கு மறுபிறப்பைத் தந்து இரட்சித்திருக்கிறார். அதனால் அவன் ஆவிக்குரிய மனிதன். அத்தகையோரைக் கொண்டு கூட்டிச் சேர்க்கப்பட்டதே திருச்சபை. ஆவிக்குரியவர்களாக இல்லாதோருக்கு அதில் இடமில்லை. அதை அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் வாசிக்கலாம். திருச்சபையில் அத்தகையோரை மட்டுமே அப்போதலர்கள் இணைத்துக் கொண்டார்கள்.

இரண்டாவது, திருச்சபை ஆவிக்குரிய ஒரு நிறுவனம். நிறுவனம் என்ற வார்த்தை கட்டுப்பாட்டோடு இயங்கும் ஒரு அமைப்பு என்பதை விளக்குகிறது. உலகத்தில் காணப்படும் அரசு முதற்தொடங்கி அத்தனை நிறுவனங்களும் இந்தவகையில்தான் இயங்கி வருகின்றன. ஒரு நிறுவனம் அதில் இருப்பவர்களும், மேலாளர்களும் அந்த நிறுவனத்திற்குரிய இலக்கணத்தோடும் இலட்சியங்களோடும் நீதியான முறையில் இந்த உலகத்தில் இயங்கி வர அதற்கு அமைப்பும், சட்டவிதிகளும் தேவை. ஒவ்வொரு நிறுவனமும் அவற்றைக் கொண்டிருக்கும். இந்த முறையில் இஸ்ரவேல் பழைய ஏற்பாட்டில் இயங்கி வந்திருந்தது. அதற்கு நியாயப்பிரமாணத்தைக் கர்த்தர் இதற்காகக் கொடுத்திருந்தார். அதை மீறுகிறவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இந்த முறை புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை என்று நினைக்கிறவர்கள் வேத அறிவில்லாத ஞானசூனியங்கள். அப்படியில்லாமலா, இயேசு கிறிஸ்து சபையில் பாவம் செய்கிற ஒருவனை எப்படித் திருத்துவது என்பதற்காக மத்தேயு 18லும், 1 கொரிந்தியர் 7லும் இன்னும் அநேக பகுதிகளில் ஒழுங்கு நடவடிக்கையை சபையில் பின்பற்றும் முறைகளை விளக்கியிருக்கிறார். இந்த விதிகளையும், இதுபோன்ற வேதம் விளக்கும் ஏனைய விதிமுறைகளையும் கொண்டு அமைந்திருப்பதுதான் திருச்சபை சட்டவிதிகள். 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய பகுதிகளில் போதகர்கள், உதவிக்காரர்களுக்கான இலக்கணங்களைத் தந்து, இவற்றைக் கட்டாயமாகக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே சபைத்தலைவர்களாக இருக்கவேண்டும் என்றும் கர்த்தர் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம் சபை சட்டவிதிகள் தெளிவாக விளக்க வேண்டும்.

திருச்சபை சட்டவிதிகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களையும் ஒரு சபை கொண்டிராது இருக்குமானால் அதை நடத்திவருகிற போதகன் எதையும் தான் நினைத்தபடி செய்து ஒரு போப்பாக, ரவுடியைப்போலத் தன்னிச்சையாக செயல்பட்டு, தன் சொந்தங்களுக்குப் பதவியளித்து, ஆத்துமாக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறவனாக இருந்துவிடுவான். அதுவே நம்மினத்தில் அதிகம் நிகழ்ந்து வருகிறது. ஆவிக்குரிய போதகனாக இருக்கின்ற ஒருவனுக்கும் கட்டுப்பாடு அவசியம், அவன் கணக்குக்கொடுத்து நடந்துகொள்ளுபடியாக ஒரு நிறுவன அமைப்பு அவசியம். சபை அமைப்பும், சபை சட்டவிதிகளும் இல்லாத ஒரு கூட்டத்தை திருச்சபை என்ற பெயரில் அழைக்கமுடியாது; அதற்கு வேதம் அனுமதி தரவில்லை. அவையில்லாத இடத்தில் ஒழுங்கு என்பதற்கு இடமேயிருக்காது. பணவிஷயங்களிலும் துணிகரமான பாவங்கள் நிகழும். அது நியாதிபதிகள் நூலில் பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதைப்போல, “அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்” என்றவிதத்தில் மட்டுமே செயல்படும். கர்த்தரின் வழிமுறைப்படி அமைக்கப்படாததும், சபை சட்டவிதிகள் மற்றும் விசுவாச அறிக்கையைக் கொண்டிருந்து கவனத்தோடும், தாழ்மையோடும் செயல்படாத கூடுகைகள் ஆத்துமாக்களுக்கு மிகவும் ஆபத்தானவை. வேத ஞானமில்லாமல் ஆத்துமாக்கள் தொடர்ந்திருப்பதாலும், தரமில்லாத ஊழியக்காரர்களின் தொகை பெருகிக் காணப்படுவதும், ஆவியானவரின் வல்லமையான கிரியைகளை நம்மினம் காணாமல் இருப்பதுமே இத்தகைய பலவீனமான நிலைக்குக் காரணம்.

கிறிஸ்தவ வேதத்தில் துல்லியமான ஞானமில்லாதவர்களெல்லாம் இந்த ஊழியத்துக்கு வந்துவிடுகிறார்கள். கர்த்தர் அழைத்தார் என்ற கனவின் உந்துதலால் உழைத்துப் பணம் சம்பாதித்து வாழ்வதற்கான ஒரு வேலையைத் தேடிக்கொள்ளாமல் பத்துப் பதினைந்து பேரைக் கூட்டிக்கொண்டு (பெரும்பாலும் பெண்கள்) அதைக் கிறிஸ்தவ ஊழியமாகக் கருதி கையில் எந்தப் பணமும் இல்லாமல் சுவிசேஷம் சொல்லப் புறப்பட்டுவிடுகிறார்கள். பணமில்லாமல் சொந்தத் தேவையைத் தீர்த்துக்கொள்ள வழிதெரியாமல் பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். குறுக்குவழிகளைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தைப் பெருக்கிக் கொள்ளுகிறார்கள். உண்மையில் இவர்கள் கர்த்தரால் அழைக்கப்படவே இல்லை; அது அவர்களுடைய வெறும் கனவு மட்டுமே. இவர்களுக்கு வேத இறையியல் தெரியாது; போதக நுணுக்கமோ, அனுபவமோ இருக்காது. அவர்களுடைய விசுவாசமும் பலவீனமானதாக, பரிசுத்த வாழ்க்கையும் தடுமாற்றமுள்ளதாகக் காணப்படும். இத்தகைய அநேக ஊழியக்காரர்கள் யூடியுபில் நிரம்பி வழிகிறார்கள். அவர்களுடைய செய்திகள் உப்புச்சப்பற்றவையாக, ரசனையற்றவையாக, சத்தியப்புரட்டல்களாகக் காணப்படும். வேத ஞானத்தில் அவர்களைவிடத் தாழ்ந்த நிலையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் இவர்களை நம்பி மோசம் போய் வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் அவல ஊழியம். பட்டிதொட்டியெல்லாம் இதைத்தான் காண்கிறோம். திருச்சபைக்குரிய வேத இலக்கணங்களையெல்லாம் இவர்கள் செய்யும் பணிகளில் காணவே முடியாது. சுயநல நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இவர்கள் இயங்கி வருகிறார்கள். ஊழியம் இவர்களுக்கு வியாபாரமாகி விட்டது; வாழ்வாதாரத்திற்குத் துணைபோகும் கருவியாகிவிட்டது.

இதெல்லாம் இருக்கட்டும், இன்று சபைகள் என்ற பெயரில் இத்தகைய போலித்தனமான கூட்டங்கள் எந்தவித அமைப்பையும் கொண்டிராமல் கேள்விமுறையில்லாமல் இயங்கி வருகிறபோது, சீர்திருத்த விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக மாரடித்துக்கொண்டு திருச்சபை நடத்தி வருகிறவர்கள் கர்த்தர் வேதம் தெளிவாகக் காட்டியிருக்கும் திருச்சபை அமைப்பையும், அது பரிசுத்தத்தோடு இயங்கிவருவதற்கான சட்டவிதிகளையும் கொண்டிருந்து, அவற்றிற்கு மதிப்புக்கொடுத்து, ஆத்துமாக்களுக்குப் பாதுகாப்பளித்து நடந்து வருகின்றனவா? சீர்திருத்தப் போதகர்கள் தங்கள் இருதயத்தைப் பாதுகாத்து, ஆத்துமாக்களுக்கு கணக்குக்கொடுத்து ஏனையோருக்கு ஆபத்தில்லாதவர்களாக, போப்பாகவோ அல்லது ரவுடித்தனத்தோடோ செயல்படாதவர்களாக இருந்து வருகிறீர்களா?

என்னடா, ரவுடி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாரே என்று சிந்திக்கிறீர்களா? தனக்குப் பிடிக்காததை ஒரு ஆத்துமா செய்துவிட்டது என்பதற்காக அவருடைய மகனின் பள்ளிப்படிப்புக்கான பணத்தை நிறுத்திவிட்ட ஒரு போதகனை ரவுடி என்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையில் அழைப்பது? தன்னைக் கேள்வி கேட்டுவிட்டார்களே என்பதற்காக ஆத்துமாக்களை போலிஸை வைத்து மிரட்டுகிறவன் ரவுடியில்லாமல் வேறு யார்? சபைப் பணத்தைத் தான் நினைத்த முறையில் பயன்படுத்தி ஆத்துமாக்களுக்கு எந்தக் கணக்கையும் ஒழுங்காகக் காட்டாமல் இருந்து வருகிறவன் நீதியான போதகனா? சபையில் அடுத்த கட்டத் தலைவர்களை எழமுடியாமலும், அதற்கான எந்தப் பயிற்சியையும் எவருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே தலைவன் என்று சாகும்வரை இருந்து வரப்பார்க்கிற சுயநலம் பிடித்தவனை எந்தப் பெயரில் அழைப்பது? இதெல்லாம் அத்துமீறிய செயல்கள். இருந்தாலும், இத்தகைய அத்துமீறிய செயல்களை ஒருவன் செய்வதற்கு எது அவனை வழிநடத்தியிருக்கிறது. வேதபூர்வமான திருச்சபை அமைப்போ, சபை சட்டவிதிகளோ, கணக்குக்கொடுத்து நடந்துவருவதற்கான விதிமுறைகளோ சபைகளில் இல்லாதபோதுதான் தான்தோன்றித்தனமான இந்த இழிவுச்செயல்கள் எதிலும் நிகழ முடியும். இதிலிருந்து சீர்திருத்த சபைகள் தங்களைக் காத்துக்கொள்ளாவிட்டால், நீங்கள் குறைகூறி இனங்காட்டி வரும் ஏனைய அமைப்புகளுக்கும் உங்களுக்கும் அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. சீர்திருத்தம் பேச்சில் இருந்துவிட்டால் போதாது; அது உங்கள் வாழ்க்கையிலும், திருச்சபைப் பணியின் அத்தனை அம்சங்களிலும் நிதர்சனமாகக் காணப்பட வேண்டும். அத்தகைய தொடர்கின்ற சீர்திருத்தம் இருக்குமாறு ஜெபத்தோடும், நிதானத்தோடும் பணிசெய்து வருகிறீர்களா?

மறுமொழி தருக