வழியருகே விழுந்த விதை

மத்தேயு 13 ம் அதிகாரத்தில் அநேக உவமைகள் இருப்பதை நாம் காணலாம். அதில் 7 உவமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உவமைகளை லூக்கா 15, 16 அதிகாரங்களில் நாம் வாசிப்பதில்லை. அங்கு 5 உவமைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமயத்தில் ஆண்டவரால் சொல்லப்பட்டவையாகும்.

மத்தேயு 13:1
“இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.”

அவருடைய ஊழியங்களை ஆரம்பித்த பொழுது கப்பர்நகூம் எனும் இடத்தை பிரதானமாகப் பயன்படுத்தித்தான் ஆண்டவர் எல்லா இடங்களுக்கும் போய் வந்து தன்னுடைய செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கு கடலோரத்தில் என்று சொல்லும்பொழுது அது ஒரு பெருங்கடலில்லை; உண்மையில் அது ஒரு ஏரி. ஆனால் மிகவும் ஆழமானதும், அகலமானதும், நீளமானதுமான பெரிய ஏரி. அந்தக் கடலோரத்தில் அவர் உட்கார்ந்திருந்த பொழுது அநேக ஜனங்கள் அவரைப் பார்ப்பதற்காகவும், பேசுவதற்காகவும், அவர் பேசுவதைக் கேட்பதற்காகவும் கூடி வந்தார்கள் என்று பார்க்கிறோம். வந்த கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் அவர் அங்கிருந்த ஒரு படகில் ஏறினார். அது மீன் பிடிக்கிறவர்கள் பயன்படுத்துகிற ஒரு படகு. அந்தப் படகில் ஏறிக் கடலுக்கு உள்ளே போனார். அவர் அதிக தூரம் போகவில்லை. அந்தக் கரையோரத்துக்குப் பக்கத்திலேயே கடலுக்குள் கொஞ்சதூரம் போய் அந்தப் படகிலிருந்து அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். அப்படி அதைச் செய்ததற்குக் காரணம் ஜனங்கள் அலைமோதிக் கொண்டிருந்ததுதான். அவர் எல்லோரையும் ஒரே நேரத்தில் பார்ப்பதும் கஷ்டம். அதுமட்டுமில்லாமல் அவரது குரல் முன்னால் இருப்பவர்களுக்கு கேட்டாலும் பின்னால் இருப்பவர்களுக்குக் கேட்காமல் போய்விடும். ஆகவே, அவர் இப்படிக் கடலோரத்திலிருந்த அந்தப் படகில் போய் உட்காரும் பொழுது அநேகரையும் பார்க்கக்கூடிய ஒரு வசதி இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர் பேசுகிற குரலும் கூட பலருக்கும் போய்ச் சேர கூடிய ஒரு வசதி இருந்தது. ஆகவே ஆண்டவர் அவ்விதம் செய்தார். இங்கிருந்துதான் உவமைகளின் மூலமாக அவர் பேச ஆரம்பித்தார் என்று நாம் பார்க்கிறோம்.

இந்த உவமைக்குப் பெயர், பொதுவாகவே எல்லாருக்கும் தெரிந்திருக்கிற “விதைக்கிறவனின் உவமை” என்பதாகும். உண்மையிலேயே சொல்லப்போனால் இந்த உவமைக்கு நல்ல தலைப்பு “விதை நிலங்களின் உவமை” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏன் அப்படிச் சொல்லுகிறேனென்றால் இந்த உவமையினுடைய பார்வை விதை நிலங்களின் மேல்தான் இருக்கிறது. ஆண்டவர் இங்கு விதை நிலங்களைப் பற்றியே பேசுகிறார். அந்த விதை நிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த உவமை பேசுவதினால் விதை நிலங்களின் உவமை என்ற பெயர் அதற்குப் பொருத்தமாக இருக்கும்.

அடுத்ததாக நாம் கேட்க வேண்டிய கேள்வி, உவமை என்றால் என்ன? உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலுமே அந்த மொழிக்கு அழகு சேர்க்கும்படியாக பல வகையான அணிவகைகளைப் பயன்படுத்துவார்கள். அதில் ஒன்றுதான் உவமை. ஆண்டவர் பிரசங்கம் செய்தபொழுது அதிகமாகப் பயன்படுத்தியது உரைநடையே. அது எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய பேச்சு. இருந்தபோதும் வேறு அணிவகைகளையும் அவர் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. வேதத்தில் பார்க்கிற பொழுது உவமைகள், நீதிமொழிகள், பாடல்கள், சங்கீதங்கள் அதில் காணப்படுகின்றன. உருவகம் என்கிற ஒரு அணிவகையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்த அடையாள மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷம் மற்றும் எசேக்கியல் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே வேதம் சத்தியத்தை நமக்கு விளக்குகிறபோது உரைநடையை மட்டும் பயன்படுத்தவில்லை. ஒரு மொழிக்குரிய அநேக அணிவகைகளையும் ஆண்டவர் பயன்படுத்தியிருக்கிறார்; வேதமும் பயன்படுத்தியிருக்கிறது.

ஆண்டவர் ஏன் உவமைகளாகப் பேசினார்? சீடர்கள் அவரிடம் வந்து கேட்கிறார்கள், நீங்கள் ஏன் உவமையைப் பயன்படுத்தி பேசுகிறீர்? அப்படியானால் அவர்களுக்கு உவமைக்கும் உரைநடைக்கும் இடையிலிருந்த வேறுபாடு தெரிந்திருந்தது. அப்பொழுது ஆண்டவர் சொல்கிறார், உங்களுக்கு கேட்கின்ற பாக்கியம் கிடைத்துள்ளது. அதனால் இது உங்களுக்குப் புரியும், ஆனால் அந்த பாக்கியம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரியாதிருக்கும்படிக்கு உவமையில் பேசுகிறேன் என்றார். இதனை நாம் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது. உவமையில் பேசினால் ஒருவருக்கும் புரியாது என்று நினைக்கக்கூடாது. அவ்வாறாக ஆண்டவர் சொன்னதற்கு காரணம், யூதத் தலைவர்களான பரிசேயர்கள், சதுசேயர்கள், ஜெப ஆலயத்தலைவர்கள் எல்லாருமே ஆண்டவரைப் பரம எதிரியாகக் கருதினார்கள். அவர் யூத மதத்தை அழிப்பதற்காக வந்த மனிதனாகக் கருதி அவரை மேசியாவாகப் பார்க்க மறுத்தார்கள். அவர்களுடைய கடின இருதயத்தினால் வேதத்தைக் கேட்பதற்கோ தங்களுடைய இருதயத்தில் இடம் கொடுப்பதற்கோ அவர்கள் தயங்கியதால்தான் ஆண்டவர் சொன்னார், இதனை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியம் அவர்களுக்கு இல்லை, ஆனால் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் ஆண்டவர் சொல்லுகிறார் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஏன் அவ்வாறு சொல்கிறார்? நம் எல்லோருக்கும் காது இருக்கிறதுதானே? அவர் அவ்விதம் சொல்லுவதற்கு அர்த்தம் ஒரு விஷயத்தில் அக்கறை செலுத்தி முழு மனதையும் அதில் ஈடுபாடு செலுத்தி கேட்கிறவனுக்குத்தான் வசனம் பயனடையும். வசனத்தை உதாசீனப்படுத்துகிறவர்களுக்கோ, கடின இருதயம் இருப்பவர்களுக்கோ, வேத வார்த்தையை அலட்சியப்படுத்துகிறவர்களுக்கோ வேத வார்த்தையின் மூலமாக எந்தப் பயனும் கிடைக்காது. ஆகவேதான் ஆண்டவர் சொல்லுகிறார் காதுள்ளவன் கேட்கக்கடவன். வசனத்தினுடைய பயனை நாம் அடைவதற்குக் கர்த்தருடைய உதவியும், ஆவியானவருடைய உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது.

உவமை என்பது என்ன? ஒரு கதையைச் சொல்லி ஒரு சத்தியத்தை விளங்கப்படுத்துவதாகும். இவை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என வேதம் முழுவதும் அநேக உவமைகள் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு பழைய ஏற்பாட்டில் தாவீது மகா பெரிய பாவத்தைச் செய்துவிட்ட பொழுது நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் போய் அவனுடைய குற்றத்தை உணர்த்துவதற்கு உரைநடையைப் பயன்படுத்தவில்லை. ஒரு உவமையைப் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லி அந்த கதையின் மூலமாக அவனுடைய பாவத்தை உணர்த்தினான். அப்பொழுது அந்த கதையில் இருக்கின்ற மனிதன் தான்தான் என்பதை தாவீது உணர்ந்தான். ஆகவே ஒரு கதையின் மூலமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதுபோல்தான் இங்கு ஆண்டவர் இந்த உவமையைப் பயன்படுத்தி சத்தியத்தை விளக்குகிறார்.

மத்தேயு 13:3-9
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.”

இதற்கான விளக்கம் வசனம் பதினெட்டிலிருந்து கொடுக்கப்படுகிறது.

மத்தேயு 13:18-23
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.”

இந்த உவமையில் வருகின்ற விதைக்கிறவன் பாத்திரம் ஆண்டவரைக் குறிக்கிறது. ஆண்டவர்தான் உண்மையாகவே சத்தியத்தை விதைக்கிறவர். விதைக்கப்படுகிற விதை சத்தியம், தேவனுடைய வார்த்தை, சுவிசேஷம் என்று சொல்லலாம். இந்த உவமையில் நான்கு வகை நிலங்களைப் பார்க்கிறோம். முதலில் பாதை அருகே, அதாவது வழியருகே உள்ள இடம். இரண்டாவதாக கற்பாறைகள் காணப்படுகின்ற ஒரு பகுதி. மூன்றாவது முட்செடிகள், களைகள் வளர்கின்ற இடம். நான்காவது நல்ல இடம். இந்த நான்கு நிலங்களும் எதைக் குறிக்கிறதென்று கேட்டால் அது நான்கு வகையான மனிதனுடைய இருதயத்தை விளக்குகின்றன. அதாவது தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுகிற பொழுது எந்த நிலையிலிருந்து மனிதர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டுப் பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. அதாவது வழியருகே போன்ற நிலம், கற்பாறைகள் போன்ற இருதயம், முட்செடிகளும் களைகளும் காணப்படுகின்ற இருதயம், நல்ல நிலம் போன்ற இருதயம். இந்த நான்கு வகை நிலங்களில் இப்போது முதலாவது நிலத்தை குறித்துப் பார்ப்போம்.

நான்காவது வசனத்தில், “அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.” என்றிருக்கிறது. அதாவது, பறவைகள் வந்து கொத்தி எடுத்துக்கொண்டுபோய் விட்டது. மத்தேயு 13 அதிகாரத்தில் பார்க்கிற உவமையை மாற்கு 4 வது அதிகாரத்திலும், லூக்கா 8 வது அதிகாரத்திலும் பார்க்கலாம். மாற்குவும், லூக்காவும் இதை விளக்கியபோதும் மத்தேயு அளவுக்கு நீளமாக விளக்கவில்லை. இருந்தபோதும் ஒரு உவமையைப் புரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தப் பகுதிகளில் அதே உவமை வந்திருக்கிறது என்று பார்த்து இந்த மூன்றையும் சேர்த்துப் படிக்கின்றபோது அதனுடைய முழுமையான அர்த்தத்தை நாம் எப்போதும் புரிந்துகொள்ளலாம். ஆகவே மாற்குவும் லூக்காவும் கூட இந்த உவமையைப் புரிந்துகொள்ள நமக்கு நிச்சயமாக உதவி செய்கிறார்கள். இந்த உவமையின் மூலமாக ஆண்டவர் தேவ ராஜ்யத்தின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். முதலாவது, இந்த உவமையில் வருகிற நிலம் வழியருகே உள்ள நிலம்.

நாம் இங்கே முதலில் ஆண்டவர் சொன்ன உவமையை அல்லது உதாரணத்தை அல்லது ஒரு எடுத்துக்காட்டை அல்லது கதையைப் பார்த்துப் புரிந்து கொண்ட பிறகு அது யாரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே சொல்லப்படுகிற வழியருகே உள்ள நிலம் எது? அதைப் புரிந்துகொள்ள நாம் ஒரு வயல் நிலத்தை எடுத்துக் கொள்வோம். அந்தக் காலத்தில் இது மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் நிலத்தைத்தான் குறிக்கிறது. வயல் நிலங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். வயல் நிலத்தில் வரம்புகள் இருக்கும். விவசாயி நடந்து போவதற்கும், நிலத்தைத் தாண்டிப் போவதற்கும் பயனுள்ளதான ஒரு வழி இருக்கும். அந்த வழி ஒரு மூன்று அடிக்கு மேல் அகலமாக இருக்காது. அது நடந்து போவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் எல்லா இடத்துக்கும் போகாமல் இருப்பதற்காகவும் இந்த வரம்பு கட்டப்படுகிறது. அது ஒரு பாதையாகவும் இருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு அன்றைக்கு அங்கிருந்த விளைச்சல் நிலத்தில் நடந்து போனபொழுது சீடர்கள் அங்கிருந்த நிலத்திலிருந்த பயிரிலிருந்து மணிகளை எடுத்துச் சாப்பிட்டார்கள். அப்பொழுது பரிசேயர்கள் அதைப் பார்த்து அவரைக் குற்றம் சாட்டினார்கள். அப்படி அவர்கள் நடந்து போன பொழுது எப்படி நடந்துபோய் இருப்பார்கள்? இந்த வழியருகே உள்ள பகுதியில்தான் அவர்கள் நடந்து போய் இருப்பார்கள். ஏன் ஆண்டவர் இந்த உவமையில் வழியருகே உள்ள நிலத்தைப் பயன்படுத்தினார்? அதற்கு காரணம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும்.

வழியருகே என்பது ஒரு சிறு குறும்பாதை. இந்தப் பாதையினுடைய தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? விதைகள் விதைப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிற ஒரு பகுதி அல்ல. ஏனெனில் விதை வளர்ப்பதற்காக ஏற்கனவே விவசாயி ஒரு இடத்தை நன்றாக பதப்படுத்தியிருப்பான். ஆனால் இது நடந்து போவதற்கு மட்டுமே உதவும். அதுமட்டுமல்லாமல் இது எந்த விதத்திலும் தயார் செய்யப்படாத ஒரு பகுதியாக இருப்பதால் அது மிகவும் கடினமாக இருக்கும். அதில் முட்கள் நிறைய இருக்காது, இருந்தாலும் கொஞ்சம் கடினமானதாக கற்கள் நிறைந்ததாக இருக்கும். அது மிகவும் இறுகிப்போய் கடினமாக இருக்கும். அந்தப் பகுதியில் சாதாரணமாகவே எந்த விவசாயியும் விதை விதைக்க மாட்டான். அவன் அதற்கான நிலத்தை ஏற்கனவே பதப்படுத்தி உழுது நன்றாகத் தயார் செய்திருப்பான். அப்படியாக உழுது தயார் செய்யப்பட்ட நிலத்தில் தான் விதைகள் பலன் கொடுக்கும். ஆகவே இந்தப் பாதையில் விதைக்கப்படுகிறது எதுவுமே ஒருகாலமும் பயன் கொடுக்காது. அதுதான் இங்கு சொல்லப்படுகின்ற உவமையாகும்.

இங்கு சொல்லப்படுகின்ற உவமை எதைக் குறிக்கிறது? ஏனென்றால் எதையோ குறிப்பதற்காகத்தான் ஆண்டவர் இதைப் பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு மனிதனுடைய இருதயத்தைக் குறிக்கிறது. அதாவது சிலவிதமான மனிதர்களின் இருதயத்தை குறிக்கிறது. எல்லா மனிதர்களும் இப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால் மனிதர்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய இருதயம் இந்த வழியருகே என்ற பகுதியைப் போன்றது. வழியருகே உள்ள பாதையான இடமானது எவ்வளவு கடினப்பட்டிருக்குமோ அதேவிதத்தில் இவர்களுடைய இருதயமும் கடினப்பட்டுக் காணப்படும். விதை விதைக்கப்படுவதற்கும் பலன் கொடுப்பதற்கும் தகுதியில்லாத அந்தப் பாதையைப் போல இவர்களுடைய இருதயம் காணப்படும்.

ஒரு உவமை எப்பொழுதுமே ஒரு முக்கியமான பாடத்தைக் கொடுக்கும். அந்த முக்கியமான பாடத்தை அறிந்து கொள்ளுவதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே அந்த உவமையில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருப்பவற்றிற்கு கண் காது மூக்கு வைத்து பொருள்கள் பார்க்கக் கூடாது. வேதம் எப்போதுமே ஒரு சத்தியத்தைத்தான் விளக்கும். அதனால் உவமையில் எல்லாப் பகுதிகளுக்கும் பொருள் காண முயற்சிக்கக்கூடாது. ஒரு உதாரணத்தை மிகைப்படுத்திக் கூறக்கூடாது, உவமையில் முக்கியமான கருத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும். வழியருகேயான நிலத்தைப் பற்றி நாம் எவ்வளவோ சொல்லலாம், ஆனால் அதெல்லாம் நமக்கு அவசியமில்லை. ஆண்டவர் அதை ஒரு காரணத்துக்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அது என்ன காரணம்? ஒரு குறிப்பிட்ட வகை இருதயத்தை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அந்த வழியருகேயான பாதையைப் போல இந்த இருதயமும் கடினமாக இருக்கிறது என்பது தான் இங்கே சொல்லப்படுகிறது.

இந்த நிலத்தை கடினமான இருதயமுள்ளவனுக்கு ஆண்டவர் பயன்படுத்துகிறார். அங்கு என்ன நடக்கிறது? ஒரு விவசாயி அந்தப் பாதையான பிரதேசத்தில் விதையைத் தூவிவிடுகிறான். யாருமே வேண்டுமென்றே அப்படிச் செய்வதில்லை. அந்தக் காலத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் நடந்துபோகிறபோது பெரிய கூடை ஒன்றைத் தோளில் வைத்திருப்பான். அந்தக் கூடையில்தான் விதைகள் இருக்கும். கூடையில் இருக்கிற விதைகளை அள்ளி அப்படியே முன்னாலேயும் பின்னாலேயும் தூவிக் கொண்டு நடந்து போவான். அப்படியாக அவன் ஒருபக்கம் நடந்து போன பிறகு மறுபடியும் அங்கிருந்து வந்து மற்ற இடங்களுக்கும் நடந்து விதையைத் தூவி விடுவான். அவன் அப்படியாக தூவுகிறபோது சில விதைகள் வழியருகேயுள்ள பாதைகளிலும் விழுந்து விடுவது வழக்கம். அவ்வாறு விழுவதொன்றும் ஆச்சரியமேயில்லை. அப்படி விழுகிறபோது என்ன நடக்கிறது என்று ஆண்டவர் சொல்லுகிறார், “பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.” (மத்தேயு 13:4). ஏனெனில் எப்போதும் விவசாயி இவ்வாறு விதைகளை விதைக்கிற பொழுது பறவைகள் மேலே வந்து சுற்றிக்கொண்டிருக்கும். தனக்கு வேண்டிய உணவு கிடைக்குமென்று பார்த்துக் கொண்டிருக்கும். விதைகள் இந்தப் பாதையில் விழுந்ததைப் பார்த்த உடனே வேகமாகக் கீழே வந்து கொத்திக் கொண்டு போய்விடும்.

இந்த உதாரணம் அங்கிருந்த எல்லாருக்கும் புரிந்தது. எவ்வளவு அருமையாக ஆண்டவர் மனிதனுக்குப் புரிகிற சாதாரண உதாரணங்களைப் பயன்படுத்திப் பிரசங்கம் செய்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்! இன்றைக்கு சில பிரசங்கிகள் கொடுக்கிற உதாரணம் மனிதனுடைய மூளைக்குள் நுழைய முடியாதபடி இருக்கின்றன. உதாரணங்களைப் பயன்படுத்துகிற பொழுது அவைகள் எளிமையாக இருக்க வேண்டும், இயேசு சொல்லுகிறது போல குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி உதாரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படித்தான் ஆண்டவர் இங்கே பயன்படுத்துகிறார். பறவைகள் வந்து அந்த விதையை கொத்திக் கொண்டு போய் விடுகிறது. அதனால் விதைக்கு என்ன ஆயிற்று? அதனால் ஒரு பயனும் இல்லை. மாற்குவிலும் லூக்காவிலும் சாத்தான் வந்து அதை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் பறவைக்கும் சாத்தானுக்கும் தொடர்பு இருக்கிறது. இது எப்படிப்பட்ட ஒரு இருதயம்? இது அந்த நிலத்தைப் போல ஒரு கடினமான இருதயம். பிரசங்கத்தின் மூலமாக அந்த விதையான வார்த்தை அந்த இருதயத்தில் தூவப்படுகிறபோது, அப்படிப்பட்ட மனிதன் என்ன செய்து விடுகிறான்? அதனால் பயனடையாமல் போய்விடுகிறான். ஏன் பயனடையாமல் போய்விடுகிறான்? பறவைகள் கொத்திக் கொண்டு போவது போல சாத்தான் வந்து அதை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதற்கு காரணம் என்ன? அதற்கு காரணம் அவனுடைய இருதயத்தின் பிரச்சனையே. அது என்ன பிரச்சினை? இந்தக் கடின இருதயம் கொண்டவன் உலக எண்ணங்களை தன்னுடைய இருதயத்தில் வளர்த்துக் கொண்டுள்ளான். அது தாராளவாதமாக இருக்கலாம் அல்லது அவன் கடவுளை நம்பாத ஒரு மனிதனாக இருக்கலாம் அல்லது கடவுளே இல்லையென்று சொல்லுகிறவனாக இருக்கலாம். இப்படியாக ஆவிக்குரிய எந்த விஷயத்துக்கும் தன்னுடைய இருதயத்திலும் மனதிலும் இடம் கொடுக்காமல் இந்த உலகத்து எண்ணங்களாலும் உலகம் போதிக்கின்ற போலித்தனமான விஷயங்களாலும் தன்னுடைய மனதையும் இருதயத்தையும் வளர்த்துக் கொண்டிருப்பதால் அந்த விதை விதைக்கப்படுகிற பொழுது, சத்தியம் சொல்லப்படுகிற பொழுது இவன் அந்த சத்தியத்தை ஜாக்கிரதையாக கவனத்தோடு கேட்பதில்லை. அது ஒரு காதில் விழுந்து மற்றக் காதின் வழியாகப் போய்விடுகிறது. அவன் சத்தியத்துக்கு கொடுக்க வேண்டிய ஒரு மரியாதையோடும் பயத்தோடும் அதைக் கேட்பதில்லை. அவனுக்கு அந்த சத்தியத்திலே எந்தவிதமான பற்றோ விருப்பமோ இல்லை. அவனுடைய காதும் மனதும் இருதயமும் அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் அதை அலட்சியப்படுத்தி, அலட்சிய மனப்பான்மையோடு கேட்பதால் பிசாசு அதை எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். அதனால் அவனுக்குப் பயன் கிடைப்பதில்லை. பிசாசு அதை எடுத்துக் கொண்டு போய்விடுகிறான் என்று சொல்லுவதற்கு காரணம் இவன் அதனால் பயனடைவதற்கு எதையுமே செய்யவில்லை என்பதைத்தான் ஆண்டவர் இதன் மூலம் உணர்த்துகிறார்.

ஏன் இவ்விதம் நடக்கிறதென்று கேட்டால் கடின இருதயம் உள்ளவர்கள் அந்தக் கடினமான இருதயத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம் பாவம்தான். மனிதனைப் பிடித்திருக்கிற மூல பாவம்தான் அதற்குக் காரணம். இந்த மூல பாவத்தின் காரணமாக அவன் உலக மனிதனாக உலக விஷயங்களில் நாட்டம் காட்டி சத்தியத்திற்கும் ஆண்டவருக்கும் தேவ பக்திக்கும் எந்தவிதமான இடத்தையும் தன்னுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் கொடுக்காததால் அவனுடைய இருதயம் மிகவும் கடினப்பட்டு சத்தியத்தை மிதிக்கிறவனாக இருக்கிறான். ரோமர் முதலாவது அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். அதில் சத்தியத்தை அடக்குகிறவன் சத்தியத்தை மிதிக்கிறவனாக இருக்கிறான் என்று விளக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தில் பயனடைகிற ஒரு இருதயத்தை அவன் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்டவனுடைய வாழ்க்கையில் யார் ராஜாவாக இருப்பார்? பிசாசுதான் ராஜாவாக இருப்பான். அந்தப் பிசாசு என்ன செய்கிறான்? தன்னுடைய வழிகளை இவன் பின்பற்றுவதனாலே அவன் சத்தியத்தினால் எந்தவிதப் பயனையும் அடைய முடியாது செய்துவிடுகிறான்.

மத்தேயு 13:19
“ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.”

இவன் சத்தியத்தை உணராது இருக்கிற பொழுது என்று சொல்லுவது அவன் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிற பொழுது என்று நாம் நினைக்கக் கூடாது. சத்தியம் புரியும்படியாக ஆண்டவர் எளிமையாகத்தான் பேசியிருக்கிறார். இவன் உணராது இருக்கும்போது என்று சொன்னால் அவனுடைய இருதயம் அந்த சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதனால் பயனடையவும் முடியாத ஒரு நிலையில் இருக்கிறது. அதற்குக் காரணமென்ன? அவனைப் பிடித்திருக்கிற மூல பாவமே. அந்த மூல பாவத்தினால் இவன் உலக விஷயங்களில் நாட்டம் காட்டி அந்த விஷயங்கள் அவனுடைய மனத்தை ஆளுவதினால் அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலையில் அந்த இருதயம் இல்லாமல் இருக்கிறது. அதுதான் அந்த இருதயத்தின் பிரச்சினை.

இதுபோன்று எத்தனையோ மனிதரை நாம் பார்க்கிறோம். சபைக்கு வந்து சத்தியத்தைக் கேட்பவர்கள் இருப்பார்கள். இருந்தபோதும் கூட அவர்களுடைய இருதயம் அந்த சத்தியத்தைப் பெற்று பயனடையக் கூடிய பக்குவமில்லாத நிலையில் இருக்கிறது. அந்த இருதயம் வழியருகே உள்ள நிலத்தைப் போலக் கடினப்பட்டுப் போயிருக்கிறது. சத்தியத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலையில் இல்லை. சத்தியத்தை கேட்கின்ற ஆர்வம் அதிலில்லை. ஒரு அக்கறை அதிலில்லை. கர்த்தரைப் பற்றிய ஒரு பயமில்லை. தன்னுடைய இருதயத்தை ஆளுகிற பாவத்தை அறிந்துகொள்ளும் உணர்வுகள் அந்த இருதயத்தில் இல்லை. அதனால்தான் கடின நிலத்தை ஆண்டவர் உவமையில் பயன்படுத்துகிறார். ஆண்டவரை அறிந்து கொண்டிருக்கிற விசுவாசிக்கிற நாம் இப்படிப்பட்ட இருதயத்தோடுதான் ஒரு காலத்தில் இருந்திருக்கிறோம். ஒரு காலத்தில் எனக்கு கிறிஸ்துவையும் கிறிஸ்தவ மதத்தையும் பிடிக்காமலேயே இருந்தது. உலகத்திலேயே மோசமான ஒரு மதம் கிறிஸ்தவம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். கடின இருதயம் எனக்கும் இருந்திருக்கிறது. இந்த சத்தியத்தை வெறுத்து இயேசுவின் மீது ஒரு மரியாதை காட்டாத ஒரு பயமில்லாத இருதயமாகத்தான் இருந்தது. நாமெல்லாருமே சத்தியத்தை ஒதுக்கிவைத்து வாழ்ந்த ஒரு காலத்தை நினைவுகூர முடியும். கடின இருதயங்களால் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதுதான் உணராதிருக்கும்போது என்பதற்கு அர்த்தம். சத்தியம் புரியாமல் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிற இருதயமும் இல்லை. சத்தியத்தை எதிர்க்கின்ற இருதயம்தான் கடின இருதயம். ஏனென்றால் விதை அங்கு விழுந்தால் வேர் விட்டு அது வளர முடியாது. பிசாசு ஆளுகிற ஒரு இருதயத்தில் சத்தியத்திற்கு எங்கு இடமிருக்க முடியும்? இதைத்தான் ஆண்டவர் இங்கு விளக்குகிறார்.

இப்படிப்பட்ட கடின இருதயத்தைக் கொண்டவர்களை வேதத்தில் நாம் அடையாளம் காணமுடியும். பவுல் சொல்லுகிறார்,

“எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:3, 4)

எபேசியர் இரண்டாம் அதிகாரத்திலும் இதைச் சொல்லுகிறார். உலகத்து விஷயங்களாலே ஆளப்படுகின்ற மனிதனுடைய இருதயம் சத்தியத்துக்கு இடம் கொடுக்காது. அப்படிப்பட்ட நிலையில் தான் பொதுவாக மனித குலமே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இருதயங்களில் ஒளி வீசுவதற்காகத்தான் சுவிசேஷமாகிய சத்திய ஒளி ஆண்டவரினாலே மனிதனுக்குக் கொடுக்கப்படுகிறது. வேதத்தில் ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலை அதிகமாக துன்பப்படுத்திய எகிப்து ராஜாவைப் பார்க்கிறோம். பார்வோனாகிய அவனைப்பற்றி வேதத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான் என்று யாத்திராகமம் 8:15, 19, 32 வசனங்கள் சொல்லுகின்றன.

யாத்திராகமம் 8:15, 19, 32

15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

ஆண்டவர் மோசேயை அனுப்பி தன் செய்தியைக் கொடுத்தார். எவ்வளவோ அற்புதங்களை அவன் கண் முன்னாலேயே பார்க்கும்படிச் செய்து காட்டினார். மோசேயின் மூலமாக பார்வோனுக்கு ஆண்டவருடைய வசனத்தை கேட்கின்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதும், அவன் அநேக தடவை ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டபொழுதும் அவன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஏனென்றால் அவன் இருதயம் பிசாசினால் ஆளப்பட்டு உலகத்தின் இச்சைகளையும் உலகத்தின் சிந்தனைகளையும் பின்பற்றி வந்ததால் அவனால் கர்த்தருடைய வார்த்தையின் மூலம் பலனடைய முடியவில்லை.

புதிய ஏற்பாட்டில் இன்னொரு உதாரணத்தையும் பார்க்கிறோம். அவன் ஏரோது; யோவான்ஸ்நானனை கொலை செய்தவன். தன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு முறைகேடாக வாழ்ந்து கொண்டிருந்தவன். அவன் செய்த அந்தப் பாவமான செயலை யோவான் ஸ்நானன் அடிக்கடி அவனுக்குச் சுட்டிக்காட்டி மனந்திரும்ப வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். அதற்கு அவன் என்ன செய்தான்? அவன் கோபத்தில் தன்னோடு வாழ்ந்து கொண்டிருந்தவளுடைய பேச்சைக் கேட்டு யோவான்ஸ்நானனை சிறையில் அடைத்தான். சிறையில் அடைத்த பொழுதும் யோவானின் செய்திகளில் விஷயம் இருக்கிறது என்று அவன் தெரிந்து ஒவ்வொரு இரவும் வந்து யோவானிடம் இயேசுவைப்பற்றிச் சொல்லும்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. யோவான்ஸ்நானன் சொல்லுகின்ற செய்தியில் அவனுக்கு ஓரளவுக்கு அக்கறை இருந்தது, அதைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான், தொடர்ந்து ஒவ்வொரு இரவும் வந்து கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? இருதயம் கடினப்பட்டு பிசாசினால் ஆளப்பட்டு, அந்த இருதயத்தில் அந்த சத்திய விதை பலன் கொடுக்கவில்லை. தான் மனைவியாக்கிக் கொண்டவளுடைய பேச்சைக் கேட்டு, அவன் இறுதியில் யோவான்ஸ்நானனின் தலையை வெட்டிக் கொண்டு வரும்படிச் செய்தான். அவனைக் கொலை செய்து கடைசிவரைக்கும் தன் இருதயம் மாறவே இல்லை என்பதைக் காட்டினான். அந்த இருதயம் வழியருகேயான நிலத்தைப் போல மிகவும் கடினப்பட்டுப் போய் பிசாசால் ஆளப்பட்டது. அந்த இருதயத்திலே சத்திய பயம் இருக்கவில்லை. ஏரோதுவுக்குத் தான் செய்த பாவம் பற்றிய ஒரு பயம் இருந்தது, ஆனால் அந்த பாவத்திலிருந்து திருந்துகிற இருதயம் இருக்கவில்லை. குற்ற உணர்ச்சி மட்டுமே ஒருவனுக்கு இரட்சிப்பைக் கொடுக்காது. குற்ற உணர்ச்சி மனம் திரும்புதலில் போய் முடியாதவரையும் அதனால் எந்தப் பயனுமில்லை. சில பேர் குற்ற உணர்ச்சி வந்தால் அது போகும்படியாக நன்றாக மதுவைக் குடித்துவிட்டு தூங்கி எழும்புவார்கள். ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி மனந்திரும்புதலில் போய் முடியவில்லை என்றால் அதால் எந்தப் பிரயோஜனமுமில்லை.

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். இஸ்ரவேலை கவனித்துக்கொண்டிருந்த ரோமப் படைகளுக்குத் தளபதியாக இருந்தவன் பிலாத்து. இந்த பிலாத்துவுக்கும் கூட பலமுறை இயேசுவை சந்திப்பதற்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அவனால் இயேசுவோடு சிலதடவை சம்பாஷனை செய்ய முடிந்தது. அவன் இயேசுவைப் பார்த்து சத்தியம் எது என்று கேட்டான். இயேசு அதற்கு பதில் சொல்லவில்லை. எல்லா ஜனங்களும் சொல்லுவதைப் போல இஸ்ரவேலருக்கு நீ ராஜாவா என்று கேட்டிருக்கிறான். இயேசு அவனுக்கு பதிலும் சொல்லியிருக்கிறார், சில விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார். ஆகவே தேவ ராஜ்ஜியத்திற்குரிய செய்தியை பலதடவை கேட்க கூடிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது. பிலாத்து மிகவும் மோசமானவன். அப்போஸ்தல விசுவாச அறிக்கையில் இவனைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவைத் துன்புறுத்திய பிலாத்து என்று அது குறிப்பிடுகிறது. இயேசு இந்த உலகத்தில் கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான ஒருவனாக அது அவனைக் காட்டுகிறது. ஏனெனில் இவன் அனுமதி கொடுக்காமல் அது நடக்கவில்லை என்பதே உண்மை. சத்தியத்தைக் கேட்கின்ற வாய்ப்பு அவனுக்குக் கிடைத்த பொழுதும் அவனுடைய மனைவி கூட இயேசுவைப் பற்றி எச்சரிக்கை செய்திருந்தபோதும் அவன் கடைசிவரை அவருடைய மரணத்திற்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று கை கழுவுவதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி இந்த மனுஷனை ஒன்றும் செய்யாதே, அவர் ஒரு நீதிமான் போலத் தெரிகிறது, என்னுடைய கனவில் வந்து பலவிதமான பயத்தை இந்த மனிதர் ஏற்படுத்துகிறார், ஆகவே நீ கவனத்தோடு இரு என்று தன் புருஷனுக்கு ஆலோசனை சொன்னாள். ஆனால் அவன் எதற்கும் செவி கொடுக்கவில்லை.

யூதர்கள் பிலாத்துவிடம் சொன்னார்கள்: நீ இந்த மனுஷனை கொலை செய்யவில்லை என்றால் ரோமர்களோடு உனக்கு பிரச்சனை வரும். ஏனெனில் இவர் இஸ்ரவேலுக்கு ராஜா என்று சொல்லுகிறார். அது உண்மையானால் ரோம பேரரசர் இஸ்ரவேலுக்கு ராஜா இல்லை என்றாகிவிடும். அப்பொழுது பிலாத்துவிற்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அதினால் அவன் பேரரசரோடு தனக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். பிலாத்து சுயநலம் பிடித்தவன். அவனுக்கு சுவிசேஷத்தின் மேலோ இயேசுவின் மேலோ எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. குற்ற உணர்வு ஏற்பட்ட பொழுதும் அவன் இறுதியில் அந்த யூதர்கள் கேட்டுக் கொண்டபடியே அனுமதி கொடுத்து ஆண்டவரைத் துன்புறுத்தி அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தான் என்று வேதம் சொல்லுகிறது. பிலாத்துவுக்கும் கூட சத்தியம் அவன் காதுக்குப் போய்ச் சேரும் வசதிகள் கிடைத்த பொழுதும், இயேசுவை நேரடியாகச் சந்தித்திருந்த பொழுதும், அவருடைய வார்த்தைகளைக் கேட்டிருந்தபொழுதும் அவனால் மனந்திரும்ப முடியவில்லை. அவன் இருதயம் வழியருகேயான கடின இருதயமாகத்தான் இருந்தது. இதுபோன்ற இருதயத்தை கொண்டிருப்பவர்களுக்கு வசனத்தினால் பயன் ஏற்படாது. அதனால்தான் தேவனுடைய வசனத்தைக் கேட்கிறபோது அலட்சிய மனப்பான்மையோடு இருந்தாலோ, கவனக்குறைவாகக் கேட்டாலோ, மற்றவர்கள் ஏதாவது சொல்லுவார்கள் என்று நினைத்தாலோ அதனால் நமக்கு எந்தவிதமான பயனுமில்லை.

நம் இருதயம் வசனத்தைக் கேட்பதற்காகத் தயார் செய்யப்பட வேண்டும். எப்போதும் பிரசங்கம் கேட்பதற்கு முன் ஜெபம் பண்ண வேண்டும்.

“ஆண்டவரே இந்தப் பிரசங்கத்தினாலே என்னுடைய இருதயம் பாதிக்கும்படியாக, இருதயம் பலனடையும்படியாக உம்முடைய ஆவியின் மூலமாக எனக்கு உதவிசெய்யும். நான் கேட்கப் போவது சத்தியம், சத்தியத்தை நான் அரைகுறையாகக் கேட்டுவிடக்கூடாது, அதில் எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை பேசுபவருக்கும் உதவி செய்யும் ஆண்டவரே, அதேபோல அதைப் பெற்றுக்கொள்ளப் போகிற எனக்கும் உதவிசெய்யும் ஆண்டவரே” என்று ஜெபம் பண்ண கூடிய ஒரு விஷயம் சத்திய பிரசங்கத்தைக் கேட்கும் போது காணப்பட வேண்டும்.

நம் இருதயம் அதற்காகப் பக்குவப்படுத்தி தயார் செய்யப்பட வேண்டும். கடின இருதயம் கொண்டவர்கள் வசனத்தையும் ஆண்டவரையும் அலட்சியப்படுத்தி உலக இச்சைகளாலும் உலகப் போதனைகளாலும் நிறைந்து சத்தியத்திற்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் சத்தியத்தினால் ஒருநாளும் பயனடைய முடியாது. உங்களுக்கு எப்படிப்பட்ட இருதயம் இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீங்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

மோட்சப் பிரயாணத்தை எழுதிய ஒரு பெரிய பியூரிட்டன் பெரியவரும், பாப்திஸ்து பிரசங்கியுமான ஜோன் பனியனை அருமையான நூல்களையெல்லாம் ஆண்டவர் எழுத வைத்திருக்கிறார். இந்த ஜோன் பனியன் ஆண்டவரை விசுவாசித்து கிறிஸ்தவரானார். அவர் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றி அருமையாக மோட்சப் பிரயாணத்தில் எழுதி இருக்கிறார். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பனியன் ஆண்டவரிடம் வருவதற்கு முன்பு 30 வருஷங்களுக்கு இங்கிலாந்தில் பேட்ஃபேடு (Bradford) என்ற இடத்தில் மிகக் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இயேசுவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்திற்கும் தன்னுடைய இருதயத்தில் எந்தவிதமான இடத்தையும் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த அந்தக் கிராமத்திலேயே மிகவும் மோசமான தேவ பக்தியில்லாத மனுஷனாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு கடின இருதயத்தைக் கொண்டிருந்தவராக ஜோன் பனியன் இருந்திருக்கிறார். அவர் தன்னைப் பற்றி ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார், “ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தையைக் கேட்டால் அவன் இரட்சிப்பு அடைந்து விடுவான் என்பது பிசாசுவுக்கும் கூட தெரிந்திருக்கிறது” என்று. இயேசுவின் வார்த்தையை ஜோன் பனியன் விசுவாசித்து இரட்சிப்பை அடைந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை முப்பது வருடங்களுக்கு மோசமாக இருந்தது. ஆண்டவரை நிந்தனை செய்கிற, கடின இருதயத்தோடு இருக்கின்ற மனிதனை உடைக்கக் கூடியவர் ஆண்டவர் மட்டுமே.

கடின இருதயங்களை ஆண்டவரால் உடைக்க முடியாது என்று நினைத்துவிடாதீர்கள். கடின இருதயங்களை உடைக்கிறவர் அவர்தான். அவரால் மட்டும்தான் அது முடியும். ஆனால் கடின இருதயத்தோடு நாம் இருந்துவிடக்கூடாது. கடின இருதயம் கொண்டவர்களுக்காக நாம் ஜெபம் பண்ண வேண்டும். நம்முடைய இருதயம் கடினப்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு நம்முடைய கையில் இருக்கிறது. விசுவாசிகளும் கூட தங்களுடைய இருதயத்தை ஒருசில காரியங்களில் கடினப்படுத்திக்கொள்ள முடியும். வேதம் தங்கள் குற்றத்தை உணர்த்தும் என்பதற்காக அதைத் தள்ளி வைக்கப் பார்ப்பார்கள். பிரசங்கிகள் இதயத்தைப் பாதிக்கக்கூடிய பிரசங்கங்களைக் கொடுத்தால் அதை விரும்பாமல், தங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய பிரசங்கங்களைத் தாருங்கள் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. இருதயத்தை தாக்கிப் பிளக்கக்கூடிய பிரசங்கங்களை நாம் கேட்க வேண்டும். பாவத்தை உணர்த்துகிற பிரசங்கத்தைக் நாம் கேட்க வேண்டும். அதன் மூலமாகதான் நமக்கு ஜீவன் கிடைக்க முடியும். கடின இருதயம் நமக்கு உதவி செய்யாது. ஆகவே நம்முடைய இருதயத்தை நாம் ஆராய வேண்டும். மனுஷன் பொறுப்புள்ளவனாக இருக்கும்படி ஆண்டவர் அவனைப் படைத்திருக்கிறார். அவருக்குப் பதில் சொல்லக் கூடிய ஒரு நிலையில் நம்மை ஆண்டவர் படைத்திருக்கிறார். ஆகவே நம்முடைய இருதயத்தை நாம் தேவனுடைய வார்த்தைக்கு எதிராகக் கடினப்படுத்திக் கொள்ளக்கூடாது. சத்தியமாகிய விதையை ஒவ்வொரு தடவை கேட்கிற பொழுதும் இருதயத்திலிருந்து பலன் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் நாம் சத்தியத்தைக் கேட்கவேண்டும். முக்கியமாக சுவிசேஷத்தை அந்த விதத்தில்தான் கேட்கவேண்டும்.

சுவிசேஷத்தை அறியாதவர்கள் இருந்தால் நீங்கள் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்காதீர்கள். உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதிருங்கள். பொல்லாதவனாகிய சாத்தான் உங்களை அழிப்பதற்குதான் முயற்சி செய்கிறான். அதிலிருந்து விடுதலை கொடுக்கக்கூடிய இயேசுவினுடைய வசனத்தைக் கேட்டு, அதை விருப்பத்தோடு ஏற்று, பாவத்திலிருந்து மனந்திரும்பி, தேவனாகிய இயேசு மட்டுமே அளிக்கக்கூடிய பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் இரண்டு கரத்தையும் நீட்டி வாங்கிக் கொள்ளக் கூடிய இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகளும் கூட வசனத்தை பதப்படுத்தப்பட்ட இருதயத்தோடு ஜெபத்தோடு எப்பொழுதும் கேட்டு வாங்கவேண்டும். அப்போதுதான் அதன் மூலமாக நமக்கு பலன் இருக்கிறது. இதற்காகத்தான் ஆண்டவர் இந்த உவமையைப் பயன்படுத்தியிருக்கிறார். தேவனுடைய வார்த்தைக்கும் நம்முடைய இருதயத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. எப்பொழுது நாம் விருப்பத்தோடும் தேவ பயத்தோடும் அந்த வசனத்தைக் கேட்கிறோமோ அப்பொழுது அதனால் நிச்சயமாக பயனடைவோம்.

உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது? அது கடினப்பட்டு இருக்கிற இருதயமா? அல்லது இளகிப் போய் ஆண்டவருடைய வசனத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிற இருதயமா? அதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளகிப் போயிருக்கிற இருதயம் நிச்சயமாகச் சத்திய விதையினால் பயனடைய கூடியதாக இருக்கும். உலக இச்சைகளினாலே கடினப்பட்டு போயிருக்கிற இருதயம் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. ஆண்டவர் உங்களை வசனத்தின் மூலமாக ஆசீர்வதிக்கட்டும். வசனம் மட்டும் தான் நமக்கு ஜீவனைக் கொடுக்கும். அந்த வசனத்திற்கு நாம் எதிர்த்து நிற்கக் கூடாது. தேவன் உங்களோடு கூட இந்த வசனத்தின் மூலமாக பேசட்டும்.

மறுமொழி தருக