புத்தகக் கண்காட்சியும், அறியப்படாத கிறிஸ்தவமும்

சமீபத்தில் நவம்பர் மாதத்தில் தமிழகம் சென்றபோது சேலத்தில் கண்களில் பட்டது அங்கு நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சி. உடனே வாகன ஓட்டியை நிறுத்தும்படிச் சொல்லி அதற்குள் நுழைந்தேன். அன்றைய தினம் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கண்காட்சிக்கு வந்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் அதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போல் தெரிந்தது. மாணவர்களுக்கு இந்தவகையில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது மிகவும் நல்ல காரியம். நான் படித்த ஆரம்ப காலங்களில் என் ஆசிரியர்கள் புத்தகங்களில் நான் நாட்டம் காட்டுவதைக் கவனித்து என்னை ஊக்குவித்திருக்கிறார்கள். அன்று இத்தகைய புத்தகக் கண்காட்சி ஒன்றையும் நான் கண்டதும் இல்லை; உள்ளே நுழைந்ததும் இல்லை. இக்காலத்து மாணவர்களுக்கு வசதி அதிகம்தான். இருந்தும் அவர்கள் வாசிக்க வேண்டுமே!

நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் கடைகளில் தங்கள் நூல்களை அந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அங்கு அதிக நேரம் செலவிட வசதியில்லாமல் இருந்ததால் தேடிப்பிடித்து இரண்டு பதிப்பாளர்களின் கடைகளில் வைக்கப்பட்டிருந்த நூல்களை நோட்டம் விட்டேன். அவை காலச்சுவடு மற்றும் கிழக்குப் பதிப்பகக் கடைகள்.

காலச்சுவடு பதிப்பகம் சுந்தர ராமசாமி ஆரம்பித்தது. இப்போது அவருடைய மகன் கண்ணன் (எஸ். ஆர். சுந்தரம்) அதன் ஆசிரியர். நல்ல பல இலக்கியங்களைக் கடையில் கண்டேன். மறைந்த ஜெயகாந்தனின் நூல்களில் சிலவற்றை அவர்கள் வெளியிடும் அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள். நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்ததைப் போல அல்லாமல் இன்று நூல்கள் மிகத்தரமான மெப்லித்தோ பேப்பரில், தெளிவான அச்சில், கண்ணைக் கவரும் அட்டைகளோடு வெளிவருகின்றன. அது மாபெரும் முன்னேற்றம். சுந்தர ராமசாமி. அசோகமித்திரன், ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ஜானகிராமன், லா. ச. ராமாமிர்தம் போன்ற பழம் பெரும் எழுத்தாளர்களின் நூல்கள் புதிய எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில் ஒளி வீசின. சில வருடங்களுக்கு முன் எதிராளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு இன்று மறுவாழ்வெடுத்திருக்கும் பெருமாள் முருகனின் நூல்களின் தொகுப்புகள் கண்களைக் கவரும் அட்டைகளோடு அருமையாக அச்சிடப்பட்டு விற்பனைக்கிருந்தன. வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் இன்று எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி தமிழில் நூல்கள் பெருகிக் காணப்படுகின்றன. இலக்கிய நூல்களைத்தான் சொல்லுகிறேன். அருமையான இலக்கிய நூல்கள் இருக்குமளவுக்கு தரமான ஆய்வு நூல்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனை நாட்களுக்குத்தான் வில்லியம் கேரியின் மொழிப்பாண்டித்தியத்தையும், சார்ள்ஸ் ரேனியஸின் தமிழ்ப் பாண்டித்தியத்தையும் பேசிப்பேசி உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருப்பது? அவர்களிடம் காணப்பட்ட உழைப்பில் ஒரு அவுன்ஸாவது நம்மிடம் இருக்கிறதா? வேற்றுமொழியை அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டுக் கற்று நம்மினத்தவர்கள் மத்தியில் உழைத்திருக்கிறார்கள்; உயர்தர எழுத்துக்களைப் படைத்து ஆத்துமாக்களுக்குப் பணிசெய்திருக்கிறார்கள். அதேபோல மோட்சப் பயணத்தைப் மொழிபெயர்த்த சாமுவேல் ஐயரும் தமிழில் பாண்டித்தியம் பெற்று உதகமண்டலப் பகுதியில் கிறிஸ்தவப் பணியாற்றியிருக்கிறார். தற்காலத்துத் தமிழ் ஊழியர்களுக்குத் தரமான தமிழறிவில்லை என்பது பொறுத்துக்கொள்ள முடியாததொரு பலவீனம்.

அடுத்ததாக நான் நுழைந்த கடை கிழக்குப் பதிப்பகம். இது மார்க்ஸீய சமூகப் பார்வை கொண்ட பதிப்பகம். ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு எழுதிய “உடையும் இந்தியா” நூலையும் இதுவே வெளியிட்டது. கடையில் இருந்தவர் என்னைப்பற்றிய விபரங்களைக் கேட்டார். நான் எழுதி வெளியிட்ட “தோமா கிறிஸ்தவம்” நூலைப் பற்றிச் சொன்னேன். அதை நமது வலைத்தளத்தில் கவனித்து அருமையாகச் செய்திருக்கிறீர்கள் என்று அட்டைப்படத்தைப் பாராட்டினார். அதோடு, உங்களுடைய நூல்களையும் நாங்கள் வெளியிட அனுமதி தாருங்கள் என்று கேட்டார். என் நூல்கள் கிறிஸ்தவ நூல்கள், உங்களுடைய வாசகர்களுக்கு அவை பொருந்தி வராதே என்று மெல்லிய சிரிப்போடு பதிலளித்தேன்.

நேரமிருந்திருந்தால் இன்னும் பல பதிப்பாளர்களின் கடைகளை நோட்டம் விட்டிருக்கலாம். நூல்களுக்கு மத்தியில் நடமாடுவது ஒரு சுகமான அனுபவம். நூற்றுக்கணக்கான புத்தகக்கடைகளில் ஏதாவது கிறிஸ்தவ நூல்களை விற்கும் கடைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. இருந்திருந்தாலும் அவற்றில் தரமான நூல்கள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. வாசிப்பு பொதுவாகவே அருகிக் காணப்படும் இக்காலத்தில் இத்தகைய புத்தகச் சந்தைகளை விடாமல் நடத்தி வருகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். நிச்சயம் வாசிக்கிறவர்கள் இல்லாமல் இல்லை; அவர்கள் பெருந்தொகையில் இல்லாமல் இருப்பதே கவலை. வாசிப்பையும், எழுத்தையும் அடிப்படையாகக் கொண்ட கல்வித்தரம் அமையாதவரை வாசிக்கிறவர்கள் அதிகரிக்க முடியாது. காலம் போகப்போகத் தமிழ் மொழிக்கு என்ன நிகழப்போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

கிழக்குப் பதிப்பகத்தில் கண் முன்னாலேயே “அறியப்படாத கிறிஸ்தவம்” எனும் நூலிருந்தது. கையிலெடுத்துப் புரட்டிப் பார்த்தபின் நூலின் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். அதை நிவேதிதா லூயிஸ் என்பவர் அதை எழுதியிருந்தார். மிகவும் ஆய்வு செய்து எழுதப்பட்ட, ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய பாகங்கள் அவை. தமிழ் கிறிஸ்தவத்தைப் பற்றியது இந்நூல் என்று ஆசிரியர் அறிவித்திருந்தாலும், நூல் கிறிஸ்தவ வரலாற்றை விளக்கவில்லை; தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்திருக்கும் பழம் கிறிஸ்தவர்களைப் பற்றியும், சமூக நிலைமைகளையும் மட்டுமே இது விளக்குகிறது. சாதாரண மக்கள் அறிந்திராத அநேக பழம் கிறிஸ்தவர்களைப் பற்றிய விபரங்களை நூல் தொகுத்தளிக்கிறது. குளோரிந்தா, வேதநாயக சாஸ்திரிகள், வேதமாணிக்கம் போன்ற சீர்திருத்த கிறிஸ்தவர்களைப் பற்றிய சில விபரங்களை இந்நூலில் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நூல் கிறிஸ்தவத்தைப் பற்றியதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஏனெனில், இது கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகக் கணித்து, அதைக் கிறிஸ்தவத்தோடு இணைத்து இரண்டும் ஒன்றே என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது வரலாற்றுக்கும், கிறிஸ்தவ இறையியலுக்கும் முரணானதொரு பார்வை. ஆகவே, இது வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் துல்லியமாக எழுதப்பட்ட நூல் அல்ல. இதை இரண்டாவது பாகத்தின் இறுதி அதிகாரமான “உலகக் கிறிஸ்தவம் – ஒரு பார்வை” என்பதில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். அவ்வதிகாரத்தில் உண்மைக்கு மாறான வரலாற்று விபரங்களை ஆசிரியர் தந்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தைத் தாய்ச் சபை என்றும், அதிலிருந்து பிரிந்து போனதே சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்றும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். இது கத்தோலிக்க மதக் கண்ணோட்டம்; திருச்சபை வரலாறு கூறும் உண்மையல்ல. அதைத் தன் வார்த்தைகளால் பிரதிபலித்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். இறையாண்மையுள்ள கர்த்தர் மார்டின் லூத்தர் மூலமாக ஆரம்பித்து வைத்த திருச்சபை சீர்திருத்தம் வேதபூர்வமான திருச்சபையை இந்த உலகத்தில் உருவாக்குவதற்காகவே. அதனால்தான் கத்தோலிக்க குருவாக இருந்த லூத்தரை அவருடைய பாவத்தில் இருந்து இரட்சித்து கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போராடச் செய்தார் கர்த்தர். வேதத்தை எவரும் வாசிக்கவோ, சுவிசேஷத்தை எவரும் அறிந்துகொள்ளவோ முடியாதபடி செய்திருந்த கத்தோலிக்க மதத்துக்கு சாவுமணி அடிக்க எழுந்த எழுப்புதலே திருச்சபை சீர்திருத்தம். தன்னைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகக் காட்டிக்கொள்ள, வேதத்தின் அதிகாரத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் கத்தோலிக்க மதத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

இதே அதிகாரத்தில் கி. மு. 325ல் கூடப்பட்ட நைசீன் கவுன்சில் கூட்டமோ அல்லது கி. மு. 381ல் கூட்டப்பட்ட கொன்ஸ்டாட்டிநோபிள் கூட்டமோ ஏன் கூட்டப்பட்டது என்பதுகூட ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவற்றைக் கத்தோலிக்க மதத்திற்கு சார்பான கவுன்சில் கூட்டங்களாக விளக்கி கத்தோலிக்க மதம் தொடர்ந்து நைசீன் கூட்ட அறிக்கையையே பின்பற்றி வருகிறது என்று கூறியிருக்கிறார். இது முழுப்பூசனிக்காயை சோற்றில் திணித்து மறைக்கப்பார்க்கும் செயலாகும். எப்படியெல்லாம் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ வரலாற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். (நான் எழுதி வெளியிட்டிருக்கும் கிறிஸ்தவ வரலாற்றின் இரண்டு பாகங்களையும் வாங்கி வாசியுங்கள். உண்மையென்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.)

நூலாசிரியர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பெண்ணியக் கோட்பாட்டைப் பின்பற்றும் சமூக ஆர்வலர் (https://wikitia.com/wiki/Nivedita_Louis). கத்தோலிக்க மதத்தைப் பற்றி எழுதவே அவர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறார். அவருடைய நண்பி ரோடாவின் வற்புறுத்துதலால் கிறிஸ்தவ பிரிவுகளைப் பற்றியும் எழுத முடிவு செய்திருக்கிறார். நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம இடமளித்து விளக்கப்பட்டிருக்கிறது; இருப்பினும் கத்தோலிக்க வாடை அதிகம். நூலுக்கு முன்னுரை, அணிந்துரை கொடுத்திருப்பவர்களின் கருத்துக்களைக் கவனிக்கும்போது கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாக இணைத்துப் பார்க்கும் அவர்களுடைய, அடிப்படையிலேயே தவறான கண்ணோட்டத்தைக் கவனிக்க முடிந்தது. அதனால் கிறிஸ்தவர்கள் இந்நூலைக் கவனத்தோடு வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த முறையில் கத்தோலிக்கத்தை கிறிஸ்தவமாகக் கணிக்கின்ற தவறான போக்கு இந்திய தேசக் கிறிஸ்தவர்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் வழக்கம். கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியல்ல; அது கிறிஸ்தவ வேதத்திற்கு முற்றிலும் புறம்பானதொரு போலி மதம்.

சீர்திருத்த கிறிஸ்தவ அருட்பணியாளரான ரேனியஸ் கத்தோலிக்கர்கள் மனம் திருந்தி கிறிஸ்துவைத் தழுவிக்கொண்டபோது அவர்களுக்கு ஞானஸ்நானமளித்து சபையில் அங்கத்துவம் கொடுத்தார். இதை நிவேதிதா அறிந்திருக்கிறார் (276). நெடுவிளையில் மிக்கேல் எனும் ரோமன் கத்தோலிக்கர் கிறிஸ்துவை விசுவாசித்தாலேயே அவருக்கு ரேனியஸ் ஞானஸ்நானமளித்தார். மிக்கேல் பின்பு ரேனியஸின் இறையியல் கல்லூரியில் கற்று நெடுவிளையில் 40 வருடங்களுக்கு கிறிஸ்தவ பணி செய்திருக்கிறார். மிக்கேலின் இச்செயலை ஒரு கிறிஸ்தவ பிரிவை விட்டு விலகி இன்னொன்றில் இணைந்ததாகக் கருதுவது அடிப்படையிலேயே தவறு. அப்படியிருந்திருந்தால் ரேனியஸ் மிக்கேலுக்கு ஏன் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்? மறுபிறப்படைந்து மனமாற்றத்தை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே சீர்திருத்த கிறிஸ்தவம் ஞானஸ்நானம் கொடுக்கும். கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை மிக்கேல் வெறும் கத்தோலிக்கர் மட்டுமே; அவருக்கு கிறிஸ்தவ விசுவாசமாகிய ஆத்மீக அனுபவம் இருக்கவில்லை. ரேனியஸ் பிரசங்கித்த சுவிசேஷம் அவரில் மனமாற்றத்தை ஏற்படுத்தி கிறிஸ்துவை மட்டுமே இரட்சிப்பிற்காக விசுவாசிக்கும்படிச் செய்தது. அத்தகைய இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கத்தோலிக்க மதத்தில் எப்போதுமே இடமிருக்கவில்லை; இன்றுமில்லை. வெறும் கிரியைகளை மட்டுமே வற்புறுத்திய பரிசேயர்களின் யூத மதத்தைப் போன்றதே கத்தோலிக்க மதம். அதில் சுவிசேஷத்திற்கோ, இரட்சிப்பிற்கோ இடமில்லை.

முதல் தொகுதியில் நூலின் ஒரு அதிகாரத்தில் ஆங்கிலேய மிஷனரி கால்டுவெல்லைத் “திராவிட அரக்கன்” என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததால் அதை முதலில் வாசித்தேன். உண்மையில் தலைப்புக்கும் அவ்வதிகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கால்டுவெல்லைப் பற்றிய விபரங்களைத் தவறுகளில்லாமலேயே நிவேதிதா எழுதியிருந்தார். கால்டுவெல்லைத் திராவிட அரக்கனாகச் சித்தரிக்கிறவர்கள் இந்துத்துவா கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களே. ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் இதற்கு நல்ல உதாரணங்கள். இந்த அதிகாரத்துக்கு சம்பந்தமேயில்லாமல் திராவிட அரக்கன் கால்டுவெல் என்ற தலைப்பைத் தந்திருப்பது அநாவசியம் மட்டுமல்ல ஆசிரியரின் நோக்கத்தையும் சந்தேகிக்க வைக்கிறது. கால்டுவெல் ஆங்கிலேய திருச்சபையைச் சார்ந்த சீர்திருத்த கிறிஸ்தவராக இருந்ததால் அவரை இவ்வாறு அழைப்பது நிவேதிதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவில்லை. அவர் கத்தோலிக்கராக இருந்திருந்தால் இதை அவர் செய்திருக்க மாட்டார்.

எனக்கு ஆச்சரியம் தரும்வகையில் மெய்ஞானபுரம் என்ற நெல்லைப் பகுதியின் ஊரைப் பற்றி விளக்கமளிக்கும் அதிகாரத்தில், 274-276 வரை, நெல்லையின் அப்போஸ்தலன் என்றழைக்கப்படும் சார்ள்ஸ் ரேனியஸைப் பற்றிய விபரங்களை நிவேதிதா தந்திருந்தார். ஊருக்கு அந்தப் பெயரைத் தந்தவரே ரேனியஸ்தான். நூலில் ரேனியஸைப் பற்றித் தரப்பட்டிருந்த விபரங்களில் பெரிய வரலாற்றுத் தவறுகள் எதுவும் காணப்படவில்லை; ஒருசில விஷயங்கள் மட்டுமே உண்மைக்கு மாறானவை. ஓரிடத்தில் (276) ரேனியஸுக்கும் சபைக்கும் 1831ல் மோதலேற்பட்டு அவர் சபையைவிட்டு வெளியேறி வடதமிழகம் சென்றதாக நிவேதிதா குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சீ.எம்.எஸ். மிஷனரி நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டது; அவரமைத்திருந்த திருச்சபைகளோடு அல்ல.

ரேனியஸின் ஊழிய மகிமை பற்றி நிவேதிதாவுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு மகத்தான இறைபணியாளருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூலில் கிடைத்திருப்பது மூன்றே பக்கங்கள். ரொபட் கால்டுவெல் இடையான்குடி எனும் அடைக்கலப்பட்டணத்தை அமைத்ததற்குக் கொடுத்திருக்கும் பக்கங்களைக் கவனிக்கும்போது ரேனியஸின் பணிகள் பற்றி நூலாசிரியருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் அறிய முடிகிறது. அத்தகைய அடைக்கலப்பட்டணங்களை நெல்லை முழுவதும் ஆரம்பித்து வைத்தவரே சார்ள்ஸ் ரேனியஸ்தான். அதுவும் டோனாவூர் உட்பட இருநூறுக்கு மேற்பட்ட அடைக்கலப்பட்டணங்களை அவர் நிறுவியிருந்தார். கால்டுவெல்லைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல்களோடு ஒப்பிடும்போது ரேனியஸைப் பற்றிய நூல்கள் மிக மிகக் குறைவு; அதுவும் ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்து ரேனியஸின் மகன் வெளியிட்ட அவருடைய நாட்குறிப்பு மட்டுமே. தமிழுக்குச் செய்திருக்கும் பணியளவுக்கு கால்டுவெல் கிறிஸ்தவ திருச்சபைப் பணி செய்யவில்லை என்கிறார் நிவேதிதா. அது உண்மைதான். கால்டுவெல்லின் புகழுக்குக் காரணம் அவருடைய தமிழ்ப்பணியே.

கிறிஸ்தவர்கள் மத்தியில் சாதிப் பிரச்சனை பற்றி விளக்கும் நிவேதிதா, சீர்திருத்த கிறிஸ்தவ மிஷனரிகளைக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் (முதல் தொகுதி 518-19). ரேனியஸும், ரொபட் கால்டுவெல்லும், ஜி.யூ. போப்பும் அடியோடு சாதி முறையை வெறுத்து திருச்சபையில் அதற்கு இடங்கொடாதிருந்தார்கள். சாதி மறுத்து கிறிஸ்தவப் பணியாற்றியதாலேயே அவர்களுக்கு அதிக எதிர்ப்பும் இருந்தது. தஞ்சையில் ஆலயத்தில் வெள்ளாளரும், கடையரும் உணவருந்தும்போது தனித்தனியே அமருவதையும், ஆராதனையின் போதும் தனித்தனியே அமர்வதையும் கவனித்து ஜி. யூ. போப் வெகுண்டெழுந்து, அதைத் தவறு என்று சுட்டிக்காட்டி சமபந்திப் போஜனத்துக்கு ஏற்பாடு செய்தார் என்று 440ம் பக்கத்தில் நிவேதிதாவே குறிப்பிட்டிருக்கிறார். அப்படிச் செய்ததற்காக போப்பை வெள்ளாளர்கள் அடித்திருக்கிறார்கள். இது தெரிந்தும் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் சாதிப் பாகுபாட்டுக்கு ஆதரவாக இருந்ததாகக் காட்டியிருப்பது தவறு. ஒரு சில மிஷனரிகள் அந்தத் தவறைச் செய்திருப்பதையும் நான் மறுக்கவில்லை. நம்மினத்துப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாமலும், சாதியை எதிர்க்கத் துணிவில்லாமலும் சிலர் அந்தத் தவற்றைச் செய்திருக்கிறார்கள்.

சீர்திருத்த கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதும்போது நிவேதிதா, அவர்களுடைய பணியை “மதமாற்றம்” செய்வது என்று குறிப்பிட்டிருக்கிறார் (518). சீர்திருத்த கிறிஸ்தவம் மதமாற்றம் செய்வதில்லை. மதமாற்றத்திற்கும், சுவிசேஷப் பணியை வேதபூர்வமாகச் செய்வதற்கும் இடையில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இருக்கும் அளவுக்கு வேறுபாடிருக்கிறது. கத்தோலிக்கரான நிவேதிதாவுக்கு அது புரியாமலிருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. அடைக்கலப் பட்டணங்களை ரேனியஸ் அமைத்தபோது ஆதிக்க சாதியினரிடமிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவே அவற்றை அமைத்தார். அவற்றில் பலவற்றில் ஒரே சாதியினர் இருந்ததற்குக் காரணம் அந்தச் சாதியினர் கிறிஸ்துவை வைராக்கியத்தோடு தழுவிக்கொண்டதுதான். அதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரே சாதிக்காக ரேனியஸ் அடைக்கலப் பட்டணங்களை நிறுவவில்லை.

விசுவாசத்தால் கிறிஸ்துவைத் தழுவிக்கொண்ட எல்லோருமே உடனடியாக சாதியை விட்டுவிடவில்லை என்பது உண்மைதான். சில வேளைகளில் அதில் மாற்றம் காலம் போகப் போகத்தான் ஏற்படும். அடிப்படையில் சாதி வேறுபாடு பார்ப்பது தவறு என்பதை மெய்க்கிறிஸ்தவன் உணர்வான். சமூகத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை சமாளித்து அதற்கு விலகி நிற்பதற்கு அவன் வாழ்வில் நாளாக நாளாக மாற்றங்கள் வரும். ஒரு கிறிஸ்தவன் தொடர்ந்தும் சாதி வேறுபாடு காட்டி வாழ்கிறான் என்றால் அவனுடைய விசுவாசம் கேள்விக்குறியதாகிவிடும்.

வேதத்தை மீறி ரேனியஸோ, சீர்திருத்த கிறிஸ்தவர்களோ சாதியை அரவணைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கருதுவது முட்டாள்த்தனம். சாதி பார்க்கிறவர்களுக்கு ரேனியஸ் திருவிருந்து கொடுப்பதைத் திருச்சபைகளில் நிறுத்தியிருக்கிறார் என்பது நிவேதிதாவிற்குத் தெரியுமா? அது நியாயமாகக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை. கத்தோலிக்க மதம் சாதியை அரவணைத்துக் கொண்ட மதம். அவர்களுடைய ஊழியர்களான டீ நொபிளியில் இருந்து அனைவருமே சாதிக்கும், இழிவான இந்துமதப் பண்பாட்டிற்கும் இடம்கொடுத்து மதமாற்றம் செய்திருக்கிறார்கள். சத்தியம் அறவேயில்லாத அந்த மதம் மதமாற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது, மறுபிறப்பிற்கோ, மனமாற்றத்திற்கோ அல்ல. அதனால்தான் இந்துக்களுக்கு கத்தோலிக்கத்தைப் பிடித்திருந்தது. இதை எப்படிக் கத்தோலிக்கரான நிவேதிதா ஒப்புக்கொள்ளப்போகிறார்.

அறியப்படாத கிறிஸ்தவம் நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதிப் பகுதியில், இந்தியக் கிறிஸ்தவத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் நிவேதிதா, தோமாவின் இந்திய வருகை பற்றி அதிகம் எழுதியிருக்கிறார் (648-655). தோமா இந்தியா வந்தது வாய்வழிச் செய்தி என்றும், இதுவே தோமை கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்றும் ஆரம்பத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார் (648). அத்தோடு “இந்தியாவுக்கு தோமா வந்தாரோ இல்லையோ” என்ற சந்தேகத்துடன் ஆரம்பித்து தோமா வருகை பற்றி கத்தோலிக்கர்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கான குறிப்புகளைத் தருகிறார். இந்தப் பகுதியில் தோமா வருகை பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள் ஏற்கனவே தெரிந்திருக்கும் வாய்வழிச் செய்திகள் மட்டுமே. முடிச்சுப் போடுவதில் மன்னனான மு. தெய்வநாயகத்தின் நூலின் ஒரு குறிப்பும் இதில் அடங்கும். அத்தோடு இரண்டுவித தோமாக்களைப் பற்றிய குறிப்புகளும் இருப்பதாகவும், இரண்டாவது தடவை தோமா தமிழகம் வந்தபோதே பிராமணர்களால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் நம்பத்தகுந்த வரலாற்றுக்குறிப்புகளாகத் தெரியவில்லை. தோமா வருகை பற்றிய நம்பிக்கை கத்தோலிக்க மதத்தினரிடமே அதிகம் என்ற என் கருத்தை நிவேதிதா நிரூபித்திருக்கிறார். (இதுபற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள நான் எழுதி வெளியிட்டிருக்கும் தோமா கிறிஸ்தவம் நூலை வாங்கி வாசியுங்கள்.)

முழுக்க முழுக்க கத்தோலிக்க வாடையடிக்கும் “அறியப்படாத கிறிஸ்தவம்” நூலில் சீர்திருத்த கிறிஸ்தவம் பற்றிய சில உண்மைகளும், தமிழ் சீர்திருத்த கிறிஸ்தவர்களான சிலரைப் பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. அவை கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடிய பகுதிகளே. அத்தோடு தமிழகத்தில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களின் செய்கைகளைப் பற்றியும் வாசித்து கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அம்மதத்தின் வேதவிரோத செய்கைகளை நம்மால் அனுமானித்துக் கொள்ளவும் முடிகிறது. அந்தவகையில் நிவேதிதா நமக்கு நன்மை செய்திருக்கிறார். சிந்தித்து வாசிக்கும் கிறிஸ்தவ வாசகர்கள் இதைப் புரிந்துகொள்ளுவார்கள். உண்மை தெரிந்து நூலை வாசிப்பவர்களுக்கு இந்நூலின் சில பகுதிகள் பயனுள்ளவையாக இருக்கும். விபரம் தெரியாத வாசகர்களுக்கு இதனால் எந்தப் பயனுமில்லை. ஒரு கத்தோலிக்க ஆசிரியரிடமிருந்து மெய்யான திருச்சபை வரலாற்று நூலை எப்படி எதிர்பார்க்க முடியும்?

மறுமொழி தருக