வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் துணை செய்திருக்கிறார். இதழ் பணியில் என்னோடிணைந்து தொடர்ந்து உழைத்து வருபவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். வாசகர்களாகிய உங்களுக்கு இந்த இதழும் இதற்கு முன் வந்திருப்பவை போலவே ஆவிக்குரிய பலன்களை அளிக்க ஜெபத்தோடு அனுப்பி வைக்கிறோம்.

பவுல் ரோமாபுரியில் இருந்த சபைக்கு எழுதிய நிருபம் அவருடைய சுவிசேஷம் என்பதையும், அந்த சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனை “விசுவாசத்தினால் நீதிமானாக்குதல்” என்பதையும் விளக்கி ஒரு ஆக்கம் இதில் வந்திருக்கிறது. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படும் போதனைக்கு எதிராக அநேக போலிப் போதனைகள் முளைத்தெழுந்திருக்கின்ற வேளையில் இதை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது நன்மை பயக்கும்.

இந்த இதழில் சத்திய வேதத்தைப் பற்றிய இன்னொரு ஆக்கம் வந்திருக்கிறது. வேதத்தை விண்ணிலிருந்து விழுந்திருக்கும் அற்புத நூலாகப் பலர் தவறாக எண்ணி வருகிறார்கள். வேதம், மனித மொழிகளில் எழுதப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறதென்ற உண்மையையும், அதன் அடிப்படையில் அதை வாசித்து, சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் இதில் விளக்கியிருக்கிறேன். அத்தோடு, மத்தேயு 5:34-37, யாக்கோபு 5:12 ஆகிய வசனங்களை எவ்வாறு விளங்கிக்கொள்ளுவது என்பது பற்றியும் விளக்கி ஒரு ஆக்கம் வந்திருக்கிறது. வேதவசனங்களுக்கு அமாநுஷ்ய விளக்கமளிக்கும் ஆபத்தை உணர்த்தும் ஒரு ஆக்கமும் உங்களுக்கு உதவும்.

ரேனியஸ் அவர்களின் நாட்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை இந்த இதழில் அறிமுகப்படுத்தி, விமர்சித்திருக்கிறேன். அதில் நன்மையானவற்றைப் பாராட்டிக் குறைகளையும் சுட்டியிருக்கிறேன். குறைபாடுகள் நீக்கப்பட்டு இது மறுபடியும் வௌ¤வருமானால் நல்லது. இத்தகைய விமர்சன விளக்கங்களை இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் காண்பதரிது. ஆர்த்தர் பிங்கின் வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய நூலில் இருந்து இன்னுமொரு அதிகாரத்தை இந்த இதழில் மொழியாக்கம் செய்து தந்திருக்கிறோம்.

இத்தனை காலமும் வழிநடத்தி வந்திருக்கும் தேவன் இந்த இதழையும் கவனத்தோடு தயாரித்து உங்கள் முன் படைக்க உதவியிருக்கிறார். எல்லா மகிமையும் அவருக்கே! – ஆர்.

மறுமொழி தருக