பவுலின் சுவிசேஷம்

– விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் –

பல வருடங்களுக்குப் பிறகு என் சபையில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தொடர் வியாக்கியானப் பிரசங்கம் அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்; அதற்கான வாசிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். பவுலின் நிருபங்களில் தலை சிறந்தது அவர் ரோமருக்கெழுதிய நிருபம் என்று கூறுவதில் தவறில்லை. அற்புதமாகக் கர்த்தர் இந்நூலைப் பலருடைய வாழ்க்கையில் அவர்கள் இரட்சிப்படைவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார். ஆகஸ்தீன், மார்டின் லூத்தர், ஜோன் பனியன், ஜோன் வெஸ்லி போன்ற பிரபலமானவர்களின் மனந்திரும்புதலுக்கு இந்நூல் காரணமாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் எனக்களித்த ஆங்கில நூலொன்றில் ஸ்ரீ லங்கா வேதாகமக் கல்லூரியில் ஒரு காலத்தில் விரிவுரையாளராக இருந்த டெனி மோசஸின் ஓர் ஆக்கத்தை வாசித்தேன். அது ரோமரின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான விளக்கவுரை. அதில் டெனி மோசஸ் தந்திருந்த ஒரு விளக்கம் எனக்கு வியப்பேற்படுத்தியது. “பவுலின் இறையியலைப் புரிந்துகொள்ள, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் என்ற போதனையே அதன் திறவுகோலாக இருக்கிறது என்பது சீர்திருத்தவாதிகளிடம் இருந்து வந்த பாரம்பரியக் கருத்து. இது மிகவும் குறுகிய பார்வை; அது இரட்சிப்பிற்கான பல்வேறு உருவக அணிகளில் (Metaphor) ஒன்று மட்டுமே. ஏனைய போதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு இதற்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்” என்று அவர் எழுதியிருந்தார் (Journal of Lanka Bible College, Vol I, 2017, pg. 10). அத்தோடு, டெனி மோசஸ், பவுலின் இறையியலில் இன்னுமொரு முக்கிய போதனை, “யூதர்களும், புறஜாதியினரும் இணைக்கப்பட்ட வருங்கால புதிய உடன்படிக்கை சமுதாயம்” என்கிறார். இதே ஆக்கத்தில் இன்னொரு இடத்தில் டெனி மோசஸ் இளக்காரமாக, “நீதிமானாக்குதலை அடுத்து பரிசுத்தமாக்குதல் தொடருகிறது என்பதை விளக்குவதற்காக மட்டும் ரோமரில் ஆவியானவரைப் பற்றிச் சொல்லப்படவில்லை . . .” என்றும் எழுதியிருக்கிறார். இருந்தபோதும் வேறொரு பக்கத்தில் ரோமருக்கெழுதப்பட்ட நிருபத்தின் அடிப்படைப் போதனை 1:16-17ல் காணப்படுகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளுகிறார் (பக். 13).

டெனியின் இந்தக் குறிப்புகள் எனக்கு முறையானதாகப்படவில்லை. இதை நான் சாதாரணமானதொன்றாகவும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மோசஸின் விளக்கம் 16ம், 17ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அதற்குப் பின் வந்திருக்கும் சீர்திருத்தவாதிகளனைவரினதும் ரோமருக்கான விளக்கங்களை ஓரங்கட்டிவிடுகிறது; தவறானதாகக் காட்டுகிறது. 20ம் நூற்றாண்டுக்குப் பின்வந்த வேதம் பற்றிய இறையியல் பார்வைக்குப் பெயர் நவீனத்துவம் (Modernism). ஆயிரத்தி எண்நூறு ஆண்டுகளாகத் திருச்சபை இந்தவிதத்தில் சிந்தித்ததில்லை! இந்த இறையியல் பார்வை இதற்கு முன் இருந்து வந்திருக்கும் வேதவிளக்கப் பாணியை விட்டு விலகி நவீன விஞ்ஞான, வரலாற்று ஆய்வுகள், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வேத ஏட்டுச்சுவடுகள், மக்களின் பண்பாடு, நவீனத்துவ இறையியல் சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இதில் தாராளவாத (Liberal) சிந்தனைகளும் அடங்கும். இந்த நவீனத்துவப் போக்கு வேதத்தின் அதிகாரத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது. இந்தப் பார்வையே இன்று மேலைநாடுகளில் அநேக இறையியல் கல்லூரிகளைப் பாதித்து வேதம் பற்றிய தாராளவாதப் “புதிய சிந்தனைகள்” உருவாகும் பட்டறைகளாக அவற்றை மாற்றியிருக்கின்றது. இதன் தாக்கத்தைக் கீழைத்தேய நாடுகளில் காணப்படும் பெரும்பாலான இறையியல் கல்லூரிகளிலும் காணலாம்.

சுவிசேஷத்தில் இருந்து நீதிமானாக்குதலைப் பிரிக்கும் பெருந்தவறு

என். டீ. ரைட் (N. T. Wright) போன்றவர்கள், பவுலின் போதனைகள் சீர்திருத்தவாதிகளின், பவுலின் இறையியல் பற்றிய போதனைகளைவிட வேறுபட்டுக் காணப்படுகின்றது என்று கூறி சீர்திருத்தவாதிகளுக்கும், பவுலுக்குமிடையில் ஒரு பிரிவை ஏற்படுத்த முயல்கிறார்கள். “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டம்” (NPP) என்ற இவர்களுடைய மிகத் தவறான நவீன போதனை இந்தக் கைங்கரியத்தைச் செய்திருக்கிறது. என். டீ. ரைட்டின் போதனைகளின் தவறை டீ. ஏ. கார்சன் வெளிப்படுத்தி அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களில் நல்ல பதிலளித்திருக்கிறார். 21ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் அநேக சீர்திருத்த இறையியலறிஞர்கள் “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப்” போதனையை நிராகரித்துப் பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இது பற்றி விளக்கும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சீர்திருத்த இறையியலறிஞரான சின்கிளேயர் பேர்கசன், “இத்தகைய தவறான இருவகைப் பிரிவை (பவுலின் போதனை, சீர்திருத்தவாதிகளின் போதனை என்று) உருவாக்கியிருக்கிறவர்கள், விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் என்பது சுவிசேஷமல்ல; அது சுவிசேஷத்தில் உள்ளடக்கமாகக் காணப்படுவது மட்டுமே” என்கிறார்கள் என விளக்கியிருக்கிறார். “நீதிமானாக்குதலில் இருந்து கிறிஸ்துவைப் பிரித்துவிடும் இந்தத் தவறான போதனை, பலனைக் கொடுத்தவரில் இருந்து பலனைப் பிரித்துவிடுகிறது” என்கிறார் சின்கிளேயர். “கிறிஸ்து இல்லாமல் நமக்கு நீதிமானாக்குதல் கிடைப்பதில்லை. அதேநேரம், நீதிமானாக்குதல் இல்லாமல் கிறிஸ்து நமக்குக் கிடைப்பதில்லை” எனும் சின்கிளேயர் ஆணித்தரமாக, “கிறிஸ்துவே சுவிசேஷம்; விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் சுவிசேஷம் அல்ல, என்று சொல்ல முடியாது” என்கிறார். (https://www.ligonier.org/learn/articles/what-does-justification-have-do-gospel).

மேலே குறிப்பிட்டவற்றை நான் விளக்கியிருப்பதற்குக் காரணம் “பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப்” போலிப்போதனை விசுவாசத்தினால் நீதிமானாக்குதலை சுவிசேஷத்தில் இருந்து அடியோடு பிரித்து சுவிசேஷத்தைக் கலங்கப்படுத்திவிடுகிறது என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்லாமல், டெனி மோசஸைப் போல, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் பவுலின் இறையியலின் அடிப்படைப் போதனை என்பதை நிராகரிப்பவர்களும் நவீனத்துவ இறையியல் கண்ணோட்டத்தில் சுவிசேஷத்தின் மதிப்பை அடியோடு குறைத்துவிடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். ரோமருக்கு எழுதிய நிருபத்தில், ஏதோ! பவுல் ஒருக்காலுமே சிந்தித்திராத ஒரு போதனையை சீர்திருத்தவாதிகள் அதில் திணித்து விளக்கியிருக்கிறார்கள் என்ற தோற்றத்தை டெனி மோசஸின் வார்த்தைகள் ஏற்படுத்துகின்றன. புதிது புதிதாக பவுலின் எழுத்துக்களில் இருந்து எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நவீனத்துவ எண்ணப்போக்கே பவுலைப் பற்றிய புதிய கண்ணோட்டப் போதனைக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இத்தகைய எண்ணப்போக்கே டெனி மோசஸின் வார்த்தைகளுக்கும் காரணம்.

பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் “விசுவாசத்தினால் நீதிமானாக்குதலைத்” தவிர வேறு எதையுமே விளக்கவில்லை என்பதல்ல என் வாதம்; டெனி விளக்குவதுபோல் வேறு எத்தனையோ அவசியமான சத்தியங்களும் அதற்குள் அடங்கிக் காணப்படுகின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான். இருந்தபோதும், அந்த சத்தியங்கள் அனைத்தும் ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில், அதன் அடிப்படைப் போதனையோடு (நீதிமானாக்குதல்) தொடர்புடையவையாக, அதிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாகவே விளக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சத்தியங்களை அந்நூலின் அடிப்படைப் போதனையில் இருந்து விலக்கி, அதோடு தொடர்பற்றவையாகவும், வேறு இறையியல் காரணங்களுக்காக அவை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன என்றும் காட்ட முயல்வது மிகத் தவறான நவீனத்துவ இறையியல் கணிப்பு. வேதத்தின் எந்தப் பகுதியில் காணப்படும் விஷயமும் அது காணப்படும் உடனடிச் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் விளக்கப்பட வேண்டும் என்ற வேதவிளக்க விதி இறையியல் போதிக்கும் டெனி மோசஸுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. இந்த விதியை மீறி விளக்கம் தந்திருக்கிறார் மோசஸ். இதன் மூலம் “பவுலின் இறையியலை” (Pauline Theology) நியாயப்படுத்துவதாகக் கருதி அதைத் திசைதிருப்பியிருக்கிறார் டெனி. பவுலின் இறையியலை விளக்க முயன்ற பிலிப் மெலாங்த்தன் (லூத்தரின் சீடர்) ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் காணப்படும் பவுலின் தர்க்கரீதியிலான போதனையின் அடிப்படையிலேயே அதை விளக்கியிருக்கிறார். நூலை எழுதியவரின் நோக்கத்திற்கு மாறாக ஒருபோதும் எந்த நூலுக்கும் விளக்கம் கொடுத்தல் ஆகாது.

பவுல் ரோமில் இருந்த சபைக்கு இந்த நிருபத்தை எழுதியபோது, அதை இறையியல் வல்லுனர்களுக்காகவும், முனைவர் பட்டம் பெறப் படிக்கும் ஆய்வாளர்களுக்காகவும் எழுதவில்லை. ரோம சபையில் இருந்த சாதாரண யூத, புறஜாதிக் கிறிஸ்தவர்களுக்காக அதை எழுதினார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளையும், ஆத்மீகப் பிரச்சனைகளையும் நன்கறிந்திருந்த பவுல் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் போதகக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதினார். இது ஒரு போதகர் சபை மக்களுக்கு எழுதிய ஆத்மீக ஆலோசனையளிக்கும் நிருபம்; புத்திஜீவிகளுடைய அடங்கா ஆவலுக்கும், ஆய்வுக்கும் தீனிபோடும் எண்ணத்தில் எழுதப்பட்டதல்ல. இறையியல் ஆய்வு என்ற கண்ணோட்டத்தில் இந்நூலுக்கு விளக்கமளிக்கும் நவீனத்துவ விளக்கவுரையாளர்கள் இதை அடியோடு மறந்துவிட்டு பவுலின் அடிப்படை நோக்கங்களுக்கெதிராக நூலுக்கு விளக்கமளிக்கிறார்கள். அதுவே அவர்கள் விடும் பெருந்தவறு. பெருங்கல்விமானும், இறையியல் வல்லுனரும், பன்மொழிப்பாண்டித்தியமும் பெற்றவராகப் பவுல் இருந்தபோதும், சாதாரண கிறிஸ்தவ சமுதாயத்தை மனதில் கொண்டு, அவர்கள் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்நிருபத்தை எழுதியிருக்கிறார். இந்நூலைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு எவரும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

ரோமருக்கு எழுதப்பட்ட நூலின் அடிப்படைப் போதனை

16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் வாழ்ந்த காலத்துக்கு நெடுங்காலங்களுக்கு முன் பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தை எழுதியிருந்த போதும், “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்” அந்நிருபத்தின் மிகமுக்கியமான, அடிப்படைப் போதனையாகக் காணப்படுகிறதா, இல்லையா? என்ற கேள்வியை இனி ஆராய்வோம்.

சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர், பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு எழுதிய விளக்கவுரையின் அறிமுகப் பகுதியில், “இந்த நூலே புதிய ஏற்பாட்டில் களங்கமில்லாமல் தெளிவான சுவிசேஷத்தை விளக்கும் மிகமுக்கியமான நூல்” (purest gospel) என்று குறிப்பிட்டிருக்கிறார். சீர்திருத்தவாத இறையியலறிஞர்கள் அனைவருமே பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ சுவிசேஷம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதையே பொதுவாக சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் இவர்களுக்கிடையில் எந்த சந்தேகமும் இருந்தது கிடையாது. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு விளக்கவுரை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஸ்டுவர்ட் ஒலியொட் அதற்குத் தந்திருக்கும் தலைப்பு, “உண்மையான சுவிசேஷம்” (The Gospel as it really is). ரோமரில் அப்போஸ்தலனான பவுல், மிகவும் கவனத்தோடு சுவிசேஷத்தை விளக்கியிருக்கிறார்” என்கிறார் ஆர். சீ. ஸ்பிரவுல். இதைத் தற்கால விளக்கவுரையாளரான டக்ளஸ் மூ தன்னுடைய விளக்கவுரையிலும் ஒத்துக்கொள்கிறார்.

பவுல் ரோமருக்கெழுதிய நூல் சுவிசேஷ நூலாக இருந்ததால்தான், கிறிஸ்தவ வரலாற்றில் பிரபலமான அனேகர் அதன் மூலம் கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்திருக்கிறார்கள். ஹிப்போவைச் சேர்ந்த ஆகஸ்தீனுக்கு ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசித்துத்தான் மனந்திரும்புதல் ஏற்பட்டது. மார்டின் லூதர் அதை வாசித்துத்தான் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்தார். அப்போது லூத்தர், “இதுதான் எனக்குப் பரலோக வாசலைத் திறந்துவைத்தது. அதற்குள் நான் நுழைந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜோன் பனியனுடைய மனந்திரும்புதலுக்கும் ரோமருக்குப் பவுல் எழுதிய நூலே காரணமாக இருந்திருக்கிறது. ஜோன் வெஸ்லி லண்டனில் அல்டர்கேட் எனுமிடத்தில் இந்நூலில் இருந்து அளிக்கப்பட்ட பிரசங்கத்தைக் கேட்டே கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்தார்.

எது சுவிசேஷம்?

ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம் சுவிசேஷத்தை அறிவிக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுகிற நாம், எது சுவிசேஷம்? என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியாது. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும், அருமையானதொரு விளக்கவுரையை ரோமருக்கு எழுதிய டேவிட், என். ஸ்டீல்-கர்டிஸ் சி. தொமஸ் ஆகியோர், “பவுலின் நற்செய்தி, விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் (Justification) கிடைக்கின்றது என்பதுதான்” என்று விளக்கியிருக்கிறார்கள். தற்கால இறையியல் அறிஞரான கொர்னேலியஸ் வெனிமா, “சுவிசேஷத்தின் வாக்குத்தத்தத்தை விசுவாசத்தின் மூலம் மட்டும் அரவணைக்கிறவர்களைக் கடவுள் நீதிமான்களாக்குகிறார்; நீதிமான்களாக அறிவிக்கிறார் என்பதே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தருகின்ற நற்செய்தி” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்விறையியல் அறிஞர்களின் வார்த்தைகளிலிருந்து சுவிசேஷத்திற்கும் நீதிமானாக்குதலுக்கும் இடையில் காணப்படும் பிரிக்கமுடியாத தொடர்பைப் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் சின்கிளேயர், “நீதிமானாக்குதலே சுவிசேஷம்” என்று சொல்லியிருக்கிறார்.

சுவிசேஷம் இன்று கொச்சைப்படுத்தப்பட்டுத் தரமற்றுப் பிரசங்கிக்கப்படுவதாலேயே அநேகருக்கு அதில் எப்படி நீதிமானாக்குதல் காணப்படுகின்றது என்ற தடுமாற்றம் இருக்கிறது. பாவத்தைப் பற்றி எதையும் விளக்காத சுவிசேஷச் செய்திகளையே பிரசங்க மேடை முதல் சமூகவலைத்தளங்கள்வரைப் பலரும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு மேல் சுவிசேஷத்தைப் பற்றிய அறிவு இல்லை. மேலெழுந்தவாரியாக, எந்தவித இறையியல் போதனைகளுமில்லாமல் உப்புச்சப்பற்ற மூன்றோ, நான்கோ விஷயங்களைத் திரும்பத் திரும்ப வருடம் முழுவதும் சுவிசேஷம் என்ற பெயரில் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதற்கு இன்று பெயர்தான் சுவிசேஷப் பிரசங்கம். அதற்கு மாறாக 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் கடவுளைக் கண்டுகொள்ள வேதத்தைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தபோது, பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் சுவிசேஷம் எது என்பதை ஆவியின் அனுக்கிரகத்தால் அறிந்து கொண்டார்கள். சுவிசேஷத்தின் அடிப்படைச் செய்தியே நீதிமானாக்குதல்தான் என்பது அவர்களுக்கு ஆணித்தரமாகப் புரிந்திருந்தது. “பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் மிகவும் விரிவாகவும், ஆழமாகவும் சுவிசேஷத்தை நமக்கு விளக்குகிறது” என்கிறார் எட்வர்ட் டொனலி.

இது எப்படி? என்று நீங்கள் கேட்கலாம். அதை நான் விளக்கத்தான் வேண்டும். கடவுளிடம் இருந்து நமக்கு வந்திருக்கும் நற்செய்தி எது? தனக்கெதிராகப் பாவம் செய்திருக்கும் மனிதனின் பாவத்திற்கு இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் நிவாரணம் அளிக்கிறார் என்று சுருக்கமாக அதற்குப் பதிலளிக்கலாம். ஆனால், அத்தோடு நிறுத்திவிட்டால் அது சுவிசேஷம் ஆகாது. கிறிஸ்து மூலம் கிடைக்கும் அந்த நிவாரணம் என்ன? என்ற அடுத்த கேள்வியில்தான் சுவிசேஷத்தின் அடித்தளமே தங்கியிருக்கிறது. அது என்ன? கடவுளுக்கு முன் குற்றவாளியாகத் தண்டனையை எதிர்நோக்கி நிற்கும் பாவியைக் கடவுள் நீதிமானாக்குகிறார்; நீதிமானாக அறிவிக்கிறார் என்பதுதான் அதற்குப் பதில். இதைத்தான் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் விளக்குகிறது. இதுதான் சுவிசேஷச் செய்தி. இதைத்தான் சீர்திருத்தவாதிகள் ரோமரில் ஆவியின் வழிநடத்தலால் கண்டுகொண்டார்கள். இது சீர்திருத்தவாதிகள் ரோமருக்குள் திணித்திருக்கும் அவர்களுடைய சொந்தப் போதனையல்ல; அப்படி எண்ணுகிறவர்களுக்கு சீர்திருத்த வரலாறோ, அதன் இறையியலோ அடியோடு தெரிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

நீதிமானாக்குதல்

கடவுள் பாவியை நீதிமானாக்குவதே சுவிசேஷம் என்பதைப் பவுல் எவ்வாறு விளக்கியிருக்கிறார் என்பதை இனி ஆராய்வோம். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் முதல் அதிகாரத்தில் அந்நூலுக்கான அடிப்படைப் போதனையை விளக்குகிறார். அதன் 16-17 வசனங்களில் அதைக் காணலாம். ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் இருந்து 12 வருடங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில், இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் செப்பலில் விளக்கவுரை அளித்தவர் மார்டின் லொயிட் ஜோன்ஸ். இவ்வசனங்களைப் பற்றி விளக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், “ரோமருக்கு எழுதிய நிருபத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு மிக அவசியமான வசனங்கள் இவை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த வசனங்களை எழுதுமுன்பே பவுல் 15ம் வசனத்தில் ரோமாபுரியில் இருக்கிறவர்களுக்கு “இயன்ற மட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்” என்று விளக்கியிருக்கிறார். அத்தோடு பவுல் அந்தச் சுவிசேஷத்தைக் குறித்துத் தான் வெட்கப்படவில்லை என்றும், அதுவே விசுவாசிக்கும் எவருக்கும் இரட்சிப்பை அளிக்கும் தேவபலனாக இருக்கிறது என்றும் அழுத்தத்தோடு விளக்குகிறார். அதற்குக் காரணம் அதன் மூலமே தேவநீதி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (ஜோன் மரே). இதிலிருந்து, இரட்சிப்பை வெளிப்படுத்துவதும், தேவநீதியை வெளிப்படுத்துவதும் சமச்சீராகக் காணப்படும் உண்மைகள் என்பதும், இரண்டும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றன (ஜோன் மரே) என்றும் தெரிந்துகொள்கிறோம். தேவநீதி வெளிப்படுத்தப்படுவதைப் பற்றிய இந்த வார்த்தைகள் ஆழமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. வெறும் மனித அறிவுக்குப் புலனாவதை மட்டும் அவை குறிக்கவில்லை. “தேவநீதி ஒரு நடவடிக்கை மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது; நடைமுறையில் இரட்சிக்கும்விதத்தில் அது நிதர்சனமாக வெளிப்படையாக நிகழ்ந்திருக்கிறது” என்கிறார் ஜோன் மரே. பேராசிரியர் மரேயின் இவ்வார்த்தைகள் கிறிஸ்து கல்வாரியில் தன்னைப் பலிகொடுத்ததன் மூலம் நீதிமானாக்குதலை நிறைவேற்றியதைக் குறிக்கின்றன. அதனால்தான் சுவிசேஷம் இரட்சிப்பை அளிக்கும் தேவபலனாக இருக்கின்றது.

16ம் வசனத்தில் பவுல் விளக்கியிருக்கும் அந்தச் சுவிசேஷம் என்ன என்பதைத்தான் 17ம் வசனம் விளக்குகிறது. இந்த இடத்தில் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன நூலான ஆபகூக்கில் (2:5) இருந்து ஒரு வசனத்தை எடுத்துக்காட்டும் பவுல், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது” என்று அறிவிக்கிறார். இந்த வசனத்தில் வரும் “விசுவாசம்” என்ற பதம் ஒருவரின் உண்மையான நடத்தையைக் குறிப்பதாக என். டி. ரைட் மிகத்தவறாக விளக்கியிருக்கிறார். எந்த சந்தேகமுமில்லாமல் இந்தப் பதம், நாம் கிறிஸ்துவில் வைக்கவேண்டிய, கடவுளால் ஈவாக நமக்குக் கிடைக்கும் விசுவாசத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. விசுவாசம் மட்டுமே கிறிஸ்துவை நாம் அடைவதற்கு உரிய நியமமாக இருக்கிறது. அந்த விசுவாசத்தின் மூலமாகவே நாம் கர்த்தருக்கு முன்பாக நீதிமான்களாகிறோம்; அவரால் அவ்வாறாக அறிவிக்கப்படுகிறோம்.

நான் இறையியல் கற்ற காலத்தில் ரோமருக்கான விளக்கவுரையைத் தென் வேல்ஸில் தந்த மதிப்பிற்குரிய ஜோன் குக், “மனிதன் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் காணப்படுவது அவனது விசுவாசத்திலேயே தங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். (ஜோன் குக் அவர்களுடைய, 1980களில் அன்றிருந்த சாதாரண டைப்ரைட்டரில் டைப் செய்யப்பட்ட பவுல் ரோமருக்கெழுதிய நிருபத்தின் விரிவுரைக் குறிப்புகள் இன்றும் என் கையில் இருக்கின்றன. பழுப்பு நிறக் காகிதத்தில் ஒரு பக்கம் மட்டுமே டைப் செய்யப்பட்ட குறிப்புகள் அவை. மிக வயதான காலத்தில் அவர் இன்றும் தென் வேல்ஸில் ஒரு சபைப் போதகராகத் தொடர்ந்திருந்து வருகிறார்.) தேவநீதியை அடைவதற்கு ஆரம்பமுதல் கடைசிவரை அவசியமாக இருப்பது விசுவாசம் மட்டுமே என்பதையும் பவுல் இவ்வசனத்தில் உணர்த்துகிறார். சுவிசேஷத்தின் நோக்கமே தேவநீதியை வெளிப்படுத்துவது என்றும் பவுல் இதில் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் அடித்தளம். இப்படியிருக்கும்போது, தேவநீதியை, சுவிசேஷத்தில் இருந்து பிரித்து அதோடு தொடர்பற்றதாகப் பார்க்கிறவர்கள் வேத வசனங்களைப் புரிந்துகொள்ளுவதற்குப் பயன்படுத்தவேண்டிய அடிப்படை விதிகளையே மீறிவிடுகிறார்கள்.

பவுல் தேவநீதியைப் பற்றித்தான் எழுதுகிறாரே தவிர நீதிமானாக்குதல் என்ற பதத்தையே 17ம் வசனத்தில் பயன்படுத்தவில்லையே என்று யாராவது சிந்திக்கலாம். உண்மையில் இந்த வசனங்களில் பவுல் விளக்குகின்ற தேவநீதி நமக்குக் கிடைக்கும்படியாகக் கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்டிருப்பதே நீதிமானாக்குதலாகிய செய்கை. கிறிஸ்து நம் பாவத்தையும், நம்மேலிருக்கும் தேவகோபத்தையும் தன்மேல் சுமந்து, நீதிக்கட்டளைகளனைத்தையும் பூரணமாகத் தன் வாழ்வில் நிறைவேற்றிப், பாவத்துக்கான தண்டனையை சிலுவையில் அனுபவித்து நிறைவேற்றிய நீதியை நாமடையும்படியாகத் தன் உயிரைத் தந்திருக்கிறார். அதன் காரணமாகவே, இரட்சிப்புக்காக அவரை விசுவாசிக்கிறவர்கள் கர்த்தரால் நீதிமான்களாகக் கருதப்படுகிறார்கள்; அறிவிக்கப்படுகிறார்கள். இதையே பவுல் ரோமர் 4ம் அதிகாரத்தில் ஆபிரகாமை உதாரணமாகக் கொண்டு விளக்குகிறார். ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதுபோல (4:22), கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற நமக்கும் அது நீதியாக எண்ணப்படும் (4:24) என்கிறார் பவுல். இதுவே கிறிஸ்துவின் நீதிமானாக்குதலாகிய கிரியை. இதைத்தான் ரோமர் 1:16-17 விளக்குகிறது. இந்த இடத்தில் நீதிமானாக்குதலைப் பற்றிப் பவுல் விளக்குகிறார் என்பதைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கும் தேவநீதி என்ற பதம் விளக்குகிறது.

ரோமருக்குப் பவுல் எழுதிய நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. நீதிமானாக்குதலும் அதன் விளைவுகளும் (1-8).

2. யூதர்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்படிருப்பதும், யூதவிசுவாசிகளோடு புறஜாதியினர் இணைக்கப்படுதலும் (9-11).

3. ரோமாபுரியிலிருக்கும் விசுவாசிகளுக்கான ஆறுதல்களும், அவர்களுக்கான தனிப்பட்ட செய்திகளும் (12-16).

இந்த மூன்றில், முழு நூலுக்குமே அத்திவாரமாக அமைவது முதல் எட்டு அதிகாரங்கள்தான். முதல் எட்டு அதிகாரங்களும் நீதிமானாக்குதலைப் பற்றியும் (1-5), நீதிமானாக்கப்பட்டவர்களுக்கான வாழ்க்கையையும் விளக்குகின்றன (6-8). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சுவிசேஷத்தையும், சுவிசேஷத்தினால் அடைகின்ற வாழ்க்கையையும் இந்த அதிகாரங்கள் விளக்குகின்றன. இதிலிருந்தே தெரிகிறதல்லவா, சின்கிளேயர் பேர்கசன் சொன்னதுபோல், சுவிசேஷத்தில் இருந்து நீதிமானாக்குதலையோ, நீதிமானாக்குதலில் இருந்து சுவிசேஷத்தையோ பிரிக்கமுடியாதென்று.

இந்நூலின் முதல் எட்டு அதிகாரங்களில் 1-5 வரையுள்ள அதிகாரங்களே கிறிஸ்தவ விசுவாசம் எது, என்பதைத் தர்க்கரீதியிலும், இறையியல்பூர்வமாகவும் விளக்குகின்றன. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் சொன்னதுபோல், இந்த அதிகாரங்களே “கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.” இவ்வதிகாரங்களின் ஆரம்பத்தில் விசுவாசத்தினால் நீதிமானாக்குதலுக்கான அவசியத்தை விளக்கியிருக்கும் பவுல், அதற்கான விளக்கத்தை 3:21ல் இருந்து கொடுக்க ஆரம்பிக்கிறார். இவை 5ம் அதிகாரத்தில் நிறைவடைகின்றன. இந்த அதிகாரங்கள் அபாரமானவை. அவை தியானத்தோடும், கவனத்தோடும், மெதுவாக வாசித்து சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டியவை.

3:21-31 – சுவிசேஷத்தின் அடித்தளமான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலுக்கான விளக்கம்.

4:1-25 – சுவிசேஷத்தின் அடித்தளமான விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலை அனுபவத்தில் அடைந்த ஆபிரகாமின் உதாரணம்.

5:1-11 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலினால் அடையும் சில ஆசீர்வாதங்கள்.

5:12-21 – விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதலை, கிறிஸ்துவின் இரட்சிக்கும் பணியை ஆதாமின் கண்டனத்துக்குரிய கிரியையோடு ஒப்பிட்டு விளக்குதல்.

பவுலின் தலைசிறந்த எழுத்துக்களில் முதன்மையானது ரோமருக்கு அவரெழுதியிருக்கும் நிருபம் என்று இறையியலறிஞர்கள் கூறியிருப்பதற்கு இந்த அதிகாரங்களில் தன் வாதத்திறமையைப் பயன்படுத்திப் பவுல் விளக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்குதலாகிய போதனையே அடையாளமாக இருக்கிறது.

ரோமருக்கு எழுதிய நிருபத்திற்கு அருமையாக விளக்கவுரை அளித்திருக்கிறார் சமீபத்தில் மறைந்துவிட்ட போதகரும், இறையியல் அறிஞருமான எட்வர்ட் டொனலி. அவரை நெடுங்காலம் அறிந்திருக்கும் ஆசீர்வாதத்தையும், அவருடைய போதனைகளை நேரடியாகக் கேட்டிருக்கும் ஆசீர்வாதத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேதத்தைத் துல்லியமாகவும், எளிமையாகவும் சிறு பிள்ளைகளும் புரிந்துகொள்ளும்படிப் பிரசங்கிக்கும் திறமையுள்ள வேறொரு பிரசங்கியை நான் அறியேன். டொனலி அவர்கள் ரோமருக்குப் பவுல் எழுதிய நிருபத்தைப் பின்வரும் தலைப்புகளில் விளக்குகிறார். இதில் நீதிமானாக்குதல் அடித்தளமாக அமைந்திருப்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.

1:1-17 – அறிமுகம்
1:18-3:20 – மனிதனுக்குத் தேவையான நீதிமானாக்குதல்
3:21-8:37 – கர்த்தர் அளிக்கும் நீதிமானாக்குதல்
9-11 – நீதிமானாக்குதலை ஏற்க மறுக்கும் இஸ்ரவேலர்
12-16 – நீதிமானாக்குதலால் அடைந்திருக்கும் வாழ்க்கையை வாழும் முறை

சீர்திருத்தவாத இறையியலறிஞர்கள் அனைவருமே வெவ்வேறான முறைகளில் ரோமருக்கு எழுதப்பட்ட நிருபத்திற்கான அதிகாரப் பிரிவுகளை விளக்கியபோதும் அவை நீதிமானாக்குதலை அடிப்படையாகவே கொண்டு அமைந்திருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த வருட இறுதியில் வெளிவரவிருக்கும் ரோமருக்கு எழுதப்பட்ட நூலுக்கான ஒரு நடைமுறை விளக்கவுரை பின்வரும் பிரிவுகளை முன்வைக்கிறது. (ரொப் வென்ச்சூரா தான் எழுதி வெளியிடவிருக்கும் ரோமருக்கான விளக்கவுரையின் அச்சிடப்படாத பிரதியை வாசித்துக் கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அதிலிருந்து இந்த அதிகாரப் பிரிவைத் தந்திருக்கிறேன். )

மனிதகுலத்துக்கு அவசியமான தேவநீதி – 1:18-3:20
கிறிஸ்துவில் மட்டும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவநீதி – 3:21-3:26
விசுவாசத்தினால் மட்டும் அடையக்கூடிய தேவநீதி – 3:27-5:21
பரிசுத்தமாக்குதலில் அனுபவிக்கக்கூடிய தேவநீதி – 6:1-8:11
மகிமையில் தொடர்கின்ற தேவநீதி – 8:12-8:39
தெரிந்துகொள்ளப்படாத இஸ்ரவேலரால் நிராகரிக்கப்பட்ட தேவநீதி – 9:1-11:36
மனந்திரும்பிய வாழ்க்கையில் நிதர்சனமாகக் காணப்படும் தேவநீதி – 12:1-16:27

விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் ஏன் நிராகரிப்புக்குள்ளாகிறது?

நீதிமானாக்குதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை சத்தியமென்பதை இன்று புரட்டஸ்தாந்து இறையியலறிஞர்களில் சிலரும், சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பலரும் நிராகரிப்பதற்குக் காரணமென்ன? இறையிலறிஞரான ரொபட் கொட்பிரி சொல்லுவதுபோல், “இது அவர்களில் காணப்படும் ஆவிக்குரிய பிரச்சனை, அதுவும் மிகப் பாரதூரமான ஆவிக்குரிய பிரச்சனை.” வேதம் விளக்குகின்ற அடிப்படை சத்தியங்களான கடவுளைப்பற்றியும், பாவத்தைப் பற்றியும், தேவகோபத்தைப் பற்றியும், தேவநீதியைப் பற்றியும், கிருபையைப் பற்றியும், தேவ சமாதானத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியாமல் அவற்றை எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயம் ஆவிக்குரிய பிரச்சனைகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களாக மட்டுமே இருக்கமுடியும்.

ரோமரில் காணப்படும் பவுலின் இறையியலில் விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்குதல் பற்றிய அடிப்படைப் போதனையை மண்ணுக்குள் புதைத்து, அதில் விளக்கப்பட்டிருக்கும் ஏனைய இறையியல் அம்சங்களுக்கு முக்கியத்துவமளித்து விளக்க முனைகிறவர்கள் பவுலின் இறையியலையோ, ரோமருக்கான விளக்கத்தையோ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, நீதிமானாக்குதலை சுவிசேஷத்தின் அடித்தளப் போதனையாக அங்கீகரிக்க மறுக்கிறவர்கள் சுயநீதிக்கே வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். இப்போதனையைப் புரிந்துகொள்ளாமலோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்கிறவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தையும், அதைப்போன்று மனிதனுடைய கிரியைகள் மூலம் கடவுளைக் கண்டுகொள்ள முயலும் ஏனைய மதங்களின் பக்கமே இச்சையோடு தங்களுடைய பார்வையைச் செலுத்தி வருகிறார்கள் என்று மட்டுமே கூறமுடியும்.

விசுவாசத்தினால் நீதிமானாக்குதல் கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் சொந்தமான இறையியல் போதனையல்ல; அது சுவிசேஷத்தின் உயிர்நாடி; சுவிசேஷத்தின் நாயகனான கிறிஸ்து நமக்காகச் செய்த தெய்வீகக் கிரியை; நீதிமானாக்குதலை உயிர்நாடியாகக் கொண்டிராத சுவிசேஷம் சுவிசேஷமே அல்ல. நீதிமானாக்குதலே சுவிசேஷம் என்ற சின்கிளேயரின் வார்த்தைகள் முற்றிலும் மெய்யானவை.

ஆங்கிலத்தில் ரோமருக்கெழுதிய நிருபத்தை விளக்கும் சில எளிமையான வியாக்கியான நூல்கள்

தமிழில் நல்ல விளக்கவுரை நூல்களை அடைவது அரிது; அத்தகைய நூல்களைத் தரமாகப் பழமைவாத (Conservative), சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்தில் அளிக்கக்கூடியவர்களும் அரிது. பிரசங்கிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எளிமையாக விளக்கப்பட்டிருக்கும் சில நல்ல ஆங்கில நூல்களைப் பயன்படுத்த முழு முயற்சி எடுப்பது அவசியம். இது எல்லா வாசகர்களுக்கும் பொருந்தும். ஆங்கிலத்தில் தரமான விளக்கவுரைகள் என்று பொறுக்கியெடுத்தால் அவற்றில் முப்பதுக்கும் குறையாத நூல்களைக் குறிப்பிடலாம். ஆனால், பெரும்பாலானவை பொதுவாக நம்மவர்கள் வாசித்துப் புரிந்துகொள்வதற்கு இலகுவானதும், எளிமையானதும் அல்ல. கீழே நான் தந்திருக்கும் மூன்றும் எளிமையானவை மட்டுமல்ல, திருச்சபை மக்களை நோக்கில் கொண்டு எழுதப்பட்டவை. சாதாரணமாக ஆங்கில வாசிப்புப் பரிச்சயமுள்ளவர்களுக்கு இவை ஒருபோதும் பிரச்சனையாக அமையாது.

  • The Gospel As It really is by Stuart Olyott, Evangelical Press, UK
  • Romans, A Digest of Reformed Comment by Geoffrey B Wilson, The Banner of Truth
  • The Gospel of God by R. C. Sproul

மறுமொழி தருக