அர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்

இந்த வருட ஆரம்பத்தில் ஸ்ரீ லங்காவுக்குப் போய் வந்தேன். என் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு அரை நாளுக்கு முல்லைத்தீவுப் பகுதிக்குப் போய் வந்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. பாதைகள் இன்றைக்கு நன்றாகக் போடப்பட்டிருக்கின்றபடியால் அங்கு போய்வர வழியிருந்தது. நான் ஒருபோதும் முல்லைத்தீவுக்குப் போனதில்லை. சுனாமி நாட்டைத் தாக்கியபோது அங்கே அதிகம் அழிவு ஏற்பட்டது என்று கேள்விப்பட்டிருந்தேன். கடந்த முப்பது வருட காலம் முல்லைத்தீவுப்பகுதிக்கு ஒருவரும் போக முடியாதபடி அது போராளிகளின் கையிலிருந்தது. இன்று போர் ஓய்ந்து நாட்டில் குண்டுச்சத்தமும், போராளிகளும், அரச படைகளும் அடிக்கடி எங்கும் உலாவி வராததால் அங்கு போய்வர முடிந்தது. அங்கு நிலைமை எப்படி இருக்கும், என்ன இருக்கும்? என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எப்போதோ பத்திரிகைகளிலும், இணையத்திலும் வாசித்த நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் மட்டுமே மனதில் நிழலாகக் குடிகொண்டிருந்தன. எதை எதிர்பார்ப்பது என்ற முன்கூட்டிய எண்ணங்கள் ஒன்றும் இல்லாமல் இரண்டு நண்பர்களுடன் அங்கு போனேன்.

Mullivaikalகாரில் போனபோது முதலில் நான் பார்த்தது முல்லைத்தீவு நந்திக் கடலுக்குப் போகுமுன் வரும் பரந்த முள்ளிவாய்க்கால் திடலே. கடைசிப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்கும் போவதற்கு வழியில்லாமல் இங்கு அகப்பட்டுத் தங்கியிருக்கும்போதுதான் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள் என்று டிரைவர் சொன்னார். அன்று திடலில் தண்ணீர் நிரைந்திருந்தது. அந்தத் தண்ணீருக்குக் கீழ் ஆயிரக்கணக்கானோரின் எழும்புகள் நிச்சயம் நிறைந்திருக்கும் என்றார் அவர். கடைசிப் போருக்குப் பின்னர் இந்த நீண்ட திடல் இரத்தக்காடாக இருந்ததாக சொன்னார். பெரியவர்களும், தாய்மாரும், கர்ப்பிணிகளும், வாலிபர்களும், பிள்ளைகளும் தொடர்ந்து விழுந்த குண்டுகளுக்கும், இரு தரப்பிரினதும் துப்பாக்கிச் சூட்டிற்கும் இங்கேயே இரையாகி மடிந்திருக்கிறார்கள். வழியெங்கும் எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் கைவிட்டுவிட்டுப்போன டிரக்குகளும், பஸ்களும், கார்களும், ஆட்டோக்களும் ஆயிரக்கணக்கில் நிறைந்து ஒதுங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. மூன்று வருடங்களாகியும் அவை அகற்றப்படாமல் பாதையின் இருபக்கங்களிலும் நிறைந்திருந்தன. வாய் மட்டுமிருந்தால் அவை பேசும் கதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். என்னால் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடிந்தது.

IMG_0628இதைத் தாண்டிப் போனபோது புதுக்குடியிருப்பு ஊர் வந்தது. இந்த இடம்தான் கடற்புலிகளின் கோட்டையாக இருந்ததாம். இங்குதான் பெரிய பெரிய போராளித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஊருக்குள் நுழைவதற்கு முன் ஸ்ரீ லங்கா படைகள் தங்களுடைய வெற்றியை அறிவிக்கும் முகமாக போரில் கைப்பற்றிய புலிகளின் அத்தனை ஆயுதங்களையும், விமான புரொப்பௌர் மற்றும் சப்மெரின் உட்பட புதுக்குடியிருப்பு மியூசியத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். தெற்கில் வாழும் சிங்கள மக்கள் லீவு நாட்களிளெல்லாம் கூட்டம் கூட்டமாக இங்கு வந்துபோகிறார்களாம். அதற்காக அரசாங்கம் நல்ல பாதைகளைப் போட்டுத் தந்திருக்கிறது.

புதுக்குடியிருப்பு நகருக்குள் போய்ப் பார்த்தேன். போராளிகள் இருந்த அடையாளங்கள் இன்றைக்கு பெருமளவில் இல்லை. பிரபாகரன் தங்கியிருந்த வீடு, கடல் புலித் தலைவன் சூசையின் வீடு என்று இரண்டு முக்கிய பகுதிகளும் மக்களின் பார்வைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. கடல்புலிகள் பயிற்சி பெற்ற நவீன நீச்சல் குளம் பிரமாண்டமாயிருந்தது. நான்கு வருடங்களுக்கு முன் இந்த இடம் எப்படியிருந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான போராளிகளின் பாதுகாப்பில் கட்டுப்பாட்டோடு இயங்கி வந்திருந்த ஓரிடம் இது.

இன்று ஸ்ரீ லங்காவில் போரில்லை. யார் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். ஓமந்தையில் மட்டும் தொடர்ந்தும் ஒரு செக் பாயின்ட் இருக்கிறது. அங்குகூட அரச படையினர் மரியாதையாகத்தான் நடந்துகொள்கிறார்கள். கிளிநொச்சியிலும் இன்று போராளிகள் இருந்த எந்த அடையாளமும் இல்லை. எல்லா இடங்களுமே புதுப்பிக்கப்பட்டு சீரடைந்து வருகின்றன. இந்திய நிறுவனமொன்று யாழ் நகர் போகும் வரையில் தெற்கில் இருந்து இரயில் போவதற்கு இரயில் பாதையைக் கட்டி வருகின்றது. இன்னும் சில வருடங்களில் நாடு வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த இடங்களைப் பார்த்தபோது எனக்கு பிரமிப்பாய் இருந்தது. கூட வந்த நண்பர், ஒரு சாம்ராஜ்யமே இல்லாமல் போனது போன்ற உணர்வு ஏற்படுகின்றது என்றார். உண்மையான வார்த்தைகள். அந்த நிலையில் தான் வவுனியாவுக்கு மேற்குப்புறப் பகுதிகள் முப்பது வருடங்களாக அரச படைகளால் கைப்பற்ற முடியாதபடி போராளிகளின் கையில் இருந்து வந்திருக்கின்றன. இன்று நிலைமை மாறிவிட்டது மட்டுமல்ல, அப்படியொரு நிலைமை இருந்ததா என்று கேட்குமளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு மியூசியம் இல்லாவிட்டால் இந்தப் பகுதிகள் தனியொரு நாடாக இயங்கி வந்திருந்தன என்பதற்கான அடையாளமே இல்லாமல் போயிருக்கும்.

இராஜ்ஜியங்கள் நிலைப்பதில்லை

IMG_0741ஸ்ரீ லங்காவின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? சிங்கள அரசர்களும், தென்னிந்திய தமிழ் அரசர்களும் பழங்காலத்தில் நாட்டைப் பங்கு போட்டு அரசாண்டு வந்திருக்கிறார்கள். ராஜராஜ சோழன், கரிகாலன், மானவர்மன் போன்றத் தமிழகத்து சோழ, பல்லவ மன்னர்கள் படையெடுப்பு நடத்தி ஸ்ரீ லங்காவை ஆண்டிருக்கிறார்கள். அநுராதபுரம் என்ற நகரைத் தலைநகரமாகக் கொண்டு எல்லாளன் என்ற தமிழ் அரசன் 44 வருடங்கள் நாட்டை ஆண்டிருக்கிறான். மலைநாட்டுப் பகுதியில் இருந்த கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட கடைசி அரசனான விக்கிரமராஜசிங்கன் ஒரு தமிழன். பல சிங்கள அரசர்களுக்கு தமிழ் மனைவியர் இருந்திருக்கிறார்கள். இந்நிலை போர்த்துக்கேயர்கள் நாட்டைப் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆள ஆரம்பிக்கும்வரை தொடர்ந்திருந்திருக்கிறது. வரலாறு மறுபடியும் திரும்புவதுபோலத்தான் முப்பது வருடங்கள் போராளிகள் நாட்டைத் துண்டுபோட்டிருந்தார்கள்.

இவ்வுலக இராஜ்யங்கள் என்றுமே நிலைத்ததில்லை. மகா அலெக்சாண்டரின் சாம்ராஜ்யம் ஒரு காலம் வரையில்தான் இருக்க முடிந்தது. பரந்து விரிந்து காணப்பட்ட ரோம சாம்ராஜ்யமும் இறுதியில் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இந்தியாவில் மொகாலய சாம்ராஜ்யமும் நிலைக்கவில்லை. சோவியத் யூனியனும், பேர்லீன் சுவரும் இருந்த இடம் தெரியாமல் போகவில்லையா? சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும், வீழ்வதும் வரலாற்றில் சகஜம்.

தமிழரசனான எல்லாளன் இருக்கும்வரை சிங்களத்து துட்டகெமுனுவுக்கு உறக்கம் கசப்பாக இருந்தது. ஒரு நாள் அவன் கோபத்துடன் கால்களை மடக்கிக்கொண்டு படுத்திருந்தானாம். ‘ஏன் மகனே இப்படிப் படுத்திருக்கிறாய்?’ என்று தாய் கேட்டபோது, ‘தெற்கில் கடல் இருக்கிறது, வடக்கில் தமிழன் ஆளுகிறான் எனக்கு எங்கே நிம்மதி’ என்று அவன் சொன்னதாகக் கதை இருக்கிறது. இறுதியில் போரில் எல்லாளனை வென்று துட்டகெமுனு ஆட்சிக்கு வந்தான். காசியப்பன் என்ற ஒரு சிங்கள அரசன் ஸ்ரீ லங்காவில் சீகிரிய என்ற ஒரு பெருங்குன்றின் மேல் வாழ்ந்து தன் இராஜ்யத்தை நடத்தினான். அவன் தன் தந்தை தாதுசேனனைக் கொடூரமாக உயிரோடு சமாதிகட்டிக் கொன்றவன். தன் சகோதரன் தன்னை ஒரு நாள் இந்தியப் படையுதவியோடு நிச்சயம் அழிக்காமல் விடமாட்டான் என்ற பயத்தில் இந்தக் குன்றின் மேல் பாதுகாப்போடு வாழ்ந்திருந்தான். கடைசிவரை பயத்தோடுதான் வாழந்தானாம். இறுதியில் சகோதரனோடு நடந்த போரில் மடிந்தான், தன்னுடைய இராஜ்யத்தையும் இழந்தான். எல்லாளனும், துட்டகெமுனுவும், காசியப்பனும் வருவார்கள் போவார்கள். அரசுகள் கூட வரும் போகும். இதெல்லாம் நிகழாத நாடுகள் இல்லை. அழிவும், வாழ்வும் நாடுகள் தோறும் சந்தித்திருக்கும் நிகழ்வுகள்தான்.

வெற்றி யாருக்கு?

இன்று ஸ்ரீ லங்கா அரசு பெரும் வெற்றியாகக் கருதும் போரில் உண்மையில் வெற்றி பெற்றது யார் என்று என்னால் கேட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு வெற்றியா? ஒரு வகையில் வெற்றிதான். இதற்கு முன்னிருந்த எந்த அரசும் செய்ய முடியாததை, உலகமே வியந்து நின்ற அசைக்க முடியாத போராளிகளை பல நாடுகளின் துணையோடு முற்றும் இல்லாமலாக்கி விட்டது மகிந்த அரசுக்கு கிடைத்த ஒருவகை வெற்றிதான். இதில் தமிழர்களுக்குத் தோல்வியா? அதுவும் இல்லை. மண்ணைப் பிடித்து அதை ஆளுவதுதான் வெற்றிக்கு அறிகுறி என்று சொல்ல முடியாது. ஆட்சி நிரந்தரமானதல்ல. அரசுகளும் நிரந்தரமானவையல்ல. ஆட்சியும், அரசும் வெற்றியை ஒருபோதும் நிர்ணயிப்பதில்லை. நாட்டில் தமிழர்களுடைய நிலை இன்றைக்கு உயர்வானதாக இல்லாமலிருக்கலாம். ஆனால், அது உண்மையில் தோல்விக்கு அறிகுறியல்ல.

நடந்த போரில் நீதி வெற்றியடைந்ததா? உண்மை வெற்றி பெற்றதா? மானுடம் வெற்றி அடைந்ததா? சமாதானம் வென்றதா? என்ற கேள்விகளுக்கு பதில் காண்பது அவசியம். என்னைப் பொறுத்தவரையில் இந்தப் போரில் முதலில் மனிதாபிமானம் படுதோல்வியடைந்திருக்கிறது. இரண்டு பகுதியினருமே அதைத் துப்பரவாக மறந்துவிட்டிருக்கிறார்கள். ஒரு இலட்சம் பேர் வரையில் போரில் மாண்டிருக்கிறார்கள். அநாவசியத்துக்கு அநேகர் இருந்த இடந்தெரியாமல் போயிருக்கிறார்கள். பிள்ளைகளை இழந்த தாய்மாரும், கணவனையும் மனைவியையும் இழந்தவர்களும் ஏராளம், ஏராளம். இவர்களுக்கு முன் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. கடைசி சில நாட்கள் யுத்தத்தில் அரச படையினரின் அழிவுச் செயல்கள் ஐ. நா சபையினதும், மனித உரிமைகள் அமைப்பினதும் விசாரணைக்கு உள்ளாகும் வரையில் கொடூரமாக இருந்திருக்கின்றன. ஒன்றை மறந்துவிடக்கூடாது, போரில் சாதகமான நிலை புலிகளுக்கு இருந்திருந்தால் அவர்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. நடந்த போரில் மனிதாபிமானத்துக்கு எவருமே இடங்கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. மனிதாபிமானம் தோற்றுப் போய்விட்டது. மனித நேயம் இல்லாத இடத்தில் உலகளவிலான நீதிக்குக்கூட இடமிருக்க முடியாது. அந்தவகையில் நாட்டில் நடந்த போர் உண்மையான வெற்றியை எவருக்கும் கொடுக்கவில்லை.

போரின் முடிவு மக்களுக்கு உண்மையான விடுதலையையும் கொடுக்கவில்லை. சாதாரண மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. விலைவாசி கோபுரம்போல் எழுந்து நிற்கிறது. ஒரு இராத்தல் ரொட்டி 60ரூபாய். நல்ல அரிசி 140 ருபாய். ஒரு மாதம் சாப்பாட்டுக்கு மட்டும் ரூபாய் 12,000ல் இருந்து 15,000 வரை ஒருவருக்கு தேவை என்று அங்கலாய்த்தார் ஒரு சிங்கள டிரைவர். பணத்தைக் கொடுத்து என்றுமிருந்திராதளவுக்குத் துணிகரமாக நாட்டைவிட்டுப் படகுகளில் கடல் தாண்டி எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியாவுக்குப் போகும்வரை மக்கள் (தமிழர்களும், சிங்களவர்களும்) வந்திருக்கிறார்கள் என்றால் உண்மை விடுதலை ஒருவருக்கும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். போரில்லை, குண்டுச் சத்தம் இல்லை என்பதை மட்டும் பெரும் வெற்றியாகக் கருதினால் அது நிச்சயம் கிடைத்திருக்கிறது. ஆனால், அது மட்டுந்தான்.

நாட்டில் இரு இனங்களும் ஒருவரை ஒருவர் ஏற்று, சந்தேகமில்லாமல் இணைந்து வாழும் வெற்றியைப் போர் ஏற்படுத்தியிருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சந்தேகமும், நம்பிக்கையின்மையும் இன்னும் அதிகமாகத்தான் வளர்ந்திருக்கின்றன. சிங்களவர்கள் வெற்றியைக் கொண்டாட, தமிழர்கள் வாய்பேசாமல் மனதில் புழுங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அதுதான் உண்மை நிலையுங்கூட.

அதேநேரம் நல்ல மனதுள்ள பல சிங்களவர்கள் எங்கும் இருக்கிறார்கள்தான். ஸ்ரீ லங்கா விமானத்தில் என்னோடு சம்பாஷனையில் ஈடுபட்ட ஒரு சிங்கள விமானப்பணிப்பெண் என்னைத் தமிழன் என்று நான் சொல்லாமலேயே அடையாளம் கண்டுகொண்டாள். என்னைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது. நாட்டில் நடந்த காரியங்களுக்கு என்னிடம் அவள் மன்னிப்புக் கேட்டாள். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. தன் தாய் நோய்க்கு மருந்து எடுத்தது அருணாச்சலம் என்ற கொழும்பு, வெள்ளவத்தையில் வாழ்ந்த ஒரு தமிழ் டாக்டர் என்றும் அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, ஏழைகளிடம் பணம் வாங்காமல் சிகிச்சை அளித்தவர் என்றும் சொன்னாள். அந்த சிங்களப் பெண்ணால் போரின் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. அதை அவள் நடந்திருக்கக் கூடாததொன்றாக, தான் வெட்கப்பட வேண்டியதொன்றாகக் கருதினாள். அதனால்தான் சுயமாக அவளால் மன்னிப்புக் கேட்காமல் இருக்க முடியவில்லை. இப்படியான நல்ல உள்ளங்கள் அங்கு ஏராளம் இருக்கின்றன.

மெய்யான விடுதலை

வாழ்க்கையில் உண்மையான விடுதலை எது தெரியுமா? மனிதன் தான் பிறந்ததற்கான அர்த்தமுள்ளவனாக இந்த உலகில் வாழ்வது மட்டுந்தான். தமிழராக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும் இது மட்டுமே உண்மையான விடுதலையாக இருக்க முடியும். வெறும் மண்ணுக்காகப் போரிடுவதும், உயிரைக் கொடுப்பதும் அர்த்தமில்லாதது. அதை எத்தனையோ பேர் செய்து இல்லாமல் போயிருக்கிறார்கள் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டு வேதத்தில் நாம் வாசிக்கிறதுபோல் அரசனான ஆகாப், நாதாபின் நிலத்துக்காக ஆசைப்பட்டு கொலையையும் செய்து என்னத்தைக் கண்டான்? எப்படியோ ஒரு நாள் இழக்கப்போகிறவைகளுக்காக, நிரந்தரமற்றவைகளுக்காக உயிரைப் பணயம் வைப்பதில் என்ன பிரயோஜனம்?

நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆவி நிரந்தரமானது. அது அழியாதது. இந்த உலகத்தில் உயிர் போன பின்பு நம் ஆவி அழியாமல் அழிவில்லாததொரு இடத்துக்குப் போய்விடும். நாம் இந்த உலகில் பிறந்ததற்கான அர்த்தமுள்ளவர்களாக வாழுகிறபோது நம்முடைய ஆவி அழிவில்லாத, நித்திய சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கும் இடத்துக்குப் போய்விடும். அந்த இடமே கடவுளிருக்கும் இடம். பிறந்ததற்கான அர்த்தமே இல்லாதவர்களாக வாழுகிறபோது அழிவில்லாத, நித்திய தண்டனையை அனுபவிக்கும் இடத்துக்கு மனித ஆவி போய்ச்சேரும். இது கடவுள் ஏற்படுத்தியிருக்கும் நியதி. இதை ஒருவராலும் மாற்ற முடியாது. இந்த உலகில் வாழ்கிறபோது இறப்பதற்கு முன் நாம் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. இதை அவனால் தவிர்த்துவிட முடியாது. இதை உணராதவர்கள்தான் அழியப்போகிற இந்த உலகத்தைச் சேர்ந்தவைகளுக்காக மட்டும் வாழுவார்கள், போராடுவார்கள். சாதி, இனம், மதம், மொழி, பிறந்த மண், உறவுகள், அரசியல், கோட்பாடுகள் என்று மனிதன் ஒருநாள் இல்லாமல் போகப்போகிற அநேக விஷயங்களுக்காக தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறான்; அவற்றிற்காக வைராக்கியமாக வாழ்கிறான், அழிந்தும் போகிறான்.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாள் இழக்கப்போகிறவைகளுக்காக உயிரைப் பணயம் வைப்பது அறிவுடைமைக்கு அடையாளமல்ல. அதில் அடைகின்ற வெற்றிகளும், தோல்விகளும் நிரந்தரமானவையுமல்ல. அழிவில்லாமல் இருக்கப்போகிற நம் ஆவி அழிவில்லாத இடத்தைப் போய்ச் சேருவதற்காக நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்தப்படி பார்த்தால் இன்றைக்கு ஸ்ரீ லங்காவுக்குத் தேவை அழிவில்லாமல் வாழக்கூடிய ஜீவனைக் கொடுக்கக் கூடிய இயேசு கிறிஸ்து மட்டுமே. சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி வைராக்கியத்தோடு பிரசங்கிக்கப்பட வேண்டும். இனப்பாகுபாட்டை இருதயத்தில் இருந்து நிரந்தரமாக இல்லாமலாக்கி ஏனைய இனங்கள் மீது அன்பு காட்ட வைக்கும் இயேசுவின் அன்பைப் பற்றிய செய்தி அங்கே அதிரடியாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் சந்தேகித்து தள்ளிவைத்து வாழும் வாழ்க்கைக்கு முடிவுகட்டக்கூடிய பரலோக அன்பை இரு இனத்தாரும் நாட்டில் நடைமுறையில் அனுபவித்து வாழ இன்று அங்கு தேவை சுவிசேஷமே. அதற்கான சுதந்திரம் இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. எங்கும் போய் சுவிசேஷத்தை சொல்லக்கூடிய வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் பயன்படுத்திக் கொள்ளுவார்களா? இன்றிருக்கும் சுதந்திரம் இல்லாமல் போகக்கூடிய காலம் நிச்சயம் வரலாம். சுவிசேஷத்தை பகிரங்கமாக சொல்ல முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். அதற்குள் நாட்டு மக்களின் நிரந்தர விடுதலைக்கு அவசியமான, பரலோக அனுபவத்துக்கு அவசியமான இயேசுவின் நற்செய்தி அங்கே கிராமங்கள், நகரங்கள் தோறும் போய்ச் சேரவேண்டும். அந்த பாரம் ஸ்ரீ லங்கா சபைகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏற்படுமா?

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “அர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s