திருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்

சமீபத்தில் 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நான் ஒரு செய்தியில் விளக்கவேண்டியிருந்ததது. நம் இனத்து கிறிஸ்தவர்களுக்கு அவர்களைப்பற்றி அதிகம் தெரியாமல் இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திருச்சபை வரலாறுபற்றி இதுவரை இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். மூன்றாவது இந்தப் பியூரிட்டன்களைப்பற்றியதாக இருக்கும். அதை எழுதும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். அதை வேகமாக எழுதி வெளியிட கர்த்தரையே நம்பியிருக்கிறேன். அது வெளிவரும்போது நிச்சயம் அநேகருக்கு பலனுள்ளதாக இருக்கும்.

பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நினைக்கும்போது அவர்களுடைய வரலாறு தெரிந்தவர்களுக்கு உடலில் புல்லரிப்பு ஏற்படாமல் இருக்காது. ஒருவருக்குப் புல்லரிப்பை உண்டாக்கும் அளவுக்கு ஆவிக்குரிய வரங்களையும், இறையியல் வளத்தையும், ஆவிக்குரிய அனுபவத்தையும் கொண்டிருந்து பியூரிட்டன் பெரியவர்கள் ஆத்துமாக்களுக்கு போதகப்பணி செய்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் எழுதிக்குவித்திருக்கும் ஆவிக்குரிய இலக்கியங்கள் எண்ணற்றவை. அவர்களுடைய காலம் மெய்யான எழுப்புதலின் காலம்; பரிசுத்த ஆவியானவர் வல்லமையோடு செயல்பட்ட காலம். அத்தகைய எழுப்புதல்கள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்திருக்கவில்லை. அத்தோடு அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்ததைப்போல பரவலாக வேதஅறிவிலும், ஆவிக்குரியவிதத்திலும் ஆத்துமாக்கள் உயர்ந்தநிலையில் இருந்ததை எல்லா எழுப்புதல் காலங்களிலும் வரலாற்றில் நாம் வாசிப்பதில்லை. பியூரிட்டன் போதகர்களைப்போல வேதஞானத்தையும், ஆத்தும அனுபவத்தையும், மேலான கல்வித்தரத்தையும் கொண்டிருந்த பிரசங்கிகள் எல்லாக் காலங்களிலும் இருந்ததில்லை. எத்தனையோவிதங்களில் பியூரிட்டன் பெரியவர்களின் காலப்பகுதி என்னைப்பொறுத்தவரையில் மிகவும் தரமுயர்ந்த காலமாக இருந்திருக்கிறது.

பியூரிட்டன் நூல்கள்

டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் தன்காலத்தில் பியூரிட்டன் பெரியவர்களுடைய எழுத்துகளை அச்சிட்டு வெளியிடுவதில் அதிக அக்கறைகாட்டினார். அவருடைய உந்துதலாலேயே பேனர் ஆவ் டுருத் வெளியீடுகள் அவற்றைக் கண்டுபிடித்து பிரசுரித்து வெளியிட ஆரம்பித்தது. பியூரிட்டன் நூல்களை போதகர்கள் வாசிப்பதற்கு வசதியாக இலண்டனில் அத்தகைய நூலகம் அமைய லொயிட் ஜோன்ஸ் வழிவகுத்தார். அத்தோடு அவர் ஜிம் பெக்கரோடு இணைந்து பியூரிட்டன் கொன்பரன்ஸ் ஒன்றை வருடாந்தம் போதகர்களுக்காக நடத்தி வந்திருந்தார். லொயிட் ஜோன்ஸும் பெக்கரும் பியூரிட்டன்களின் வாழ்க்கையிலும், போதனைகளிலும் அதிக அக்கறைகாட்டி அவர்களைப்பற்றியும், அவர்களுடைய போதனைகளைப்பற்றியும் அதிகம் எழுதியிருக்கிறார்கள்.

டாக்டர் ரொபட் மார்டின்

மறைந்துவிட்ட சீர்திருத்த பாப்திஸ்து போதகரும், இறையியலறிஞரும் நண்பருமான டாக்டர் ரொபட் மார்டின் பியூரிட்டன்களுடைய நூல்கள்பற்றிய விபரங்களைத் தொகுத்து வெளியிட்டார் (A Guide to the Puritans). இந்தத் தொகுப்பு இன்று அச்சில் இருந்துவரும் பியூரிட்டன் நூல்களைப்பற்றிய தொகுப்பு. 16ம் 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களுடைய எழுத்துக்கள் மட்டுமல்லாமல் அந்தக் காலத்துப் பியூரிட்டன்களின் வழிவந்தவர்களாக அவர் கருதுகிறவர்களுடைய எழுத்துக்களையும் ரொபட் மார்டின் இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார். ஆகவே இந்நூல் 17ம் நூற்றாண்டைக் கடந்தும் போகிறதாக இருக்கிறது. பியூரிட்டன் நூல்களின் விபரங்கள்பற்றிய முடிவான நூலாக இதைக்கருத முடியாது. அதை நூலாசிரியரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.

பியூரிட்டன் எழுத்துக்களிலும், அவர்களுடைய ஊழியத்திலும், வாழ்க்கையிலும் அதிக அக்கறைகாட்டி கடினமாக உழைத்து இந்தத் தொகுப்பை ரொபட் மார்டின் 1997ல் வெளியிட்டார். அவருக்கு பியூரிட்டன் போதனைகளிலும் விசுவாசத்திலும் எந்தளவுக்கு அதீத ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது என்பதை அவருடைய இன்னொரு நூலான, ஓய்வுநாளைப்பற்றிய ‘கிறிஸ்தவ சபத்து’ (Christian Sabbath) எனும் நூல் விளக்குகிறதாக இருக்கிறது. பியூரிட்டன்களின் போதனைகளில் நம்பிக்கையும் வைராக்கியமும் இருக்கும் ஒருவரால்தான் ஓய்வுநாளைப்பற்றி அத்தனைத் தெளிவாகவும், ஆழமாகவும், விளக்கமாகவும் பயனுள்ள முறையில் எழுதமுடியும். இன்று ஓய்வுநாளாக ஒரு நாளைக் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தைக்கொண்டிருக்கும் அன்டிநோமியன் கூட்டத்தின் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ரோபட் மார்டின் ஓய்வுநாளைப் பின்பற்றும் விசுவாசிகள் அனைவருக்கும் இந்நூல் மூலம் பேருதவி செய்திருக்கிறார்.

பியூரிட்டன்கள் யார்?

பியூரிட்டன்கள் யார்? என்ற கேள்விக்கு பதிலளிப்பது அவசியம். அவர்களைப்பற்றி எல்லோரும் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடியாது. பியூரிட்டன்களின் காலமாக 16, 17ம் நூற்றாண்டுகளைக் கருதலாம். 16ம் நூற்றாண்டில் மார்டின் லூத்தர், ஜோன் கல்வின் ஆகியோர் மூலம் கர்த்தரின் திருச்சபை சீர்திருத்தம் நிகழ்ந்தபிறகு அந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் 17ம் நூற்றாண்டில் சீர்திருத்தம் தொடரவேண்டும் என்ற வைராக்கியத்தோடு பிரிட்டனில் இங்கிலாந்து திருச்சபையில் போதகர்கள் பணிபுரிந்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து திருச்சபை ஆராதனைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றது. இந்த மாற்றங்களை அநேக சீர்திருத்த போதகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் அது திருச்சபை மறுபடியும் கத்தோலிக்க அராஜகத்தை நோக்கிப் போவதற்கு ஆரம்பமாக இருப்பதாகக் கருதினார்கள். அத்தோடு அவர்களுடைய எதிர்ப்புக்குக் காரணம், கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலாக வேதம் பற்றிய முக்கிய கோட்பாட்டுக்கு மாறுபட்டதாக அந்த மாற்றங்கள் இருந்ததுதான். இந்தப் புதிய மாற்றங்களுக்கு எதிர்ப்புக்காட்டிய சீர்திருத்த போதகர்கள், அவை வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஆராதனைத் தத்துவங்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கண்டனர். அவர்கள் வேதத்தின் வழியில் மட்டுமே ஆராதனை அமைய வேண்டும்; அதற்கு வெளியில் போவதோ, வேதம் விளக்கும் ஆராதனை முறைகளோடு எதையும் இணைப்பதோ யெரொபெயாம் வழியில் போய் கர்த்தருக்கு விரோதமான மனித இச்சைகளை மேன்மைப்படுத்தும் சுயஆராதனையிலேயே போய் முடியும் என்று கருதினார்கள். பியூரிட்டன்கள் காலத்திலேயே வேதம் போதிக்கும் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனை முறை’ தத்துவம் உருவானது. இதைப் பியூரிட்டன்கள் எழுதி வெளியிட்ட விசுவாச அறிக்கைகள் உள்ளடக்கியிருக்கின்றன. இந்த திருச்சபை ஆராதனை முறைகளில் ஏற்பட்ட இறையியல் பிரச்சனையே ‘பியூரிட்டன்’ (தூய்மைவாதி) என்ற பெயர் உருவாதற்குக் காரணமாக இருந்தது. இப்படியாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆராதனை வழிகளை நிராகரித்து அவற்றை சபையில் பின்பற்ற மறுத்த அத்தனைப் போதகர்களும் திருச்சபையில் இருந்து  இங்கிலாந்து சபையாலும், அரசாலும் நீக்கப்பட்டனர். அப்படி நீக்கப்பட்டவர்கள் வேத அதிகாரத்தையும், திருச்சபையின் தூய்மையையும் வலியுறுத்தியதால் ‘தூய்மைவாதிகள்’ (Puritans – பியூரிட்டன்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டதோடு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; அநேகர் இறக்கவும் நேர்ந்தது. பலர் குடும்பங்களோடு மேபிளவர் என்ற கப்பலிலேறி நாடு கடந்து அமைரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதிக்குப் போய் வாழ்ந்து கர்த்தரின் பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்களே இன்றைய அமெரிக்கா உதயமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள்.

பியூரிட்டன்களின் பிரசங்கமுறை 

17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களுடைய போதனைகள், பிரசங்கங்களைப்பற்றி விளக்க விரும்புகிறேன்; முக்கியமாக போதகர்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் இது உதவும்.

பியூரிட்டன் பெரியோர் வாழ்ந்த 17ம் நூற்றாண்டில் விசுவாசிகளின் ஆவிக்குரிய தரமும், வேத அறிவும் இன்றிருப்பதைவிட மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. அன்றைய காலத்தை ஆவிக்குரிய எழுப்புதல் காலம் என்றும் சொல்லலாம். அத்தோடு பியூரிட்டன் பெரியோரின் போதனைகளும் பிரசங்கங்களும் இன்றிருப்பதைவிட வித்தியாசமாக இருந்தன. அவர்கள் வேத அறிவில் ஜாம்பவான்களாக இருந்தனர்; அதில் மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். ஜோன் ஓவன், ஜோன் பிளேவல், ரிச்சட் சிப்ஸ், தோமஸ் புரூக்ஸ், தொமஸ் குட்வின் போன்ற பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன். அன்று அவர்கள் வாசிப்பதற்கு நூல்கள் அதிகம் இருக்கவில்லை. இருந்த கொஞ்ச நூல்களைப் பயன்படுத்தி அவர்கள் இறையியல் அறிவைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு வேதத்தில் அவர்கள் நீந்தி மூழ்கி முத்தெடுக்கப் பழகியிருந்தனர். வேதம் அவர்களில் ஊறிப்போயிருந்தது. அதன் அதிகாரத்தில் அவர்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

அவர்களுடைய பிரசங்கங்களும் போதனைகளும் மிகவும் ஆழமானதாகவும், இறையியல் தரத்தில் அதிஉயர்ந்த நிலையிலும் இருந்தன. வேதம் அவர்களுடைய பிரசங்கங்களில் கடல்போல் விரிந்திருந்தது. வேதவசனங்களில் இருந்து நடைமுறைக்குத்தேவையான இறைபோதனைகளை அவர்கள் கல்லில் இருந்து நாரெடுப்பதுபோல் உருவியெடுக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருந்தனர். பியூரிட்டன் பிரசங்கங்கள் ஆவிக்குரியதாகவும், அவற்றின் இறையியல் போதனைகள் நடைமுறைக்குகந்தவையாகவும், எளிமையானவையாகவும், ஏற்ற இடங்களில் அவசியமானளவுக்கு உதாரணங்களால் நிரம்பியவையாகவும், பக்தியுணர்வையும் ஆவிக்குரிய உணர்வுகளைத் தூண்டுவனவாயும், கேட்கக்கேட்க இன்னும் வேண்டும் என்று ஏங்கவைப்பனவாயும், கர்த்தரை மகிமைப்படுத்தியும், ஆவியானவருடைய வல்லமையோடும் வந்தவையாக இருந்தன. அவற்றைக்கேட்ட ஆத்துமாக்கள் ஆத்தும வளர்ச்சியடைந்து அத்தகைய பிரசங்கங்களுக்காக அலைந்தவையாக இருந்தன. பியூரிட்டன் திருச்சபைகள் அன்று ஆத்மீகத் தரத்திலும், வளர்ச்சியிலும் சிறந்தவையாக இருந்தன.

பியூரிட்டன் பிரசங்கங்களில் கர்த்தருடைய அதிகாரத்தையும், வேத அதிகாரத்தையும் காணாமல் இருக்கமுடியாது. இயேசு பிரசங்கித்தபோது மக்கள் அதில் ‘அதிகாரத்தைக்’ கண்டதுபோல் பியூரிட்டன் திருச்சபை மக்களும் பியூரிட்டன் பிரசங்கங்களில் அதிகாரத்தைக் கண்டனர். இன்றைய பிரசங்கிகள்போல் ஆத்துமாக்களை வசியப்படுத்த அநாவசியமான உலக சிந்தனைகளையும், சுயஆற்றலையும் பியூரிட்டன் பிரசங்கிகள் நம்பியிருக்கவில்லை. அவர்கள் வேதத்தையும், ஆவியின் வல்லமையையும் மட்டுமே நம்பிப் பிரசங்கித்தார்கள். மார்டின் லூத்தரைப்போலவே அவர்கள் மனித பயமில்லாதவர்களாக இருந்தனர்.

பியூரிட்டன்கள் பிரசங்கங்கள் பத்துப் பதினைந்து நிமிட ‘யூடியூப்’ பிரசங்கங்களாக இருக்கவில்லை. அவர்களுடைய பிரசங்கங்கள் எத்தனை மணிநேரங்களை அவர்கள் படிப்பறையிலும், ஜெபத்திலும் கழித்திருப்பார்கள் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியவையாக இருந்தன. ஓய்வுநாள் பிரசங்கங்களைத் தவிர பியூரிட்டன்கள் வாரநாட்களில் விரிவுரைகளை அளித்தனர். அவற்றை அவர்கள் ‘விரிவுரைகள்’ என்றே அழைத்தனர். போதகர்களும், ஆத்துமாக்களும் திரளாகக்கூடி இவற்றைக்கேட்டு அனுபவித்தார்கள். பியூரிட்டன்களுடைய பிரசங்கங்களின் இறுதியில் அவர்கள் கொடுத்திருந்த பயன்பாடுகள் (applications) 3 அல்லது 4 ஆக இல்லாமல், 25, 34, 64 ஆகக்கூட இருந்தன. அந்தப் பயன்பாடுகளை வைத்து நாம் 6 மாதங்களுக்கு பிரசங்கம் செய்துவிடக்கூடிய அளவுக்கு ஆழமான போதனைகளை அவர்கள் தந்திருந்தார்கள். அவர்களுடைய பயன்பாடுகள் பிரசங்கிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் வருபவையாகவும், நேரடியானவையாகவும், இதயத்தைக் குத்திக்கிழிப்பவையாகவும் இருந்தன.

பியூரிட்டன்கள் ஒரு வேத நூலில் இருந்து தொடர்ச்சியாக பலவருடங்களுக்குப் பிரசங்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஜோசப் கெரல் (Joseph Caryl) எனும் பியூரிட்டன் பிரசங்கி யோபு நூலில் இருந்து 23 வருடங்களுக்கு பிரசங்கங்களை அளித்திருந்தார். அந்த நூல் பல வால்யூம்களாக 1400 பக்கங்களைக் கொண்டிருந்தது. அத்தனை வருடங்களுக்கு ஒரே நூலில் இருந்து பிரசங்கம் செய்ய அவருக்கு யோபுவைப் போன்ற பொறுமை இருந்திருக்க வேண்டும்.

இவரையும் மீறியிருந்தார் இன்னொரு பியூரிட்டன் பிரசங்கி. அவர் பெயர் வில்லியம் கௌஜ் (William Gouge). இவர் இங்கிலாந்தில் பிளெக்பிரையர்ஸ் என்ற இடத்தில் போதகராக இருந்தார். இவர் எபிரெயர் நூலில் இருந்து 33 வருடங்களுக்கு பிரசங்கம் அளித்திருந்தார். அவை 1000 பிரசங்கங்களாக இருந்தன. இந்நூலில் அவர் செய்த பிரசங்க குறிப்புகளின் சுருக்கத்தை மட்டும் அச்சிட்டால் அவை மூன்று வால்யூம்களாக இருக்கும். இந்தளவுக்கு, இத்தனை வருடங்களுக்கு ஒரே நூலில் இருந்து பிரசங்கம் அளிப்பதை இன்றைய பிரசங்கிகள் குருட்டார்வத்தில் வழக்கமாக வைத்திருக்கக்கூடாது. வேத அறிவில் அடிமட்டத்தில் இருக்கும் நம்மினத்து மக்களுக்கு அது பலவித ஆவிக்குரிய ஆபத்துக்களை விளைவித்துவிடும். அத்தோடு அந்தளவுக்கு அத்தனை காலத்துக்கு ஒரு நூலில் இருந்து பிரசங்கிக்கக்கூடிய ஆவிக்குரியவர்களாக, வேதத்தில் ஊறிப்போன ஜாம்பவான்களை இந்தத் தலைமுறையில் எங்கேயும் பார்க்கமுடியாது.

இன்னொரு அருமையான பியூரிட்டன் பிரசங்கியான ஜெரமாயா பரோஸ் (Jeremiah Burroughs) ஓசியாவில் இருந்து கொடுத்த பிரசங்கங்கள் 4 வால்யூம்களாக இருக்கின்றன. வில்லியம் கிரீன்ஹில் (William Greenhill) எசேக்கியலில் இருந்து கொடுத்த பிரசங்கங்கள் 5 வால்யூம்களாக இருக்கின்றன. தோமஸ் மேன்டன், ஸ்டீபன் சார்நொக், ரொபட் போல்டன் போன்ற வேறு பியூரிட்டன் பிரசங்கிகளும் இந்தவிதத்தில் பல வால்யூம்பகளை நிரப்புமளவுக்கு பிரசங்கித்திருக்கிறார்கள். மெத்தியூ மீட் (Matthew Mead) என்ற பியூரிட்டனினுடைய 300 பக்க நூல் அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:28 வசனத்தில் இருந்து மட்டுமே கொடுக்கப்பட்ட பல பிரசங்கங்களின் தொகுப்பு. இதேபோல் ஜோன் ஓவனும் பாவத்தை எப்படி அழிப்பது என்பதுபற்றி ரோமர் 8:13ஐ மட்டுமே பிரசங்க வசனமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான பக்கங்களை நிரப்புமளவுக்கு பிரசங்கம் செய்திருக்கிறார்.

பியூரிட்டன்களின் காலத்தில் மக்களுக்கு அதிக நேரமிருந்து, வேதத்தைக் கரைத்துக்குடித்து அதில் ஊறிப்போயிருக்குமளவுக்கு வேதஞானம் இருந்தது. பியூரிட்டன்களின் ஆழமான, மிகமிக நீளமான, தொடரான பிரசங்கங்களை அதிக நேரத்திற்கு அமர்ந்திருந்து காதால்கேட்டுச் சிந்திக்கும் ஆற்றலுள்ளவர்களாக ஆத்துமாக்கள் அன்று இருந்தனர். அதுவும் அக்காலம் மெய்யான ஆவிக்குரிய எழுப்புதலின் காலமாக, மெய்யான பக்திவிருத்தி பொதுவாகவே பரவலாகக் காணப்பட்ட காலமாக இருந்தது.

நாம் வாழுகின்ற இந்தக்காலத்தில் அத்தகைய ஆழமும், அழுத்தமும் கொண்ட தரமுடைய, நீண்ட சிந்திக்கவேண்டிய போதனைகளைக் கிரகித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆத்மீக அனுபவத்தையும், பக்திவிருத்தியையும், ஆவிக்குரிய தரத்தையும், வேதத்தில் ஆழ்ந்த அறிவையும் நம்மினத்து மக்கள் கொண்டிருக்கவில்லை. பொதுவாக நம்மினத்து மக்களில் பெரும்பாலானோர் மிகமிகக் குறைந்தளவு வேத அறிவையே கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் வேதஅறிவு பிரசங்கிகளுக்கும், ஆத்துமாக்களுக்கும் அடியோடு இல்லாத காலமிது. பயனுள்ள, நல்ல, ஆழமான வேதப்பிரசங்கத்தை ஒருமணி நேரம் கேட்டுச் சிந்தித்துக் கிரகிக்கும் ஆத்மீக ஆற்றலும் நம் காலத்து மக்களுக்கு இல்லை. அவர்களால் 10 அல்லது 12 நிமிடங்கள் கொண்ட உப்புச்சப்பில்லாத, அறைகுறையான வேதவிளக்கத்தை தரும் ஆடியோ, வீடியோ கிளிப்பை வட்ஸ்அப்பிலோ, யூடியூபிலோ கேட்டுச் சகிக்குமளவுக்கு மட்டுமே பொறுமை இருக்கிறது. வாசிக்கும் வழக்கத்தையும், சிந்திக்கும் திறத்தையும் அறவே கொண்டிராமல் இருக்கும் நம்மினத்து மக்களுக்கு பியூரிட்டன் பிரசங்கங்களும், எழுத்துக்களும் புதிராகத்தான் தெரியும்.

உண்மையில் பியூரிட்டன் பெரியவர் ஒருவரின் நூலை அதிலுள்ளபடி இன்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அதைப்புரிந்துகொள்ள நம் மக்கள் கஷ்டப்படுவார்கள். முதலில், அவர்களால் அத்தனை பக்கங்களை வாசிக்க முடியாது, அந்தளவுக்கு துப்புரவாக வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள் நம்மினத்து மக்கள். அவற்றில் காணப்படும் போதனைகள் மட்டுமல்லாது 17ம் நூற்றாண்டுக்கே உரிய எழுத்து நடையும் பிரசங்க முறையும் நம் மக்களை அவற்றின் பக்கமே தலைவைக்க முடியாமல் செய்துவிடும். பியூரிட்டன் பெரியவர்களின் பிரசங்க முறையைப் பின்பற்றி யாராவது இன்று பிரசங்கம் செய்தால் சபையில் ஒருவர் மிஞ்சுவதும் அதிசயந்தான். இதை நான் பியூரிட்டன் பெரியவர்களின் குறைபாடாகவோ அல்லது அவர்களைக் கொச்சைப்படுத்திக்காட்டுவதற்காகவோ சொல்லவில்லை. அவர்களுடைய அருமையான போதனைகளை வாசித்து, உள்ளெடுத்து, சிந்தித்து, ஆராய்ந்து பக்குவமாகப் பிரித்துத்தொகுத்து நம்மினத்து மக்கள் கிரகித்துக்கொள்ளக்கூடிய விதத்தில் கொடுக்க வேண்டியதே இன்றைய பிரசங்கியின் கடமையாக இருக்கின்றது. ஒருவர் சொன்னார், ‘நாம் சிந்தனாவாதிகளைப்போல சிந்திக்கப் பழகியிருக்கவேண்டும்; ஆனால் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பிரசங்கிக்க வேண்டும்’ என்று.

மனித இருதயத்தின் ஆழத்தை அறிந்தவர்கள்

பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளில் இன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். அவர்கள் மனித இருதயத்தை வேறு எந்தக்காலப்பகுதிப் போதகர்களையும்விட ஆழமாக அறிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ (The Doctors of the Soul) என்று அழைக்கப்பட்டார்கள். பியூரிட்டன்களால் மட்டுமே ’பாவத்தின் பாவம்’ (The Plague of Plagues) என்ற நூலையும் (ரால்ப் வென்னிங்), ‘கேடுகளிலெல்லாம் மகாக் கேடு’ (The Evil of All Evils – ஜெரமாயா பரோஸ்), ‘நான்கு நிலைகளில் மனித இருதயம்’ (Human Heart in its Four Fold State – தொமஸ் பொஸ்டன்) என்ற நூலையும், ‘சாத்தானின் ஏமாற்றுவழிகளுக்கெதிரான ஆசீர்வாதமான தீர்வுகள்’ (The Precious Remedies Against Satan’s Devices – தோமஸ் புரூக்ஸ்) போன்ற நூல்களை எழுத முடிந்தது. அவர்களைப்போல பாவத்தையும், அது மனித இருதயத்தை ஏமாற்றி எந்தெந்த வழிகளில் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலுள்ளது என்பதையும், சாத்தானின் வஞ்சக வழிமுறைகளையும் துல்லியமாக விளக்கிப் பிரசங்கித்தும், எழுதியுமிருந்தவர்கள் வேறு எந்தக் காலப்பகுதியிலும் இருக்கவில்லை. இந்தளவுக்கு ஆழமாக அவர்கள் மனித இருதயத்தின் கேட்டையும் ஏமாற்றுத்தன்மையையும் அறிந்துவைத்திருந்ததால்தான் அவர்களால் மனித உள்ளத்தை தீவிரமாக ஆராய்ந்து அதுபற்றிய மிகவும் ஆழமான, நீண்ட வேத விளக்கங்களை பக்கம் பக்கமாக எழுதித்தர முடிந்தது. அத்தோடு அவர்களைப்போல சுயபரிசோதனை செய்துகொள்ளும்படிக் கிறிஸ்தவர்களை வலியுறுத்தியவர்களும் வேறு காலப்பகுதிகளில் இருந்ததில்லை. இதன் காரணமாக இந்த விஷயத்தில் பியூரிட்டன் எழுத்துக்களையும், போதனைகளையும் வாசித்து அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள்.

பியூரிட்டன்கள் அளவுக்கதிகமான சுயஆய்வுக்காரர்களா?

பியூரிட்டன்களைப்பற்றிய ஒரு குற்றச்சாட்டு, அவர்கள் அளவுக்கு அதிகமாக தேவையில்லாதளவுக்கு இருதயத்தைத் துளைத்து ஆராய்ந்து காலத்தைப் போக்கினார்கள் என்பது  (introverts). அதைச் செய்வதை விட்டுவிட்டு அவர்கள் கிறிஸ்துவைப் பிரசங்கித்தோ எழுதியோ இருக்கலாமே என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு சரியானதல்ல; பியூரிட்டன்களைப் புரிந்துகொள்ளாததால் உண்டாகும் ஒரு எண்ணந்தான் இது. பியூரிட்டன்களைப்போல கிறிஸ்துவைப்பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் பிரசங்கித்தும் போதித்தும் வந்தவர்கள் இல்லை. அதை ஜோன் ஓவன், தொமஸ் பொஸ்டன், தொமஸ் புரூக்ஸ், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பிளேவல், வில்லியம் பேர்கின்ஸ், ஜெரமாயா பரோஸ், ரிச்சட் பெக்ஸ்டர், கிரிஸ்டோபர் லவ் ஆகியோருடைய எழுத்துக்களில் காணலாம். அதேநேரம் பியூரிட்டன் பெரியவர்கள் பாவத்தைப்பற்றிய சரியான அறிவு இல்லாமல், மனித இருதயத்தின் போக்கைத் துல்லியமாக தெரிந்துகொள்ளாமல் ஒருவன் கிறிஸ்துவை அறியவோ, மேன்மைப்படுத்தவோ முடியாது என்று நம்பினார்கள். இயேசு கிறிஸ்துவாகிய தைலத்தை ஒருவன் நெஞ்சில் அதன் வலிபோகப் பூசவேண்டுமானால், அவனுடைய இருதயம் முதலில் நொருங்கி தன் பாவத்தின் கோரத்தை உணரவேண்டும் என்பதில் பியூரிட்டன்கள் ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதனால்தான் அகிரிப்பாவைப்பற்றிய மெத்தியூ மீட்டின் நூலும், பாவத்தின் பாவம் என்ற ரால்ப் வென்னிங்கின் நூலும் கிறிஸ்தவ வேஷதாரிகளுக்கு வேம்பு போல கசப்பாக இருக்கும். பாவத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்து ஆத்துமாக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு போலிச்சுவிசேஷமாகிய இனிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பிரசங்கிகள் பியூரிட்டன்கள் பக்கத்திலும் நெருங்கமுடியாது; பியூரிட்டன்களின் தூய்மையான வாழ்க்கையும் போதனைகளும் அவர்களை எரித்துவிடும்.

பியூரிட்டன்கள் பரிசுத்தமான கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதுபற்றி ஆழமாக எழுதிக்குவித்திருந்தார்கள். அவர்களுடைய பிரசங்கங்களில் அது முக்கிய போதனையாகக் காணப்பட்டது. பரிசுத்தத்தின் தேவன் பரிசுத்தத்தையே தன் மக்களிடம் நாடுவதாக அவர்கள் பொறுப்போடு வாழ்ந்து காட்டி ஆத்துமாக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கு பாவத்தோடு போராடி அதை அன்றாடம் கிறிஸ்தவர்கள் அழித்து வாழவேண்டுமென்பதை ஒவ்வொரு பியூரிட்டன் பெரியவரும் ஆணித்தரமாகப் பிரசங்கித்தார்கள். இறையியல் அறிஞர்களுக்கெல்லாம் இளவரசனான ஜோன் ஓவனின் எழுத்துக்கள் இதற்கு முக்கியமான உதாரணம். பியூரிட்டன்கள் கர்த்தரின் கட்டளைகளை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ்வில் கிருபையின் மூலம் பின்பற்றி பாவத்தை அழித்து வாழவேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். கிறிஸ்துவை வாழ்க்கையில் மகிமைப்படுத்தி தூய்மையோடு வாழ்வதற்கு கீழ்ப்படிவின் அவசியத்தை உணர்த்தினார்கள். இதற்கு வேறு எந்தவிதமான மாற்றுவழியையும் பியூரிட்டன்கள் அறிந்திருக்கவில்லை. கர்த்தரின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், கிறிஸ்து நமக்குள் இருந்து நம் பாவங்களை சுத்தப்படுத்துவார் அதனால் அவர் மேல் அன்பு செலுத்துவது மட்டுமே நம் பணி என்று விளக்கும் அசட்டு அன்டிநோமியன் போதனைகளையும் வழிமுறைகளையும் பியூரிட்டன்கள் அறிந்திருக்கவில்லை; அவர்களுடைய போதனைகளில் அவற்றிற்கு இடமிருக்கவில்லை.

இந்த இருபத்தியோராவது நூற்றாண்டில் நம்மினத்தில் பிரசங்கிக்கப்பட்டு வருவது கிறிஸ்துவைப்பற்றிய போலிப்போதனை. அப்படிப் போலிப்பிரசங்கமளித்து வருகிறவர்களுக்கு மனித இருதயத்தின் பாவத்தைப்ப்பற்றித் துப்புரவாக எந்த அறிவும் இல்லை. அதனால்தான் பாவத்தைப்பற்றியும், மெய்யான மனந்திரும்புதலைப்பற்றியும் பிரசங்கங்களையும் போதனைகளையும் நம்மினத்தில் இன்றைக்குக் கேட்கவோ வாசிக்கவோ வழியில்லாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் மாறாக பியூரிட்டன்கள் மனித இருதயத்தை அறிந்துவைத்திருந்து அந்த இருதயத்தைக் குணப்படுத்தத் தேவையான சுவிசேஷ மருந்தை கிறிஸ்துவை மேன்மைப்படுத்திப் பிரசங்கத்தில் கொடுத்திருந்தார்கள்.

பியூரிட்டன்களின் காலம் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு பொற்காலம். பியூரிட்டன்களில் வாழ்க்கையிலும், போதனைகளிலும், பிரசங்கத்திலும் நாம் கவனிப்பது கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே. அத்தகைய ஆசீர்வாதத்தை நம்மினம் காணவேண்டுமானால் கிறிஸ்து அத்தகைய பிரசங்கிகளை எழுப்பி நம்மத்தியில் கிரியை செய்தால் மட்டுமே முடியும். அந்நாள் என்றாவது உதயமாகுமா?

————————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s