‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா?

மனிதனுடைய சுயாதீனமான சித்தத்தைப் பற்றிய போதனையை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் இப்படி நினைப்பதுண்டு. அவர்கள் பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டும் என்று மெய்யாகவே விரும்பினாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஒருவன் இரட்சிப்பை அடைய விரும்பியும் அவனால் அதை அடைய முடியாமலிருப்பது அவர்களுக்கு அநியாயமானதாகக் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள், கடவுள்தான் ஏதோ ஒரு விதத்தில் இரட்சிப்படைய விரும்புகிறவர்களை அவர்கள் அதை அடைய முடியாதபடி தடுத்து வைத்திருக்கிறார் என்று தவறாக நினைக்கிறார்கள். இப்படி நினைப்பவர்கள் கர்த்தருடைய இறையாண்மை பற்றிய போதனையும், தெரிந்துகொள்ளுதல் பற்றிய போதனையும் தான் இந்த நியாயமில்லாத காரியத்துக்குக் காரணம் என்று அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் இந்த சத்தியங்களை விளக்கும் விசுவாச அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, இவர்களால் மனிதன் முழுமையான பாவியாக, எந்தவித ஆத்மீக செயல்களைச் செய்யும் வலலமையில்லாதவனாக இருக்கிறான் என்ற போதனையையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதெல்லாம் இவர்களுக்கு நியாமற்றவையாகத் தெரிகின்றது. இவர்கள் நினைப்பில் ஏதும் உண்மையிருக்கிறதா என்று பார்ப்போம்.

முதலில், ஒருவன் இரட்சிப்படையாமல் இருப்பதற்கு கர்த்தருடைய இறையாண்மையும், தெரிந்துகொள்ளுதலுந்தான் காரணமென்று வேதம் எந்தப் பகுதியிலும் விளக்குவதில்லை. இந்த இரு சத்தியங்களும் நிராகரிக்க முடியாதபடி வேதத்தில் விளக்கப்பட்டிருந்தாலும் மனிதன் சுயமாக கர்த்தரை விசுவாசிக்காமல் போவதற்கு இவை காரணங்களாக வேதத்தில் எங்குமே விளக்கப்படவில்லை. இந்த இரண்டு போதனைகளும் மகா ஞானியும், வல்லவரும், நீதிமானுமாகிய கர்த்தரின் தெய்வீக வல்லமையையும், தெய்வீக சித்தத்தையும் விளக்குகின்றன. அவற்றை குறைந்த அறிவுள்ளவர்களாகிய நாம் சத்தியங்களாக ஏற்று விசுவாசிக்க வேண்டுமே தவிர தத்துவரீதியாக சிந்தித்துப் பார்த்து கர்த்தர் குறைபாடு கொண்ட குணாதிசயங்களைக் கொண்டவராக எண்ணுவதோ அல்லது மனித எண்ணங்களுக்கு ஒத்துப்போவது போல் இவற்றிற்கு விளக்கங்கொடுக்க முனைவதோ ஆபத்தானதும், கர்த்தரின் மகிமையைக் குறைப்பதுமான செயல்கள். அதேபோல் மனிதனின் பாவநிலையைப் பற்றிய விளக்கமான, அவன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற வேத போதனையும் முற்றிலும் சரியானதே. இரட்சிப்பை ஒருவன் அடைய முடியாமல் போவதற்கு இது காரணமல்ல. இது மனிதனின் மெய்யான நிலையை விளக்குகிறது. இதை மறுப்போமானால் சுவிசேஷ செய்தியே தரமிழந்து போய்விடும். மனிதனைப் பற்றிய இந்த உண்மையே சுவிசேஷ செய்தியை மிகவும் வலிமையுள்ளதாக்குகிறது, அவசியமானதாக்குகிறது. மனிதன் பாவத்தால் முழுமையாகப் பாதிக்கபடாமலிருந்தால் அவனுடைய இரட்சிப்புக்கு சுவிசேஷம் அவசியமில்லை.

ஒருவன் இரட்சிப்புக்காக கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனால் இரட்சிப்பை அடைய முடியுமா, முடியாதா? நிச்சயம் இரட்சிப்பு அடைய முடியும் என்றுதான் வேதம் போதிக்கிறது. இப்படிச் சொல்லுவது வேதபோதனைகளுக்கு முரணானதல்ல. இதை எப்படி விளங்கிக் கொள்ளுவது? ஒருவன் இரட்சிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ளுகிறபோது, அதை அவன் சுதந்திரமாக சிந்தித்து சித்தங்கொண்டாலும், கர்த்தருடைய துணையில்லாமல் சித்தங்கொள்ளுவதில்லை. பாவ நிலையில் இருக்கும் மனிதனுடைய சித்தம் இயல்பாக கிறிஸ்துவை ஒருபோதும் நேசிக்காது. அந்த இருதயம் கிறிஸ்துவை மெய்யாக நேசிக்க ஆரம்பிக்குமானால் அதற்குக் காரணமே அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட ஆரம்பித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். கிறிஸ்து வேண்டும் என்கிற இருதயத்தில் ஏற்படுகின்ற விருப்பத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே ஒருவனுக்கு கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியால் தொடப்படாத இருதயத்தில் அந்த எண்ணம் ஏற்படுவதற்கு வழியேயில்லை. பாவி எப்போதும் தன்னுடைய இயல்புக்கேற்ப கர்த்தரைவிட்டு விலகியோடத்தான் பார்ப்பான். பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றித்தான் இயேசு நிக்கொதேமுவுக்கு யோவான் 3ம் அதிகாரத்தில் காற்றை உதாரணமாகப் பயன்படுத்தி விளக்கினார். கண்களுக்குப் புலப்படாத ஆவியானவரின் செயலே மனித இருதயத்தில் விசுவாசத்துக்குரிய ஜீவனை விதைப்பது என்று இயேசு அங்கே விளக்குகிறார். ஆவியினால் நித்திய ஜீவனுக்குரிய வித்து விதைக்கப்பட்டதற்கான அறிகுறியே ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடி பாவ மன்னிப்புக்காக ஓடி வருவது என்று வேதம் விளக்குகிறது. கெட்டகுமாரன் கெட்டுச் சீரழிந்து கடைசியில் ஒன்றுக்குமே உதவாத நிலைக்கு வந்தபிறகு அவனுக்கு புத்தி தெளிந்தது (லூக்கா 15:17). அதற்குப் பிறகு அவன் மனந்திரும்பியவனாகத் தன்னுடைய தகப்பனிடம் போனான். இதற்கு என்ன அர்த்தம்? அங்கே ‘புத்தி தெளிந்தது’ என்ற வார்த்தைகள் அவனில் ஆத்மீக விழிப்பு ஏற்பட்டதை உணர்த்துகின்றன. தன்னுடைய பாவங்களை அவன் உணர்ந்து கர்த்தரை நேசிக்க ஆரம்பித்ததை சுட்டிக் காட்டுகின்றன. அதை அவனுக்குக் கொடுத்தது யார்? இயல்பில் பாவியாக இருந்த அவனுக்கு அந்த எண்ணங்கள் சுயமாக ஏற்பட்டிருக்க வழியில்லை. அப்படியானால் அவன் எப்படி மனந்திரும்பினான்? வரிக்குதிரைக்கு தன்னுடைய உடம்பில் இருக்கும் வரிகளை அழித்துவிட முடியாததுபோல் அவனாலும் தன்னைத் திருத்திக்கொள்ள முடியாது. அவனுக்கு ஆத்மீக விழிப்பைக் கொடுத்தது பரிசுத்த ஆவியானவரே. கர்த்தரை நாட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் ஆவியானவரால் விதைக்கப்பட்டது. கர்த்தரை வெறுத்து ஓடிக்கொண்டிருந்த அவன் இப்போது கர்த்தரை நாடி ஓடிவர ஆரம்பித்துவிட்டான்.  இரட்சிப்பையும் அடைந்தான். எனவே, ஒருவன் கிறிஸ்துவை அடைய சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று கூறுவது முழுத்தவறானது.

மறுமொழி தருக