‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கம் – பாகம் 2

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் ‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கத்தின் தோற்றத்தையும், போதனைகளையும், திருமறையின் அடிப்படையில் ஆராயும் இக்கட்டுரை, அதன்பிடியில் அகப்பட்டுத் தத்தளிப்பவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம். – ஆசிரியர்

தீர்க்கதரிசனங்கள்

இவ்வியக்கத்தார் கர்த்தர் தாம் வெளிப்படுத்தத் தீர்மானித்த அனைத்தையும் திருமறையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நம்ப மறுப்பதால், அவர் தொடர்ந்தும் தீர்க்கதரிசனங்கள் மூலம் பேசுவதாக சொல்லி வருகிறார்கள். ‘பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்,’ என்ற எபிரெயரின் வார்த்தைகளின் விளக்கம் இவர்களுக்குப் புரிவதில்லை. தேவன் பேச வேண்டிய அனைத்தையும் பேசிமுடித்து வேதத்தில் தந்திருப்பதால், அவர் வேதத்திற்கு வெளியில் இருந்து தொடர்ந்து பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

தேவன், திருமறையை முழுமையாகத் தருவதற்கு முன்பு, தீர்க்கதரிசனங்களை அனுமதித்த காலங்களில் கூட, அவை சோதித்து அறியப்பட வேண்டுமெனத் தெளிவாகக் கூறியுள்ளார் (உபாகமம் 18:20-22). ஆனால், இன்று ‘தீர்க்கதரிசனம்’ என்ற பெயரில் தேவ செய்தி சொல்ல முற்படுபவர்கள் எவ்வித சோதனைக்கும் இடம் கொடாது செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் எத்தனை பேருக்குத் தலை வலி இருக்கிறது, வயிற்று வலி இருக்கிறது என்று கண்டு பிடிப்பதாகத்தான் இருக்கிறதே தவிர கர்த்தருடைய வார்த்தையின்படி தீர்க்கதரிசனங்களுக்கு இருக்க வேண்டிய இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை. திருமறையை முறையாகப் போதித்து, அதன் போதனையின்படி மற்றவர்பளை வழிநடத்தாமல், போலித் தீர்க்கதரிசனங்களின் மூலம் கிறிஸ்தவர்களுக்கு ஆசைக்காட்டி தம்மை வளர்த்துக்கொள்ளும் இவர்களை அடையாளங் கண்டு, நம்மை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அடையாளங்களும், அற்புதங்களும் (Signs and Wonders)

‘கெரிஸ்மெட்டிக் இயக்கம்’ அடையாளங்களிலும் அற்புதங்களிலும் அதிக நாட்டங் கொண்டுள்ளது. ‘அற்புதங்கள்’ இல்லாத கிறிஸ்தவத்திற்கு இவ்வியக்கத்தின் அகராதியில் இடமில்லை. (கிறிஸ்தவமே கர்த்தருடைய அற்புதமான வெளிப்படுத்தல்தான் என்பது மட்டும் போதாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள்). நோய் தீர்த்தல், கனாக்காணுதல், தரிசனங்கள், ஆவியினால் அடித்துப் போடப்படுதல் என்று இவர்களுடைய அடையாள, அற்புதங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பழைய, புதிய ஏற்பாட்டு அற்புதங்களும், அடையாளங்களும் தேவசெயல்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவை தேவகுமாரனாகிய இயேசுவின் வருகையின் அறிவிப்பாகவும், அவர் இவ்வுலகில் இருந்தபோது தேவகுமாரன்தான் என்று உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகளாகவும் இருந்தன. அது மட்டுமல்லாமல், கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியையும், அதன் மூலம் அவர் இவ்வுலகில் ஏற்படுத்த வந்த திருச்சபையையும் உறுதிப்படுத்த தேவனே தன் குமாரன் மூலமாகவும், அப்போஸ்தலர்கள் மூலமாகவும் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். இன்று கர்த்தருடைய திட்டப்படி திருச்சபை நிறுவப்பட்டுவிட்டதாலும், அப்போஸ்தலர்கள் தொடர்ந்து எம்மத்தியில் இல்லாததாலும் அற்புதங்களுக்கோ, அடையாளங்களுக்கோ இனி எந்தவித அவசியமும் இல்லை. இருந்தபோதும் ‘கெரிஸ்மெட்டிக் இயக்கத்தார்’ அப்போஸ்தலர்கள் கால நடவடிக்கைகளும், அப்போஸ்தலப்பணியும் இன்றும் தொடர்வதாக நம்பி வருகிறார்கள். ஒருவர் அப்போஸ்தலராக இருப்பதற்கான தகுதிகளில் ஒன்று, அவர் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பது. இதை மறந்து விட்டு இவர்கள் இன்று சபைகளில் அப்போஸ்தலர்களை நியமிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் செய்த பணிகளையும் செய்ய முற்படுகிறார்கள். இங்கிலாந்து நாட்டில் ஊழியம் செய்த (1822 – 1834) எட்வர்ட் இர்விங் (Edward Irving) என்ற மிகப் பிரபலமான ஒரு போதகர் இப்படிப்பட்ட தவறான போதனைகளுக்கு இடங்கொடுத்து இறுதியில் தனது ஊழியத்தையும், உயிரையும் இழந்தார்.

பல வருடங்களுக்கு முன் கெத்தரின குல்மன் (Kathryn Kulman) என்ற பெண் அமெரிக்காவில் தனது கூட்டங்களில் அற்புதங்கள் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார். நோய் தீர்க்கும் முயற்சிகள் மட்டுமல்லாமல், நிலத்தில் விழுந்து புரள்வது போன்ற காரியங்களும் அவருடைய கூட்டங்களில் அனுமதிக்கப்பட்டன. இன்று பல கெரிஸ்மெட்டிக் கூட்டங்களில் நாம் அவதானிக்கின்ற ‘ஆவியினால் அடித்துப் போடப்படுதல்’ (Slain in the Spirit), கட்டுக்கடங்காமல் நிறுத்தமுடியாத ‘பரிசுத்த சிரிப்பலை எழுப்புதல்’ (Holy Laughter), கதறி அழுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இவரே முன்னோடி, ‘கெரிஸ்மெட்டிக் இயக்கம்’ இவற்றைத் தங்கள் இயக்கத்தின் ‘மூன்றாவது அலை’ நிகழ்ச்சிகளாகக் கருதுகின்றது. இவை அவர்களுடைய ஆராதனையின் முக்கிய அம்சங்களாக இன்று இருந்து வருகின்றன. ஆராதனையின் ஓர் அங்கமாக இவை அமைய வேண்டுமென வேதத்தில் எங்குமே போதிக்கப்படவில்லை. இத்தகைய செயல்கள் பரிசுத்த ஆவியையே அவமானப்படுத்தும் செயல்களாக உள்ளன. இவை தெய்வ பக்திக்கே முரணானவை. வேதம் இவற்றை எந்தவிதத்திலும் அனுமதிப்பதில்லை.

1740களில் முழு உலகமும் அவதானித்த, அமெரிக்காவின் நியூ இங்கிலாந்தில் ஏற்பட்ட ‘The Great Awakening’ என்று அழைக்கப்படும் சமய எழுச்சிக் காலத்தில் யோனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) இத்தகைய செயல்களை போலித்தனமானவை என்றும், ஆவிக்குரிய அடையாளங்கள் அல்ல என்றும் விவரித்தார். அக்காலங்களில் ஆவியின் வல்லமையினாலும், பாவத்தின் குற்ற உணர்வினாலும் பலரும் நடுக்கமுற்ற வேளையிலும் போலித்தனமான சில செயல்களையும் எட்வர்ட்ஸ் அவதானித்தார். இருந்தபோதும் அக்காலங்களில்கூட இப்படி விழுந்து புரண்டு ஒருவரும் சிரிப்பலையெழுப்பவில்லை. இன்றுவரை இத்தகைய புரட்டுகளை நாம் புறசமயங்களில்தான் அவதானிக்க முடிந்தது.

பம்பாயிலும், சென்னையிலும் ஊழியம் செய்துவிட்டு கல்கத்தாவிற்கு வந்த அமெரிக்க மதபோதகர் மொரிஸ் செரூல்லோ (Morris Cerullo), அங்குள்ள ‘பார்க் சர்க்கஸ் திடலில்’ ஊமைகளை பேச வைப்பேன், செவிடர்களைக் (காது) கேட்க வைப்பேன்’ என்று முழங்கினார். ஆயிரக்கணக்கானோர் அதை வேத வாக்கைப் போல் கேட்டார்கள். செரூல்லோ குணப்படுத்தியதாகக் கூறிய ஒருவரைப் பிடித்துக் கொண்ட மக்கள், கேள்விக்கணைகள் தொடுத்தபோது அவன் ஊமையாகவோ, செவிடனாகவோ என்றுமே இருந்ததில்லை என்று அறிந்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டம் செரூல்லோ மீது கல்மாரி பொழிந்தது. இந்திய அரசு செரூல்லோவை விரும்பத்தகாதவர் என்று அறிவித்து நாட்டைவிட்டு வெளியேற்றியது (ஆதாரம் ‘இந்தியா டுடே’ ஆகஸ்ட் 1993).

இத்தகைய செயல்கள் நமக்குப் புதிதல்ல. கூட்டங்கள் போட்டு நோய் தீர்க்கிறோம் என்று பலரையும் ஏமாற்றும் செயல்கள் அநேக இடங்களில் நடக்கின்றன. வேதாகமக் கல்லூரிகளில் கூட இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இயேசு எப்போதாவது கூட்டம் போட்டு இப்படி அற்புதங்கள் செய்தாரா என்று ஒருவருமே எண்ணிப் பார்ப்பதில்லை. அப்போஸ்தலர்கள் கூட தங்கள் வாழ்நாட்களில் இப்படி கூட்டம்போட்டு அற்புதங்கள் செய்ய முயற்சித்ததில்லை. திருமறையில் எங்குமே இப்படிச் செய்யும்படி போதிக்கப்படவுமில்லை. ‘பிரியமானவர்களே, உலகத்தில் அநேகக் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவியையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்து அறியுங்கள்’ (1 யோவான் 4:1) என்று வேதம் போதிக்கிறது. திருமறையில் காணப்படும் அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவே நிகழ்ந்தவையாக உள்ளன. இது தெரியமல், விடாப்பிடியாக அவற்றை நாமும் அனுபவிக்க வேண்டும் என்று மல்லுக்கு நிற்பது தவறு. அனுபவங்களையும், அற்புதங்களையும் நாடி அலையும் கெரிஸ்மெட்டிக் இயக்கம் வேதத்திற்கு மதிப்புத் தருவதில்லை, வேதத்தைப் போதிப்பதைவிட மக்களைக் கவரவும், மயக்கவும் எது சிறந்த வழி என்று புதிதாக எதையாவது நாடிச் செல்வதே இதன் இயல்பாக இருக்கின்றது.

வெளிநாடுகளில் உள்ள கெரிஸ்மெட்டிக் தலைவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி தம்மையும், தங்கள் ஊழியத்தையும் வளர்த்துக் கொள்ளும் அநேகரைத் தமிழ் மக்கள் மத்தியில் இன்று பார்க்க முடிகிறது. அமெரிக்காவின் ஓரல் ரொபட்ஸைப் பின்பற்றி கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் கல்லூரிகளையும், வைத்திய சாலைகளையும் சிலர் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் சேர்வதற்கு வசூலிக்கப்படும் பணத்தைப் பற்றிய கதையே ஒரு தனிக்கதை. கர்த்தர் தன் கனவில் வந்து அதைச் செய்யச் சொன்னார், இதைச் செய்யச் சொன்னார் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவரும் எத்தர்களும் நம்மத்தியில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஒரு பிரபலமான கெரிஸ்மெட்டிக் இவாஞ்செலிஸ்ட், கடவுள் தன்னோடு கனவில் பேசி ‘நீ எல்லோருக்கும் ஊழியம் செய்துவிட்டாய். ஆனால் குழந்தைகளுக்கு மட்டும் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே, நீ குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று சொன்னதாகக் கூறி மக்களிடம் ஒரு குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் என்று வசூலித்து வருவதையும் பலரறிவார்கள். பணம் கொடுப்பவர்களின் குழந்தைகள் பரீட்சையில் தேறவும், அவர்களது உடல் நலத்திற்காகவும் இந்த ‘இவாஞ்செலிஸ்ட்’ தொடர்ந்து ஜெபம் செய்வாராம். வேதத்தில் இத் ‘திருவிளையாடல்’ களுக்கெல்லாம் எங்கே இடமிருக்கின்றது என்றெல்லாம் ஆராயாமல் ஏதோ ஓர் அற்புதம் நிகழும் என்று எதிர்ப்பார்த்து பணம் கொடுத்து ஏமாறும் இளிச்சவாயர்களும் அநேகம்.

கர்த்தரின் பெயரில், தேவ பயமென்பதே இல்லாமல், தாம் நினைத்ததையெல்லாம் சொல்லி இவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ‘கர்த்தர் என் பக்கத்தில் நிற்கிறார்’, ‘அவர் உன் மீது இறங்கிக் கொண்டிருக்கிறார்’, ‘அவர் என் அருகில் நிற்கிறார்’, ‘அவரை நான் பார்க்க முடிகின்றது’ என்ற சொற்றொடர்கள் இவ்வியக்கத் தலைவர்கள் நாவில் சரளமாகப் புகுந்து விளையாடுவதைக் காணலாம். இவை கேட்பவர்களைக் கவரும் வார்த்தைப் பிரயோகங்கள். ஆனால், திருமறை இப்படிக் கர்த்தர் ஒருவர் மீது வந்திறங்குவதாகவோ, அவரை ஒருவர் ஊனக்கண்களால் பார்க்க முடியுமென்றோ எங்குமே போதிப்பதில்லை. வேதம் சொல்வதெல்லாம், அப்படி அவரைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது என்பதுதான் (யாத்திராகமம் 33:20; 1 தீமோ. 6:15, 16).

தாம் பின்பற்றும் தலைவர்களின் காலில் விழுந்து வணங்கும் மதிகெட்ட மனிதர்களையும் தமிழ் நாட்டில் தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. கர்த்தரை அறியாத மக்கள் இப்படிச் செய்தால் அதற்குக் காரணம் சொல்லலாம். ஆனால் சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு வருகை தந்த ‘போல் யொங்கி சோ’வின் (இவர் தன் பெயரை ‘டேவிட்’ என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பது செய்தி) காலில் விழுந்து வணங்கி அந்த மனிதனை ஓர் ‘அரசனைப்’ போல நடத்திய தமிழகத்தைச் சேர்ந்த கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் தலைவர்களின் செயலை என்னவென்று கூறுவது. கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் கோமாளிகள் போல் நடந்து தேவனுக்கே கெட்ட பெயரை வாங்கித் தரும் இப்பச்சோந்திகளை நாம் இனங்காண வேண்டியது அவசியம்.

ஒரே திருச்சபை ! (Ecumenism)

கிறிஸ்தவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் இயக்கம் என்ற ஒரு போலித்தனமான மாயத்தோற்றத்தையும் இவ்வியக்கம் கொண்டிருக்கிறது. திருச்சபைகளுக்கிடையில் உள்ள பிளவுகளையெல்லாம் அகற்றி ஐக்கியத்தை ஏற்படுத்தவே தங்களைக் கர்த்தர் எழுப்பியிருப்பதாக இவ்வியக்கத்தார் கூறிக் கொள்கிறார்கள். ஆகவே, திருமறையின் போதனைகளின் அடிப்படையில் அல்லாமல் வெறும் அனுபத்தின் அடிப்படையில் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் கைங்கரியத்தை இவ்வியக்கம் செய்து வருகிறது. இன்று இவ்வியக்கம் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கிறது. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுத் திருச்சபையை எழுப்புவதுதான் இவ்வியக்கத்தின் பெருநோக்கம்.

இவ்வியக்கத்தைச் சேர்ந்த மைக்கல் ஹாப்பர் (Michael Harper) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலிக்கன் கெரிஸ்மெட்டிக், கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், கெரிஸ்மெட்டிக்ஸ் ஆகியோருக்கிடையில் உள்ள வேறுபாடுகளைவிட அவர்களை இணைக்கும் காரியங்களே மிக அதிகம் என்று கூறியுள்ளார்.1 தன் சபைத்தலைவரான போப்பாண்டவரைக் கிறிஸ்துவின் சர்வ அதிகாரங்களும் கொண்ட உலகப் பிரதிநிதி என்றும் மரியாளைத் தெய்வமென்றும், திருமறையைவிட கத்தோலிக்கசபைப் பாரம்பரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் போதிக்கும் கத்தோலிக்க சபைக்கும் திருமறையைத் தழுவிய கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? டேவிட் வொட்சன் (David Watson) என்ற ஆங்கிலிக்கன் கெரிஸ்மெட்டிக் ‘பெந்தகொஸ்தே நாட்களுக்குப்பிறகு உலகில் ஏற்பட்ட மிகப் பெரிய அவல நிகழ்ச்சி 16-ம் நூற்றாண்டில் எழுந்த சீர்திருத்த இயக்கம்தான்’ என்று கூறியுள்ளார்.2 இவரும் ரோமன் கத்தோலிக்கர்களுடன் கிறிஸ்தவர்கள் இணைவதை ஆதரிக்கின்றவர். ஆகவே, கத்தோலிக்க சபைக்கெதிராக போர்க்கொடி தூக்கிய புரட்டஸ்தாந்து சீர்திருத்தவாதம் அர்த்தமற்ற செயல் என்பது இவருடைய வாதம்.

திருமறை, கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய ஐக்கியத்தைப்பற்றித் தெளிவாகப் போதிக்கின்றது. ஆனால் அவ்வாறான ஐக்கியமும், ஒற்றுமையும் திருமறை போதிக்கின்ற ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் அல்லாது, ஒன்றுக்கொன்று முரண்பாடான போதனைகளையும், திருமறைக்கு எதிரான செயல்களையும் கொண்டு அமைய முடியாது (யோவான் 17; எபேசியர் 4). திருமறையைத் தூக்கி எறிந்துவிட்டு, சத்தியத்திற்கு முரணாக ஏற்படுத்தப்படும் எந்த ஐக்கியமும் இயேசுவை இழிவுபடுத்தும் செயலாகும். இதைத்தான் இன்று கெரிஸ்மெட்டிக் இயக்கத் தலைவர்கள் தங்கள் திருப்பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவாக

சாத்தானின் கைங்கரியங்களுக்கு கெரிஸ்மெட்டிக் இயக்கம் இடம் கொடுத்திருப்பது இன்று மறுக்கமுடியாத உண்மை. இயேசு சாத்தானைப்பற்றித் தெளிவாக, ‘அவன் ஆதிமுதற் கொண்டு மனித கொலை பாதகனாக இருக்கின்றான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்’ (யோவான் 8:44) என்று எச்சரித்தார். பிசாசு இன்று திருச்சபையை ஒழிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது. பிசாசானவன் ‘தந்திரத்தோடும்’. ‘வஞ்சனையோடும்’, ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டு’, ‘சகல வல்லமையோடும், அடையாளங்களோடும்’ பொய்யான அற்புதங்களோடும்’ ‘உலகமனைத்தையும் மோசம் போக்கிக் கொண்டிருக்கிறான்’ (எபே. 6:11; 1 தீமோ. 4:1; 2 கொரி. 11:3, 14; 2 தெசலோ. 2:9; வெளி. 12:9).

சாத்தானின் பிடியில் சிக்கி, திருமறைக்குப் புறம்பான இத்தனை தவறான போதனைகளுக்குத் தூபமிட்டு வளர்த்து வரும் கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் கைப்பாகையாக எத்தனையோ பேர் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருந்த போதும் விளக்கில் விழப்போகும் விட்டில் பூச்சியைப்போல விபரமறியாது, வழிதெரியாது தம் உணர்ச்சிகளுக்கு மட்டும் உணவூட்டி ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியற்று இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு எனது தாழ்மையான ஒரே வேண்டுகோள்! திருமறையை மட்டும் உங்கள் கையிலெடுத்து அதன் பக்கங்களில் இதுவரை நீங்கள் விசுவாசித்து வந்த போதனைகளுக்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பாருங்கள். பவுல் அப்போஸ்தலன் போதித்தபோது ‍பெரோயா ஊரார் அப்போதனைகள் வேதத்தின் அடிப்படையில் அமைந்தவையா என்று ஆராய்ந்து பார்த்தது போல் நீங்களும் ஜெபத்தோடு வேதத்தை படியுங்கள். சத்திய வசனம் நிச்சயம் உங்களைக் கரையேற்றி, ஆவிக்குரிய வாழ்க்கையில் விடுதலையைப் பெற்றுத் தரும்.

அதுமட்டுமல்ல, ஒரு நல்ல சபையையும் நீங்கள் நாடிப்போக வேண்டும். நல்ல போதனையும், ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையத் துணை புரியக்கூடிய போதகர்களும் நமக்கு அவசியம். வேதத்தைப் போதித்து அதன் வழியில் கர்த்தரிடம் அவர்கள் வழி காட்டுகிறார்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் தூபமிட்டு, திருமறைக்கும் அதன் போதனைகளுக்கும் மதிப்புக் கொடுக்காமல், ஆடல், பாடல்களிலும் மந்திர தந்திரங்களிலும் மட்டும் நாட்டமுள்ளவர்களைவிட்டு விலகியோடுங்கள். அப்படியானவர்கள் மத்தியில் நீங்கள் தொடர்ந்திருந்தால் அவர்களின் கள்ளப்போதனைகளும், தவறான வழிமுறைகளும் உங்கள் இருதயத்தைப் பாழடித்துவிடும் (2 கொரி. 6:17; 2 தெசலோ. 3:6, 14-15).

References:
1. Test the Spirit. C.S. Butler. page 102.
2. Test the Spirit. C.S. Butler. page 103.

Recommended Reading:
1. Victor Budgen, The Charismatics and the Word of God, Evangelical Press.
2. C.S. Butler. Test the Spirit, Evangelical Press.
3. Peter Masters and John Whitcomb, The Charismatic Phenomenon, Wakeman Trust.
4. Peter Masters, The Healing Epidemic, Wakeman Trust.

One thought on “‘கெரிஸ்மெட்டிக்’ இயக்கம் – பாகம் 2

  1. பழைய சஞ்சிகைகள் யூனிகோட் வடிவத்திற்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

    Like

மறுமொழி தருக