தொடரட்டும் சீர்திருத்தம்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

முங்கவன் தாழ்பணிந்து

தூயதிருமறை பயின்று

சிங்கமென மார்புயர்த்தி

சீரற்ற வழிபோக்கி

அன்பு, அறம், தாழ்மை

அனைத்தும் அடங்கப்பெற்று

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

சீர்திருத்தவாதிகள் லூதர், கல்வின்

சிந்திய வியர்வையில்

தோன்றிய செம்மல்களாய்

திருமறை ஒன்றையே

தீர்க்கமாய்ப் பின்பற்றி

சிந்தனையும், செயலும்

சீரோடு இயேசுவின்

சொற்படி அமையத்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

அடக்குமுறை கொண்டு

அவனியை ஆண்டுவந்த

கருணையற்ற கத்தோலிக்க

காட்டாட்சி முறையினின்று

சீர்திருத்தம் காண்பதற்கு

சிந்திய இரத்தம்தான்

விடுதலை தந்ததென்ற

வீரவுணர்வு கொண்டு

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

வேதம் மட்டுமே

கிருபை மட்டுமே

விசுவாசம் மட்டுமே

வீணாக இவையின்றி

விண்ணுலகம் போகலாம்

என்று வாதித்த

எத்தர்கள் கொட்டத்தை

அடக்கியோர் வழிநின்று

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

திருமறையை எடுத்தெறிந்து

தேவனை நிராகரித்துத்

தம்சொல்லே தேவசித்தம்

தரணிக்கு வழிகாட்டும்

என்றெல்லாம் எடுத்துரைத்த

எளியோர் வழிநின்று

திருச்சபையைத் திசைதிருப்பும்

திருடர்கள் முகத்திரையகல

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

பணத்தாசை பிடித்தாட்டப்

பதவி மோகம் தலைக்கேறத்

திருமறையைத் தெருவில் வீசி

திருச்சபையைத்தன் சொத்தாக்கித்

தேவமக்கள் நெஞ்செல்லாம்

தீயாய்க் கருகிநிற்க

தலைவன் போல் வாழ்வோரின்

முகத்திரைகிழிந்(து) ஊரறிய

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

நாதனின் பெயர்சொல்லி

வேதத்தைப் பயன்படுத்தி

மாயங்கள் செயும் கூட்டம்

மேதினியில் பெருகிவரும்

இருளான காலமிதில்

இருளகன்று ஒளிதோன்ற

சத்தியத்தை மட்டுமே

நித்தியம் போதித்துத்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

வாய்ச்சொல் வீரராய்

வம்பளந்து வாழாமல்

வஞ்சகம், பொய், புரட்டு

நெஞ்சி லேதுமில்லாமல்

தாய்ச்சொல் கேட்டு நிற்கும்

தனயனைப் போலாகிக்

கர்த்தர்தம் மகிமையினைக்

கடமையெனவே கருதித்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

பாவத்திலுழலுகின்ற மானுடமே

தேவகோபத்தினின்றும் விடுபடவே

கல்வாரி நாயகன் மரணத்தால்

கண்டுவிட்ட நல்வழியைக்

காசுக்கு விற்கின்ற கேடானோர்

காசினியில் உலவுகின்ற நாளிதிலே

நாசத்தின் வாசலை நாடிநிற்போர்

நம்நேசரை நாடிவரப் போதித்துத்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

 

எழுந்திரு! ஏறாய்ப் புறப்படு

எத்தர்கள் கொட்டத்தை அடக்கிவிடு

உறக்கம், உணவு, உயிர் மறந்து

உலகத்து மானிடரின் நன்மைக்காம்

பரிசுத்த ஆவியின் வல்லமை

நிரம்பிய இயேசுவின் தாசனாய்

திருமறையைக் கரத்தினில் ஏந்தியே

திக்கெட்டும் தூள்பரக்கத்

தொடரட்டும் சீர்திருத்தம்

தொல்லைமிகு இவ்வுலகில்

மறுமொழி தருக