1689 விசுவாச அறிக்கை (அதிகாரம் 5)

தெய்வீக பராமரிப்பு

எழுதியவர்: லாமார் மார்டீன்
தமிழில்: ஆசிரியர்

1. அனைத்தையும் படைத்த நல்லவராகிய கடவுள், தமது அளவற்ற வல்லமையாலும், ஞானத்தாலும் மிகுந்த விவேகதுள்ள தமது பரிசுத்த பாரமரிப்பினாலும் பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப்படைப்புயிர்களையும், பொருட்களையும், தன்னுடைய படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றுதலுக்காகத் தாங்கி, வழிகாட்டி ஆண்டு வருகிறார். தவறாநிலையுடைய முன்னறிவாலும் தமது சுயசித்தத்தின் தன்னுரிமையுள்ள மாறாத்திட்டத்தின் மூலமும், மகிமையுள்ள தமது ஞானம், வல்லமை, நீதி, எல்லையற்ற நற்குணம், இரக்கம் ஆகியவற்றின் துதிக்காகவும் கடவுள் அனைத்தையும் ஆண்டு வருகிறார்.

யோபு 38:11; சங்கீதம் 135:6; ஏசாயா 46:10, 11; மத்தேயு 10:39-31; எபேசியர் 1:11; எபிரேயர் 1:3.

2. அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய கடவுளுடைய முன்னறிவின் மூலமும், ஆணையின் மூலமும் எல்லாக் காரியங்களும் மாறாத்தன்மையுடனும், தவறா நிலையிலும் நேரிட்டபோதும் எதுவுமே எவருக்கும் தற்செயலாகவோ அல்லது அவரது பராமரிப்புக்கு (தெய்வ செயல்) அப்பாற்பட்டோ நிகழ்வதில்லை. அதேவேளை, கடவுள் இடைக்காரணங்களின் தன்மையின்படி தமது பராமரிப்பின் மூலம் தேவைக்கேற்பவும், சுதந்திரமாகவும், எதிர்பாராவேளைகளிலும் சம்பவங்கள் நிகழ உத்தரவிடுகிறார். (இயற்கையின் விதிகள் போன்ற துணைக்காரணங்களின் நடவடிக்கைகள் அல்லது மனிதனின் சுதந்திரமான நடவடிக்கைகள் அல்லது காரணகாரியம் என்ற விதி போன்றவற்றின் மூலம் சம்பவங்கள் நிகழ அவற்றை ஒழுங்குபடுத்தி அனுமதியளிக்கிறார்). இத்தகைய வழிமுறைகளைப்பயன்படுத்தி அவற்றின் மூலமதக கடவுள் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிகொள்கிறார்.

ஆதியாகமம் 8:22; நீதிமொழிகள் 16:33; அப்போஸ்தலர் 2:23; லூக்கா 22:22.

3. சாதாரணமாக தனது பராமரிப்பில் கடவுள் பல சாதாரணங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். அவற்றின் துணையில்லாமல் அவரால் தன்னுரிமையோடு இயங்க முடியும். அவரால் சுயவிருப்பப்படி அச்சாதனங்களுக்கு வழமைக்குமாறாக பயன்திறத்தை அளிக்கவும் அல்லது அவற்றிற்கு எதிர்மறையாக செயல்படவும் முடியும்.

ஏசாயா 55:10, 11; தானியேல் 3:27; ஓசியா 1:7; அப்போஸ்தலர் 27:31; 44; ரோமர் 4:19-21.

விளக்கம்: விசுவாச அறிக்கையின் நான்காவது அதிகாரமான தெய்வீக பராமரிப்பின் மூலம் நமது முன்னோர்கள் நமக்களித்துள்ள வேதபோதனைகளை நான்கு தலைப்புகளின் மூலம் நாம் ஆராயவிருக்கிறோம். இவ்வதிகாரத்தின் முதல் பாராவில் (1) பராமரிப்பு பற்றிய போதனையின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (2) 2ம், 3ம் பாராக்களில் பராமரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் விளக்கப்படுறிது (3) 4-6 வரையிலான பாராக்களில் தெய்கீப் பராமரிப்பில் நமது பாவமும் எவ்வாறு உள்ளடங்கியுள்ளது என்பதைப் படிக்கலாம். (4) 7வது பாரா சபையைப் பற்றிய ஒரு உண்மையை விளக்குகிறது. இவ்விதழில் முதல் மூன்று பாராக்களுக்கான விளக்கத்தை மட்டும் பார்ப்போம்.

பராமரிப்பு பற்றிய விளக்கம் (பாரா 1)

இப்பாரா தெய்வீக பாராமரிப்பின் அடிப்படை உண்மையை விளக்குகிறது. நமது முன்னோர்கள் இதன் மூலம் தெய்வீக பராமரிப்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கான விளக்கத்தைத் தருகின்றனர். “அனைத்தையும் படைத்த நல்லவராகிய கடவுள், தமது அளவற்ற வல்லமையாலும், ஞானத்தாலும் மிகுந்த விவேகமுள்ள தமது பரிசுத்த பராமரிப்பினாலும் பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப்படைப்புயிர்களையும், பொருட்களையும், தன்னுடைய படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றுதலுக்காகத் தாங்கி, வழிகாட்டி ஆண்டு வருகிறார்” என்பது அவர்களின் விளக்கம். கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் என்று நாம் மூன்றாவது அதிகாரத்தில் பார்த்த போதனை அடிப்படையிலும், அக்கடவுள் தனது எல்லையற்ற வல்லமையாலும் ஞானத்தாலும் அவறைப் படைத்தார் என்று நாம் 2 வது அதிகாரத்தில் பார்த்த சத்தியத்தின் படியும் கடவுள் தனது படைப்பு அனைத்தையும் காத்தும், ஆண்டும் வருகிறார் என்று இப்பாரா போதிக்கிறது. ஆகவே, தான் படைத்த அனைத்தும் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிடாமல், கடவுள் தானே அவற்றைக் காத்தும் பராமரித்தும் வருகிறார். தற்செயலாகவும், விபத்தாகவும் எதுவுமே உலகத்தில் நடப்பதில்லை. எல்லாவற்றையும் கண்காணித்து கடவுள் ஆண்டு வருகிறார். நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்ற வார்த்தைகளுக்கு கடவுளின் அகராதியில் இடம் இல்லை. எல்லாம் அவர் கட்டளைப்படி அவரது பராமரிப்பின் கீழ் ஒவ்வொரு நிமிடமும் இயங்கி வருகின்றன. இந்த உண்மையை பின்வரும் வசனங்களை வாசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். எபி‍ரேயர் 1:1-3; நெகேமியா 9:6; சங்கீதம் 36:6; 115:1-3; 135:6; தானியேல் 4:35; ஏசாயா 46:10; அப்போஸ். 17:25. கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நுணுக்கமாக, கவனத்தோடு ஆண்டு வருகிறார். நமக்குத் தேவையான அனைத்தையும் நாம் அவரிடமிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

நமது முன்னோர்கள் பராமரிப்பு பற்றிய அடிப்படை உண்மையை மட்டும் விளக்குவதோடு விட்டுவிடாமல் அத்தெய்வீக பராமரிப்பு எதையெல்லாம் தொட்டு எந்தளவுக்கு பரவி ஆளுகிறது என்பதையும் விளக்கியுள்ளார்கள். முதல் பாரா, கடவுள் தான் படைத்த, பெரிதானதிலிருந்து சிறியதான எல்லாப் படைப்புயிர்களையும், பொருட்களையும் தாங்கி ஆண்டு வருகிறார் என்று போதிக்கிறது. கடவுள் தான் படைத்த அனைத்தையும், சிறிது, பெரிது என்ற வித்தியாசமில்லாமல் தாங்கியும், வழிநடத்தியும், ஆண்டும் வருகிறார். இவ்வுண்மையை வேதத்தின் பல பகுதிகள் தெளிவான விளக்குவதைப் பார்க்கலாம். பின்வரும் வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் – சங்கீதம் 104:6-9. இவ்வசனங்கள் நோவாவின் காலத்தில் கடவுள் தண்ணீரைக் கட்டுப்படுத்தியதை விளக்குகிறது. 10-13 வரையிலான வசனங்கள் கடவுள் தான் படைத்தவற்றிற்கு தண்ணீரை அனுப்பியதை விளக்குகின்றன. 14-17 ஆகிய வசனங்கள் கடவுள் தாவரவகைகளைப் பராமரிப்பதை விளக்குகின்றன. புல் போன்ற சாதாரண பொருட்களையும் கடவுள் கவனித்துக் கொள்கிறார். 27ம் வசனம், அனைத்தும் கர்த்தரை நோக்கிக் காத்திருப்பதாகவும், அவரே அனைத்திற்கும் உணவளிப்பதாகவும் சொல்கின்றன. கடவுள் முகம் சுளித்தால் எல்ல‍மே சுவாசமிழந்து போய்விடும் என்பது இச்சங்கீதத்தின் போதனை.

எபிரயர் 1:14, யோபு 1:12 ஆகிய வசனங்கள் மூலம் நல்ல தேவதூர்களும், கெட்ட தூதர்களும் கூட கடவுளின் ஆட்சிக்குள் அடங்கியிருக்கின்றன என்று அறிந்து கொள்கிறோம். எல்லாவற்றையும் கடவுள் ஆள்கிறார், பராமரிக்கிறார் என்ற உண்மையை யோபு 12 வது அதிகாரமும் விளக்குகின்றது. 13ம் வசனத்திலிருந்து வாசித்துப் பாருங்கள். நீதிமொழிகள் 21:1 கடவுள் உலகை ஆளும் அரசர்களையும் கூட ஆள்கிறார் என்கின்றது. மத்தேயு 10:29-31 வரையிலான வசனங்கள் கடவுள் சிறு பறவைகளையும், நம் தலைகளில் உள்ள முடியையும்கூட கவனித்துக் கொள்கிறார் என்று விளக்ககின்றன. இப்பகுதிகள் அனைத்தும் கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் தாங்கி, வழிநடத்தி, ஆண்டு, பராமரித்து வருவதை தெளிவாக விளக்குகின்றன. வேதத்தில் இன்னும் அநேக பகுதிகள் இவ்வுண்மையைப் போதிப்பனவாக உள்ளன.

கடவுள் பாராமரிக்கிறவராக இருக்கிறார் என்றும், அவருடைய பராமரிப்பு சிறியது, பெரியது என்று பார்க்காமல் அவர் படைத்த அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது என்று விளக்கிய முதல் பாரா இனி அவருடைய பராமரிப்பின் இறுதி இலக்கைப் பற்றி விளக்குகிறது. அத்தகைய இரண்டு இலக்குகளை நாம் முதல் பாராவின் இறுதிப் பகுதியில் வாசிக்கிறோம். முதலாவது, கடவுள் தன்னுடைய தவறாநிலையுடைய முன்னறிவாலும், மாறாத தனது சித்ததின் ஆலோசனையாலும் எல்லாவற்றையும் பராமரித்து வருகிறார் என்று பார்க்கிறோம். கடவுள் எல்லாவற்றையும் பராமரிக்கும் விதம் அவர் யார்? எத்தகையவர்? என்பதை நமக்குப் புரிய வைக்கின்றன. தனது சுயதன்மையை மீறி அவர் எதையும் பராமரிக்கவில்லை. அவருடைய பராமரிப்பு அவருடைய தன்மையை நமக்கு விளக்குகிறது. இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் விசுவாச அறிக்கை எந்நோக்கத்திற்காக எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்குகின்றன.

நமது முன்னோர்கள் இங்கே நாம் இதுவரை 2ம் அதிகாரத்திலும், 3ம் அதிகாரத்திலும், 4ம் அதிகாரத்திலும் பார்த்த உண்மைகளுக்கும் இவ்வதிகாரத்தில் பார்க்கும் உண்மைகளுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனல். அதாவது, கடவுளின் தன்மை, அவருடைய ஆணை, அவருடைய படைப்பு, பராமரிப்பு எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையதாக பிரிக்க முடியாததாக இருக்கின்றன என்பது விசுவாச அறிக்கையின் போதனை. கடவுள் மாறாதவராகவும், தவறா நிலையுடைய முன்னறிவுள்ளவராகவும், எல்லையற்ற வல்லமையுடையவராகவும் இருப்பதாலும், நித்தியத்திலிருந்து அவர் தீர்மானித்துள்ள அனைத்தும் நிச்சயம் நிகழப்போவதாலும், அவர் எந்நோக்கத்திற்காக அனைத்தையும் படைத்தாரோ அந்நோக்கம் நிறைவேறுவதற்காக அவர் அனைத்தையும் தாங்கி, வழி நடத்தி ஆண்டு, பராமரித்து வருகிறார். கடவுள் அனைத்தையும் படைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஒரு நோக்கம் இருந்தது. அதையே அங்கு நமது முன்னோர்கள் விளக்க முயல்கின்றனர். அநோக்கம் தான் என்ன? முதல் பாராவின் கடைசி வசனம் சொல்கிறது – தனக்கு மகிமை தேடிக் கொள்ளும்படியாக கடவுள் இவற்றைச் செய்தார் என்று.

மூன்றாம் அதிகாரம் கடவுள் அனாதி காலத்தில் எல்லாவற்றையும் தமது மகிமையின் பொருட்டு முன்குறித்தார் என்று விளக்கியது. நான்காம் அதிகாரம் கடவுள் தமது மகிமையின் பொருட்டு இவ்வுலகத்தைப் படைத்தார் என்று விளக்கியது. ஐந்தாம் அதிகாரம் கடவுள் தமது மகிமையின் பொருட்டு எல்லாவற்றையும் பராமரிக்கிறார் என்று விளக்குகிறது. பவுல் எபேசியர் 1:11-12 கிறிஸ்துவைப்பற்றி சொல்லும்போது நாமெல்லோரும் கிறிஸ்துவின் மகிமைக்காகவே தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார். இதே உண்மையை யாத்திராகமம் 9:16ம் போதிக்கிறது.

இதுவரை முதலாம் பாரா விளக்கிய பராமரிப்பு பற்றிய அடிப்படை உண்மையைப் பற்றியும், அப்பராமரிப்பு எதையெல்லாம் உள்ளடக்கியது என்பதையும், கடவுளின் அப்பராமரிப்பாகிய பணி எந்த நோக்கத்தை இலக்காகக் கொண்டிருக்கிறது என்றும் பார்த்தோம்.

பராமரிப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் (பாரா 2, 3)

இனி 2ம் பாரா விளக்கும் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பார்ப்போம். 2ம் பாராவில் விசுவாச அறிக்கை பராமரிப்பை பற்றி விளக்கும் உண்மை ஏற்கனவே 3ம் அதிகாரத்தில் (கடவுளின் ஆணை) விளக்கப்பட்டுள்ளது. அதை இப்பாரா மீண்டும் வலியுறுத்துகிறது. விசுவாச அறிக்கை, எல்லாக் காரியங்களும் சரியானபடி நிறைவேறுவதற்குக் காரணம் அவை ஏற்கனவே அநாதி காலத்தில் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு ஆணையிடப்பட்டிருப்பதால்தான் என்று விளக்குகிறது. அத்தோடு, ஆணையிடப்பட்ட அனைத்துக் காரியங்களும் நிறைவேறுப்படி அவர் சர்வலோகத்தையும் ஆண்டு, பராமரித்தும் வருகிறார். இதே உண்மையை இந்த 2ம் பாரா மீண்டும் வலியுறுத்துகிறது. இது எல்லாவற்றிற்கும் முதற்காரணம் கடவுள் என்று விளக்ககிறது. அவர் எல்லாம் நிறைவேறும்படி ஆணையிட்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் படைத்துப் பராமரிப்பதால் அவை அனைத்தும் நிச்சயம் நிகழும். இது உண்மையாதலால் விசுவாச அறிக்கை தொடர்ந்து, எதுவும் தற்செயலாக நடக்காது என்றும், தெய்வீக பராமரிப்பை மீறி நடக்காது என்றும் விளக்குகிறது. வேதம் போதிக்கும் இந்த உண்மையையே 5ம் அதிகாரத்தின் இந்த 2ம் பாரா வலியுறுத்துகிறது.

உதாரணமாக அப்போஸ். 1:26ல் வாசிக்கும், போடப்பட்ட சீட்டு பர்னபாவின் மேல் விழாமல் ஏன் மத்தியாவின் தேல் விழுந்தது? ஏனெனில், கடவுள் மத்தியாவை தெரிவு செய்திருப்பதால்தான். கடவுள் தனது சித்தத்தை வீட்டின் மூலம் தனது சீடர்களுக்கு தெரியப்படுத்தினார். அதனால்தான், சீடர்கள். யாரைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சீட்டின் மூலம் காட்டித் தரும்படி கர்த்தர் முன் ஜெபித்தார்கள். சீட்டின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மை தற்செயலாக நிகழவில்லை என்பதை சீடர்கள் அறிந்திருந்தார்கள். இன்னுமொரு உதாரணத்தை அப்போஸ். 2:23 ல் பார்க்கலாம். கிறிஸ்துவை கேடான மனிதர்கள் கொலை செய்தபோதும் பேதுரு, அதற்கு முதற் காரணம் கடவுளின் அநாதித் தீர்மானம் என்பதை உணர்ந்திருந்தார். விசுவாச அறிக்கை இப்பாராவில் போதிக்கும் உண்மை பேதுருவுக்குத் தெரிந்திருந்தது. கடவுளின் முன்னறிவுக்கும், ஆணைக்கும் இடையில் உள்ள தொடர்பு பேதுருவுக்கு புரிந்திருந்தது. கிறிஸ்துவின் மரணத்திற்கான முதற்காரணம் கடவுளின் ஆணை என்பது பேதுருவுக்குத் தெரிந்திருந்தது.

கடவுளின் ஆணை நிச்சயம் நிறைவேறும் என்பதை மறுபடியும் வலியுறுத்தியபின் இப்பாரா பாரமரிப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்களை விளக்க முயல்கிறது. (இரண்டாம் பாராவை ஒருமுறை வாசியுங்கள்). அநாதி காலத்தில் இருந்தே கடவுள் எல்லாவற்றையும் ஆணையிட்டிருப்பதாலும், தன் ஆணைப்படி எல்லாம் நிறைவேறும்படி அனைத்தையும் அவர் ஆண்டு, பாரமரிப்பதாலும், அவர் தனது நோக்கங்கள் நிறைவேறும்படியாக சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார். முதற்காரணியாகிய தான் ஆணையிட்ட அனைத்‍தும் இறுதியில் நிறைவேறும்படி இடைக்காரணிகளையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். சர்வ லோகத்தையும் ஆண்டு வரும் கடவுள் இடைக்காரணங்களின் மூலமாக அதைச் செய்கிறார். தனது நோக்கங்கள் நிறைவேற இவற்றை அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.

இதை விளக்க இப்பாரா குறிப்பிடும் ஆதியாகமம் 8:22 பகுதியைப் பார்ப்போம். கடவுள் உலகத்தை தண்ணீரால் அழித்தார். 8:21ல் மனிதனுக்காக மீண்டும் நான் பூமியை சபிக்க மாட்டேன் என்றும், நான் இப்போது செய்தது போல் இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை என்றும் கடவுள் சொன்னார். ஆகவே, தேவனுடைய சித்தம் பூமி நிலைக்க வேண்டும் என்பதும், மனிதனுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதும் தான் என்று அவருடைய வார்த்தைகள் மூலம் தெளிவாகின்றது. ஆனால், 8:22ல் கடவுள் சொல்வதைப் பாருங்கள். பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும், உஷ்னமும், கோடை காலமும், மாரிக்காலமும், பகலும், இரவும் ஒழிவதில்லை என்றார். பூமி நிலைப்பதற்காகவும் மனிதனின் தேவைகள் நிறை‍‍வேறுவதற்காகவும் கடவுள், வானத்தில் இருந்து உணவைக் கொட்டப்போவதில்லை. இயற்கை விதிகளின் சாதனங்களை அவர் தன்‍நோக்கம் நிறைவேறுவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார். விதைப்பையும், அறுப்பையும், சீதளத்தையும், உஷ்ணத்தையும், பகலையும், இரவையும் தன் திட்டங்களும், நோக்கங்களும் நிறைவேற கடவுள் பயன்படுத்திக் கொள்வார். தான் படைத்த இயற்கையின் விதிகளை அவர் பயன்படுத்திக் கொள்வார். ‍அப்போஸ். 27:21-44யும், 1 இராஜாக்கள் 22:28-34யும் வாசிக்கவும்.

3வது அதிகாரத்தின் மூலம் கடவுள் சிலரை நித்திய வாழ்விற்காக முன்குறித்திருக்கிறார் என்று அறிந்து கொண்டோம். லூக்கா 13:5ல் இயேசு தன்னை நாடி வந்தவர்களைப் பார்த்து அவர்கள் மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மத்தேயு 5:20ல் அவர் பரிசேயருடையதும், சதுசேயருடையதுமான நீதியைவிட நமது நீதி மேலானதாக இல்லாவிட்டால் நாம் பரலோகம் போக முடியாது என்றார். கடவுள் நித்திய வாழ்விற்காக சிலரை ஆணையிட்டு நியமித்திருந்தபோதும், அவர்கள் நித்திய வாழ்வை அடைய சில சாதனங்களையும் நியமித்துள்ளார். இரட்சிப்பின் முதற்காரணி கடவுளே. ஆனால், இரட்சிப்பை அடையப்போகும் அனைவரும் அதை அடைவதற்கான இடைக்காரணிகளையும் கடவுள் நியமித்துள்ளார். மனந்திரும்புதலும், இயேசுவிடம் பரிசேயர், சதுசேயர்களுடைய நீதியையும்விட மேலான நீதியோடு ஆண்டவரிடம் ஓடிவருதலுமே அந்த இடைக்காரணிகளாகும்.

ஐந்தாம் அதிகாரத்தின் 2ம் பாராவில் இப்படி இருக்கிறது: “அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய கடவுளுடைய முன்னறிவின் மூலமும், ஆணையின் மூலமும் எல்லாக் காரியங்களும் மாறாத்தன்மையுடனும், தவறா நிலையிலும் நேரிட்டபோதும் எதுவுமே எவருக்கும் தற்செயலாகவோ அல்லது அவரது பராமரிப்புக்கு (தெய்வ செயல்) அப்பாற்பட்டோ நிகழ்வதில்லை. அதேவேளை, கடவுள் இடைக்காரணங்களின் தன்மையின்படி தமது பராமரிப்பின் மூலம் தேவைக்கேற்பவும், சுதந்திரமாகவும், எதிர்பாரா வேளைகளிலும் சம்பவங்கள் நிகழ உத்தரவிடுகிறார்.” கடவுள் நடக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள எந்தக் காரியமும் நிச்சயம் நடந்தே தீரும். ஆனால், அதற்காக இடைக் காரணிகளை அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் போவதில்லை. தனது ஆணைகளை நிறைவேற்ற கடவுள் தனது வார்த்தை, ஜெபம், விசுவாசம், மனந்திரும்புதல் ஆகிய இடைக்காரணிகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். முதற்காரணியாகிய கடவுளுடைய ஆணைக்காக அவரை நாம் துதித்து மகிமைப்படுத்தத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு நின்றுவிடாமல் இடைக்காரணிகளைப் பற்றி சிந்தித்து அவற்றில் நாம் அதிக கவனம் செலுத்துவது மிகவும் பயன்தரும்.

கடவுளின் ஆணையின் நிச்சயத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதோடு, அவர் பயன்படுத்திக் கொள்ளும் சாதனங்களையும் பற்றி அறிந்து கொண்டுள்ளோம். இனி ஐந்தாம் அதிகாரத்தின் 3ம் பாராவைக் கவனிப்போம். “சாதாரணமாக தனது பராமரிப்பில் கடவுள் பல சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். அவற்றின் துணையில்லாமல் அவரால் தன்னுரிமையோடு இயங்க முடியும். அவரால் சுயவிருப்பப்படி அச்சாதனங்களுக்கு வழமைக்குமாறாக பயன்திறத்தை அளிக்கவும் அல்லது அவற்றிற்கு எதிர்மறையாக செயல்படவும் முடியும்.” இப்பாரா, கடவுள் தமது ஆணைகளை நிறைவேற்றிக் கொள்ள சாதாரணமாக இடைக்காரணிகளைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அதற்கு விதிவிலக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்துகிறது. அதாவது, தனது நோக்கங்களும், ஆணைகளும் நிறைவேறவும், தான் படைத்த அனைத்தையும் பராமரிக்கவும் கடவுள் இடைக்காரணிகளைப் பயன்படுத்திக் கொண்ட போதும் அவற்றை அவர் நிச்சயம் பயன்படுத்தித்தான் தனது ஆணைகளை நிறைவேற்றி‍க் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவருக்குப் பிடித்தமானால் அவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளாமலும் விடலாம். அவருக்குப் பிடித்தமானால் அச்சாதனங்களைப் பயன்படுத்தாமலும், அச்சாதனங்களுக்கு எதிராகவும் நடந்து தனது ஆணைகளை கடவுளால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இதற்கு உதாரணமாக 2 இராஜாக்கள் 6:6ஐப் பார்ப்போம். அங்கே இரும்பாலான ஒரு கோடரியைக் கடவுள் மிதக்க வைப்பதாக அறிந்துகொள்கிறோம். கடவுள் உலகத்தைப் படைத்தபோது பாரமான பொருட்கள் காற்றில் மிதக்க முடியாமலும், ‍மெல்லிய பாரமற்ற பஞ்சு போன்ற பொருட்கள் மிதக்கும்ப‍யடியுமான இயற்கை விதியுடன் படைத்தார். ஆனால், இப்பகுதியில் கடவுள் அந்த பாரமான கோடரியை மீட்டுக் கொள்ள இயற்கை விதிகளையெல்லாம் மீறி நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். ரோமர் 4:19-21ஆகிய வசனங்கள் கடவுள் ஆபிரகாமுக்கும், அவனுடைய மனைவிக்கும் இயற்கையாக பிள்ளை பெற முடியாத நிலையை மீறிய பிறகு ஒரு பிள்ளையைக் கொடுத்ததை நினைவூட்டுகின்றன. ஓசியா 1:7 இல் கடவுள், தான் யூதாவின் மீது கருணை காட்டுவேன் என்றும், அவர்களை வில்லும், அம்பும், போரும், குதிரைகளும் இல்லாமல் தன்னால் காக்க முடியும் என்றும் சொல்லுகிறார். கடவுள் வழமையாக இடைக்காரணிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய காரியங்களை சாதித்துக்கொண்டாலும், தன்னுடைய மக்களின் விடுதலைக்காக அவற்றையும் மீறி அற்புதங்களைச் செய்வேன் என்கிறார்.

தானியேல் 3:27ல் சாதராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோருடைய சரீரத்தையும், உடைகளையும் அக்கினி ஒன்றுமே செய்யவில்லை என்று பார்க்கிறோம். அக்கினி கொடூரமாக எரிந்து கொண்டிருந்தபோதும் அது அவர்கள எரிக்கவில்லை. சாதாரணமாக நடக்கும் எல்லாவற்றையும் மீறி கடவுள் இவர்களைக் காத்தார். இதேபோலத்தான் தானியேலை மிகவும் பசியுடன் காத்திருந்த சிங்கத்திடமிருந்தும் கடவுள் காத்தார். பசியோடிருக்கும் எந்த சிங்கமும் சாதாரணமாக தானியேலைக் கொன்று தீர்த்திருக்கும். ஆனால், வழக்கத்தையும் மீறி கடவுள் செயல்பட்டார். இடைக்காரணிகள் அவரைக் கட்டப்படுத்தாது. அவற்றை மீறி நடந்து தன் காரியங்களைக் கடவுளால் சாதித்துக் கொள்ள முடியும்.

நாம் இதுவரை பார்த்த ஐந்தாம் அதிகாரத்தின் இம்மூன்று பாராக்களும் கடவுள் தான் ஆணையிட்ட அனைத்தையும் காத்து, வழிநடத்தி, தாங்கி ஆண்டு பராமரிக்கும்போது வழமையாக இடைக்காரணிகளை தனது ஆணைகளின் நிறைவேற்றுதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்றும், அதேநேரம் அவ்விடைக்காரணிகள் அவரைக் கட்டுப்படுத்தாது என்றும் பார்த்தோம். கடவுள் படைத்து உருவாக்கியவைகள் இறை ஆண்மையைக் கொண்டிருக்கவில்லை. கடவுள் மட்டுமே இறை ஆண்மை உடையவர். அவர் படைத்தவைகளால் அவரை ஆள முடியாது. அவரே, தான் படைத்தவற்றை ஆள்கிறார். எத்தனை மகத்தான் கடவுளை நாம் ஆராதிக்கிறோம்!

(வளரும்)

(இவ்வதிகாரத்திற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கும் லாமார் மார்டின் இதுவரை நியூஜேர்சியில் உள்ள திரித்துவ பாப்திஸ்து சபையின் போதகர்களில் ஒருவராக இருந்தார். இப்போது அச்சபையால் அனுப்பப்பட்டு அட்லாண்டாவில் ஒரு சீர்திருத்த பாப்திஸ்து சபை அமைக்கும் ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்.)

மறுமொழி தருக