சுனாமியின் அடையாளம்

இந்தச் செய்தியை மிகவும் பாரத்தோடு எழுதுவதை நான் நோக்க மாகக் கொண்டிருக்கிறேன். பவுல் சொல்லுவதுபோல், இயேசு கிறிஸ்துவின் உருக்கமான அன்போடு நான் உங்கள் எல்லோர் மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் (பிலிப்பியர் 1:8). டிசம்பர் 26ம் நாள், 2004ல் ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமியின் கோரத் தால் அவதிப்படுகிற, உங்களில் பலருடைய துன்பத்தின் ஆழத்தை நான் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. உங்களில் கருணை காட்டுகின்ற இயேசு கிறிஸ்து உங்களுடைய துன்பங்களுக்கு மத்தியில் உங்களை அரவணைத்து ஆறுதல் தருகிறார் என்பதை மட்டும் நான் உறுதியாக நம்புகிறேன். “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும் இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொரிந்தியர் 1:3, 4).

சுனாமியினால் நிகழந்துள்ள மாபெரும் அழிவுகளுக்கும், சோகத்திற்கும் மத்தியில் வேதம் போதிக்கும் இந்த அழிவிற்கான காரணத்தை நான் விளக்க விரும்புகிறேன். இந்த உலகத்திற்கான கர்த்தருடைய மாபெரும் திட்டத்தின் அடிப்படையில் சுனாமியைப் பார்க்கிறபோது உங்களுடைய மீட்பின் நாள் நெருங்குகிறது என்ற ஆறுதல் உங்களுக்கு கிட்டும் என்று நம்பிக்கை எனக்குண்டு (லூக்கா 21:28).

அநேகரைப் பாதித்துள்ள இந்த சுனாமிக்கு அர்த்தம் என்ன? என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். இது கர்த்தர் அனுப்பியுள்ள அடை யாளமா? என்று கேட்கிறார்கள். மனிதன் மேல் கர்த்தருக்கு அத்தனை கோபமா? என்று வினாவுகிறார்கள். மனிதனுடைய பாவங்களுக்காக கர்த்தர் அவனைத் தண்டிக்கிறாரா? என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள். இந்து மகா சமுத்திரத்தில் சுனாமி எழுந்ததற்கான காரணத்தை ஆராய்கிற போது உலகத்தைப் பற்றி வேதம் போதிக்கின்ற நான்கு உண்மைகளின் அடிப்படையில் அதை ஆராய்வது அவசியம்.

சுனாமி கர்த்தரின் படைப்போடு சம்பந்தமுடையது

உலகத்தைக் கர்த்தர் படைத்தபோது அதை நல்லதாகவே படைத்தார் (ஆதி 1:31). அப்போது உலகம் பாவத்தையோ, துன்பத்தையோ, மரணத்தையோ அறியாதிருந்தது. கர்த்தர் தன்னுடைய சாயலில் ஆணையும், பெண்ணையும் படைத்து படைப்பை அனுபவிக்கும் பொறுப்பை அவர்களுக்கு அளித்தார். தனக்கு மனிதன் கீழ்ப்படிய வேண்டும் என்று விதித்த கர்த்தர் அவன் அதில் தவறினால் மரணம் சம்பவிக்கும் என்று கூறியிருந் தார்.

கர்த்தர் ஆதியில் உலகத்தைப் படைத்தபோது அங்கே நிலநடுக்கங் களுக்கோ, சுனாமிக்கோ இடமிருக்கவில்லை. நாமின்றிருக்கும் உலகத்தில் இயற்கையின் கோரத்தையும், மரணத்தையும் பார்க்கிறோம். ஆதியில் அப்படியிருக்கவில்லை. அன்று மனிதன் கர்த்தரோடு பூரணமான ஐக்கியத்தை அனுபவித்து வந்தான். அக்காலத்தில் படைப்பின் அத்தனை அம்சங்களும் ஒற்றுமையுடன் இயங்கிவந்தன. தன்னையே அழித்துக் கொள்ளும் விதத்தில் ஆக்ரோசத்துடன் போரிடும் இயற்கையின் சீற்றத்திற்கும், மரணத்திற்கும் அன்று இடமிருக்கவில்லை. “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதி 1:31).

சுனாமி மனிதனின் வீழ்ச்சியோடு தொடர்புடையது

மனிதனுடைய கீழ்ப்படியாமையே அவனுடைய வீழ்ச்சிக்கு (Man’s fall in sin) காரணமாயிற்று. பிசாசின் பேச்சைக் கேட்ட நமது பெற்றோரான ஆதாமும், ஏவாளும் கர்த்தருக்கு எதிராக நடந்து அவருடைய கட்டளையை மீறியதால் கர்த்தரின் தண்டனையை சந்தித்து அதன் காரணமாக உலகத்தில் மரணம் ஏற்பட்டது. “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12). ஆதாமின் மூல பாவம் மனிதர்கள் மீது மட்டுமல்லாது கர்த்தர் படைத்த அனைத்தின் மீதும் மரணத்தைக் கொண்டு வந்து அவனையே அதற்குப் பொறுப்பாளியாக்கியது. அதன் காரணமாக ஆதாம் வழிவந்த அனைவரும் பிறக்கும்போது மரணத்தோடேயே பிறக்கிறார்கள். ஆதியில் ஒற்றுமையோடு செயல்படும் விதமாக கர்த்தர் படைத்த அனைத் தையும் அக்குவேராகப் பிரித்து வைத்திருப்பதே மரணம் என்கிறது வேதம். கர்த்தரை அறியாமல் அவரிடம் இருந்து பிரிந்து இருப்பதே மரணம். ஆதாமின் பாவத்தின் காரணமாக பிறப்பில் இருந்து எல்லா மனிதர்களும் கர்த்தரிடம் இருந்து பிரிந்து அவருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த உலகத்தில் நாம் மரணத்தையும், சுனாமி போன்ற இயற்கையின் கோரங்களையும் சந்திக்கும்போது மனிதனின் பாவம் உலகத்தில் ஏற்படுத்தியுள்ள அழிவைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

சுனாமி மீட்பின் திட்டத்தோடு தொடர்புடையது

பரிசுத்தமும், பரிபூரண நீதியுமுள்ள கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் அவர்கள் செய்த பாவத்திற்காக நித்திய தண்டனைக்குள்ளாக்கி இருந்திருந்தால் அவர் செய்தது நீதியானதாகவே இருந்திருக்கும். அதேவேளை, அவர் இந்த உலகத்தையும் நரகமாக்கி இருந்திருக்கலாம். கர்த்தர் அவ்வாறு செய்திருந்தால் அவரை நீதியற்றவர் என்று நம்மால் சொல்லவே முடியாது. இருந்தபோதும் கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமது பெற்றோரை அரவணைத்தார். ஆதியாகமம் 3ம் அதிகாரம், கர்த்தர் இந்த உலகத்தைக்காத்த விதத்தை விளக்குகிறது. அவர் மனிதகுலத்திற்கும் சாத்தானுக்கு மிடையில் பிரிவினையை ஏற்படுத்தினார். உலகத்தில் ஒழுங்கு இருப்பதற் காக ஆதாமையும், ஏவாளையும் அவர் பழையபடி அவர்களுடைய பொறுப்பைச் செய்யும் நிலைக்கு மாற்றுவித்தார். இறுதியில் உலகம் நித்திய விடுதலையை அடையும்படி அதையும் காப்பாற்றினார். ஆதாமும், ஏவாளும் கேட்கும்படியாக கர்த்தர் தன்னுடைய திட்டத்தை சாத்தானுக்கு அறிவித்தார். சாத்தானை வீழ்த்துமுகமாக அவர் தன்னுடைய ஒரே குமாரனான கிறிஸ்துவை இந்த உலகத்துக்கு அனுப்பி பாவத்தில் வீழ்ந்துபோன மனிதனையும், படைப்பையும் மரணத்தில் இருந்தும், நித்திய பிரிவில் இருந்தும் மீட்கும் திட்டத்தை கொண்டிருந்தார். தனது ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்துக்கு அனுப்பி மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க கல்வாரிச் சிலுவையில் அவரைப் பரிபூரணமாகப் பலியிட்டதன் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றினார் என்கிறது வேதம்.

சுனாமி நித்திய தீர்ப்போடு தொடர்புடையது

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நிகழப்போகிற நியாயத் தீர்ப்பை சுனாமி அடையாளமாகக் காட்டுகிறது. ஜப்பானின் ஹீரோசி மாவில் போடப்பட்ட அணுக்குண்டைவிடப் பத்தாயிரம் தடவை அதிக வல்லமை கொண்டிருந்த சுனாமி தற்செயலாக நடந்த ஒரு நிகழ்ச்சியல்ல. பாவத்திற்கும், நாம் தொடர்ந்து கர்த்தரை நிராகரித்து செய்து வருகின்ற கொடுமைகளுக்கும் எதிராக அனுப்பப்பட்ட எச்சரிக்கைச் செய்தி அது. இப்படிப்பட்ட இயற்கை அழிவுகள், போர்கள், நிலநடுக்கங்கள் அனைத்தும் வரப்போகிற நியாயத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி அதற்கு முன் மனிதர்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன (மத்தேயு 24, 25). வரப்போகிற நியாயத் தீர்ப்பு நாளின் தண்டனைக்குத் தப்ப “இதோ சீக்கிரமாய் வருகிறேன்” என்று சொல்லியிருக்கிற இயேசுவை, ஆண்டவரே! என்னை மன்னியும், பாவத்திலிருந்து என்னை மீட்பதற்காக நீர் சிலுவையில் மரித்தீர் என்பதை உணர்கிறேன், உம்மை விசுவாசிக்கிறேன் என்றுகூறி மனப்பூர்வமாக இன்றே விசுவாசித்தால் உங்களுக்கு மீட்பு உண்டு, பரலோகம் உண்டு. உடனடியாக மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

மறுமொழி தருக