கவிதை

மண்புழுவும் மண்வெட்டியும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நினைப்பதெல்லாம் நடப்பதற்கு நாமும் தெய்வமில்லை
நடக்கின்ற அத்தனைக்கும் படைத்தவரே காரணம்
நாசத்தனங்களுக்கு மட்டும் நாம் காரணம்

பரமனை அறியாமல் பாவத்தில் மூழ்கி
பண்புகள் கெட்டுப் பாம்பிலும் மோசமாய்
விஷத்தைக் கக்கி வினாசங்கள் செய்து
வையத்தை அழிக்கின்றோம் வீணராய் வாழ்ந்து

விடுதலை தேவை வீணான வாழ்க்கைக்கு
சீரானவழி காட்ட சிந்தனைக்கில்லை பலம்
இருதயம் கெட்டு சிதல் கொட்டுது பாவத்தால்
மருந்துக்கு வழி இந்த மண்ணில் எங்குமில்லை

மனிதநேயமே மருந்திதற்கு என்பார்
மனிதனும் தெய்வமாகலாம் என்பார்
மண்புழு அறியுமா மண்வெட்டியின் நோக்கம்
மனிதப்புழுவுக்குத் தெரியுமா தேவனின் சித்தம்

நித்திய தெய்வீகத்தைப் பெரிதாய் எண்ணாமல்
நமக்காய் இம்மண்ணில் மானுடத்தை ஏற்று
தயவாய்த் தன்னை சிலுவையில் தாழ்த்தி
மரித்தார் ஒரேதரம் தேவ மைந்தனாம் இயேசு

பாவங்களைந்தோட பாவியென்றுணை உணர்ந்து
பரமன் இயேசுவின் பாதத்தில் அறிக்கையிட்டு
நித்திய வாழ்வுக்காய் நிமலனை விசுவாசித்து
நித்தமும் வாழ்வாயவர் நேர்வழி பின்பற்றி

-சுபி

மறுமொழி தருக