புதிய வருடம் (2025) உதயமாகியிருக்கிறது. நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல்வேறு கனவுகளோடு 2024ஐ எதிர்கொண்டிருக்கிறோம். நாம் நினைத்தவை நடக்கவில்லை; நினையாதவைகள் நடந்திருக்கின்றன. உலகம் இயற்கை அழிவுகளையும், போர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கோவிட் கிருமியின் அட்டகாசம் நின்று போயிருந்தாலும், அதன் பலமான தாக்கங்களை இன்றும் நாடுகள் அனுபவித்து வருகின்றன. விலைவாசி கூரைக்குமேல் போயிருக்கிறது. பொதுவாகவே எல்லா நாடுகளிலும் வேலைக்கு ஆள் தட்டுப்பாடும், பணவீக்கமும் அதிகரித்துப் போயிருக்கின்றன. என் நாட்டிலும் கூட இரவு வேலைகளில் நாற்பது பேருக்கு ஒரு மருத்துவ தாதி பணிசெய்து கொண்டிருக்கும் இக்கட்டான நிலைமை. கோவிட்டுக்கு முன்பிருந்ததைப் போல உலகம் இன்றில்லை.