2 இராஜாக்கள் 2:19-22
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 2:23-25 வரையிலுள்ள வசனங்களை ஆராய்வோம். இந்த வசனங்களை வாசிக்கிறபோதே மனத்தில் ஒரு பயம் ஏற்படும். மேலும் இந்தப் பகுதிக்கு விளக்கவுரை எழுதிய பல விரிவுரையாளர்கள் இது நம் காலத்திற்குப் பொருந்தி வராத கட்டுக்கதை என்று விளக்கியிருக்கிறார்கள். அது எப்படி ஆண்டவருடைய மனிதனான ஒரு தீர்க்கதரிசி இப்படிக் கோபப்பட்டுச் சபித்து இத்தனை பேரைக் கரடிகளைப் பயன்படுத்திக் கொல்ல முடியும் என்பது அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருத்தும் தெய்வீக வழிநடத்தலை நம்புகிறவர்கள் அதில் தவறொன்றும் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். அதாவது வேதம் பரிசுத்த ஆவியினாலே ஊதி அருளப்பட்டிருக்கிறது என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார், அது மனிதனின் சிந்தனையில் இருந்து வெளிப்படவில்லை. மனிதர்களை வைத்து ஆவியானவர் அதை எழுத வைத்தாலும் எதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்தாரோ அந்த விஷயங்களை மட்டும் ஒரு வார்த்தையும் விடாமல் உள்ளது உள்ளபடியே அவர்களைக் கொண்டு எழுத வைத்தார். அந்தமுறையில் நம் கையில் வந்து சேர்ந்ததுதான் வேதம். அவசியத்தின் அடிப்படையில் தெய்வீகத் தேவையின் காரணமாக இந்த இரண்டாவது அதிகாரத்தின் கடைசி வசனங்கள் வேதத்தில் பதியப்பட்டிருக்கின்றன.