வேதம் முரண்படாது

அதிகாரம் 5 – A.W. பின்க்

வேதத்தின் எந்தவொரு பகுதிக்கும், நாம் தரும் விளக்கம் வேதத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள போதனைகளோடு கண்டிப்பாக ஒத்திசைந்திருக்க வேண்டும் என்று நாம் கூறுவது (Analogy of Faith), சாதாரணமானதாகவும், யதார்த்தமானதாகவும் தோன்றலாம், ஆனால் வேதத்தை விளக்குவதில் திறமையற்றவர்கள் மட்டுமல்லாமல், அனுபவம் வாய்ந்த அநேகர்கூட இதைப் பின்பற்றாமல் விட்டுவிடுகிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த வேத விளக்க அடிப்படைக் கொள்கையைப் பொருட்படுத்தாமல், வேதத்தின் மெய்த்தன்மையை மறைத்து, தெளிவற்ற வேதப்பகுதிகளுக்கு, புதிதாகவோ அல்லது தூக்கிவாரப்போடச் செய்யும் ஏதாவதொரு விளக்கத்தையோ தர முயலுகிறவர்கள், வேதத்தை விளக்குவதில் நிச்சயமாகத் தவறிழைப்பார்கள். இது குறித்து ஜோன் ஓவன், “வேதத்தை விளக்குவதில் இந்த விதியை நாம் பொறுப்புடன் கையாளுகிறபோது, கடவுளுடைய வார்த்தையைச் சிதைக்கும் பாவகரமான ஆபத்து நமக்கு ஏற்படாது. ஒவ்வொரு வேதப்பகுதிக்கும் சரியான அர்த்தத்தை நாம் கண்டடைய முடியாமற்போனாலும், அதைச் சிதைக்கும் பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார். உதாரணமாக, “தேவன் ஆவியாயிருக்கிறார்” (யோவான் 4:24), அவர் உருவமற்றவரும் கண்ணுக்குப் புலப்படாதவராகவும் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அவருக்குக் கண், காது, கை, கால் இருப்பது போல் குறிப்பிடப்பட்டிருக்கிற வேதப்பகுதிகளை நாம் தவறாக விளங்கிக்கொள்ளுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றொரு உதாரணம், அவரிடத்தில் “யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக்கோபு 1:17) என்பதை நாம் அறிந்திருக்கிறபோது, அவர் “மனஸ்தாபப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிற பகுதி, நம்முடைய புரிதலுக்காகவே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். சங்கீதம் 19:11 மற்றும் வேறு சில வசனங்களில், விசுவாசிகளுடைய இரக்கமான நற்செயல்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும், வேறுசில பகுதிகள் அத்தகைய ஈடு செய்தல் அவர்களுடைய நற்செயலுக்கான வெகுமதியாக இல்லாமல், கடவுளுடைய கிருபையினால்தான் வழங்கப்படுகிறது என்றும் சொல்லுகிறபோது, மேலே பார்த்த விதத்தில்தான் நாம் இப்பகுதிகளை அணுக வேண்டும்.

Continue reading