கசப்பான உண்மை ! – கருத்துரை – கிங்ஸ்லி

Kingslyதங்களுடைய திருமறை தீபம்  வலைத் தளத்தில் சமீபத்தில் தாங்கள் எழுதியிருக்கும் “ சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும்” என்ற ஆக்கத்தை வாசித்தேன்.  இது ஆத்மீக  பாரத்தை ஏற்படுத்துவதாகவும் ஏமாறும் ஆத்துமாக்கள் எப்போது விழித்துக்கொள்ளும் என்ற  ஆதங்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் இருக்கிறது.

உண்மையை உ(றை)ரக்கச்சொல்லும்போது அது “பாகற்காயைப் போல” கசப்பாகத்தான் இருக்கும். அது கசப்பு என்றாலும் அதிலுள்ள நன்மைகள் அதிகம். அதுபோல இவ்வாக்கத்தில் நீங்கள் விளக்கியிருக்கும் உண்மைகளும் கூட பலருக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் வாசித்து சிந்தித்து மெய்க்கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவர்களுக்கு  சந்தோஷத்தைத் தரும் உற்சாக பானம் மட்டுமல்லாது எச்சரித்து சுழற்றி விழிக்கச்செய்யும் சாட்டையும் கூட.

மெய்க்கிறிஸ்தவர்கள் ஒருவருக்குக்கொருவர் செய்யும்  ஆவிக்குரிய சம்பாஷனையில் கிடைக்கும் அலாதியான ஆத்ம திருப்தியும் ஆவிக்குரிய வளர்ச்சியும் மிகவும் ஆசீர்வாதமானது ஆகும். இது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட குடும்பத்தில் ஆரம்பித்து சபையில்  சக விசுவாசிகள் மத்தியில்  தொடருவதாக இருக்கிறது. இதை அறியாதவர்களுக்கும் உணராதவர்களுக்கும் கிடைத்திருக்கும் ஊக்கப்படுத்தும்  ஆக்கம் இது. உண்மையைச்  சொன்னால்  ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா !

நம்மினத்தை சீரியஸாக  சீரழித்துக்கொண்டிருக்கும்   வாசிப்பின்மையை  மீண்டும் மீண்டும் எழுதி எச்சரித்து வருகிறீர்கள். இம்முறையும்  அதை பரவலாக காணப்படும் “வைரஸ் வாசிப்பின்மை” என சுட்டிக்காட்டி அதின் காரண காரணங்களை தெளிவுபட  விளக்கியிருக்கிறீர்கள். கிறிஸ்துவின் மீட்பை அடைந்தவர்கள் சிந்திக்காமலும் அறிவுப்பசி இல்லாமலும் இருப்பதற்கு சோம்பேரித்தனமே முழுக்காரணம் என கூறி இருப்பது மறுக்க முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது.

பிறப்பு, வளர்ப்பு, பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், கல்விமுறைகள் வேறுபட்டு இருந்தாலும் பாவத்தில்  இருக்கும் ஒருவனுக்கு கிடைக்கும் “மறுபிறப்பு”  அவனுக்குள் ஏற்படுத்தும்  மாற்றமும்  தீவிரமான வளர்ச்சியும்  மேற்குறிப்பிட்ட அனைத்தையும்   அவனையும் கிறிஸ்துவுக்கும் சத்தியத்துக்கும் ஏற்றாற்போல் அவனை மாற்றிவிடுகிறது. கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாற்றப்படுகிறவர்களுக்கு சம்பவிப்பது இதுவே.  இவ்வித ஆசிர்வாதங்களை அறியாமல் இருப்பவர்களே நம்மினத்தில் அதிகம்.

சகலத்தையும் தன்னுடைய  வார்த்தையின் வல்லமையினால் படைத்துப் பராமரித்து ஆளுகை செய்யும்  கர்த்தரின் கிருபையை வேதத்தின்படி அறிவுபூர்வமாக உணராமல் மனிதனின் மாறுபடும்  உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஏமாந்து கொண்டிருக்கும்  நம்மினத்து கிறிஸ்தவத்தின் தற்கால நிலைமையை தத்ரூபமாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.

வேதப் பிரசங்கம் எது, வெறும் பிரசங்கம் எது என நிதானித்து வெறுமையானதை ஒதுக்கித்தள்ளி  வேதப் பிரசங்கத்தை அள்ளியணைத்து அதை மட்டுமே கேட்டு வளரவேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு.

இக்கடமையை சீராக செய்து வேத பிரசங்கத்தின் மூலம் கர்த்தரின் பிரசன்னத்தை அறிந்துணர்ந்து கிருபையிலும் சத்தியத்திலும் வளராமல் உணர்ச்சிகளுக்கு தூபமிடும் போதகர்களிடம் சிக்கித் தவித்து, பிதற்றும் பிரசங்கத்தால் தள்ளாடித்  கொண்டிருக்கும் ஆத்துமாக்களைப் பற்றிய உங்களின் ஏக்கத்தையும் பாரத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது இவ்வாக்கம்.

கர்த்தரின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலம்  பாவத்தினால் அதை இழந்தபோதும்  சிந்திக்கும் ஆற்றலை இழக்காது அறிவோடு சிந்தித்து சாதித்து செயல்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர்கள்  என்ற  பெயரில் வேதபூர்வமாக  சிந்தித்து  முறையாக தயாரிக்கப்படாமல்  “குபீர் சமையலாக” மனித எண்ணத்தில் தோன்றும் உப்பு சப்பில்லாத பிரசங்கங்களை உலகமுழுவதும் கேட்கவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு, உலகத்தானை மிஞ்சும் விதத்தில் யோசித்து தங்கள் பிதற்றல்களை சமூக ஊடகங்களில் அரங்கேற்றி வருகிறது தமிழ்  கிறிஸ்தவ சமுதாயம் (அனைவரும் அல்ல). கர்த்தரை அறியாமல் செய்யும்  எந்த சம்பாஷனையும் பிரசங்கமும் ஆவிக்குரிய வளர்ச்சியைத் தருவதில்லை என்பதே ஆணித்தரமான உண்மை.

ஆவிக்குரிய சம்பாஷனை ஒரு கலை என்பதை  உணராமலிருந்தால் அதில் வளர்வது என்பது கடினம். ஆவிக்குரிய தர்க்க ரீதியான உரையாடல்களும் பிரசங்கங்களும் இல்லாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறித்தனம் என்றாலும், இவற்றை எல்லாம் ஒழித்து வளருவது என்பது கூடாத காரியமல்ல. கர்த்தருடைய உதவியுடன் இது சாத்தியமாகும்.  குப்பை மேடாக இருந்தபோதிலும் சில குன்டுமணிகளும் ஆங்காங்கே இருக்கதான் செய்கின்றன.

சலிப்பூட்டும் சம்பாஷனைகள் ஆவிக்குரிய சமயோசித புத்தியைத் தந்து சத்தியத்தில் வளர்க்காது என்பதையும், பிதற்றல் பிரசங்கங்கள் பித்தலாட்டத்திற்கு வழிவகுக்குமே தவிர சத்தியத்தைப் பின்பற்றி வாழ உதவாது என்பதையும் தமிழ் கிறிஸ்தவம் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.  இவற்றையெல்லாம்  உணரும்படி வேதபூர்வமாகவும் வரலாற்று பூர்வமாகவும்  ஆராய்ந்து விளக்கி எழுதிவரும் தங்களின் பணி தொடர ஜெபிக்கிறோம்.  மெய்யான ஆத்மீக எழுப்புதலுக்காக கடுமையாக உழைத்து, தாழ்மையோடு வாழ்ந்து, வாஞ்சையோடு ஜெபிப்போம் கிறிஸ்து கிருபை செய்யட்டும்.