பாவியாகிய மனிதன் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் (Total Inability) என்ற போதனையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சிலர் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுவதில் பயனில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதன் மோசமான பாவியாக, இயலாதவனாக இருக்கிறான், அதனால் அவனுக்கு சுவிசேஷம் சொல்லுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான தவறான எண்ணம் கிறிஸ்துவின் சீடர்களுக்கும் வந்துவிடுகிற நிலை இருந்தது. மாற்கு 10:24-27 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். ‘சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டர்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாமே கூடும் என்றார்.’
யாருமே இரட்சிக்கப்படுவது ஆகாத காரியம் என்ற வழியில் சீடர்களுடைய சிந்தனை போவதைக் கவனித்த இயேசு அவர்களைத் திருத்துவதை மேலே நாம் பார்த்த வசனங்களில் கவனிக்கிறோம். எவருடைய இரட்சிப்புக்கும் நாம் மனிதனின் வல்லமையில் தங்கியிருந்தால் எவரும் இரட்சிப்படைவதற்கு வழியே இல்லை. ஆனால், கர்த்தரால் எதையும் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்கு விளக்குகிறார்.