மனிதனுடைய சுயாதீனமான சித்தத்தைப் பற்றிய போதனையை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் இப்படி நினைப்பதுண்டு. அவர்கள் பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டும் என்று மெய்யாகவே விரும்பினாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது என்று நம்புகிறார்கள். ஒருவன் இரட்சிப்பை அடைய விரும்பியும் அவனால் அதை அடைய முடியாமலிருப்பது அவர்களுக்கு அநியாயமானதாகக் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள், கடவுள்தான் ஏதோ ஒரு விதத்தில் இரட்சிப்படைய விரும்புகிறவர்களை அவர்கள் அதை அடைய முடியாதபடி தடுத்து வைத்திருக்கிறார் என்று தவறாக நினைக்கிறார்கள். இப்படி நினைப்பவர்கள் கர்த்தருடைய இறையாண்மை பற்றிய போதனையும், தெரிந்துகொள்ளுதல் பற்றிய போதனையும் தான் இந்த நியாயமில்லாத காரியத்துக்குக் காரணம் என்று அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். இதனால் இந்த சத்தியங்களை விளக்கும் விசுவாச அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்தோடு, இவர்களால் மனிதன் முழுமையான பாவியாக, எந்தவித ஆத்மீக செயல்களைச் செய்யும் வலலமையில்லாதவனாக இருக்கிறான் என்ற போதனையையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதெல்லாம் இவர்களுக்கு நியாமற்றவையாகத் தெரிகின்றது. இவர்கள் நினைப்பில் ஏதும் உண்மையிருக்கிறதா என்று பார்ப்போம்.