இரட்சிப்போடு தொடர்புள்ள சத்தியங்களைத் தொகுத்துத் தருகின்ற ‘கிருபையின் போதனைகள்’ மனிதனுடைய பாவத்தின் தன்மையை விளக்குகின்றபோது பாவம் அவனை முழுமையாக, அவனில் ஓரிடம் விடாமல் பாதித்து கர்த்தர் முன் பாவியாக நிறுத்தியிருக்கிறது என்கிறது. இதனை ஆங்கிலத்தில் Total Depravity or Total Inability என்று விளக்குவார்கள். Total Depravity என்றால் முழுமையாகக் கறைபடிந்தவன் என்று பொருள். Total Inability என்றால் முழுமையாக செயலிழந்தவன் என்று பொருள். இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பதங்கள். எந்த ஓர் உண்மையையும் விளக்குவதற்கு நாம் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது அவசியம். ஆனால், அந்த வார்த்தைகளும், பதங்களும் என்ன காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அதை மீறி அவற்றைப் புரிந்துகொள்ளுவது தான் தவறு. இந்தப் பதங்கள் எதை விளக்க முயல்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘மனிதன் முழுமையாகக் கறைபடிந்தவன்’ என்பது சுத்தமான உண்மை. அதற்கு அர்த்தம் அவன் நன்மைகளே செய்ய முடியாத மகா கேடு கெட்டவன் என்பதல்ல. இந்த வார்த்தைகளுக்கு அதுவல்ல அர்த்தம். இந்த உண்மையைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிறவர்கள் அப்படித் தவறாக எண்ணிவிடுகிறார்கள். பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்து ஆவிக்குரிய நன்மைகள் எதையுமே அவன் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கின்றது என்பதை மட்டுமே இந்த உண்மை விளக்க முனைகிறது. அதேபோலத்தான், ‘மனிதன் முழுமையாக செயலிழந்தவன்’ என்ற வரிகளும் ஆவிக்குரிய செயல்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் மனிதன் இருக்கிறான் என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.