முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்கிறது வேதம். அதாவது, ஆவியும், சரீரமும் கொண்டிருந்து கடவுளோடு நெருக்கமான தொடர்பு வைத்திருக்கவும், கடவுளைப் பிரதிபலிக்கும் வகையிலான தன்மையைக் கொண்டும் ஆதாம் படைக்கப்பட்டிருந்தான் (ஆதி. 1:26-27). அதுவே அவனில் இருந்த கடவுளின் சாயல். அவன் பாவத்தில் விழுந்தபோது அதற்கு என்ன நடந்தது என்பதே கேள்வி. இதுபற்றி எழுதியிருக்கும் ஜோன் கல்வின், ‘தான் படைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து ஆதாம் வீழ்ந்தபோது கடவுளை நெருங்க முடியாதபடி பிரிக்கப்பட்டான். அவனில் இருந்த கடவுளின் சாயல் முற்றாக மறைக்கப்படாமலோ அல்லது முற்றாக அழிக்கப்படாமலோ போனாலும் அது முழுமையாக கறைபடிந்து போய் அவனுள் இருந்த அனைத்தும் பயப்பட வேண்டியளவுக்கு அங்கவீனமுற்றுப் போயின’ என்கிறார்.
பாவியாக இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலிலேயே இருக்கிறான் என்கிறது வேதம். கடவுளின் சாயலே மனிதனை ஏனைய படைப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. கடவுளின் சாயலில் அவன் தொடர்ந்திருப்பதனால்தான் அவன் பாவத்தினால் கடவுளை அறியாமல் இருந்தபோதும், ஏதோ ஒன்றை ஆராதிக்க முயற்சிக்கிறான். கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை எவரும் நிந்தித்துப் பேசக்கூடாதென்று வேதம் விளக்குகிறது (யாக். 3:9). இவற்றில் இருந்து பாவம் கடவுளின் சாயலை மனிதனில் இருந்து அகற்றிவிடவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் அந்த சாயல் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனில் எந்த வகையில் கறைபடிந்து காணப்படுகின்றது என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சரியாக விளங்கிக்கொள்ளுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் இந்த அறிவு முக்கியம். ஜோன் கல்வின் சொல்லுவதுபோல் பாவத்தில் இருக்கும் மனிதனின் அத்தனைப் பாகங்களும் பயப்பட வேண்டிய அளவுக்கு சீரழிந்து காணப்படுகின்றன. அவனுடைய இருதயம் பாவத்தால் பாழடைந்து காணப்படுகின்றது. அவனுடைய சித்தமும் (Will) பாவத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.