பாரம்பரியமாகவும், வேத அடிப்படையிலும் காலங்காலமாக சபைகளில் இரட்சிப்பின் வழிகளை எடுத்துரைக்கவும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் வளம்பெறத் தேவையான போதனைகளை அளிக்கவும் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அருஞ்சாதனமான அருளுரைக்கு இன்று பலவிதத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளதை சபை சீர்திருத்தத்திலும் அருளுரையிலும் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அருளுரை என்ற பெயரில் கதைகளையும், கேட்பவர்கள் உணர்ச்சி வசப்படும் விதத்தில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, இடையிடையே பாடல்களும் நூழைந்துவரும் ஒரு கலவையைக் கேட்டு செவிமடல்கள் புளித்துப் போய் நிற்கிறார்கள் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவர்கள். இது போதாதென்று பரவசக்குழுக்களைச் சார்ந்த பிரசங்கிகள் திருமறையைத் தூக்கி எறிந்துவிட்டு தம் மனதுக்குத் தோன்றும் எதையும் சொல்லிக் கேட்பவர்களின் உணர்ச்சியைத் தூண்டி அவர்களை நர்த்தனமாடச் செய்து வருகிறார்கள். இது ஒரு பத்தாம் பசலிப் பாரம்பரியம் என்று அருளுரையையே ஒதுக்கிவிட்டு வேறு சாதனங்களுக்காக அலையும் பேர்வழிகளும் சபைகளும்கூட உண்டு.