பிறவி அடிமைகள்
எழுதியவர்: மார்டின் லூதர்
தமிழாக்கம்: ஆர். ஜே. சி. பென்னட்
இந்நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி முன்னொருமுறை இப்பத்திரிகையில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இதுபற்றி விளக்கமாக எழுத வேண்டிய அவசியத்தை இன்றைய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. கடவுளின் துணையோடும் மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அநேகர் இன்று ஊழியத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ளத் துணை புரியும் சாதனமாகவே Altar Call என்றழைக்கப்படும் ‘கரங்களைத் தூக்கி ஆண்டவரை ஏற்றுக் கொள்ளும்’ அல்லது கூட்டங்களில் நற்செய்தியாளரின் அழைப்பை ஏற்றுக் கடவுளிடம் தம்மை ஒப்புக் கொடுக்க முன்னால் வரும் முறைகள் இன்று பல நற்செய்தியாளர்களாலும், போதகர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் மனிதன் நிச்சயமாக ஆண்டவரை அறிந்து கொண்டுவிடலாம் என்று பலர் நம்பும் வேளையில், மனிதன் கடவுளை அறிந்து கொள்ள இவை மட்டுமே போதாது என்றாலும் இவையில்லாமல் ஒருவன் கடவுளை அறிந்து கொள்ள முடியாது என்று நம்புபவர்களும் அநேகம். இத்தகைய நம்பிக்கைகளுக்குக் காரணமென்ன? இவை வேதபூர்வமானவையா? எந்த அடிப்படையில் நற்செய்தியாளர்கள், போதகர்கள் இன்று இவ்வழி முறைகளைக் கூட்டங்களில் பயன்படுத்துகிறார்கள்? என்று நாம் ஆராயத்தான் வேண்டும்.