1. கிறிஸ்து தனது அனாதித்தீர்மானத்தின்படி முன்குறிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே மரித்தார் என்று சீர்திருத்தக் கோட்பாடு போதிக்கின்றது. முன்பெல்லாம் கர்த்தரை அறியாத ஒரு மனிதன் மரிக்கும்போது, நான் இவரை கர்த்தருக்காக ஆதாயப்படுத்தவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இப்போது சீர்திருத்தக் கோட்பாட்டை அறிந்து கொண்டபின் இந்த மனிதர் ஆண்டவரால் முன் குறிக்கப்படாததால்தான் அவரை அறியாமல் மரித்துவிட்டான். ஆகவே, நான் வருத்தப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இது சரியா?
பதில்: ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது நமக்குத் தெரியும். அதே போல் இரயில் ஓடுவதற்கு இரு தண்டவாளங்கள் அவசியம். கர்த்தருடைய வேதமும் இதேவகையில் இரு முக்கியமான சத்தியங்களைப் போதிக்கின்றது. நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது எவ்வளவு அவசியமோ அதே போல் இவ்விரு சத்தியங்களையும் ஒன்றுக்கொன்று முரண்படாதவகையில் புரிந்து கொள்வது மிக அவசியம். கர்த்தர் தனது அநாதித் தீர்மானத்தின் மூலம் மனித குலத்தில் ஒரு பகுதியினரைத் தனது குழந்தைகளாகும்படித் தெரிந்து கொண்டுள்ளார் என்று வேதம் போதிக்கின்றது. அவ்வாறு அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே அவரை அறிந்து கொள்வார்கள் என்பதும் வேதம் போதிக்கும் உண்மை. ஆனால், வேதம் நாணயத்தில் இன்னுமொரு பக்கம் இருப்பது போல் வேறொரு உண்மையையும் போதிக்கின்றது. இவ்வுண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மனித குலம் முழுவதும் அறிந்து கொள்ளும்படியாக கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும் என்றும் வேதம் போதிக்கின்றது (மத்தேயு 28:18-20). கேள்வியின் மூலமே விசுவாசம் வருவதால் அனைவரும் கேட்கும்படியாக நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் (ரோமர் 10:27). அதுமட்டுமல்லாது, நற்செய்தியைக் கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியது அனைவரது கடமை என்றும் வேதம் போதிக்கின்றது. இவ்விரு சத்தியங்களும் நமது இரு கண்களைப் போல முக்கியமானவை.