இன்று கிறிஸ்தவ உலகெங்கும் சுகமளித்தல் கூட்டங்களுக்குக் குறைவில்லை. தங்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதற்காக ஜெபிப்பது மட்டுமன்றி சுகமளிப்புக் கூட்டங்கள் எங்கு நடக்கின்றன என்று தேடி அங்கெல்லாம் ஓடி அலைவதும் அநேகருடைய வழக்கமாக இருக்கின்றது. பெனிஹின்னிலிருந்து தமிழகத்து தினகரன் வரை அநேகர் தங்களை சுகமளிக்கும் மன்னர்களாக எண்ணி அதையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். படித்தவர்கள் முதல் பாமரர்வரை இவர்களது பிடியில் அகப்படாதவர்கள் மிகச் சிலர். பெனிஹின்னையும், தினகரனையும் கிறிஸ்துவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் சிந்திக்கத் தெரியாத பலவீனமுள்ள மக்கள் கூட்டத்தை இப்புதிய நூற்றாண்டிலும் பார்க்கிறோம். எது வளர்ந்தாலும், சீர்திருந்தினாலும் எம் சிந்தனை சீர்திருந்தாது என்ற வைராக்கியத்தோடு இவர்கள் வாழ்வதுபோல் தெரிகிறது. பெனிஹின்னின் வாய் திறந்தால் முத்து உதிரும் என்று மயங்கிக் கிடக்கும் ஒரு மாது எனக்கு அறிமுகமானவர். வேதம் புரியாமல் மனித மாயைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து அவர் வாழும் வாழ்க்கை பரிதாபம். ஆனால், அது அவருக்குப் புரிவதுமில்லை, தெரிவதுமில்லை. தினகரனின் வார்த்தையில் மயங்கித் தேவன் கூடத் தேவையில்லை என்ற, அவரது – இயேசு அழைக்கிறார் – பத்திரிகை மட்டுமே வேதம் என்று வாழ்ந்து பின்னால் அறிவு தெளிந்து அப்பத்திரிகைகளைக் குப்பையில் எறிந்த ஒரு பெரியவரைப்பற்றி மலேசிய நண்பர் ஒருவர் எனக்குக் கூறியிருக்கிறார். உங்கள் கால்கள் நீளமாக வளர வேண்டுமா? எங்கள் கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் ஜோண் விம்பர். கிறிஸ்தவர்கள் இத்தகைய அழைப்புகளை நம்பி அக்கூட்டங்களுக்குப் போவது அவசியமா?