இவ்வருடத்தில் இந்திய வேதங்களில் இயேசுவா? என்ற தலைப்பில் நாம் வெளியிட்டுள்ள ஒரு புதிய நூலின் அத்தியாயத்தை இங்கே வழங்குகிறோம். இந்திய வேதங்களின் மூலமும், தமிழ்ச் சமயங்கள் மூலமும் இயேசுவைக் கண்டு கொள்ளலாம் என்ற போதனையை இந்நூல் ஆராய்கிறது.
இந்திய வேதங்களில் இயேசுவா?
இந்திய இந்து மத வேதங்களான இருக்க, யசுர், சாமம், அதர்வனம் ஆகிய வேதங்கள் இயேசு கிறிஸ்துவையே கடவுளாகப் போதிக்கின்றன என்ற போதனையை அளித்து வருபவர் சாது செல்லப்பா. இவர் தமிழ்நாட்டில் ஆசிரமம் அமைத்து, இந்து மத சாதுக்களைப் போல உடை தரித்து, கிறிஸ்தவத்தின் பெயரில் இந்துக்களைக் கவரும் விதத்தில் ஊழியம் செய்து வருகிறார். தான் அணியும் காவி உடைக்கும்கூட இவர் கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கத் தவறவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தப் பலியை காவி உடை விளக்குவதாக இவர் கொடுக்கும் விளக்கம் எந்த அளவுக்கு இந்து மத வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கமளித்து இந்துக்களைக் கவர இவர் பயன்படுத்திக் கொள்கிறார் என்று தெரிந்து கெள்ளலாம். “இந்திய வேதங்களில் இயேசு” என்ற பெயரில் இவரது போதனைகள் கெசட்டுகளில் விற்பனையாகின்றன. இது தவிர “சுத்திகரிக்கும் அக்னி” என்ற பெயரில் ஒரு மாதாந்தர பத்திரிகையையும் இவர் நடத்துவதோடு, இப்போதனைகளின் அடிப்படையில் ஒரு சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். கெரிஸ்மெட்டிக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சாது செல்லப்பா வெளிநாடுகளுக்கும் தனது போதனைகளை ஏற்றுமதி செய்து அங்கு வாழும் அப்பாவித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அவற்றை விற்பனை செய்து வருகிறார்.