கத்தோலிக்க சபை கிறிஸ்தவத்திற்குத் தந்த தொல்லைகள், கழுவிலேற்றி, உயிரோடெரித்த கிறிஸ்தவத் தலைவர்களின் எண்ணிக்கை, கிறிஸ்தவ வேதத்தை மக்கள் வாசிக்கவிடாமல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் தாம் எத்தனை! இவற்றை நாம் மறந்தாலும் வரலாறுதான் மறக்குமா? இன்று கத்தோலிக்க சபை எந்நிலையில் இருக்கிறது? என்று ஆராய்கிறது இக்கட்டுரை.
ரோமன் கத்தோலிக்க சபை
– புலி பதுங்குவது பாய்வதற்காக –
கத்தோலிக்க சமயம் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தொடர்ந்தும் ஒரு முக்கிய சமயமாக இருந்து வருகின்றது. கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள் அதனை கிறிஸ்தவத்தின் ஒரு கிளையாகத் தொடர்ந்தும் கருதி வருகிறார்கள். தமிழ் சுவிசேஷக் கிறிஸ்தவர்களின் பெரும்பாலானோரும் கத்தோலிக்க சமயத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியாகத் தவறாக இன்றும் கருதி வருகிறார்கள். கத்தோலிக்க மதத்தைப் பற்றிக் கிறிஸ்தவர்கள் சரியான தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். கிறிஸ்தவத்தின் எதிரிகள் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆக்ரோசமாக பணி புரிந்து வரும் இந்நாட்களில் கத்தோலிக்க மதத்தோடு இணைந்து செயல்படுவதை விட்டுவிட்டு பழையதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? என்று யாரும் கேட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். நாம் செய்ய வேண்டிய எத்தனையோ பெரிய காரியங்கள் இருக்க ஏன் இந்தச் சாதாரண விசயத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்? என்று கேட்டாலும் நான் வியப்படைய மாட்டேன். இவர்களுக்கு இப்படியான சிந்தனைகள் ஏற்படுவதற்கு என்னைப் பொருத்தவரையில் நான்கு காரணங்களுண்டு.