1689 விசுவாச அறிக்கை

கடவுளின் ஆணை

அதிகாரம் 8 – பாகம் 1

விளக்கம்: லமார் மார்டின்

கடவுளின் ஆணையைப்பற்றிப் போதிக்கும் பாப்திஸ்து விசுவாச அறிக்கையின் மூன்றாம் அதிகாரத்தை இப்போது ஆராய்வோம். முதலாவதாக இவ்வதிகாரம் கடவுளின் ஆணையைப் பற்றிய பொதுவான விளக்கமொன்றை அளிக்கிறது. முதலிரு பாராக்களிலும் இதைக் காணலாம். மூன்றாம் பாராவில் இருந்து ஏழாம் பாராவரை கடவுளின் முன்குறித்தலைப்பற்றிய விளக்கங்களைப் பார்க்கலாம். ஆகவே, முதலில் இவ்வதிகாரத்தின் முதலிரு பாராக்களும் தரும் கடவுளின் ஆணை பற்றிய பொதுவான விளக்கத்தைப் பார்ப்போம்.

பாரா 1: கடவுள் தனது பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட சுய சித்தத்தின் ஆலோசனையினால் இனி நிகழப்போகிற அ‍னைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் நித்தியத்திலிருந்து தாமே தமக்குள்ளாகத் தீர்மானித்திருக்கிறார். (அதாவது எவற்றாலுமே உந்தப்படாது அவர் தன் திட்டங்களை செயற்படுத்துவது மட்டுமன்றி அணுவளவும் மாற்றமின்றி அவரது நோக்கங்கள் அனைத்துமே நிறைவேற்றப்படுகின்றன). அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக் கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக் காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அனைத்துமே அவரால் நிலைநிறுத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின்மீதும் ஆணை செலுத்தி அமைவுறச்செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத்தன்மையைக் ‍குறிக்கும்).

(ஏசாயா 46:10; எபேசியர் 1:11; எபிரேயர் 6:17; ரோமர் 9:15, 18; யாக்கோபு 1:13-15; யோவான் 1:5; அப்போஸ். 4:27-28; யோவான் 19:11; எண்ணாகமம் 23:19; எபேசியர் 1:3-5.)

Continue reading