பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதம் ஜேர்மனியில் ஆரம்பித்து காட்டாறுபோல் சீரிப்பாய்ந்து பரவுவதற்கு முன்னர் அதற்கான வித்தை விதைக்க கர்த்தர் பயன்படுத்திய பல நல்ல மனிதர்களை சபை வரலாற்றில் சந்திக்கிறோம். இந்தவகையில் சீர்திரத்தவாதத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்ட மனிதர்தான் இங்கிலாந்தின் ஜோன் விக்ளிப் (John Wycliffe). விக்ளிப்பின் ஆரம்பகால வாழ்க்கைபற்றிய விபரங்கள் அதிகம் இல்லை. அவருடைய பெற்றோரைப் பற்றிய தகவல்களோ அல்லது அவர் கர்த்தரை அறிந்து கொண்டவிதம் பற்றிய விபரங்களோ கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பகுதியில் அவர் பிறந்ததாக மட்டும் வரலாறு சொல்கிறது.
1356 இல் ஆக்ஸ்பர்டின் மேர்டான் கல்லூரியின் பட்டதாரி மாணவராக முதலில் ஜோன் விக்ளிப்பை நாம் சந்திக்கிறோம். அதன்பின் 1360 அவர் முதுநிலை பட்டத்தை பேலியல் என்ற இடத்தில் பெற்றார். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது விக்ளிப் தனது கல்லூரி வாழ்க்கையை பதினான்காம் வயதில் ஆரம்பித்திருக்க வேண்டும். 1372 ஆம் ஆண்டில் விக்ளிப் இறையியலில் அறிவர் பட்டத்தைப் பெற்றார். இக்காலத்தில் விக்ளிப் ரோமன் கத்தோலிக்க போதனைகளில் அதிக ஞானத்தைப் பெற்றிருந்தார். வாதத்திறத்தையும் கொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதிலும் சிறந்த அறிஞர் என்றும் அறியப்பட்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய ஊழியத்திற்கு ஒரு திறமைசாலியைத் தெரிவு செய்திருந்தபோதும், விக்ளிப் இக்காலங்களில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகளிலேயே மூழ்கிப்போயிருந்தார்.