அடியோபரா என்றால் என்ன? என்ற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் உடனடியாக எழுந்திருக்கும். சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் போதித்த வேதத்தில் காணப்படும் வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியை நாம் ஏற்கனவே இவ்விதழில் பார்த்திருக்கிறோம். வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியைப் படிக்கும்போது அதோடு சம்பந்தப்பட்ட “அடியோபராவையும்” (Adiaphora) பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவ்வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. “இதற்கு முக்கியமானதொன்றல்ல” (Not a thing of importance) என்று பொருள். இவ்வார்த்தையை பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு சில கிறிஸ்தவ சபைப்பிரிவினர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவர்கள் கர்த்தருடைய வார்த்தை கட்டளையிட்டு செய்யாதே என்று நிராகரிக்காத எதையும், அது தடை செய்யாத எதையும் ஆராதனையில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்று வாதாடினார்கள். உதாரணமாக கர்த்தரின் வார்த்தையில் சிலுவை அணியாதே! என்று எங்கும் நேரடியாகக் கட்டளையிடப்படவில்லை. அதேநேரம், அணியக்கூடாது என்றும் எங்கும் சொல்லவில்லை. ஆகவே, சிலுவையை அணிவதில் தவறில்லை என்பது இவர்களுடைய வாதம். இதே முறையில் வாதாடி பிரசங்கிகளுக்கான விசேஷ அங்கி, சிலைவணக்கம், சடங்குகள் என்று பல காரியங்களை இவர்கள் ஆராதனையில் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இரட்சப்பிற்காக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதும், ஆராதனையில் எல்லாம் விசேஷ அக்கறை எடுக் வேண்டியதில்லை என்பது இவர்களுடைய எண்ணமாயிருந்தது. முக்கியமாக ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் இம்முறையில் சிந்தித்தார்கள்.