ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஒரு முக்கிய போதனை பேர்கட்டரி (Purgatory) என்பது. ரோமன் கத்தோலிக்க சபையின் ஞானஸ்நானம் பெற்று தங்களுடைய பாவம் முழுவதுமாக மன்னிக்கப்படாது இறப்பவர்கள் நேரடியாக இந்த இடத்துக்குப் போகிறார்கள் என்று கத்தோலிக்க மதம் கூறுகிறது. பரலோகத்தையும், நரகத்தையும் தவிர இடைப்பட்ட இப்படியொரு இடம் இருப்பதாகவும் இங்கு போய்ச் சேருபவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும்வரை தற்காலிகமாக இந்த இடைத்தரமான இடத்தில் துன்பங்களை அனுபவித்து தங்களுடைய பாவங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்று ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கிறது. இங்கிருப்பவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் இந்த உலகத்தில் செய்யும் ஜெபத்தால் மட்டுமே இவர்களுடைய சகல பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைத்து பரலோகம் போக முடியும் என்பது ரோமன் கத்தோலிக்க மதப்போதனை. அதனாலேயே ரோமன் கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காக ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். போப்பும் அங்கிருப்பவர்களுடைய பாவத்தைக் குறைக்கக்கூடிய ஒருவகை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்கிறது ரோமன் கத்தோலிக்க மதம். இதைக் கவுன்சில் ஆப் டிரென்டின் (The Council of Trent) 25 வரு செசன் விளக்குகிறது. இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் மிக முக்கிய போதனை.