சில கிறிஸ்தவர்கள தாம் முதல் முதலாக சுவிசேஷத்தைக் கேட்ட உடனேயே தங்களுடைய பாவத்தை உணர்ந்து, கிறிஸ்துவின் அன்பின் மேன்மையை உணர்ந்து, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்ததாகக் கூறுவார்கள். தங்களுடைய வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டு உடனடியாகவே இரட்சிப்பைக் குறித்த நிச்சயத்துவத்தை அடைந்ததாகக் கூறுவார்கள். அத்தகைய மனந்திரும்புதல் நிச்சயம் மறுபிறப்பின் அடையாளமாக இருந்தபோதும், விசேஷமான சுவிசேஷ எழுப்புதல் காலங்களில் மட்டும்தான் இத்தகைய மனந்திரும்புதல்களைப் பெரும்பாலும் பார்க்கக்கூடியதாக இருக்கும். பல கூட்டங்களில் போதகர்களோடு பேசி நான் சேகரித்த தகவல்களின்படி இன்றைக்கு நூற்றில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் சுவிசேஷத்தைக் கேட்ட அந்த நிமிஷமே மனந்திரும்பி இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். அநேகமானோர் உண்மையாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பாக பல தடவைகள் அதற்காக முயற்சி செய்ததாகக் கூறினார்கள். வேறு சிலர் தாம் உண்மையில் மனந்திரும்புதலாகிய அனுபவத்தைப் பெறுவதற்கு முன் மாதக்கணக்கான அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு சலித்துப் போய் இருந்திருப்பதாகக் கூறினார்கள்.