பாரதியார் பாடிய பாடலில் சில வரிகள் இவை – “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”. கிறிஸ்துவை அறிந்திராத பிராமணனான பாரதிகூட சமுதாய சீரழிவுக்கு சாதிகள் எந்தளவுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அறிந்து வைத்திருந்தான். சாதிகள் சமுதாயத்திற்கு செய்யும் தீங்கை விளக்கிப் பாடிய, எழுதிய அநேக தமிழ் கவிஞர்கள், அறிஞர்கள் இருக்கிறார்கள். சாதிகள் தமிழ் சமுதாயத்தைப் பிடித்துள்ள ஒரு பெரும் எய்ட்ஸ் வியாமி. அதை எதிர்த்துப் பல போராட்டங்களை சமூக சீர்திருத்தவாதிகள் நடத்தியிருந்தபோதும் அது அழிக்க முடியாத ஒரு நோயாக சமுதாயத்தைத் தொடர்ந்து சீரழித்துக் கொண்டிருக்கிறது. சாதி, தமிழ் சமுதாயத்தை மட்டுமல்லாமல் இந்திய சமுதாயத்தையே அழித்துக் கொண்டிருக்கும் ஒரு வியாதி. அதற்குக் காரணம் மதம் என்ற பெயரில் இந்திய சமுதாயத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆரிய பார்ப்பனியம்தான். (இன்று அதற்கு இந்து மதம் என்று பெயர்). எங்கெல்லாம் ஆரிய (இந்து) மதம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் சாதியைப் பார்க்கலாம். ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் மத்தியிலும், மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியிலும், கடல் கடந்து பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள், தமிழர்கள் மத்தியிலும் சாதியின் ஆட்சியைப் பார்க்கலாம். ஒரு முறை நான் அமெரிக்க பத்திரிகையில் வந்த விளம்பரம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது ஒரு அணுவிஞ்ஞானியான அமெரிக்க இந்தியர் கொடுத்திருந்த விளம்பரம். திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கம் அந்த இந்தியர் தனக்கு எந்த சாதியில், எந்த நட்சத்திரத்தில் பிறந்த, எந்த தோஷமுமில்லாத பெண் தேவை என்று அந்தப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அணு விஞ்ஞான அறிவாலோ, மேலைத்தேசத்தாலோகூட அந்த மனிதனின் சாதிப்பற்றை அகற்ற முடியவில்லை. சமுதாயத்தை ஆட்டிவைக்கும் சாத்தானின் ஆவி சாதி.