வேதத்தின் அதிகாரத்தையும், அதன் போதுமான தன்மையும் குறித்து நமது பத்திரிகையில் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். அதற்குக் காரணம் வேதம் பற்றிய பெருந்தவறான எண்ணங்கள் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பதால்தான். கிறிஸ்தவத்தின் பெயரில் மனித சிந்தனைகளும், பாரம்பரியமும் கிறிஸ்தவ சமுதாயத்தை ஆண்டு வருகின்றனவே தவிர கர்த்தரின் வேதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. லிபரலிசமும் (Liberalism), புதிய சுவிசேஷக் கோட்பாடும் (New Evangelicalism) திருச்சபைகளையும், இறையியல் கல்லூரிகளையும் இன்று ஆட்டிப்படைத்து வருகின்றன. இன்று வேதத்தின் அதிகாரம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றவகையில் பெரும்பாலானோர் வேதத்திற்கு விளக்கம் கொடுக்கும் அவல நிலையை தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்தில் இன்று பார்க்கிறோம். இதுவும் சரிதான், அதுவும் சரிதான், என்று சிந்திக்கும்போக்கை வளர்த்துக்கொண்டுள்ள, வேதத்தின் அதிகாரம் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனையே இல்லாத கூட்டம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் தமிழினத்தில் பெருகி வருகின்றது. கர்த்தரின் வேதத்தின் அதிகாரத்தைத் தொடர்ந்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிசாசு தமிழர்கள் மத்தியில் வேதத்தின் அதிகாரத்தைக் குறித்து பரப்பி வரும் ஒரு கருத்தை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம். அதாவது, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை போதனைகளும் கர்த்தரின் அதிகாரமுள்ள வார்த்தைகள் இல்லை என்பதுதான் அந்தக் கருத்து. புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர்களின் சொந்தக் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று இந்தக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் விளக்குகிறார்கள். முக்கியமாக பவுலின் போதனைகளில் அநேகமானவை பவுலின் சொந்தக் கருத்துக்கள் என்றும் அவற்றை கர்த்தரின் சித்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவர்கள் நிராகரிக்கிறார்கள். இது சரியா? தவறா? என்று ஆராய வேண்டியது அவசியம். வேதத்தின் அதிகாரத்திற்கு ஊறு விளைவிக்க முயலும் இந்தக் கருத்தை அராய்வதன் மூலம் நாம் வேதத்தின் அதிகாரத்தைப்பற்றி மேலும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.