பக்தி இயக்கத்தைப் பற்றியும், அதன் போதனைகளைப் பற்றியும் அநேக தமிழ் வாசகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆங்கிலத்தில் இதனை Pietism or Pietist Movement என்று அழைப்பார்கள். இந்த இயக்கத்தைப்பற்றி நாம் ஆராய வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றலாம். சமீபத்தில் ஸ்ரீலங்காவில் இந்த தலைப்பில் என்னைப் பேசக் கேட்டிருந்தார்கள். அப்பேச்சைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது தான் இது எந்தளவுக்கு தமிழ் கிறிஸ்தவ வாசகர்கள் இன்றைக்கு அறிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்பது எனக்கு விளங்கியது. ஏன் என்பதுதானே உங்கள் கேள்வி? அதற்கு பதில் சொல்லாமல் நான் மேலும் எழுத முடியாது. அதற்கு முதலாவது காரணம் இன்று நம்மத்தியிலே இருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்கள் மற்றும் அற்புத ஊழியங்கள் செய்து வரும் தனி மனிதர்களின் போதனைகளுக்கம் ஊழியங்களுக்கும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவாகவும் முன்னோடியாகவும் இந்த பக்தி இயக்கம் இருந்திருந்திருப்பதுதான். அடுத்ததாக, இன்று பல சபைகளையும், சபைத்தொடர்பற்ற கிறிஸ்தவ ஸ்தாபனங்களையும் பாதித்திருக்கும் புதிய சுவிசேஷக் கோட்பாட்டப் போதனைகளுக்கம், வேதவிளக்க முறைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது இந்த பக்தி இயக்கம். உண்மையில் சகோதரத்துவ சபைகள் நம்மத்தியில் தோன்றி வளர்வதற்கும் இந்த பக்தி இயக்கமே காரணம். இத்தனைக்கும் காரணமாக இருந்திருக்கும் பக்தி இயக்கத்தைப் பற்றியும், அது எந்தளவுக்கு கிறிஸ்தவத்தைப் பாதித்து அதில் ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றியும் நாம் அறிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ வரலாற்றையும், வரலாற்று இறையியல் கோட்பாடுகளையும் புறக்கணித்திருப்பதால்தானே இன்று தமிழ் கிறிஸ்தவம் தலைகுனிந்த நிலையில் வேத அறிவின்றி அனுபவத்தை மட்டும் நாடி இருட்டில் நிற்கிறது. ஆகவே, பக்தி இயக்கத்தைப் பற்றி நாம் விபரமாகத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த இயக்கத்தைப் பற்றியும், அதன் போதனைகளையும் அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் விசுவாச வாழ்க்கையில் அறிவுபூர்வமான ஒரு மாற்றம் ஏற்படுமானால் அதுவே இந்த ஆக்கத்திற்குக் கிடைத்த பலனாக இருக்கும்.