ஹிப்போவின் ஆகஸ்தீன்
திறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11
இதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு தோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீசரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்வம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆகஸ்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.