‘பரிசுத்த வேதாகமம்’
நீங்கள் வெளியிட்டுள்ள பரிசுத்த வேதாகமம் என்ற நூலுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை விளங்கிக்கொள்ளக் கூடிய இலகுவான வழிகாட்டி நூலாக இதனை எழுதியிருந்தீர்கள். இதில் கையாளப்பட்டுள்ள சொற்பிரயோகம், மொழிநடை என்பன நன்றாக இருந்தன. இதிலும் புத்தகத்தை ஒரு கேள்வியுடன் ஆரம்பித்திருப்பது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஆவிக்குரிய நூல்கள் நம்மத்தியில் இல்லாதது கவலை தருகிறது. ஏனெனில், இன்று திருச்சபையிலும், தனிப்பட்ட மனித வாழ்க்கையிலும் போலித்தனமான சத்தியங்கள் அலைமோதுவதைக் காண்கிறோம். வேதத்தில் ஒருசில பகுதிகளையும், சத்தியங்களை மட்டும் அறிந்து கொண்டிருந்தால் போதுமானது என்று பல ஊழியர்களும், விசுவாசிகளும் இன்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நூல் வேதத்தின் ஒவ்வொரு நூலையும், சத்தியத்தையும், வார்த்தையையும் ஆராய்ந்து, உணர்ந்து படிக்கும்படியாக எம்மை உற்சாகப்படுத்துகிறது. மொத்தத்தில் பரிசுத்த வேதாகமத்தை தேவனே எங்களுக்கு ஆவியானவர் ஊடாக அருளினார் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இந்நூல் அமைகிறது.