சமீபத்தில் என் கையில் தமிழில் வெளியிடப்பட்ட ஒரு சுவிசேஷ கிறிஸ்தவ சிற்றிதழ் கிடைத்தது. அதிலிருந்த சில வாசகங்கள் என்னைப் பெருந்திகைப்புக்குள்ளாக்கின. அவ்விதழாசிரியர் இந்திய அரசியல் நிலமைகளையும், வரவிருக்கும் தேர்தலையும் குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக நடந்து கொள்வதில்லை என்று குறைகூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், முன்னாள் கேரள மாநில முதல்வர் ஏ. கே. அந்தோனி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எல்லோரையும் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதழாசிரியருக்கு இவர்களில் யாருமே மெய்க் கிறிஸ்தவர்கள் இல்லை என்பது தெரியாமலிருந்தது. அது ஒருவிதத்தில் எனக்கு ஆச்சரிய மேற்படுத்தாவிட்டாலும் கவலையளிப்பதாக இருந்தது. இந்திய கிறிஸ்தவ உலகத்துக்கு ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும், புரட்டஸ்தாந்து சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள இணைக்க முடியாத வேறுபாடு தெரியாமலிருப்பது கவலை தருகின்ற செய்தியே. கிறிஸ்தவம் எது? என்பது தெரியாமல் கிறிஸ்தவ சுவிசேஷத்தை ஒருவரால் எப்படி விளக்க முடியும்? சோனியா காந்தி ஒரு கத்தோலிக்கர். ஏ. கே. அந்தோனியும் ஒரு கத்தோலிக்கர். இவர்கள் இருவருமே கிறிஸ்தவ விசுவாசத்தை தங்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் அறியாதவர்கள்; அடையாதவர்கள். கத்தோலிக்க மதத்திற்கும் சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை; ஒரு போதும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. இந்து மதமும், புத்த மதமும் எந்தளவுக்கு கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத புறஜாதி மதங்களோ அதேபோலத்தான் ரோமன் கத்தோலிக்க மதமும். அடிப்படைக் கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானவை ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள். இது தெரியாத தமிழ் கிறிஸ்தவ உலகத்தில் சுவிசேஷ கிறிஸ்தவ ஊழியம் எந்தளவுக்கு மோசமானதாக இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்திய கிறிஸ்தவம் இருண்டகாலத்தில் தொடர்ந்திருக்கிறது என்பதற்கு இதைத்தவிர வேறு ஆதாரம் தேவையா?