என்னுடைய ஆத்மீக பயணத்தின் சில அத்தியாயங்களை இந்தப் பகுதிகளில் உங்களோடு முதன் முறையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970களில் என்று நினைக்கிறேன். அது என்னுடைய விசுவாச வாழ்க்கையின் ஆரம்பகாலம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கங்கள் தலைதூக்கி பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளையும் ஏனையோரையும் பாதிக்க ஆரம்பித்திருந்த காலமது. கிறிஸ்தவர்கள் மத்தி யில் அந்நியபாஷையும், தீர்க்கதரிசனமும், அற்புதங்களும் அன்றாட சம்பாஷ னையில் அடிக்கடித் தவழ்ந்து வந்த காலம். அன்று புதிய விசுவாசியாக இருந்த என்னையும் அது விட்டுவைக்கவில்லை. கர்த்தரின் கிருபையால் வேதத்தை விசுவாசத்தோடு போதிக்கின்ற ஓர் சபையில் அப்போது நான் அங்கத்தவராக இருந்தேன். இருந்தபோதும் அந்நியபாஷை பற்றியும், தீர்க்கதரிசனம்பற்றியும், அற்புதங்கள்பற்றியும் சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வாஞ்சையுடையவனாக இருந்தேன். அவைபற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் கையில் கிடைத்த ஆங்கில நூல்களை யெல்லாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். நான் வாசித்த ஒன்றும் எனக்குக் கைகொடுக்கவில்லை. வரங்கள் இன்றும் இருக்கலாம் இல்லாம லும் இருக்கலாம் என்று நழுவிவிடுகிறவர்கள் எழுதிய நூல்களாகவே அவை இருந்தன. என் மனதைத் துளைத்துக் கொண்டிருந்த விஷயங்களைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேதத்தை ஆராய்ந்து, கிரேக்க மூல வார்த்தைகளில் கவனம் செலுத்திப் படிக்க ஆரம்பித்தேன். இந்த ஆராய்ச்சி பல வருடங்கள் தொடர்ந்தது. நான் பல்கலைக் கழகப் படிப்பை முடித்து இறையியல் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்த பின்பும் இது தொடர்ந்தது.