விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற வேதசத்தியத்தைக் குறித்து பவுலும், .யாக்கோபுவும் முரண்பாடு கொண்டிருப்பதாக பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தையும் யாக்கோபுவின் நிருபத்தையும் வாசிக்கிற சிலர் கருத்துத் தெரிவிக்கிருக்கிறார்கள். அந்த இரு நிருபங்களையும் மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அப்படித் தொன்று கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சீர்திருத்தவாதியான மார்டின் லூதர்கூட அப்படி எண்ணி யாக்கோபு நிருபம் வேதத்தில் சேர்க்கப்பட் டிருக்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 16-ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்கெதிராகத் தனியொரு மனிதனாக போர்க்கொடி உயர்த்தி கிரியைகளால் ஒருபோதும் எந்த மனித னும் இரட்சிப்பை அடைய முடியாது என்றும், நீதிமானாக முடியாது என்றும் கர்ஜனை செய்த லூதர் யாக்கோபு நிருபத்தைப் பற்றி இத்தகைய கருத்துக் கொண்டிருந்ததை நம்மால் அனுதாபத்தோடு புரிந்துகொள்ள முடிகிறது.